அங்காடி தெரு - விமர்சனம்

 மனதுக்கு பிடித்த ஒரு ஷர்ட் - ஜீன்ஸ் எடுக்க எத்தனை நேரம் செலவழிப்போம் ? பொருளின் தரம் பற்றியும் அதன் விலை பற்றியும் அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கும் நாம், அதை தேர்வு செய்ய உதவிடும் கடை ஊழியர்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் கொஞ்சமேனும் நினைத்து பார்த்திருப்போமா...? பளபளக்கும், பிரம்மாண்டமான நுகர்வு கலாச்சாரத்திற்கு  முன் மொத்தமாய் அமுங்கி போகிறது அவர்களது  முகங்களும், அவர்களின்  வேதனையான தினசரி வாழ்கையும்.

பிளஸ் டூ வில் பள்ளியில் முதலாவதாக வரும் ஜோதி லிங்கம் (அறிமுகம் மகேஷ்), விபத்தொன்றில் தனது தந்தையே இழக்க,  குடும்ப பொறுப்பின் காரணமாய் T - நகர் ரங்கநாதன் தெருவிலிருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியில் தனது நண்பன் மாரி முத்துவுடன் வேலைக்கு சேர்கிறான். அங்கு அவன் சந்திக்கும் நிகழ்வுகளும், மனிதர்களும் அவ்விடத்தின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இடையில், அங்கு பணிபுரியும் கனியுடன் (அஞ்சலி) முதலில் மோதல், பின் காதல் என அதை தொடர்ந்து  நடக்கும் சம்பவங்களே கதை.

பொளேர் என செவிட்டில் அறைகிறது... படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள்... பல் பொருள் அங்காடிகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள்  நடத்தப்படும் விதமும்,  அவர்களின் கஷ்டங்களும், மாடுகளை விட கேவலமாக தனது மேலதிகாரிகளிடம் வாங்கும் அடிகளும், வசவுகளும் இது வரை நாம் யோசித்தே பார்த்திராதது. உண்மையை நேருக்கு நேர் சந்திப்பதால் ஏற்படும்  அதிர்ச்சியினை நன்கு உணர முடிகிறது.

அவர்களது குடும்ப சூழலை, வறுமையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முதலாளி வர்கத்தின்  சுய நல முகத்தை, பண பலத்தை  அப்பட்டமாய்  போட்டு தாக்கியிருக்கிறார்கள். 

இதற்கிடையில்,  சின்ன சின்ன கேரக்டர்கள் , பிளாட்பாரத்தில் கர்சீப்  விற்கும் கண் பார்வையற்ற முதியவர், உடல் வளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர், அவரது மனைவி, பொது கழிபறையினை வயிற்று பிழைப்புக்காக கட்டண கழிப்பறையாக மாற்றி வாழ்வை ஓட்டும்  நபர், கனியின் தோழி ராணி, கனியின் தங்கை  என எல்லோருமே அழுத்தமாக நம்மை கவர்கிறார்கள்.

 இயக்குனர் வசந்த பாலனின் மூன்றாவது படைப்பு. எளிமையான கதைதான். ஆனால் அதற்கான கதைகளமும், காட்சிபடுத்தியிருக்கும் விதமும் உலக தரம். முக்கியமாக கதை மாந்தர்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது மிக சிறப்பு. எல்லோருமே அப்பாத்திரங்களோடு இயல்பாக பொருந்துகிறார்கள். வெயிலுக்கு பிறகு தன் மீது இருந்த எதிர்பார்ப்பை நிச்சயம் மனிதர் பூர்த்தி செய்திருக்கிறார்.
படத்தின் முதுகெலும்பாய் இருக்கிறது, ஜெய மோகன் அவர்களின் வசனங்கள். பொதுவாய் ஹீரோ பன்ச் டயலாக் பேசினால் மட்டுமே தியேட்டரில் விசில் பறக்கும். அனால் இங்கு  உடல் வளர்ச்சி குன்றிய பிச்சைகாரரின் மனைவி பேசும்  ஒரு இடத்தில் தியேட்டர் கைதட்டலால் அதிர்கிறது. வாழ்வின் சுக துக்கங்களை யதார்த்தமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் ஜெய மோகன். 

இசை, விஜய் ஆண்டனி - G .V பிரகாஷ் குமார். "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை " அற்புதமான காதல் தாலாட்டு. ஆனால் பின்னணி இசை தீடிர் தீடிர் என மாறி கொண்டே இருப்பது படத்தோடு ஒட்டவில்லை. 

நெரிசல் மிகுந்த ரங்கநாதன் தெருவில், எல்லோர் முகங்களும் தெளிவாக தெரிகிறது. ஒளிபதிவாளரின் (ரிச்சர்ட் நாதன் ) உழைப்பு படம் நெடுகிலும் இருக்கிறது. 

ஒரு நல்ல விருந்து சாப்பாட்டில், பல்லிடுக்கில்  சிறு கல் தட்டுபடுவதை  போல படத்தின் குறை, சற்றே மிகை படுத்தப்பட்ட காட்சி அமைப்புகள். இருந்தும் மன்னிக்கலாம்.

அடுத்த முறை, பெரிய கடைகளில் நாம்  உடைகளோ, பொருட்களோ தேர்வு செய்யும் போது நமக்கு உதவி  புரியும்  ஊழியர்களை பார்த்தால் நிச்சயம்  சிநேகமாய் புன்னகைக்க தோன்றும்.  அதுவே இப்படத்தின் வெற்றி. வானம் எல்லோர்க்கும் பொதுவானது, வாழ்க்கை இனிமையானது என்பதே இப்படம் சொல்லும் செய்தி.

(+) பிளஸ் 
 கதை களம்,
வசனம்
கதாபாத்திரங்கள்
இயக்கம்

(-) மைனஸ்

சில மிகை படுத்தப்பட்ட காட்சிகள் 
பின்னணி இசை. 

VERDICT  :  கண்டிப்பாக அங்காடி தெருவிற்கு போய் வரலாம்.

OUR RATING : 5.1 / 10

EXTRA பிட்டுகள்.

நேற்று WEEKEND என்றாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. அயங்கரன் இப்படத்திற்கு இன்னும் பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்திருக்கலாம். நிச்சயம் நல்ல OPENING கிடைத்திருக்கும். எனினும், PUBLIC  TALK மூலமாகவே இப்படம் வெற்றி பெறுவது உறுதி.

Comments

  1. Nalla padam.

    Hasini pesum padam(Movie reviev in Jaya TV) pola irudhathu ungalathu vimarsanam. arumai....

    ReplyDelete
  2. விமர்சனம் வள வள வென்றிறாமல் கச்சிதமாக இருந்தது. இங்கு sharjah ல் படம் வரவில்லை, ஆகையால் படம் பார்க்க வேண்டும் என்ற உந்துதலால் பார்த்து விட்டென் வேறு வழியில். என் மகள் (8 வது படிக்கிறாள்) நேத்து சென்னையில் பார்த்து விட்டு வரும் பொழுது எப்படி இருக்கிறது என்று போனில் கேட்டேன். நல்லா இருக்கா என்று எல்லாம் கேட்காதீங்க டாடி, படம் என்னவோ செய்கிறது பேச முடியவில்லை என்றாள். அழுதாயா என்று கேட்டேன். கண்ணீர் வந்தது ஆனால் அழவில்லை என்றாள். மிகவும் அருமையான படம்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....