Wednesday, August 15, 2012

அட்ட கத்தி - விமர்சனம்ஒரு பெண்ணின் மனசு போலத்தான் இந்த படமும்.....  நிறைய ஆச்சரியங்கள்... ரகசியங்கள்... கிறங்கடிக்கும் கள்ள பார்வைகள்.... குட்டி குட்டி சந்தோஷங்கள்...    எளிதில் புரிந்து கொள்ள முடியா...  குழப்பியடிக்கும் நடவடிக்கைகள் என திரைக்கதை  நம் இளமை கால நினைவுகளை ஒரு முறை மறு ஒலி -ஒளி பரபரப்பு செய்கிறது 

பிறந்ததில் இருந்து...  ஒரே ஒரு பெண்ணை மட்டும் பார்த்து..  பழகி காதலித்து கல்யாணம் செய்தவர்கள் யார் என தேடினால்  உலக உருண்டையில்   ஒருத்தர் கூட மிஞ்ச மாட்டார்கள்...... நான் உட்பட... 

மூன்றாவது படிக்கும் போது  கர்லிங் ஹேர் வைத்த யசோதா... ஐந்தாவதில் சாய்ரா  பானு... கல்லூரி காலங்களில் எதிர் வீட்டு ப்ரியா... அப்புறம் என் அக்கா பெண் என எனக்கும் நீண்ட காதல் எபிசோடுகள் உண்டு..எல்லாமே சொதப்பல்கள்தான்!. அதை எல்லாம் எழுத ஆரம்பித்தால்  மூன்று மாதங்களுக்கு இந்த பதிவு நீளும் என்பதால் நேராய் படத்திற்கு வருவோம்...அதேதான்.. புனிதமான காதல்.. அமரக்காதல் என நாம் ரீல் சுற்றுவதெல்லாம் வெறும்  இனக்கவர்ச்சி என காதல் ஜிகினாவை கிழித்திருக்கிறார்கள்... ஒப்புக்கொள்ள கொஞ்சம் மனசு வலித்தாலும் நிதர்சனம் அதுதானே என நினைக்கையில் புன்முறுவல் ஏற்படுவதை  தடுக்க முடியவில்லை. 

ஹீரோ அட்டகத்தி தீனாவாக புதுமுகம் தினேஷ்.. டுட்டோரியல் காலேஜில் இங்கிலீஷ் பாஸ் செய்வதில் தொடங்கி கல்லூரியில் ரூட் தலையாக கால மாற்றத்திற்கேற்ப ப்ரோமோஷன் வாங்கிக்கொண்டே இருக்கிறார். ஆனால், காதல் பாடத்தில் மட்டும் தொடர்ச்சியாய் அரியர். கஜினி போல திரும்ப திரும்ப வெவ்வேறு பிகர்கள் மீது படை எடுத்தாலும் வெற்றிக்கனியே ருசிக்க முடியாத சென்னை புறநகர் இளைஞனாக வாழ்ந்திருக்கிறார்.  Nice performance .ஹீரோயின் என ஒற்றை பெண்ணை மட்டும் அடையாளம் காட்டாமல் ... காட்டிய பெண்கள் எல்லோரையும் ஹீரோயின் போல நினைக்க வைத்திருக்கும் காஸ்டிங் வெகு அழகு. பூர்ணிமா.. நதியா.. திவ்யா... என நம் இளமை காலத்தில் தூக்கம் தொலைக்க வைத்த அத்தனை பெண்களையும்... அவர்களின் தேசிய குணமான... ஓரக்கண் பார்வை.. திருட்டுத்தனமான ரசிப்பு.... காதல் என நெருங்கும் போது... "அண்ணா" என்கின்ற ஆயுதத்தால் பின் மண்டையே பிளக்க வைத்து எஸ்கேப் ஆகும் புத்திசாலிதனங்களை  புட்டு புட்டு வைத்திருக்கிறார்கள்.

இயக்குனர் ரஞ்சித் ரசனையான முன்பகுதி காட்சிகளில் வெகுவாக ஸ்கோர் செய்கிறார்.  புறநகர் வட்டார பேச்சு வழக்கு.. யதார்த்தமான நண்பர்கள்.. ஹீரோவின் குடும்பம்....நம்  பக்கத்துக்கு வீட்டு பிகர்கள் போல நினைக்க வைத்த ஹீரோயின்கள்  என நிறைய  ஹோம் வொர்க் செய்ததில் படத்தின் மீதான அவரின் காதல் நன்கு புலப்படுகிறது.  சோகம் வராமல் அதை வலுக்கட்டாயமாக வர வைக்க துடிக்கும் ஹீரோ,  கராத்தே கற்கும் காட்சிகளில் உள்ள நான் லீனியர் திரைக்கதை, சினிமாவாக அல்லாமல் ஒரு ரியலிச அனுபவத்தை தரும் காட்சியமைப்புகள் என ஆரம்ப படத்திலேயே கவனம் ஈர்க்கிறார். அதுவும் கிளைமாக்ஸ் இறுதியில் தீனாவின் மனைவி யார் என ஒரு ஆர்வத்தை தூண்டி அதை காட்டாமலேயே end கார்டு போட்டிருப்பது டைரக்டர் டச்.ஆடி போன ஆவணி" கவிதை கானா  பட்டாசாய் வெளிச்சம் கொடுத்திருக்கிறது படத்திற்கு...  ரியலிச சினிமாவிற்கு தேவையான.. அளவான  பின்னணி இசை  என சதீஷ் நாராயணன் ஒரு புதிய இசைக்கு விதை போட்டிருக்கிறார். 


கொஞ்சம் மெதுவான முன்பகுதியும்... இரண்டாம் பாதியில் வரும் சில பல சில்லுண்டி காட்சிகளும்  சுவாரசிய சினிமாவை.... டிராமா போல ஆக்கி விட்டிருப்பதை மறுப்பதற்கில்லை. ஹீரோவின் காதல் போலவே படமும் சில இடங்களில் நம் மனசில் ஒட்டியும் ஒட்டாதது போல ஒரு பீலிங் கொடுத்திருப்பது மைனஸ்.    இருந்தாலும் வழக்கமான காதல் படங்களுக்கு மத்தியில் இது கொஞ்சம் வித்தியாச சினிமாதான்.


(+) பிளஸ்

களம்
வசனங்கள்
ஹீரோயின்கள்
இசை
யதார்த்தமான அத்தனை கேரக்ட்டர்களும்

(-) மைனஸ்

மெதுவாய் நகரும் திரைக்கதை
கிளைமாக்ஸ்

VERDICT :  இன்னமும் ஆழமாய் பாய்ந்திருக்கலாம். 

RATING : 4.7 / 10.0


EXTRA  பிட்டுகள்

இந்த படம் நன்றாக இருந்தாலும்  ஒரு  அதீதமான  தாக்கத்தை மனதில்  ஏற்படுத்தாமல் போகும் வாய்ப்புகள் அதிகம். ஏனென்றால்... நிஜத்தில் நாம் புனிதமான... ஒரு அமரத்துவமான ஒரு காதலை எதிர்பார்க்கிறோம்... சூழ்நிலைகள்..... கால மாற்றங்கள் அதற்க்கான வாய்ப்பை நமக்கு கொடுக்காமல் போனாலும் அந்த காதல் என்கின்ற ஒரு உணர்வு  நம்முள்ளே அப்படியேதான் இருக்கிறது. ஆட்கள் மாறினாலும் காதல் மாறுவதில்லை...  ஏகப்பட்ட காதல் எபிசோடுகளை கடந்த பின்னும்... அதே காதலோடு இப்போது நான் என் மனைவியே நேசிப்பது போல...
 

Monday, June 25, 2012

சகுனி - விமர்சனம்


.
மகாபாரத சகுனியின் பெயரை கெடுத்திருக்கிறார்கள்.....

சூழ்ச்சி என்பது வெகு கவனமாக பின்னப்படும் ஒரு சிலந்தியின் வலை போல... அடுக்கடுக்கான சதிப்பின்னல்களும் அதை செயல்படுத்தும் விவேகமும் உடைய ஒரு ராஜ தந்திரம்தான்.  கார்த்தி இருக்கிறார்... அவர் எதை செய்தாலும்  மக்கள் அதை நம்பிவிடுவார்கள் என்று காதில் பூ சுற்ற முயன்றிருக்கிறார்கள். பூ சுற்றுவதற்கும் ஒரு புத்திசாலித்தனம் வேண்டும்.  திரைக்கதையில் அந்த புத்திசாலித்தனம் இல்லாதது  சகுனியே ரசிக்க முடியாமல் செய்திருக்கிறது.

ரயில்வேயின்  சப்வே திட்டத்திற்காக... அரசு ஆக்கிரமிக்கவிருக்கும்  தன் பாரம்பரிய வீட்டை காப்பாற்றுவதற்காக வழக்கம் போல ரயில் ஏறும் ஹீரோ.. வழக்கம் போல அரசியல்வாதிகளால் விரட்டியடிக்கப்பட... வழக்கம் போல முதல் பாதி முழுதும் ஹீரோயினோடு காதலித்து டூயட் பாடிவிட்டு..  அதற்க்கப்புறம்  சுதாரித்து...  வழக்கம் போல இன்டர்வெல் ப்ளாக்கில் வீட்டை காப்பாற்ற சபதம் போட்டு.. வழக்கம் போல இரண்டாம் பாதியில் அரசியல்வாதி வில்லன்களை ஏமாற்றி வழக்கம் போல இறுதியில் வீட்டை  மீட்கிறார். . என்ன... படிக்கும் போதே நாடி நரம்பெல்லாம் முருக்கேறுகிறதா... படம் பாருங்கள்.. கண் காது மூக்கு கபாலம்  என கண்டதும் கண்டபடி முறுக்கேறும்.
ஹீரோ.. வில்லன்களை தன் புஜ பல பராக்கிரமத்தால் அழிக்காமல்.. தன் புத்தி சாதுரியத்தால் அழிப்பதாய் கதை சொல்லியிருக்கிறார்கள். அங்குதான்.. அங்குதான்... அந்த புத்திசாலித்தனம் என்ன என்பதை திரையில் பார்த்து திகிலடையுங்கள்.

அரசியல் ஒரு விறுவிறுப்பான சதுரங்க விளையாட்டு..  யூகிக்க முடியாத காய் நகர்த்தல்கள்.... தீடிர் தாக்குதல்கள்.. பதுங்கி பாயும் குள்ள நரித்தனங்கள்   என பல நூறு அடையாளம் தெரியா திமிங்கலங்களை  தனக்குள் ஒளித்து வைத்துக்கொண்டிருக்கும் ஒரு மிகபெரிய கடல்.  ஜஸ்ட் லைக் தட்,  ஒற்றை ஆளாய் அதை சொம்புக்குள் அடைப்பதாய் காட்டும் கார்த்தியின் நடவடிக்கைகள் சந்தானத்தின் ஒன் லைனர்களை விட காமெடியாய் இருக்கிறது. படத்தை கொஞ்சமேனும் ரசிக்க முடிவதற்கு கார்த்தி சந்தானம் காம்பினேஷன் உதவுகிறது.. மூச்சு திணறும் திரைக்கதைக்கு  அவ்வப்போது  ஆக்சிஜன் கொடுத்து நடமாடும் அளவிற்கு  செய்திருப்பதில் சந்தானத்தின் பங்கு மிக முக்கியமானது. கதாநாயகியாய் பிரணீதா... ஆதி முதல் அந்தம் வரை பொறுமையாய் பார்த்து சைட் அடித்து  மனதிற்குள் உள்வாங்கி கனவில் வரவேற்கலாம் என நினைப்பதற்குள் காணாமல் போய்விடுகிறார். அடுத்த படத்திலாவது அவரது கலை சேவையே முழுதாக பயன்படுத்திக்கொள்ளும்  இயக்குனர் அவருக்கு அமைவாராக...  கார்த்தி... இதற்க்கு முன்னர் வரை இயக்குனர்கள் டாமினேஷன் அதிகம் இருக்கும் படங்களில் இருந்தவர் முதன் முறையாய் ஒரு புதிய இயக்குனர் கதையில் ரிஸ்க் எடுத்திருக்கிறார்.  புதிய இயக்குனர் சங்கர் தயாள் முதல் படத்திலேயே சீரியசான அரசியல் சப்ஜெக்ட்டை எடுத்து  கவனம் ஈர்த்தாலும் அதை ப்ரெசென்ட் செய்த விதத்தில் ஹோம் வொர்க் செய்யாமல் பள்ளிக்கு வந்து திருட்டு முழி முழிக்கும் மாணவனை போல கோட்டை விட்டிருக்கிறார்.  இருந்தாலும்... ஆபாசம், வன்முறைகள் ஏதும் இன்றி..  பெண்கள், குழந்தைகள் பார்க்கும் படி படம் கொடுத்தது ஆறுதல்.

ஜீ.வீ . பிரகாஷ் பின்னணி இசை நாராசம். பாடல்களில் "மனசெல்லாம் மழையே" கொஞ்சம் காதுகளுக்கும் கண்களுக்கும் இதம். 

முதற்பாதி முழுதும்... அனுஷ்கா.... ஆண்ட்ரியா வருவதற்கெல்லாம் சீன் யோசித்தவர்கள்... இடைவேளைக்கு பிறகு கார்த்தி செய்யும் சகுனி வேலைகளுக்கு  கொஞ்சம் புத்திசாலித்தனமாய் யோசித்திருந்தால் நிச்சயம் சகுனி ஆட்டத்தை சுவாரசியப்படுத்தியிருக்கலாம்.
(+) பிளஸ்

சந்தானம்
கார்த்தி
ஆபாசம், வன்முறைகள் இல்லாதது

(-) மைனஸ்

லாஜிக் ஓட்டை உடைசல்கள்
திரைக்கதை
பின்னணி இசை 

VERDICT : லாஜிக்கே இல்லாத அழுகுணி ஆட்டம்.

 RATING : 4.0 / 10.0

 EXTRA   பிட்டுகள்

மூன்று நாட்களுக்கு முன்னரே... ஆன்லைனில் டிக்கெட் புக் செய்து விட்ட படியால்.. படத்திற்கு வந்த நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி உதயத்தில் ஞாயிறு காட்சிகள் அனைத்தும் ஹவுஸ் புல். படத்தில் ஒரு வசனம் வரும். "மார்க்கெட்டிங்"  என்னதான் மொக்கை படமாக இருந்தாலும் சரியான அளவில் மார்க்கெட்டிங் செய்தால் போட்ட பணத்தை எடுத்து விடலாம் என்பதற்கு இந்த படம் சரியான உதாரணம். ஒரு வாரம் ஓடினால் கூட போதும்... தயாரிப்பாளருக்கு லாபம்தான்.

இந்த மார்க்கெட்டிங் வித்தைகள் ஏதும் தெரியாமல் இருப்பதால்தான்... ஆளில்லாத கடையில் டீ ஆற்றுவதை போல... என்ன எழுதினாலும் படிக்க ஆட்கள் வராமல் என் வலைப்பக்கம் காற்று வாங்குகிறது.  ஆட்கள் வருகிறார்களோ இல்லையோ நான் டீ ஆற்றுவதை விடுவதாய் இல்லை.


 
 

Wednesday, June 13, 2012

தடையறத் தாக்க - விமர்சனம்இது வில்லன்களின் சினிமா...

ஹீரோவுக்கு ஒரு மாஸ் ஓபனிங் பார்த்திருக்கிறோம்.. ஹீரோயினுக்கு ஒரு  கிளுகிளு குளுகுளு ஓபனிங் பார்த்திருக்கிறோம்... ஆனால் வித்தியாசமாய்      வில்லன்களுக்காய் ஒரு டெரர் ஓபனிங் இந்தப்படத்தில்.

 ஆளில்லாத லெவல் கிராசிங்கை கடக்கும் போது.. தீடிரென ரயில் ஹாரன் சப்தம் கேட்டால் ஒரு பதைபதைப்பும் நடுக்கமும் மனசுக்குள் எழுமே...    அதன் வீரியத்தை படம் முழுதும் உணரசெய்திருப்பதில் வெற்றி கண்டிருக்கிறார் இயக்குனர் மகிழ் திருமேனி.

ஒரு பன்ச் டயலாக் கூட இல்லாத வசனங்கள்... ஓவர் பில்ட் அப் செய்ய வாய்ப்பிருந்தும் அடக்கி வாசிக்கப்பட்ட ஹீரோயிசம் என இது கொஞ்சம் வித்தியாச சினிமாதான். கமர்சியல் காம்ப்ரமைசிற்க்காக முதற் பாதியில் இருக்கும் இரண்டு பாடல்களையும் துணிந்து வெட்டியிருந்தால் இன்னமும் படம் ஷார்ப்பாக வந்திருக்கும்.
வாழ்கையில் .... .காதலில்... தொழிலில் என  கொஞ்சம் கொஞ்சமாய்  வெற்றியே ருசிக்க காத்திருக்கும் அருண் விஜய்...  விதி வசத்தால் ஒரு ரவுடி கும்பலிடம் மோத நேரும்போது நிகழும் சம்பவங்கள்தான் கதை.  ஆனால் இதை ஹீரோவின் பார்வையில் சொல்லாமல்... வில்லன்களின் பார்வையில் நகர்த்துவதுதான்  இந்த படத்தின் ஸ்பெஷல் திரைக்கதை.

நிஜத்திலும்  ஒரு நல்ல வெற்றிக்காக காத்துக்கொண்டிருக்கும் அருண்விஜய்க்கு ஏற்ற கதாபாத்திரம். ஓவர் ஹீரோயிசம் செய்து நம்மை துன்புறுத்தாமல் அந்த கதாபாத்திரத்தை ரசிக்க வைத்திருப்பதின் மூலமாக வெற்றிக்கோட்டை எளிதாக தாண்டியிருக்கிறார்.கான்சர் கொடுத்த மனக்காயங்கள் ஏதுமின்றி புத்துணர்ச்சியாய் வலம் வரும் மம்தா மோகன்தாஸ் படத்தின் ரொமான்ஸ் ஏரியாவிற்கு பொருத்தமாய்  செட்டாகியிருக்கிறார்.  படத்தின் இருள்  நிறம் கொஞ்சமே கொஞ்சம் கலர்புல்லாய்  மாறுவது இவர் வரும் காதல் காட்சிகளால்தான்.

காட்டு கத்து கத்தாமல்.. உடல் மொழியாலும்.. பார்வையாலும் வெளிப்படும் வில்லன்களின் குரூரம் நச்.முழுக்க முழுக்க இயக்குனரின் கட்டுப்பாட்டில் பயணம் செய்யும் திரைக்கதை... ஒரு த்ரில்லர் படத்திற்கு தேவையான படபடப்பை கொடுத்திருக்கிறது. கசாப்பு கடை பஞ்சாயத்தில் ஆரம்பிக்கும் பதைபதைப்பு கிளைமாக்ஸ் வரை கொஞ்சமும் குறையாமல் தொடர்வது இயக்குனரின் திறமை. முக்கியமாக அருண் விஜய் தன முகம் மறைத்து... வில்லனின் அடியாளை நொங்கெடுக்கும் போது... அதை ஒளிந்து நின்று ரசிப்பதை போலான மனநிலைக்கு நம்மையும் அறியாமல் சென்றுவிடுகிறோம்.

படம் முழுக்க வில்லன்களை சுற்றியே நகர்வதால்....   ஏகப்பட்ட வயலன்ஸ்... ரத்தம்  என பெண்களுக்கும்... குழந்தைகளுக்கும் ஆகாத பாதையில்  படம் பயணம் செய்வது கொஞ்சம் மைனஸ்.


 தமனின் இசையும்... சுகுமாரின் ஒளிப்பதிவும் ஒரு அக்ஷன் த்ரில்லர்க்கு  வேண்டிய மூடை சரியான அளவில் கொடுத்திருக்கிறது.  ஒரு சாமானியன் இருபது முப்பது ரௌடிகளை பந்தாடுவதை நீட்டி முழக்காமல் எடிட்டி இருப்பதில்  எடிட்டரின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் மகிழ் திருமேனி... தன்னை நம்பிய அருண் விஜய்யே காப்பாற்றியிருக்கிறார்.(+) பிளஸ்

திரைக்கதை
அருண் விஜய்
இயக்கம்


(-) மைனஸ்

மிதமிஞ்சிய வன்முறை

VERDICT :  வித்தியாசமான த்ரில்லர்

RATING    : 4.8/10.0


EXTRA  பிட்டுகள்

அடல்ட்ஸ் ஒன்லி சான்றிதழ் பெற்ற இந்த படத்திற்கு ஞாயிறு மாலை பெண்கள் குழந்தைகள் என பரபட்சமின்றி எல்லோரயும் அனுமத்தித்தார்கள் கமலா தியேட்டரில்.  ஓவர் வயலன்ஸ் படமான இதை குழந்தைகள் ஆர்வமாய் பார்த்ததுதான் கொஞ்சம் பயம்.

Sunday, June 10, 2012

நொறுக்கு தீனி -6 (10.06.12)

அம்பாள் நகர்


சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு. கொஞ்சமே கொஞ்சம் குறுகலான சாலை. அதில் எதிரும் புதிருமாக மீன் பாடி வண்டியிலிருந்து டேங்கர் லாரி வரை பயணிக்கிறது.  அதற்க்கு நடுவே என்னை போன்ற பாதசாரிகள் ஒரு ஆயிரம் பேர். அதிலும் மாலை வேளையில் ஒரு வாக் போய் பாருங்கள் பிரதான சாலை முடிவிலிருந்து மெயின் ரோடு வந்து சேர குறைந்தது கால் மணி நேரமாவது ஆகிறது. (ஆனால் வெறும் ஐந்து நிமிடங்களில் கடந்து விடக்கூடிய தூரம்தான்). எப்போதுமே திருவிழா கூட்டம்.  இடையே, சில பல பெண்கள் ஹாஸ்டல்கள் வேறு இருப்பதால்... அதில் வேறு  கவனம் தொலைத்து.. ஹி... ஹி... டாபிக் மாறுகிறது. ஆமாங்க.. சீக்கிரமே  இன்னொரு ரங்கநாதன் தெரு ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ஈக்காட்டுதாங்கல்  அம்பாள் நகர் பிரதான சாலைக்கு


 விஸ்வரூபம்   - முதல்  பார்வை 
பார்த்தவுடன் புருவம்  உயர்த்த  வைக்கும்  புகைப்படம். இன்னும்  இந்த   ஆள்   எதைத்தான்   மிச்சம்   விட்டு   வைப்பார்   என  தெரியவில்லை.  பார்வையில் அத்தனை  நளினம் அது பக்கத்தில் நிற்கும் ஆண்ட்ரியாவிடம் கூட இல்லாதது ஒரு நகை முரண். ஆனால் ட்ரைலர் தான் கொஞ்சம் பீதியே கிளப்புகிறது. கமலின் இயக்கத்தை பொறுத்தவரை ஹே ராம் ஆகட்டும் சண்டியர் ஆகட்டும்... குழப்பமான திரைகதையே கூட நன்கு தெளிவாய் சொல்ல முயற்சித்திருப்பார். அது விஸ்வரூபதிலும் தொடரலாம். all the best for a good cinema.
தத்து பித்து
 ஒரு ஏ.சி வாங்கவேண்டும் அல்லது ஒரு கார் வாங்க வேண்டும்  என்கின்ற எண்ணத்தை  எனக்குள் விதைப்பது எது? அதிகப்படியான வரவா... அல்லது சமூகத்தில் நாமும் ஒரு தரமான நிலைக்கு வரவேண்டும் என்கின்ற சுய முன்னேற்ற முயற்சியா... அல்லது   சூழ்நிலையா.... முதலாவது,  நான் வாங்கும் சம்பளத்திற்கு   ஒத்து வராத விஷயம். பத்தாவது தேதி கடப்பதற்குள் பேங்க் பேலன்ஸ் கரைந்துவிடுகிறது கடலில் கொட்டிய உப்பு போல. ரெண்டாவது.. அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய செய்யவே அடுத்த அத்தியாவசிய தேவை காலிங் பெல் அடிக்காமலேயே கதவை தட்டி விடுகிறது. அதனூடே கட்டி புரண்டு சண்டையிட்டு முடிப்பதற்குள் அடுத்த மாதம் வந்து விடும். அப்புறம் என்ன.. முதலில் இருந்து... வாடகை... மளிகை.. பால்... தண்ணி... இதில் எங்கே சமூகத்தில் நம்  முன்னேற்றத்தை பற்றி யோசிக்கிறதாம். மூன்றாவது... சூழ்நிலை.. இப்போதிருக்கும் நம் வாழ்க்கை முறையில் இதுதான்  ஒரு பொருள்  அல்லது சேவைக்கான தேவையே அதிக  அளவு  தீர்மானிக்கிறது என்பது அடியேனின் கருத்து. வாங்கும் தகுதியோ வசதியோ இல்லாவிடினும் வாங்க தூண்டும் சூழ்நிலைகளை நாம் சந்தித்து கொண்டேதான் இருக்கிறோம். சரியான சமயத்தில் ஒரு போக்குவரத்து வசதி அமையாமல் போகும் நேரத்தில்... குடும்பத்துடன் நெரிசலில் பயணம் செய்ய நேரும் நரக நேரங்களில்... குழந்தை... வெக்கையின் வலி தாங்காமல் தூக்கம் தொலைத்து அழ ஆரம்பிக்கும் இரவு பொழுதுகளில்.. . இது போன்ற ஒரு நெருக்கடியான சூழ்நிலைதான் நம்மை வாங்க தூண்டுகிறது... கிரெடிட் கார்டு அப்ளிகேஷன்களில் கையப்பம் இட வைக்கிறது. ஆடம்பரமான விஷயங்கள் கூட அத்தியாவசியமான தேவைகள்  ஆகி விட்டதுதான் இந்த  உலகத்தின் வளர்ச்சியா...?


விகடன் பக்கம்

அனுபவங்கள்... அனுபவங்கள்... வித விதமான ரக ரகமான அனுபவங்கள்... அதுதான் ராஜு முருகனை நாற்பது வாரங்களுக்கு மேலாகியும் அதே சுவாரசியம் குன்றாமல் எழுத  வைக்கிறது. இந்த வாரம் கோடை விடுமறை நாட்களை பற்றி பகிர்ந்து கொண்ட வட்டியும் முதலும் அவ்வளவு அழகு. எல்லோருடைய சிறு வயது கோடை விடுமறை தினங்களை, திரும்ப நினைவு கூற வைத்து பெருமூச்சு விட செய்தது. அதிலும் அந்த கடைசி வரி " நான் கடவுளாக இருந்திருந்தால் அவளுக்கு பரிசளித்து இருப்பேன்... இப்போதே இன்னொரு கோடை விடுமுறையே!    என்பது கவிதை...


மஸ் எழுதியிருக்கும் " உங்களையும் தாக்கலாம் இந்த நோய்"  மருத்துவர்களுக்கும் மருந்து கம்பெனிகளுக்கும் உள்ள உறவை புட்டு புட்டு வைத்து அதன் பலி ஆடுகள்  பொது ஜனமாகிய நாம்தான் என சுருக்கென ஊசி குத்துகிறது.  இதே விஷயத்தைதான் சத்யமேவ ஜெயதே வில் அமீர் கான் விமர்சித்து டாக்டர்களின் கண்டனத்திற்கு ஆளானார். இப்போது விகடன்.  மக்களுக்கு சேவை செய்யும் மருத்தவ துறை இந்த அளவிற்கு சீர் கெட்டு போனதற்கு யார் காரணம் என அலசினால்...  ஒரு மெடிக்கல் சீட்டிற்கு ஐம்பது லட்சம் வரை நிர்ணயிக்கும் நம் அரசியல்வாதிகளும் .. அவர்களின் பினாமிகளின் பேரில் இயங்கும் மருத்துவ கல்வி நிறுவனங்களும்தான்... அதற்க்கு மேல் என்றாலும் தர தயார் என்னும் நம் சமூகமும்தான்  என்றாகிறது.  பட்டர்ப்ளை EFFECT என்பது இதுதானோ ?

பெங்களூர் சொர்ணக்கா


பெங்களூரில் தன் காதலனை கொலை செய்ய ஐந்து லட்ச ரூபாய் கொடுத்து கூலிப்படையே ஏவி  விடும் அளவிற்கு ஒரு கல்லூரி பெண் சொர்ணக்கவாக மாறியிருக்கிறார்.  பெண்களை பற்றிய நம் மதிப்பீடுகளின் அளவு தாறுமாறாக மாற்றமடைந்து வருவதற்கு என்ன காரணம். ஊடகமா.. கலாச்சார மாற்றமா... எதுவாக இருந்தாலும் நிலைமை ஆரோக்யமாக இல்லை. தவறு செய்கிறோம் என்ற அறிவே இல்லாமல்.. எல்லா தவறுகளையும் செய்து விட்டு.. அதிலிருந்து தப்பிக்க... பின் விளைவுகளை பற்றி ஆராயாமல் மேலும் மேலும் மோசமான தவறுகளை செய்து இப்போது களி  தின்னும் அவலத்திற்கு உள்ளாகும் போதாவது புத்திக்கு உறைக்குமா... நாம் செய்தது தவறு என்று...?


கடமையுணர்ச்சியும்... விசுவாசமும்...

மேட்டுப்பாளையம்  காரமடை அருகே... ஒரு பெட்ரோல் பங்க் மேலாளர் வங்கியில் கட்டுவதற்காக சில லட்சங்களை எடுத்துக்கொண்டு பைக்கில் சென்றுகொண்டிருக்க... பின்னால் வேனில் வந்த கும்பல் ஒன்று வண்டியோடு அவரை இடித்து விட்டு பணத்தை திருடி செல்ல முயன்றிருக்கிறது. வேன் இடித்து கீழே விழுந்தவுடன் பணத்தை அவரிடம் இருந்து பிடுங்க முயற்சிக்கையில் அவர் தர மறுக்க துப்பாக்கியே காட்டி சுட்டு விடுவதாக மிரட்டியிருக்கிறார்கள். அந்த சூழ்நிலையிலும், உயிர் போனாலும் பரவாயில்லை பணத்தை தர மாட்டேன் என அந்த மனிதர் மறுக்க.. துப்பாக்கியால் அவர் காலில் சுட்டிருக்கிறார்கள்..  இதற்குள் அந்த வழியில் வந்தவர்கள் இந்த கொள்ளையே கண்டு தடுக்க முயற்சிக்க அந்த கும்பல் பணத்தை விட்டு விட்டு வேனில் தப்பியோடியிருக்கிறது. சினிமா போல நிகழ்ந்த
இந்த சம்பவத்தில்  நாம் கற்றுக்கொண்ட பல விஷயங்கள்... வெகு நாட்களாக நன்கு திட்டமிடப்பட்ட கொள்ளையர்களின் முயற்சியும்... உயிரை விட தன் முதலாளியின் பணம் முக்கியம் என விசுவாசம் காட்டிய அந்த ஊழியரின் கடமையுணர்ச்சியும்...   கண்ணுக்கு முன் நடக்கும் தப்பை கண்டவுடன், கொள்ளையர்கள்  துப்பாக்கி வைத்திருந்தாலும் அதை தடுக்க முற்சித்த சில மனிதர்களின் வீரத்தையும்... மனித நேயத்தையும் நம்மால் புரிந்து கொள்ள முடிந்தாலும்... இன்னமும் இந்த கொலை கொள்ளை சம்பவங்கள்... குறையாமல்... அதிகரித்துக்கொண்டே போவதுதான் நாளைய தினத்தை ஒரு வித பயத்துடன் எதிர்கொள்ள வைக்கிறது. 


இசை
தமனுக்கும் L.R. ஈஸ்வரிக்கும் ஒரு நல்ல அலைவரிசை செட்டாகியிருக்கிறது. கலசா கலசா பாடலுக்கு பின் தடையற்க தாக்க படத்தில் வரும் "நான் பூந்தமல்லிதான்" பாடல் சரியான குத்து பரோட்டா.

Monday, June 4, 2012

நொறுக்கு தீனி - 5 - (04.06.12)

சென்னை - ஒரு ஆச்சரியம்நான் சென்னைக்கு வந்து இத்தோடு ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. சொந்த ஊர் பாசம் சென்னையின் மீது ஒரு பிடிப்பை கொடுக்க மறுத்தாலும், சென்னை மீதான என் ஆச்சரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது. சென்ற வாரத்தின் ஒரு நாளில், நாங்கள் குடியிருக்கும் போர்ஷனில் மீதமுள்ள ஒரு வீட்டிற்க்கும் ஆள் வந்தாயிற்று. சொந்த ஊர் மதுரை.  பக்கத்தில்  இருக்கும் இரு போர்ஷன்களில் குடியிருப்பவர்களில் ஒருவர் காரைக்குடி... மற்றொருவர் நாகை. நான் கோயம்புத்தூர். ஆக... எல்லா ஊர் பயல்களும் நீக்கமற நிறைந்து கிடக்கிறார்கள். வருபவர்கள் எல்லோருக்கும் வேலை வாய்ப்புகளையும், வாழ்வின் ஜீவாதரங்களையும் சென்னை பகிர்ந்து கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறது. நான் திருப்பூரில் இருக்கும் போது கவனித்ததுண்டு... மதுரை, தேனி என தினம் தினம் பனியன் கம்பெனி வேலையே நம்பி புதிது புதிதாய் வருபவர்கள் பல நூறு. திருப்பூர் சொந்த மாநில ஆட்களுக்கு வேலை வாய்ப்பை கொடுத்தால்... சென்னை... பல மாநில ஆட்களுக்கும் வாழ்கையே கொடுத்துக்கொண்டிருக்கிறது. தினமும் சென்ட்ரலில், எக்மோரில் அழுக்கு சட்டை, உடைந்த பெட்டியுடன், பான், குட்கா மென்று கொண்டே பயணிக்கும்  பல நூறு வட இந்தியர்களை நாம் கடந்து கொண்டேதான் இருக்கிறோம். இத்தனை ஆட்களையும் சென்னை அதன் குறுகிய வட்டத்திற்குள் எப்படித்தான் தாங்கிக்கொண்டிருக்கிறது... ? சென்னையின் உண்மையான மண்ணின் மைந்தர்கள் இப்போது எங்கிருக்கிறார்கள்... என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்...?இசை ராஜா

மின்சாரம் இல்லாத இரவு...  புழுக்கம் தாங்காமல் பால்கனியில் படுத்துக்கொண்டிருக்கிறேன்... மொபைல் போன் பண்பலையில்... " ஓ பட்டர் ப்ளை " என குரல் வழிந்தோடுகிறது...  அவ்வளவு நேரம்  வீசாத  காற்று  இப்போது  மெல்லிசாய் வீச....  எப்படி உறங்கிபோனேன்... தெரியவில்லை.. கொஞ்ச நேரத்தில்... "ஜனனி ஜனனி" என தூரத்தில்  எங்கோ  ஒரு காந்த   குரல்  என்னை அதன் பக்கம் இழுக்கிறது... தூக்கம் களைந்து போக... இப்போது அந்த ஜீவ ஒலி காதுகளில் தெளிவாக... "கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே... நின்ற நாயகியே இட பாகத்திலே.."  என மெய் சிலிர்க்க  வைக்க....  மெல்ல கண்  திறந்து  வானம்  பார்க்கிறேன்... நிலா சிரிக்கிறது. 

ராஜா..  இசையின் ராஜா... கோடானுகோடி மக்களை ஒரு சேர  தாலாட்டும் தாய். என்னை சிரிக்க..அழ.. உருக... உணர... என பண்படுத்திய தகப்பன்... வாழ்க பல்லாண்டு.   

தங்கமே தங்கம்
அமெரிக்காவில் உள்ள வேலையில்லா திண்டாட்டம்... அமிஞ்சிக்கரை பெண்ணின் திருமணத்தை தள்ளி போடுமா... ?  போடுகிறதே... தங்கத்தின் விலையில்...  என் பதின் பருவங்களில் என் மாமாவின் நகை கடையில் பனி புரிந்த போது தங்கம் சவரன் விலை வெறும்  மூவாயிரத்து சொச்சம்... எப்போது தங்கம் நகைகளாக மட்டும் பார்க்கப்படாமல்.. ஒரு முதலீடாக கவனிக்க பட்டதோ... அன்றிலிருந்தே இதற்கு ஏறுமுகம்தான். இப்போது பவுன்... கிட்டத்தட்ட இருபத்திமூன்றாயிரம்.   சொக்கா.. பெண்ணை பெற்றவன் கதி... நம் உயிரை தவிர.... நம்மை சுற்றியிருக்கும் எல்லாவற்றிருக்குமே மதிப்பு கூடிக்கொண்டே போகிறது.

பெட்ரோல் பூதம்

தங்கத்தை விட்டு தள்ளுங்கள்... அதை விட பல மடங்கு மதிப்பு மிகுந்ததாய் அசுரத்தனமாய் பலம் பெற்றுக்கொண்டிருக்கிறது பெட்ரோல் என்னும் பூதம். சென்ற வாரத்தில் வேலை முடிந்து வீட்டிக்கு திரும்புகையில் ஒலிம்பியா டெக் பெட்ரோல் பங்க் அருகே திருவிழா கூட்டம். நான் கூட பவர் ஸ்டார் தான் எதோ படபிடிப்புக்கு வந்திருக்கிறார் என நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது... விலை ஏற்ற உயர்வு போராட்டங்களை அமுக்க பெட்ரோலை பதுக்கிய களவாணித்தனம்.  அவனவன்... எதோ.... தாகத்திற்கு தண்ணி கேட்டு கிடைக்காமல் செத்து விடும்  மன நிலையில் இருந்தார்கள். என் ஹோண்டா பெட்ரோல் மீட்டர் வேறு சிவப்பில் நீந்திக்கொண்டிருந்தது. நாம் என்ன ரஷிய புரட்சி போராட்டக்காரர்களின் புதல்வர்களா... அப்பிராணி தமிழர்கள்... கொஞ்ச நேரம் பரிதாபமாய் பார்த்து விட்டு... கடைசியாய் கிளம்பும் போது... ஆத்மா திருப்திக்காய் கொஞ்சம் கெட்ட வார்த்தைகளை யார் காதிலும் விழுந்துவிடாதபடி தனக்குள்ளே சொல்லிக்கொண்டு  கலைந்து   போக ஆரம்பித்து விட்டோம்.விகடன் பக்கம்

இந்த வார கவர் ஸ்டோரி தான் விகடனில் டாப். பைக் ரேசர்கள் பற்றிய அந்த கட்டுரையே படித்ததில் இருந்து எதிரில், பின்னால்.. பக்கவாட்டில்.. இடம் வலம் என என்னை கடந்து போகும் எல்லோருமே பைக் ரேசர்கள் போலவே ஒரு பீதியே கிளப்பினார்கள்.சிக்னலுக்கு  சிக்னல் ... ஹெல்மெட்  போடாமல்  வந்தாலே ... கோழி  அமுக்குவது  போல  அமுக்கும்  நம் போலீஸ்  நண்பர்கள் .. கையில்  வாக்கி  டாக்கி இருந்தும் இதை தடுக்க முடியாதவர்களாக இருப்பது மிகுந்த வியப்புக்குள்ளானதாக இருக்கிறது.   அது சரி.. நம்மாளுக... பம்மி பம்மி வருபவனைத்தான்  பாஞ்சு பாஞ்சு  புடிப்பாய்ங்க....இசை
சகுனியில் ஒரு மெலடி... அப்படியே உருக வைக்கிறது. "மனசெல்லாம் மழையே" என தொடங்கும் அந்த பாடல்தான் இப்போதைய ஹாட் கேக்.

Saturday, June 2, 2012

மனம் கொத்திப் பறவை - விமர்சனம்விகடனில் வந்த இயக்குனர் எழிலின் பேட்டியும், இமானின் இரண்டு பட்டாசான பாடல்களும், கேட்சியான டைட்டிலும், சிவ கார்த்திகேயன் என்னும் துருப்புசீட்டும் முதல் நாளே படம் பார்க்கும் விருப்பத்தை தந்திருந்தது. ஆனால், பத்தோடு பதினொன்று போலான காதல் படம்தான் இதுவும். முதல் பாதியில் கொஞ்சம் காமெடி, இரண்டாம் பாதியில் கொஞ்சம்  கடி என எந்த விதமான அதிர்வும் தராமல் படம் நம்மை கடந்து போகிறது.
காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் அன்னப்பறவைதான்..எப்போது? நம்முள் நாம் அதை  தெளிவாய்  உணரும் போது.... அந்த உணர்வுகள் நமக்குள் கொடுக்கும் இனம் புரியா சந்தோஷமும்.... நம்மையும் சிறகு விரித்து பறக்க செய்யும் உற்சாகமும்.... காதல்... மனசை சுகமாய் கொத்தி செல்லும் பறவைதான். ஆனால் இந்த படத்தின் பிரச்சனையே... அந்த காதலை நம்முள் உணர வைக்க தவறியதுதான். காதலையும் காமெடி போலவே லைட்டாய் எடுத்துக்கொள்ளும் ஹீரோ, ஹீரோவை காதலிக்கிறோமா... இல்லை குடும்பத்தை  காதலிக்கிறோமா என குழப்பியடிக்கும் ஹீரோயின் என ஒட்டியும் ஒட்டாத கேரக்டர்கள் அவர்களின் காதல் மீதோ, அல்லது படத்தின் கதை மீதோ நமக்கு  ஈடுபாடு வருவதை அநியாயமாய்  தவிர்க்கிறது.   


எதிர் எதிர் வீட்டில்... சிறு வயது முதலே ஒன்றாய் வளரும் ஹீரோ ஹீரோயின்.. ஹீரோயின் மீதான ஒருதலை காதல்.. ஹீரோயினின் அடாவடி குடும்பம், காதலை சேர்த்து வைப்பதற்காய் சோறு தண்ணி இல்லாமல் ஹீரோவுக்காக உழைக்கும் நண்பர்கள் கூட்டம் என முற்பாதி கொஞ்சம் காமெடி, கொஞ்சம் நல்ல பாடல்கள் என நகர்ந்து விட்டாலும்... இரண்டாம் பாதி சரி சமமாய் பொறுமையே சோதிக்கிறது... அதுவும் நாம் பார்த்து பார்த்து சலித்து போன காட்சிகள்.. அதே ரூட்டில் பயணம் செய்யும் போது கொட்டாவி வருவதை சத்தியமாய் தடுக்க முடியவில்லை. 
சிவ கார்த்திகேயன், குழந்தை தனமாய் முகத்தை வைத்துகொள்ளும் போதும்... ஹீரோயனிடம் வழியும் போதும் அநியாயத்திற்கும் ஸ்கோர் செய்கிறார். ஆனால் அதே உடல் மொழியே சீரியசான காட்சிகளிலும் காட்டும் போது எடுத்த ஸ்கோர் எல்லாம் மைனசில் கரைகிறது.

புதுமுகம் ஆத்மியா... கண்டதும் காதலிக்கலாம் போலத்தான் இருக்கிறார். ஆனால் படு குழப்பமான அந்த கேரக்டரேஷன் அவரை ரசிக்க விடாமல் இம்சிக்கிறது. தன் விருப்பம் இன்றி தன்னை கடத்தி வந்து விட்டார்கள்  என அவ்வளவு சீரியாசாய் வசனம் பேசும் ஹீரோயின், அடுத்த ரீலிலேயே... வந்தது வந்துட்டோம்... ஓகே ரெண்டு மாசம்  ஜாலியாய் இருந்துட்டு போகலாம் என்கின்ற மனநிலைக்கு மாறி விடுவது செமையாய் இடிக்கிறது யுவர் ஆனர்.


பெரிய பெரிய லாஜிக் குளறுபடிகளால்...படம் ரெண்டாம் பாதியில் மட்டையாகிவிடுகிறது. உதாரணத்திற்கு,  படு பயங்கர பில்ட் அப்போடு.... வில்லன் வருகிறார்...தான் திருமணம் செய்யவிருக்கும் ஹீரோயினை கடத்திய  ஹீரோவை கண்டுபிடித்து பொடிமாஸ் ஆக்குவேன் என சூளுரைத்து விட்டு சுமோ ஏறுகிறார். படம் முடிந்து வணக்கம் போட்ட பின்பும் அவர் வந்த பாடில்லை. ஹீரோயின் கிடைக்காத வருத்தத்தில் அப்படியே காசி, கயா என்று போய் நர மாமிசம் தின்னும்  சாமியார் ஆகிவிட்டாரா என்று சந்தேகம். 
 இத்தனை குழப்ப கும்மிகளுக்கு மத்தியிலும், சிங்கம் புலி, சாம்ஸ் போன்றவர்களின் காமெடி ஏரியா.. கொஞ்சம் ரசிக்க வைக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை. ஐயோ... மீண்டும் ஒரு பருத்தி வீரனா என நடுங்கும் போதே... ஹீரோயினின் அடாவடி குடும்ப மெம்பர்களை காமெடி பீசுகளாக்கி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்கிறார்கள். 


இமானின்... ஜல் ஜல் ஜல் ஓசை... அம்சமான இசை கோர்வை... அதை ரசிக்க விடாமல் செய்திருப்பத்தில்தான் இயக்குனரின் சாமர்த்தியம் ஒளிந்திருக்கிறது.

ரொம்பவும் ரிஸ்க் எடுக்காமல்.. .உலக சினிமா.. உள்ளூர் சினிமா என தரம் பிரிக்காமல்... மென்மையாய் ஒரு காதல் படம் கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் எழில். இரண்டாம் பாதியில் கொஞ்சம் ஹோம் வொர்க் செய்திருந்தால் படத்தை இன்னமும் நன்றாக தேற்றியிருக்கலாம்.(+) பிளஸ்

முதற்பாதி காமெடி
பாடல்கள்


(-) மைனஸ்

மொத்த இரண்டாம் பாதியும்.
லாஜிக்

VERDICT : எதிர்பார்ப்பின்றி போனால் முதற் பாதியில் சிரிக்கலாம். இரண்டாம் பாதியில் தூங்கலாம்.

RATING    : 4.0/10.0


EXTRA பிட்டுகள்.

வெள்ளிகிழமை முதல் நாள் இரவுக்காட்சி.. உதயத்தில்.. கூட்டத்தோடு கூட்டமாய் பம்மி பம்மி படம் பார்த்துக்கொண்டிருந்த சிவ கார்த்திகேயனை அடையாளம் கண்டு கொண்ட ரசிகர்கள்   இடைவேளையில் சந்தோசத்தோடு துரத்த... அவர்களிடம்  இருந்து தப்பித்து ஆப்ரேட்டர் ரூமில் தஞ்சமடைந்தார் சிவா. இரண்டாம் பாதியில்... கிளைமாக்ஸ் கொடுத்த காண்டில் .... சிவா படம் முடிவதற்கு ஐந்து நிமிடம் முன்பாகவே எஸ்கேப்.

நிறைய சினி ஆட்களை.. விஜய் டிவி பிரபலங்களை காண முடிந்த்தது. எல்லோரும் ரசிகர்களின் பல்ஸ் பார்ப்பதற்காக வந்திருப்பார்கள் போல.. படம் நன்றாக இருந்ததா.. இல்லையா என ஒரு வித  குழப்பத்தோடு வெளி வரும் ரசிகர்களின் முக ரியக்க்ஷன்களை படிக்க நிச்சயம் ரொம்ப சிரமப்பட்டிருப்பார்கள்.

Sunday, May 20, 2012

நொறுக்கு தீனி - 4 (20.05.12)

 
தத்து பித்து


out of form -  இந்த வார்த்தை கிரிக்கெட்டில் மட்டுமல்ல... வாழ்கையிலும் அவ்வப்போது இயல்பாய் நிகழக்கூடிய ஒன்று. சில சமயங்களில்,  எல்லாம் வெறுத்து.. என்னடா வாழ்க்கை இது என நினைக்க தோணுமே... அதேதான்! எல்லாம் நல்லபடியாகத்தான் சென்று கொண்டிருக்கும்... தீடிரென ஒரு வெறுப்பு...குழப்பம்.. .தினசரி நடவடிக்கைகளில் ஒரு ஈடுபாடு இல்லாமை... ஒரு தேக்கம்... ஒரு speed breaker போல...  எல்லோரும் சில சூழ்நிலைகளில் சந்திக்கும் பிரச்சனை இது. நன்றாக எழுதிக்கொண்டிருப்போம்.. .தீடிரென  எந்த இழவுமே தோன்றாது. வீம்புக்காய் எழுதினாலும்.. எழுதிய பின் படித்து பார்த்தால்....  நாமே காறி துப்பலாம் போல அவ்வளவு கன்றாவியாய் இருக்கும். out of form. எழுத்தாளன், நடிகன்,  விளையாட்டு வீரன்... சராசரி மனிதன் என பாகுபாடின்றி எல்லோரும் சந்திப்பது...


 தீர்மானிக்க முடியா ஒரு புதிர்தான் வாழ்க்கை.. நாளை என்ன நடக்கும் என்று ஒருத்தனுக்கும் தெரியாது...  நாளை பற்றிய ஒரு எதிர்பார்ப்பு இல்லாமல் தேமேயென சொங்கி போக வைக்கும் இந்த பிரச்சனைக்கு தீர்வு சொல்வதல்ல இந்த பதிவின் நோக்கம்.. பிரச்சனை எனக்கும் இருக்கிறது என ஒப்புக்கொள்ளவே...


விகடன் பக்கம்


கொரநாட்டுக்கருப்பூர் தியாகராசனை இனி தன் வாழ்நாள் முழுக்க மறக்கமாட்டார் கார்டூனிஸ்ட் கம் எழுத்தாளர் மதன். தான் விளையாட்டாய் கேட்ட கேள்வி இந்த அளவிற்கு வினை வைக்கும் என்று  பாவம் அந்த தியாகராசனும் நினைத்திருக்கமாட்டார். இந்த வார முதல் அதிர்ச்சி... விகடனில் மதன் கார்ட்டூன் இல்லை... அப்படியே அடுத்த பக்கத்தை திருப்பினால்... பேரதிர்ச்சி... .இனிமேல் மதனே, விகடனில் இல்லை. என்ன கன்றாவிடா இது... பிரச்சனையே அலசி பார்த்தால் இருவரது கருத்துக்களிலுமே  நியாயம் இருக்கிறது. விகடனில் ஒரு கார்டூனிஸ்ட்டாக தன் வாழ்க்கையே தொடங்கி... விரல் பிடித்து நடந்து.. தன் தனித்துவமான திறமையால் கொஞ்சம் கொஞ்சமாய் வளர்ந்து...நல்ல எழுத்தாளராய் மிளிர்ந்து...  மிக நீண்ட வாசகர் வரிசையே  பெற்றவர் மதன்...  விகடனில் வெளிவரும்   ஒவ்வொரு மதன் கார்ட்டூனும் நம்மை உடனே சிரிக்க வைத்து அடுத்த நொடியே கொஞ்சம் சிந்திக்கவும் வைக்கும். அதே போல அவரது ஹாய் மதன் கேள்வி பதில் பகுதி.. சுஜாதா சாரின் ஏன் எதற்கு எப்படி போலவே நகைச்சுவை கோட்டிங் தடவிய  பொது அறிவு  புதையாலாய் இருக்கும். இனி அவை எதுவும் இல்லை என்பதே மிக ஏமாற்றமாக இருக்கிறது. ஆசையாய் கொஞ்சிக்கொண்டிருந்த  பொம்மை பிடுங்கப்பட்ட குழந்தையின் மனநிலை போலவே! கொஞ்சம் காலமாகவே மதனுக்கும் விகடனுக்கும் ஒரு சுமூகமான உறவு இல்லை  என்பது இலை மறை காய் மறையாய் இருந்து வந்தது. விகடன் ஆசிரியர் இலாகாவில் இருந்து அவர் விலக்கப்பட்டது முதல் படி... இப்போது இரண்டாம் படி... மிக பலமாய்... இனிமேல் விகடன் அலுவலக படியே ஏற முடியாதபடி...  


மதனுக்கு ஒரு மதிப்புமிக்க சிம்மாசனத்தை கொடுத்திருந்த விகடன் இப்படி பொசுக்கென பிடுங்கிகொள்ளுமென அவரது வாசகர்கள் யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டர்கள்.

மதன் இல்லாத விகடன் இனிமேல் எப்படி இருக்கும்?  கால மாற்றங்களுக்கேற்ப தன்னை புதிது புதிததாய் வடிவமைத்துக்கொள்வது விகடனின் ஸ்பெஷாலிட்டி. நிறைய முறை நான் இதை உணர்ந்திருக்கிறேன்.. குறும்பு டீம் என விகடனில் ஒரு பகுதி சக்கை போடு போட்டது அந்த காலங்களில்.... தீடிரென அது நின்று விட்டது.. அது போலத்தான் 'விகடன் டாப் ' பகுதியும்.. இளசுகளின் யதார்த்த குறும்புகளாய் நீண்ட காலம் வசீகரித்து வந்தது.. அதுவும் பொசுக்கென ஒரு நாள் நின்றது. அது போல விகடனில் தொடர்ச்சியாய் எழுதி வந்த  சுஜாதா சாரின் மறைவால் உண்டான   வெற்றிடம்.. இதனால்  விகடன் படிக்கும் ஆர்வம் குறைந்தது ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் மட்டுமே.. அதை விட சிறப்பாய் வேறு விஷயங்களை தேர்ந்தெடுத்து விடுவதில்தான் விகடனின் கெட்டிக்காரத்தனம் ஒளிந்திருக்கிறது.  so, மதன் இல்லாத குறையே மிக எளிதாக விகடன் மறக்கடித்து விடும்.

விகடன் இல்லாத மதன் இனிமேல்... ?  வாழ்க்கை என்னும் கடலில்... விகடன் என்னும் மதிப்பான கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்த மதன் லைப் போட் கூட இல்லாமல் கப்பலில் இருந்து இறக்கிவிடப்பட்டிருக்கிறார். ஆனால் என்ன... நீச்சல் தெரிந்த நல்ல திறமைசாலிதான் மதன்.... எழுத்தாளர்  ஞானிக்கு  நடந்தது போலவே... விகடன் கை விட்டாலும்.. கை கொடுக்க ஏகப்பட்ட பத்திரிக்கைகள் இருக்கின்றன. தன் எழுத்தின் மூலம் தன் வாசகர் வட்டத்தை அவர் தக்கவைத்துக்கொள்ளலாம். ஜெயா டிவி சினிமா விமர்சனம்.. ரியாலிட்டி ஷோ நீதிபதி என பன்முகம் காட்டி விகடன் இல்லாத தன் பிந்தைய காலத்தையும் அவர் பிசியாக்கிகொள்ளலாம். 


ஆனால் விகடன் மற்றும் மதன் வாசகர்கள்....?  உண்மையிலேயே மிகப்பெரிய நஷ்டம் நமக்குதான். வோட்டு போட்ட ஏழை மக்கள் போல... என்ன செய்ய... மாற்றம் ஒன்றே மாறாதது.
இசை...

"நீதானே என் பொன்வசந்தம்" மியூசிக் பிட் யு ட்யூபில் கிடைக்கிறது.. அடங்கொக்க மக்க... அந்த ட்ரம்ஸ் மற்றும் கிட்டார் பீட்டில் பின்னி பெடல் எடுக்கிறார் ராஜா சார். பாடல்களை கேட்க மனசு தவமாய் தவமிருக்கிறது.
தடையற்க தாக்க படத்தில் தமனின் இசையில் வரும் இரண்டு  பாடல்கள் ... very impressive...  "காலங்கள்" மற்றும் "கேளாமலே"  இரண்டுமே நல்ல வித்தியாசமான முயற்சி. 


சோகம்


விளம்பரங்களில் " I Love You Rasna" என நம் கவனம் ஈர்க்கும் அந்த வசீகர  (தருணி சச் தேவ்) முகம்,  டிவி பார்க்கும் நம்  எல்லோருக்கும்  பரிச்சயம். உலகின் கொடுமையான விஷயங்களில் ஒன்று.. ஏதும் அறிய இளம் பிஞ்சுகள் பலியாவதுதான். நேபாளத்தில் நடந்த விமான விபத்தில்... நம் தமிழர்கள் பலியான செய்தியே  மட்டும் வெளிச்சம் போட்டு கட்டிய நம் மீடியாக்கள் இந்த குழந்தையே பற்றி ஏதும் சொல்லாதது இன்னமும் கொடுமை. IPL அட்டகாசங்கள்


IPL 20  ஓவர் போட்டிகள், ஒரு பரபரப்பான சினிமா பார்க்கும் அனுபவத்தை கொடுக்கின்றன.. மைதானத்திற்கு உள்ளே அல்ல. .. வெளியே..!.. கற்பழிப்பு புகார்கள்.. மேட்ச் பிக்சிங், ஷாருக்கான் அடிதடி என கண்டபடி களை கட்டி ஒரு த்ரில்லர் கம் அக்ஷன் படம் பார்ப்பது போல இருக்கிறது. தினசரி ஆட்ட நிலவரங்களை விட்டு விட்டு  தினம் ஒரு அதிர்ச்சி செய்தி என மீடியா நமக்கு  செம தீனி போடுகிறது. சும்மாவே நாம அரைப்போம்... இதில்...  வாயில் அவலை வேறு கொட்டினால்..

Wednesday, May 16, 2012

மிக எதிர்பார்ப்புக்குரிய 10 படங்கள்

10.கும்கி

வனமும் வனம் சார்ந்த விஷயங்களும் எப்போதுமே அலுக்காதவை...   காட்டுக்குள்  ஒரு ட்ரெக்கிங் போகும் உற்சாகத்தை கொடுத்த மைனாவின்  கதை களம்தான்  அதன்  வெற்றிக்கு முக்கிய காரணம். அதே குளு குளு மலை சாரலின் பின்னணியில் பிரபு சாலமனின் அடுத்த படம். வித்தியாசமான   முயற்சிகளுக்காக மெனக்கெடும் பிரபு சாலமனுக்கு எட்டாக்கனியாக இருந்த வெற்றி மைனாவின் மூலமாய் கிடைத்ததை கும்கி தக்க வைத்துக்கொள்ளுமா என்பதை பார்ப்போம்.  கதையின் முடிவு ட்ராஜிடியாய் இருக்க வேண்டும் என்பதற்காக... கிளைமாக்சில், ஹீரோயினை... யானை தூக்கி வீசி பந்தாடாமல் இருந்தால் சரி. 09.தாண்டவம்

எதை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் இருக்கும்   விக்ரமிற்கு இந்த படமாவது ஆறுதலை தருமா  என்பதுதான் இப்போதைய  மில்லியன் டாலர் கேள்வி. என்னதான் உயிரை கொடுத்து நடித்தாலும் நடிக்கிற படங்கள் எல்லாம் பப்படம் ஆகிக்கொண்டு வருவதை சீயான் உணர்ந்திருப்பார் போல... அதுதான் ஷங்கரை தேடி சென்று வாய்ப்பை கேட்டு பெறுமளவிற்கு செய்திருக்கிறது. சினிமாவில் ஒரு ஹிட் எல்லாவற்றையும் புரட்டி போட்டு விடும். மதராசபட்டினத்தில் சுவாரசியமான திரைக்கதை செய்த மேஜிக், அதற்க்கு ஈடுகொடுத்த ஜி.வீ  பிரகாஷ் இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு என அதே டீம் இதிலும் கை கோர்த்திருப்பதால் வெற்றி வசமாகும் என்று நம்பலாம். எல்லாவற்றிற்கும் மேல் அனுஷ்கா இருக்காங்க..... ஹி... ஹி... 


08.பில்லா 2


MGR படுத்துக்கொண்டே தேர்தலில் ஜெய்த்தது போல அஜீத் நடந்து நடந்தே வெற்றியடைந்த முதல் பாகத்தில் அதன் ஸ்டைலிஷான மேக்கிங்கிற்கு உறுதுணையாய் இருந்த விஷ்ணுவர்த்தன் - நீரவ்ஷா கூட்டணி இதில் இல்லையென்றாலும் TRAILER கொடுக்கும் இம்பாக்ட் அதிர வைக்கிறது.  உன்னை போல் ஒருவனில் கவனம் ஈர்த்த சக்ரி முழுசாய் இயக்கம் செய்திருக்கும் படம் என்பதால் ஆர்வத்திற்கு  குறைவில்லை. 


07.மாற்றான்


சூர்யா என்றாலே... "சரியான விடை.. உறுதிப்பணம் பத்தாயிரம் என சிரித்துக்கொண்டே HI டெசிபலில் முழங்கும்   "நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி நிகழ்ச்சியே மறந்து ... மாற்றான் சூர்யாவை ரசிக்க  முடியுமா என்னும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு கே.வீ  ஆனந்தின் தலையில் வந்து அமர்ந்திருக்கிறது. ஹீரோக்களை நம்பாமல் ஸ்க்ரிப்ட்டை நம்பும் இயக்குனர் என்பதால்  வெற்றி வசமாகும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. 
06.துப்பாக்கி

முந்தைய படம் தமிழர்களை எந்தளவிற்கு புல்லரிக்க வைத்தது என்பதை அதன் நெகட்டிவ் ரிசல்ட்கள்  அதன் இயக்குனர்க்கு நன்கு உணர்த்தியிருக்கும். பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை. நன்றாக தயாரித்த படைப்பு விளம்பரம் இல்லாமலேயே வெற்றியே பறிக்கும் என்பதை ஏ.ஆர். முருகதாஸ் உணர்ந்திருந்தால் இந்த படம் நிச்சயம் நமக்கு செம தீனிதான். ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன் என்பது இப்படத்தின் மதிப்பை இரண்டுபங்கு உயர்த்துகிறது.


05. இரண்டாம் உலகம்

புரிந்து கொள்ளவே முடியாத விசித்திர மனிதர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது படைப்புகளும் அவரை போலவே... கொஞ்சம் ஜீரணிக்க நேரம் எடுத்துக்கொள்ளும் வகை. இருந்தாலும் ஒவ்வொருமுறையும் அவரது அடுத்த படைப்பு குறித்த ஒரு எதிர்பார்ப்பு இயல்பாகவே நம்முள் வந்து ஒட்டிக்கொள்ளும். அதுத்தான் ஒரு படைப்பாளியின் மிக சிறந்த வெற்றி. இரண்டாம் உலகமும் சொல்ல முடியா ஒரு ஆர்வத்தை தூண்டியிருப்பதை மறுக்க முடியாது. முதன் முறையாக ஹாரிசுடன் கை கோர்த்திருப்பது ஒரு புதிய இசைக்கான வாய்ப்பாக இருக்க கூடும்... ரசிகர்களுக்கும்... முக்கியமாக ஹாரிசுக்கும்.


4 . முகமூடி


ஏகப்பட்ட தயாரிப்பாளர்கள் கைகளுக்கு மாறி மாறி சென்று இப்போது முகமூடி U டிவி வசம். இத்தனைக்கும் மிஸ்கின் ஒன்றும் கண்டபடி பட்ஜெட் உயர்த்தி தயாரிப்பளருக்கு வாந்தி பேதி கொடுக்கும் ரகமல்ல... இருந்தும் அவரது எல்லா படங்களுக்கும் தயாரிப்பாளர்கள் வாய்க்காதது  ஒரு நல்ல படைப்பாளியின் துரதிர்ஷ்டம் என்றே சொல்ல வேண்டும். தனது எல்லா படங்களிலும் நம்பும் படியான லாஜிக்கை பின்பற்றும் மிஸ்கின் இந்த சூப்பர் ஹீரோ படத்தில் லாஜிக்கிற்கு எந்த அளவு முக்கியத்துவம் கொடுத்திருப்பார் என்பதே இப்போதிய எதிர்பார்ப்பு. 3. நீதானே என் பொன் வசந்தம்


படம் ஆரம்பித்த போது இல்லாத பரபரப்பு... படத்தின் இசை ராஜா  என்றவுடன் பற்றிக்கொண்டது... அப்போது இருந்து இப்போது வரை படத்தின் மீது அளவில்லாத காதலில் இருக்கிறார்கள் இசை ரசிகர்கள்... ஒரு நல்ல இசை.. ஜீவனை மயக்கும்... உருக்கும்... அதிலேயே கரைய செய்யும்.. அந்த அனுபவத்திற்காக..மூன்று தலைமுறையும் காத்துக்கொண்டிருக்கிறது... இன்ப தேன் வந்து பாய்ந்திடும் காதினிலே... என...  


2.கடல்

மணிரத்னம் என்னும் மந்திரசொல்... ரஹ்மான் என்னும் மந்திர சாவி.. வார்த்தைகளில் சொல்ல இயலா சிலிர்ப்பும்... ஆர்வமும் ஒவ்வொரு மணி சார் படங்கள் தொடங்கும் போதும் தமிழ் ரசிகனுக்கு கிடைப்பவை. ஆனால் படம் பார்த்ததும்  அது பணால் ஆவதுதான் தொடரும் சோகம். பிராந்திய மொழி நடிகர்கள்.. பிராந்திய தேசத்தில் திருநெல்வேலி பாஷை பேசுவதை ஏற்றுக்கொள்ள முடிவதில்லை வாத்தியாரே... மணி சார் படங்கள் என்றாலே ஷார்ட் அண்ட் ஸ்வீட் வசனங்கள்தான் ஹீரோ. சுஹாசினி வந்து அதற்கும் வேட்டு வைத்தார் முந்தைய படத்தில்.  எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ... அந்த அளவிற்கு பயமும் இருக்கிறது கடல் மீது... காப்பாற்றட்டும் கடவுள். 


1 . விஸ்வரூபம்

தமிழன் எதோ ஒரு புண்ணியம் செய்திருக்கிறான். அதனால்தான்  கமல் மாதிரியான படைப்பாளிகள் தமிழில்  இருக்கிறார்கள். புது புது பரிசோதனை முயற்சிகளால் தன்னையும் தன சொத்துக்களையும் கரைக்கும் கமல்... தன் ரசிகனுக்கு கொடுக்கும் புது புது அனுபவங்கள்தான் இன்னமும் கமல் மீது அதீத எதிர்பாப்பை கொடுத்துக்கொண்டிருக்கிறது. மார்க்கெட்டிங் சாகசங்களுக்காக  ஹிந்தி இசையமைப்பாளர்களுடன்  கை கோர்ப்பதுதான் ஒரு நெருடல். பார்க்கலாம்.. விஸ்வரூபம் என்ன மாதிரியான அனுபவத்தை கொடுக்கிறது என...
 

Sunday, May 13, 2012

நொறுக்கு தீனி - 3 (13.05.12)வாரா வாரம் ஆரவாரமாய் எழுத வேண்டும் என தொடங்கியது இந்த பகுதி... என் சோம்பேறித்தனமா.....இல்லை உங்கள் நல்ல நேரமா என தெரியவில்லை... இவ்வளவு நாள் எழுதாமல்,  அதிகம் படிக்காமல் விட்டதால்,  மண்டையில் ஒட்டடை படிந்து நானே.... எதோ பழசான பொருளாய் மாறிப்போனது போல ஒரு உணர்வு. இனியும் நேரம் கடத்துவதாய் இல்லை.

வாழ்க்கை ஒரு வட்டம்டா.....

மெட்ராஸ் வெய்யிலில் வருபட்டுக்கொண்டிருப்பவனுக்கு கோயம்புத்தூர்காரனை பார்த்தால் ஒரு ஆதங்கம்.. இவனுக மட்டும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்துல குளு குளுன்னு வாழ்ந்துட்டு இருக்கானுக.. சிறுவாணி தண்ணி குடிச்சுட்டு குஷியா இருக்காங்கன்னு.. கோயம்புத்தூர் காரனுக்கு மெட்ராஸ் காரனை பார்த்தால் ஒரு கோபம்.. .. இவங்களுக்கு  மட்டும் ரெண்டு மணி நேரம் மட்டும் பவர் கட். ஆனா நமக்கு  எட்டு மணி நேரம்...  என்ன கொடுமை டா... ராமான்னு.. இந்த ரெண்டு பேரையும் பார்த்துட்டு நக்கலா ஒரு சிரிப்பு சிரிக்கிறான் புதுக்கோட்டை காரன்.. எங்களுக்கு பவர் கட்டே கிடையாது... வெயில் அடிச்சாலும் சில்ல்ன்னு பீர் குடிக்க இலவசமா வீட்டுக்கு வீடு காசு வேற தராங்கனு...  

ரயில் வருது... ரயில் வருது...ஒரு நகரின் உண்மையான வளர்ச்சி என்பது... அதன் உள்கட்டமைப்பு வசதிகளின் விஸ்தாரத்தை பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.. சென்னையில் இருக்கும் மக்கள் தொகைக்கும், போக்குவரத்து நெரிசலுக்கும் மெட்ரோ ரயில் இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பாகவே வந்திருக்க வேண்டிய விஷயம். எல்லாமே சரியாக நடந்தால்.. அடுத்த ஆண்டு இறுதியில்(2013)  தமிழனும் மெட்ரோ ரயிலில் சவாரி செய்யும் சாதனை நிகழலாம். நிகழவேண்டும்...  மனித  வாழ்வில்.. இழந்தால்    ஈடு கட்ட முடியாதது நேரம் தான். அதை மிச்சம் செய்து கொடுக்கும் இந்த மாதிரி வசதிகள் தான் எல்லா நகரங்களுக்கும் தேவை.

 
விகடன் பக்கம்

இந்த வார விகடன்ல... 'சாந்தி' னு ஒரு சிறுகதை..... 'சாதத் மஹத் மண்டோ'ன்னு  இந்தியாவின் பிரபலமான ஒரு எழுத்தாளர் எழுதியது... ஆரம்பத்துல ஒரு மாதிரி குன்சா போனாலும்... கிளைமாக்ஸ் அட்டகாசம். ஒற்றை வரியில்  சிலிர்ப்பான ஒரு அனுபவத்தை தர்றார்... தலைவர் சுஜாதா போலவே.....

அப்புறம்.. "நிறைய நீர் கொஞ்சம் விஷம்' னு சமஸ் எழுதின ஒரு கட்டுரை.... குறிப்பிட வேண்டிய ஒன்று.  பீர் குடிச்சா கூட ஒன்னும் ஆகாது போல... ஆனா நாம குடிக்கிற தண்ணியில் கலந்திருக்கும் பிரச்சனைகளை இவர் சொன்ன விதம்.. நிஜமாவே பயமுறுத்துது...

வழக்கு படத்திற்கு இவ்வளவு மார்க் விகடன் அள்ளி தரும்னு எதிர்பார்க்கலை. 55/100.

இசை...

ஏற்கனவே மைனாவில் கேட்ட மாதிரி இருந்தாலும், மனம் கொத்தி பறவையில்... "ஜல் ஜல்" பாடலும், "என்ன சொல்ல" பாடலும் பிரமாதம்...இமான் அடிச்சு துவைச்சு காய போட்டிருக்கிறார்.

அதே போல.. கிருஷ்ணவேணி பஞ்சாலை படத்தில் வரும் " உன் கண்கள்" பாடல் அட்டகாசமான மெலடி. கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
எதிர்பார்ப்பு 


கடல்...... இந்த சிம்பிளான ஸ்டில் கூட ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை தூண்டுது... மணி சார்... மொத்த இந்தியாவுக்கும் படம் எடுக்காம.. தமிழ் நாட்டுக்கு மட்டும் பொருந்துற மாதிரி அழகா எடுக்க எல்லாம் வல்ல பிலிமானந்தாவை வேண்டிக்கொள்கிறேன்.


 

Monday, May 7, 2012

வழக்கு எண் 18/9 - விமர்சனம்வாழ்வியல் யதார்த்தங்களை மீறிய மிகைபடுத்தப்பட்ட சம்பவங்களும், கற்பனை கூட செய்து பார்க்க முடியா தனி மனித சாகசங்களுமாய் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.. இந்த பொய் பிம்பங்கள் யாவும் உண்மை என நம்மை  நம்ப வைத்து  நம் மூளை மழுங்க செய்து, அதன் போதையிலேயே கனவில் வாழ்க்கை நகர்த்த வைக்கும் வியாபார சினிமா தந்திரங்களுக்கு  மத்தியில் இந்த மாதிரி படங்கள் கடவுள் போல... காணக் கிடைக்கா வரம்.  தரையில் கால் வைத்து நடப்பதுதான் யதார்த்தம்.  இந்த படைப்பு உங்கள் கை விரல் பிடித்து இரண்டரை மணி நேரம் வாழ்வின் யதார்த்த அழகியலையும், அவலத்தையும் ஒருங்கே காட்டிச்செல்கிறது. 

ஒரு படத்தின் தரம் என்பது,   ஐம்பது கோடி, நூறு கோடி பட்ஜெட், ஸ்டார்  வேல்யு,  ஹை டெக் டெக்னாலஜி,  வெளிநாட்டு லொக்கேஷன்கள் போன்றவைதான் என  தீர்மானிக்கும் கூட்டங்களுக்கு நடுவே, எந்த விதமான பிரம்மாண்டங்களும், ஸ்டார் வேல்யுவும் இன்றி,  அறிமுக நடிகர்களை கொண்டு,  அற்புதமாக  கதை சொல்லியிருக்கும் பாலாஜி சக்திவேல் உலக சினிமா இயக்குனர்கள் வரிசையில் தானும் வரும் தகுதியே வளர்த்துக்கொண்டிருக்கிறார். விகடனில், "ஒரு நல்ல சினிமா எப்படி இருக்க வேண்டும் ? என்கின்ற கேள்விக்கு... மஹ்சன் மக்மல்பப் எனும்
ஈரானிய இயக்குனர்  சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வருகின்றன...   "மக்களை பற்றி பேசுகிற எந்த படமும் நல்ல படம்தான்".   ஒரு சூப்பர் ஹீரோ.. அவர் செய்யும் குரங்கு சேட்டைகள்,  சாதனைகள், வில்லன்களை துவம்சம் செய்தல்.. கிடைக்கின்ற இடைவெளியில், வெளுப்பான ஹீரோயினின் இடை வளைத்து  காதல் செய்யும்  கன்றாவி படங்களுக்கு மத்தியில்.. ஹீரோ, ஹீரோயின் என எந்த விதமான அடையாளங்களும்  இன்றி, எளிமையான மனிதர்களை பற்றி பேசும் இந்த படம் தமிழ் சினிமாவின் முக்கியமான ஆவணம்.

 ஒரு பெண்,  முகத்தில் ஆசிட் அடிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் மருத்தவமனையில் சேர்க்கப்படுகிறாள், அதனை தொடர்ந்து வரும் போலீஸ் விசாரணை பயணத்தில், ஒரு ஏழையின் காதலும், பணத்திமிர் பிடித்த ஒரு வர்கத்தின் குரூரமும் ஒரே புள்ளியில் இணைய.. முடிவு என்னவென்பதே கதை. 
மிக எளிமையான கதைதான்..... ஆனால் திரைக்கதையில் அதற்காக மெனக்கெட்டிருக்கும் உழைப்புதான்... ஷங்கர்  படங்களிலும்   கண்டிராத ஒரு  பிரமிப்பை  தருகிறது. முன் பாதியில் நிகழும் சம்பவங்கள் யாவும், பிற்பாதியில்  வேறொரு பார்வையில்  கமல்ஹாசனின் விருமாண்டி பட ஸ்டைலில் அட்சரம் பிசகாமல் மீண்டும் ஒரு முறை கடந்து போவது அபாரம்.

எதிர்பார்ப்புகளால்  நிரம்பியதுதான் மனித வாழ்க்கை.. இப்படத்தில் வரும் எல்லா மனிதர்களுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு இருக்கிறது..... காதல்... காமம்.... அங்கீகாரம்.... அளவில்லாத பணம் என்று.... எல்லாம் முடிந்து வீழ்ந்த பின்னும்.. காதல் மட்டுமே அப்படியே மிச்சமிருப்பதாய் நம்மை உணரசெய்யும் அந்த இறுதிக்காட்சி கவிதை.

  ஒரு மழை தூறும் சாயங்கால வேளையில், பால்கனியில் அமர்ந்துகொண்டு,   காதல் மனைவி போட்டுகொடுத்த  அற்புதமான  தேநீரை  சுவைத்துக்கொண்டே நா. முத்துகுமாரின் காதல் கவிதைகளை படிக்கும் போது கிடைக்கும் ஒரு சுகானுபவம், " ஒரு குரல்  கேட்குது முன்னே" பாடலின் விஷுவல் கவிதைகளை பார்க்கும்போதும்  கிடைக்கிறது.  படத்தில்  இம்மாதிரி அழகிய காற்று போல நம்மை கடந்து செல்லும் விஷயங்கள்  ஏராளம். 
ஸ்டில் காமெராவில் எடுக்கப்பட்டாலும், அதன் அழகும்,  நேர்த்தியும் அவ்வளவு தரம்.  புதுமுகங்களா... என வியந்து ஆச்சரியப்படும் அளவிற்கு, படத்தில் வாழ்ந்திருக்கும் ஒவ்வொரு கதாபாத்திரமும் அவை செதுக்கப்பட்ட  விதமும்... சிற்பி கையில் கிடைக்கும் போதுதான் கல் சிலையாகிறது. 

பின்னணி இசை உறுத்தாமல் சென்றாலும், அந்த இசை கூட இல்லமால் படம் நகர்ந்திருந்தால்  இன்னமும் உயரம் தொட்டிருக்குமோ என சின்ன சந்தேகம். ஆனால் அது ரொம்ப கஷ்டம்.... தமிழர்களாகிய நமக்கு சந்தோஷமாய் இருந்தாலும் பாட்டு வேணும். செத்தாலும் ஒப்பாரி வேணும்.

வருடத்திருக்கு ஒரு படம் கொடுத்தாலும்... பல நூறு வருடங்கள் கழித்தும் பேசக்கூடிய படங்களாய் கொடுக்க முயற்சிக்கும் பாலாஜி சக்திவேலுக்கு அழுத்தமான கை குலுக்கல்கள்.. அதி அற்புதமான வாழ்த்துக்கள்.
(+) பிளஸ் 

திரைக்கதை
கதாபாத்திரங்கள் 
யதார்த்தம்
வசனங்கள்
ஒளிப்பதிவு


(-) மைனஸ்
  
ஞாபகமில்லை. 


VERDICT : தமிழ் சினிமாவிற்கும் நமக்கும் ஒரு முக்கியமான படம் + பாடம்.

RATING : 6.5/10.0

EXTRA  பிட்டுகள்

தம்பதி சகிதமாய் படம் பார்ப்பதற்கும், நண்பர்கள் சூழ  படம் பார்பதற்கும் நிறைய வித்தியாசங்கள்.  கணவன் மனைவி சகிதம் அமர்ந்து பார்ப்பதில்
நிறைய சௌகரியங்களை இழக்க வேண்டியதாயிருக்கிறது. விசில் அடிப்பது, வாய் விட்டு சிரிப்பது... " மாமா பட்டாசுடா.. என நம் இன்ஸ்டன்ட் விமர்சனங்களை பகிர்ந்து கொள்ள நண்பர்கள்தான் உத்தமம். இதை பற்றி மேற்கொண்டு எழுதினால் இரவு போஜனம் கிடைக்காது என்பதால் இத்தோடு ஸ்டாப்.

நேற்று உதயத்தில் . . படம் சீரியசாக நகர்ந்து கொண்டிருக்க.. ஒரு காட்சியில்.. அந்த ஸ்கூல் பெண்ணின் அம்மா " ஆர்த்தி,  I GOT PROMOTION" என சொல்ல,  அடுத்த வினாடியே... "SHE GOT ABORTION" என பதிலுக்கு    ஒரு வால் பையன் தியேட்டரில் கமெண்ட்  அடிக்க... சரியான கிளாப்ஸ்.... டைமிங்  பன்ச்  அடிப்பதில் தமிழன்  தமிழன்தான்.


you might like this also...

Related Posts with Thumbnails