Tuesday, September 27, 2011

ஜாக்கியும்.... நானும்.....நாய்களுடனான என் உறவு ஹிட்லருக்கும் யூதனுக்கும் உள்ள உறவை போன்றது.   எந்த காலத்திலும் ஒத்து போனதே இல்லை. நாய்கள் மீதிருந்த  அச்சமும் வெறுப்பும் சிறு வயதில், ஒரு முட்டு சந்தில் என்னை துவட்டி எடுத்த அந்த குறிப்பிட்ட கருப்பு நாயிடம் இருந்து பிறந்திருக்கலாம்.

சிவனே என்றுதான் படுத்துக்கொண்டிருந்தது. பதின்ம வயதின் குறும்புகள் என்  மூளையில் பிறந்து கால் வழியாய் வெளியேறி அதன் வாலை மிதிக்க, கும்பகர்ணனின்   தூக்கத்தை  கலைத்தால் கோபத்தில் எப்படி வெறித்தனமாய்   
பாய்வானோ அதே வேகத்தில் என் தொடையே குறி வைத்து பாய்ந்து கடித்து குதறி தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டது. 

இப்போது இருப்பது போல ஒற்றை ஊசி வைத்தியம் எல்லாம் அப்போது இல்லை.  குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருந்துகள் வாங்கி வந்து தினம் ஒரு ஊசி என என் குடும்ப மருத்துவர் பதினெட்டு நாட்கள் என் தொப்புளை துளைத்தார். ஒவ்வொரு முறை ஊசி ஏற்றும் போதும் நாய்கள் மீதான என் வன்மம் என் மனசுக்குள் ஏற ஆரம்பிக்க அதிலிருந்து நாய்கள் என்றாலே லத்திகா பட போஸ்டரை கண்டது போல தெறித்து விலக ஆரம்பித்தேன்.


நாம் நாய் வழியில் குறுக்கிடா விட்டாலும் அது நம் வழியில் அடிக்கடி குறுக்கிடும், இரவு காட்சி சினிமா முடிந்து வீடு திரும்பும் பொழுதுகளில் விஸ்வரூபம் கொண்டு அது துரத்தும் போதெல்லாம் அதன் மீதான ஆத்திரம் ராஜபக்ஷே மீதுள்ள ஆத்திரத்தை விட சில பல மடங்குகள் அதிகரிக்கும்.


இப்படி நாய்கள் மீது வெறித்தனமான வன்மம் கொண்டிருந்த என் வாழ்க்கையில்தான் ஜாக்கி உத்தரவின்றி உள்ளே நுழைந்தது. வீடு ஒன்றை  வாடைகைக்கு தேடிக்கொண்டு அந்த புது வீட்டிற்க்குள் நான் நுழைய அது எங்கேருந்தோ வந்து என் மீது தாவி ஏற,  கற்பழிக்க வந்த வில்லனை கண்ட கதாநாயகி போல "வீல்" என உச்சஸ்தாயியில் கதறினேன்.   அந்த வீட்டு உரிமையாளர் பெண் வயது ஐந்து ஆறுதான் இருக்கும். அது எதோ கன்றுகுட்டியே அரவணைப்பது போல அப்படியே அந்த ஜாக்கியே அரவணைத்து இழுத்து கொண்டு போக என் உடலெல்லாம் நடுக்கத்தில் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது.


அந்த வீடு, வீட்டு உரிமையாளர், உரிமையாளரின் இரண்டு சுட்டி குழந்தைகள் என எல்லாம் பிடித்து போனாலும், ஜாக்கி மட்டும் பயமுறுத்தியது. இருந்தும் அந்த வீட்டிற்க்குள் நண்பர்களுடன் குடி புகுந்து அந்த ஜாக்கியிடம் இருந்து மட்டும் விலகியிருக்க ஆரம்பித்தேன்.


லேபர்டர் வகையே சேர்ந்த ஜாக்கி நான் வீட்டிற்குள் நுழையும் போதெல்லாம்  குரைப்பதற்கு பதிலாக என்னை கண்டவுடன் நக்கலாக சிரிப்பது போல் இருக்கும். போதாகுறைக்கு அந்த குட்டி பெண் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அதனோடு விளையாடுவதும், அதனை எட்டி உதைத்து அடிப்பதை கண்டவுடன் என் தன்மானம் உசுப்பேற ஜாக்கியே கண்டு பயப்படாமல் இருப்பது போல நடிக்க ஆரம்பித்தேன். எதிரியே வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அவனை நண்பனாக்கி கொள்வதுதான் என்ற முடிவோடு மூன்று ரூபாய் டைகர் பிஸ்கட்டோடு ஜாக்கியே நெருங்க... முதன் முதலாக அதன் முகத்தில் என்னை அல்லது என்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை கண்டவுடன் ஒரு அன்பு, ஒரு விருப்பம், ஒரு காதல் தெரிந்தது.. 


எப்படி அந்த ரசாயன மாற்றம் என்னுள் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஜாக்கி என்னிடம் வெகு சீக்கிரத்தில் ஒரு குழந்தை  போல நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டது. இதற்காக தினமும் ஒரு பாக்கெட் பிஸ்கட் செலவானது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். ஒரு நாள் பிஸ்கட் போட மறந்தாலும் அல்லது மறுத்தாலும் விடாமல் குரைத்து குரைத்து அன்றைய தின இரவை தூங்க விடாமல் செய்து விடும். இடைவெளி இன்றி அது குரைப்பதை பார்த்து என் அறை நண்பன் சுமி என்னை குரைக்க ஆரம்பித்தான். முதலில் உன்னையும் இந்த நாயையும் ஒழிச்சாத்தான் நான் நிம்மதியாக  தூங்க முடியும் என்பான். 


இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே ஜாக்கி என் சொல்படி கேட்க ஆரம்பித்தது. என்னை கண்டவுடனேயே அதன் கண்களில் தெரியும் ஒரு ஆர்வமும் துருதுருப்பும் என்னவோ பயங்கர சந்தோஷத்தை எனக்குள் ஏற்படுத்தியது.    ஒரு அலட்சிய பாவத்தில் தொடங்கிய எங்கள் நட்பு அடி ஆழமாய் வேரூன்ற  எது காரணமாக இருந்திருக்கும். நாய்கள் மீதான என் பயத்தை அது போக்கியதாலா... அல்லது உருவத்தில் மிக பெரிதாக இருந்தாலும் குழந்தைதனமான முகத்தினாலா.... ஒரு ஐந்தறிவு ஜீவன் என் மீது கொண்ட அன்பினாலா... சரியாக தெரியவில்லை.  எங்களுக்கு எதாவது உணவு வாங்கும் போதே ஜாக்கிக்கும் எதாவது வாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் அப்போதிருந்தே தோன்ற ஆரம்பித்துவிட்டது.


வளர்ப்பு மிருகங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றையும் தங்கள் குழந்தைகள் போலத்தான் நினைத்து வளர்ப்பார்கள் என்பதில் நம்பிக்கை தவறியிருந்த நான் ஜாக்கியின் நட்பில் அது உண்மையென உணர்ந்தேன். நிச்சயம் மனிதர்கள் போல அதற்க்கு துரோகம் நினைக்க தெரியாது... அன்பை... அன்பை மட்டுமே கொடுக்கும் உன்னதமான ஆத்மாக்கள் அவை.


ஒரு உற்ற தோழன் போல விளங்கிய ஜாக்கிக்கு வயது வெறும் ஆறே மாதங்கள். கம்பீரமாக வீட்டை சுற்றிக் கொண்டிருந்தவன், சென்ற ஞாயிறு மொட்டை மாடியில் அனாதையாய் செத்து கிடந்தான். அவன் தங்கியிருக்கும் சிறு அறையே சுத்தம் செய்யும் பொருட்டு, அவனை மொட்டை மாடி பில்லர்    சுவற்றில்  கட்டி வைத்திருக்க.... சுடு வெயிலின் தாக்கம் தாங்காமல்.. எம்பி குதித்தவன் கழுத்து  சங்கிலி எதிர்பாரா விதமாக கழுத்தை இறுக்கி கொள்ள... கத்த கூட திரணியற்று துடிதுடித்து இறந்திருக்கிறான்.


 விஷயம் அறிந்து... பதறிக்கொண்டு போய் பார்த்த போது கால்கள் விடைத்து பற்கள் இறுக கிடந்தவன் கண்களில் மட்டும் யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்கின்ற ஏக்கமும் ஏமாற்றமும்  தேங்கி கிடந்தது.


ஊருக்கு சென்றிருந்த வீட்டு உரிமையாளரின் ஆறு வயது மகள் திரும்பி வந்து ஜாக்கியே கேட்டால் என்ன சொல்வது என்கின்ற பதில் யாருக்கும் தெரியவில்லை. இனிமேல் நாய்களை கண்டால் பயப்படுவேனா.. நெருங்கி பழகுவேனா  என்பதற்கும் எனக்குள் விடை இல்லை.  தினசரி அதன் சத்தம் தாங்காமல் அதை ஒழிக்க வேண்டும் என அனுதினமும் புலம்பும் என் அறை நண்பன் சுமி.." நல்ல நாயடா அது " என கதறி கண்ணீர் விட்டதை பார்க்கும் போது எந்த கேள்வியுமே எனக்கு புரியவில்லை.

---------------------------------------------

டிஸ்கி - தமிழ் 10 , யுடான்ஸ், இன்ட்லியில் ஓட்டு போட உங்களுக்கு 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலே போதுமானது. SO... VOTE PLEASE... IF YOU LIKE THIS..... Sunday, September 25, 2011

யார் உண்மையான AIRTEL சூப்பர் சிங்கர்?
வருட கணக்கில் இழுக்கும் மெகா சீரியல்களை விட மனசுக்கும் செவிக்கும் நன்மை பயந்த நிகழ்ச்சி. விஜய் டிவி நடத்திய AIRTEL SUPER SINGER PROGRAMME. எத்தனை எத்தனை வித விதமான பாடகர்கள்... பாடல்கள்...   இந்த நிகழ்ச்சியின் இறுதி போட்டியில் நிகழ்ந்த சில சுவையான நிகழ்வுகள் இங்கே...

 • ஆரம்பத்தில் இருந்தே நிகழ்ச்சி களை கட்ட ஆரம்பித்து விட்டது. சுஜாதா அவர்களின் மகளும், ஸ்ரீநிவாஸ் மகளும் இணைந்து பாடிய பாடல்கள் அத்தனையும் அவ்வளவு இனிமை. முக்கியமாக சுஜாதா மகளின் குரல் ஒரு லிட்டர் தேனை காதுக்குள் ஊற்றியது போல அவ்வளவு சுவை. 

 • அதே போல போட்டி முடிவுகள் அறிவிப்பதற்கு முன்பாக பாட வந்த அல்கா அஜித் குரல் வாய்ப்பே இல்லை. "ஒரு தெய்வம் தந்த பூவே" பாடலை அந்த சின்ன பெண் பாட பாட என்னையும் அறியாமல் கண்களில் கண்ணீர். DIVINE.  

 • நிகழ்ச்சி நடந்த TRADE CENTER முழுக்க ஏகப்பட்ட பிரபலங்களின் தலைகள். அவர் ஒரு கடம் வித்வான் என்று நினைக்கிறேன்... நிகழ்ச்சிக்கு கடம் கொண்டு வராத காரணத்தினாலோ என்னவோ ஒவ்வொரு பாட்டுக்கும் தலையாலே கடம் வாசித்து கொண்டிருந்தார். 

 • பார்வையாளர் கூட்டத்தை கேமரா அணுகும் போதெல்லாம் அழகான பெண்களை மட்டும் நின்று நிதானமாக ரசித்து விட்டு மற்றவர்களை வேகமாக கவர் செய்து கொண்டிருந்தது. நல்ல ரசனைக்கார கேமரா மேன்.   

 • புஷ்பவனம் குப்புசாமி பார்வையாளர் வரிசையில் அமர்ந்து கொண்டிருக்க, அவர் பாடிய பாடல் ஒன்று மேடையில் வேறு ஒருவர் பாடும் போது,  புஷ்பவனம் குப்புசாமி முகத்தில் தெரிந்த சந்தோஷமும் பெருமிதமும், கூடவே அவரும் சேர்ந்து பாடியதும் ஒரு உண்மையான கலைஞன் தன்னுடைய படைப்புக்கு கிடைத்த மரியாதையே உணர்ந்த நல்ல தருணங்கள். 

 • நிகழ்ச்சி இரவு ஒரு மணியே தாண்டி சென்ற போதும், பச்சை டி - ஷர்ட் அணிந்து தலையில் குல்லா போட்ட  அந்த குட்டி பாப்பா தன பெரிய கருவிழிகளால் கொட்ட கொட்ட நிகழ்சிகளை ரசித்ததை காட்டிய போது அவ்வளவு ஆச்சரியம்.   

 • நிகழ்ச்சியின் SURPRISE கிப்ட் தனுஷ் ஜி.வீ . பிரகாஷ் இணைந்து பாடிய "காதல் காதல்" பாடல். ரொம்பவே  ராவான பாடல். அதே போல அந்த படத்தின் டிரைலரும் மிரட்டல் ரகம்.  

 •     போட்டியாளர்கள் நான்கு பேரில் சாய் சரண் வெறித்தனமாக பாடியதை நன்கு உணர முடிந்தது. சந்தோஷ் பாடிய "ஆரோமலே "   WILD CARD ரவுண்டில் ஸ்ரீநிவாஸ் பாடிய அளவிற்கு பெரிதான ஒரு இம்பாக்ட்டை கொடுக்கவில்லை. ஆனாலும் அவர் இரண்டாம் இடத்திற்கு வந்தது இதில் எதோ ஒரு உள்குத்து இருக்கிறது என்பதை நன்கு உணர்த்தியது. 

 • இந்த நிகழ்ச்சியில் முதல் இறுதி போட்டியாளராக தேர்ந்தேடுக்கபட்ட பூஜா நான்காம் இடத்தை பிடித்தது ரொம்பவே சோகம். "மன்னவன் வந்தானடி " பாடலில் ஜதிகளும், ஆலாபனைகளும்  அவ்வளவு பெர்பெக்ட்டாக இருந்த போதும் நான்காம் இடம் நாமே எதிர் பார்க்காத ஒன்று. கவுன்ட் டௌன் முடிந்து தன் பெயரை சொல்லும் போது அவ்வளவு சிரித்த முகமாக இருந்த போதும் கண்களில் தெரிந்த அந்த அரை நொடி அதிர்ச்சி தான் ஏன் நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டோம் என்கின்ற பலமான கேள்வியே சுமந்திருந்தது. 

 • பூஜாவை  விட பரிதாபத்திற்குரிய  ஜீவன் சத்திய பிரகாஷ்தான். இந்த நிகழ்ச்சி தொடங்கிய தினத்தில் இருந்தே அவரின் ரசிகன் நான். பாடல் வரிகளை விதவிதமாக வளைத்து நெளித்து அவர் உச்சரிக்கும் ரகம் அவ்வளவு நன்றாக இருக்கும். இறுதிப்போட்டியில் ஓமனே பெண்ணே பாடலில் கர்னாடிக்கும், வெஸ்ட்டர்னும் கலந்த காக்டெயில்  அவ்வளவு சுவை.    அதற்க்கு உண்டான அங்கீகாரம் அவருக்கு கொடுக்கப்படவில்லை என்பதுதான் இசை ரசிகர்கள் எல்லோருடைய ஆதங்கமாக இருக்க கூடும். என்னை பொறுத்த வரை உண்மையான சூப்பர் சிங்கர் சத்திய பிரகாஷ்தான். சாய் சரண் எவ்வளவு துல்லியமாக பாடிய போதும் சத்திய பிரகாஷின் குரலில் இருந்த வசீகரமும் கூல்னசும் நிச்சயம் சாயிடம் இல்லை.    
  
 • முதல் பரிசுக்கான தகுதியே இறுதி போட்டி ஒன்றில் மட்டுமே வைத்து முடிவு செய்து விடக்கூடாது என்பதை நன்கு தெளிவுறுத்திய நிகழ்ச்சி இந்த AIRTEL SUPER SINGER SESSION 3. 

டிஸ்கி - தமிழ் 10 , யுடான்ஸ், இன்ட்லியில் ஓட்டு போட உங்களுக்கு 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலே போதுமானது. SO... VOTE PLEASE... IF YOU LIKE THIS.....   

Saturday, September 17, 2011

எங்கேயும் எப்போதும் - விமர்சனம்தினசரிகளில் வாகன விபத்து செய்திகளை படிக்கும் போது பலி  எண்ணிக்கையே பொருத்துதான்  நம் கவன ஈர்ப்பு சற்றே ஏறி  இறங்கும். இறந்தவர்களுக்காக பரிதாபப்பட்டு வருந்தும் சில நிமிடங்களை  எல்லாம் தொலைத்து அவரவர் அலுவல்களுக்காக விரைந்து ஓடிக்கொண்டிருக்கும் மனித மெஷின்கள் நாம். விபத்தின் அதிர்வுகளை   பங்கு சந்தையின் அன்றைய நிலவரம் போல மற்றுமொரு செய்தியாக பாவிக்கும் மனநிலைக்கு வந்துவிட்டோம்.   நமக்கு நேராதவரை விபத்து என்பது நம்மை காற்று போல கடந்து சென்றுவிடும்  சிறு  செய்தி  அவ்வளவே....  அந்த  விபத்துக்குபின்னால் பறி போன மனித உயிர்களின் மதிப்போ... அவர்கள் தொலைத்த கனவுகளின் வலியோ...  நம்மில்  எத்தனை  பேருக்கு   பாதிப்பை  ஏற்படுத்துகிறது? செல்லுலாயிட் கதை என்றாலும் நிஜம் போல கூர்மையாய் மனசுக்குள் இறங்கி பாதிக்க வைக்கிறது எங்கேயும் எப்போதும். 


 ஒரு இயக்குனராக, முதல் நாளே படம் பார்க்க வேண்டும் என்கின்ற விருப்பத்தை தரும்  முருகதாஸ் தனது தயாரிப்பில் வரும் படத்தையும் முதல் நாளே பார்க்கலாம் என்கின்ற நம்பிக்கையே  பலமாக  கொடுத்திருக்கிறார்.    தொடரட்டும் அவரின் இது போலான நல்ல முயற்சிகள். 


எல்லோருக்கும்... எங்கேயும்.... எப்போதும்.... சங்கீதம்... சந்தோசம்...எல்லாமே காதல்தானே...? காதல்,   மனித மனங்களின் ஆதார ஸ்ருதி... இரு வகையான ராகங்களில் அந்த காதலின் உணர்வுகளை ஒரு பஸ் விபத்தின் பின்னணியில்      நுட்பமாக இசைத்திருக்கிறார்  அறிமுக இயக்குனர் சரவணன்.


ரொம்ப நாளைக்கு பிறகு, ஒரு படத்தின் அத்தனை காட்சிகளும் பொருட்காட்சியில் ராட்டினம் பார்த்த குழந்தையே போல உடனே  ஈர்க்கும் ரகம் படத்தின் முதல் பலம்.  நான்  லீனியர்,  பிளாஷ் பேக்கிற்குள்   ஒரு பிளாஷ் பேக் என கதை சிக்கலான சாலையில் பயணம் செய்ததாலும், சராசரி தமிழ் ரசிகனை தலை சுற்ற வைக்காமல்  கதையோடு அழகாய் பயணப்பட வைக்கும் திரைக்கதை படத்திற்க்கான  முக்கிய  எரிபொருள்.  


சரவ் - அனன்யா, ஜெய் - அஞ்சலி  என இரு ஜோடிகள். முன்னது மென்மையான இளநீர் சுவை  என்றால்... பின்னது வெடித்து தெறிக்கும் ஜிகர்தண்டா.   சென்னையின்  அசுர வேக  பரபரப்பையும் , ஹை-டெக்   கலாச்சாரத்தையும்  ஒரு பூச்சாண்டி  போல   பார்த்து மிரளும் கிராமத்து குழந்தை அனன்யா... கொஞ்சம் கொஞ்சமாக தனக்கு உதவிடும் சரவ் மேல் உண்டாகும்  ஈர்ப்பை ... அன்பை.... காதலை.... அந்த ஒரே ஒரு நாள் நிகழ்வுகள் மூலம் அவ்வளவு அழகாய் கவிதைபடுத்தியிருக்கிறார்கள்.


பாரதி கண்ட புதுமைபெண்ணாய் அஞ்சலி. தன்னை காதலிக்கும் ஜெய் யை ஹட்ச் நாய்க்குட்டி போல தான் சொன்ன இடங்களுக்கெல்லாம் அலைய வைப்பதாகட்டும், காதலை ஏற்றுக்கொள்வதற்கு முன் சந்திக்க நேரும் பிரச்சனைகளை பட்டியலிட்டு தயார் படுத்துவதாகட்டும் கிடைத்த இடத்தில் எல்லாம் வசன உச்சரிப்புகளிலும், உடல் மொழியாலும், சிக்சர் அடிக்கிறார். 

கர்சீப் மட்டும் கட்டிக்கொண்டு உடல் பிரதேசங்களை விருந்து வைக்கும் ஹீரோயின்களை விட இப்படிப்பட்ட தீர்க்கமான, தைரியசாலியான கதா பாத்திரங்கள்தான் ஆண்களை ஈர்க்கும் என்கின்ற உண்மை எப்போது மற்ற இயக்குனர்களுக்கு தோன்றும்.... தெரியவில்லை.  


ஜெய், அஞ்சலியின்  சரவெடிகளுக்கு  பம்மி  பதுங்கும் சிறுவனாகியிருக்கிறார். விடுங்க பிரதர் நாமாக இருந்தாலும் இப்படித்தான் இருந்திருப்போம். நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜெய்யின் பங்களிப்பு மிக நன்றாக வந்திருக்கும் படம் இது. 


நேருக்கு  நேர்  மோதிக்கொள்ளும்   இரண்டு பஸ்களின் இடையே நாமும் சிக்கிக்கொண்டதை போன்ற பதைபதைப்பை அப்படியே தந்திருக்கிறது ஒளிப்பதிவாளர் வேல்ராஜின் கேமரா. அது போலவே,  சென்னையின் அழகை.... அதன் இயல்பை அப்படியே   கொடுத்திருக்கும் கோவிந்தா பாடலில் இவரின் உழைப்பு சிறப்பு.


நாம் நேசிக்கும் மனிதர்களுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது  என்கின்ற பரிதவிப்பையும், பயத்தையும் இறுதிகாட்சியில்  நம்முள் விதைத்துவிடும் இயக்குனரின் சாமர்த்தியத்திற்கு உறுதுணையாய் இருக்கிறது கிஷோரின் எடிட்டிங்.


சத்யாவின் பின்னணி இசை பாடல்களை காட்டிலும் அதிகம் ஸ்கோர் செய்கிறது. இசையையும், குரல் இனிமையையும் மீறி நேரடியாக மனசுக்குள் வந்தமர்ந்து கொள்ளும் நா. முத்துகுமாரின் வரிகள் இந்த  படத்தின் ஸ்பெஷல் ஸ்வீட் ட்ரீட்.


இந்த இரு ஜோடிகளை பற்றி மட்டுமல்லாது, பேருந்தில் பயணம் செய்யும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் (ஒரு கல்லூரி ஜோடி, புதுமண தம்பதி, துபாயில் இருந்து வீடு திரும்பும் பாசமுள்ள அப்பா ) முக்கியத்துவம் கொடுத்த விதத்தில் தனித்து தெரிகிறார் இயக்குனர்.  

சரவ், சென்னை மனிதர்களை பற்றி அனன்யா உறவிடம் சொல்லும் போதும், அனன்யா அதே உறவிடம் தன் காதலை பற்றி சொல்லுமிடத்திலும் வரும்  ஜீவனுள்ள  வசனங்கள் நம்மையும் அறியாமல் கை தட்ட வைத்ததிலும்,
ஒரு பாடலை தவிர மற்ற அனைத்தையும் மாண்டேஜ் பூக்களாக தொடுத்த விதத்திலும், மிக எளிதான கதையில் வலிமையான தாக்கத்தை பார்வையாளனுக்கு    கொடுத்ததிலும் அறிமுக ஆட்டத்திலேயே MAN OF THE FILM விருதை பெறுகிறார் இயக்குனர் சரவணன்.


பிளஸ் (+)

திரைக்கதை
இயக்கம்
வசனங்கள்
கதாபாத்திரங்கள்
ஒளிப்பதிவு
எடிட்டிங்


மைனஸ்(-)

இதை மைனஸ் என்று சொல்வதா என்பதே தெரியவில்லை. இரு ஜோடிகளின் காதலும் அவ்வளவு சுவாரசியமாக செல்லும் போதே தீடிர் தீடிர் என முடித்து விடுவது இன்னும் கொஞ்சம் தொடராதா என ஏங்க வைக்கிறது.


VERDICT : மிதமான வேகம்தான் --- ஆனால் மிக நன்று.
RATING   : 5.7/10.0


EXTRA பிட்டுகள்

இதுவரை சினிமாவில்தான் பார்த்திருக்கிறேன், உதயம் தியேட்டர் வாசலில் ப்ளாக்கில் டிக்கெட் விற்பதை. தியேட்டர் ஊழியர்களே இந்த செயலில் ஈடுபடுவதை பார்க்கும் போது மகா எரிச்சலாகிவிட்டது.

அடையார் கணபதி ராமில், 60 ரூபாய்க்கு  பால்கனியே  கொடுத்தார்கள். படம் பார்க்கவும், DTS  சவுண்டும்   மிக  நன்றாகவே  இருக்கிறது .


கிண்டியிலிருந்து அடையாறுக்கு அவ்வளவு ட்ராபிக் மத்தியில் பதினைந்து நிமிடத்திருக்கும் குறைவாக பைக்கில் சென்று சேர்ந்த நான்... படம் பார்த்து, அந்த அதிர்வில் திரும்பி வர, அத்தனை காலியான சாலையிலும் அரைமணி நேரத்திற்கும் மேல் எடுத்துக்கொண்டேன். அந்த படத்தில் பார்த்த விபத்து ஏற்படுத்திய அதிர்வில், த்ராட்டிலை முப்பதிற்கு மேல் முறுக்க முடியவில்லை. அத்தனை நாள் பைக்கில் என்னோடு பயணம் செய்த என் கர்வம், பெருமை, வேகமாக  பறக்கும் ஆர்வம் எல்லாமும் நேற்று பெய்த மழையோடு மொத்தமாய் கரைந்து போனது.  வாகனம் ஓட்டும் போது ஏற்படும் அலட்சியமும், அசுர வேகமும் நமக்கு ஒரு புதிய விதியே எழுதும் என்பது இப்படம் உணர்த்தும் செய்தி.

Saturday, September 10, 2011

பரமுவுக்கு கல்யாணம் பரமு என் உயிர் நண்பன். சில நேரங்களில், என்  உயிர் எடுக்கும் நண்பனும் கூட... 

    உலகில் எல்லோருக்கும் பொதுவானது நட்பு.  அதன் அளவீடுகள் எந்த எல்லைகளுக்கும் உட்படாதவை. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மனிதர்களுக்குள்  உருவாகும், ஈர்ப்பு, அக்கறை, ஒத்த அலைவரிசை, ரசனை, அன்பு, பாசம், நேசம்  இன்னும் என்னனென்னவோ..இவை அத்தனைக்கும் பிள்ளையார் சுழி போடுவது நட்புதான். காதல் கூட அதன் தொடர்ச்சியாய் பின்னால் வருவதுதான்.ஒரு நல்ல நட்புதான் காதலாய் மாறும் என்பது என் நம்பிக்கை.

 நல்ல நட்பு நம்மை பக்குவபடுத்துகிறது... வண்டியில் போய்க்கொண்டிருக்கிறோம்.... எதிர்பாரா விதமாக எதிரில் வரும் வண்டியோடு சிறு உரசல். கோபம் என்னும் சாத்தான் உடனே எழுந்தாலும், கொஞ்சம் அதை அடக்கி நட்போடு கொஞ்சம் புன்முறுவல் செய்து பாருங்கள்... அதற்க்கு கிடைக்கும் பலனே வேறு. யாரும் யாரோடும் சண்டை போட விரும்புவதில்லை. சிநேகமான புன்னகையும், நட்பு பாராட்டுதலும் மிருகமாக இருப்பவனை மனிதனாக்குகிறது... தனக்கென மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி இருப்பவரை பற்றியும் அக்கறை கொள்ளும் போது அந்த மனிதன் கடவுளாகிவிடுகிறான்.


 எத்தனையோ நண்பர்கள் நமக்கு வாய்த்தாலும், ஒன்று அல்லது இருவர் மட்டும் மனசுக்கு மிக நெருக்கமாகி விடுவார்கள். ஒரு நல்ல புரிதல்... அன்னியோன்யம் அந்த குறிப்பிட்ட நட்பிடம் மட்டும் ஆழ பதிந்து விடும். பரமுவும் நானும் பால்ய கால நண்பர்கள் இல்லை. வாழ்வின் வரமான கல்லூரி நட்பு கூட எங்களுக்கிடையில்  கிடையாது.  என் தம்பியின் நண்பனாக எனக்கு அறிமுகம் ஆனவன்.... இன்றோ ... எனக்கு எல்லாமுமாக இருக்கிறான். ஒரு நேர்முகதேர்விற்கு டெல்லி செல்லும் போது துளிர்த்த எங்கள் நட்பு.. அதில் தேர்வாகி ஒன்றாய் சென்னையில் பணிபுரியும் இந்நாள் வரை வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது.

 இந்த இடைப்பட்ட நாட்களில் எனக்கும் அவனுக்குமான சிநேகம், ஆர்யாவுக்கும் சந்தானத்துக்கும் இடையே உள்ள உறவை  போன்றது.  பரமுவிடம் பேசினால் நிச்சயம் நீங்களும் அவன் நண்பனாகிவிடுவீர்கள்...  மிக எளிதாக யாருடனும் ஒட்டிக்கொள்ளும் சுபாவம் அவன் பிளஸ் என்றாலும் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருவதும், அவர்கள் பால் அக்கறை  கொள்வதும்தான் அவனிடம் நாம் எளிதாக சரண்டர் ஆவதன் காரணம் என்று நான் நினைக்கிறேன்.


 ரொம்பவும் வெகுளி, நல்லவன் போன்ற விஷயங்களை காட்டிலும் அவனின் நல்ல நகைச்சுவை உணர்வு நம்மை அவனோடு நெருக்கப்படுத்தி விடும். நிறைய விஷயங்கள் அவனிடம் கற்றிருக்கிறேன்... பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்று நினைப்பவன். " மனோ, பணம் ஒரு பேப்பர் மாதிரிடா... சரியான சமயத்தில அது உதவினாதான் அதுக்கு மதிப்பு" என, யார் கஷ்டம் என கேட்டாலும் வாரி வழங்கி விடும் வள்ளல். பற்றாக்குறைக்கு என் பாக்கெட்டில்  இருந்தும் இஷ்டம் போல   எடுத்து மற்றவருக்கு கொடுப்பான்.

    என் மீதான அவனின் உரிமை மீறல்கள் அளவில் அடங்காதது... திடுமென இரவு ஏழு மணிக்கு வருவான்.. நண்பன் ஒருவன் வந்திருக்கிறான்... வா பார்த்துட்டு வந்திடலாம் என்பான்... சரி.... எங்கே... என்றால் பாண்டிச்சேரியில்... என்பான். என் அடுத்த பதிலை எல்லாம் எதிர்பாராமல் பைக்கை ஸ்டார்ட் செய்து உடனே ஏறு என்பான். இரவு பதினோரு மணிக்கு " ரொம்ப புழுக்கமா இருக்கு மாமா" ...  வா திருவான்மியூர் பீச் போலாம் என்று என்னை கிளப்புவான். என் ஞாயிறு நிகழ்சிகளை மருந்துக்கு கூட என்னிடம் கேட்காமல் அவனே தீர்மானிப்பான். இத்தனை இம்சைகளை அவன் கொடுத்தாலும் அதனை எதுவும் மறுக்க தோணாது.... இரவு 10  மணிக்கு ரயில் என்றால் 9:58  வரை ஸ்டேஷனுக்கு வராமல் பதைபதைக்க வைப்பான். கோபத்தில் சபித்து கொட்டினாலும் "ஹீ ஹீ" என சிரிப்பான். வந்த கோபம் அதோடு காணாமல் போகும்.

   ஒரு நண்பன் எப்போது ஆத்ம நண்பன் ஆகிறான் என்றால், நம் துக்கங்களை, கவலைகளை தன்னுடையதாய் எண்ணி பகிர்ந்து கொள்ளும் போதுதான். என் சொந்தங்களால் நான் கைவிடப்பட்டு, என் காதலை தொலைத்து விட்டு தடுமாறிய பொழுதுகளில் அவன் அரவணைப்பும் ஆறுதலும் இல்லாதிருந்திருந்தால் செத்திருப்பேனோ என்னவோ... தெரியவில்லை. ஒரு இரவு நேர ரயில் பயணத்தில், குழந்தை போல அவன் மடியில் சாய்ந்து கொண்டு கண்ணீர் சிந்திய நொடிகளில், ஒரு தாயே போல அவன் காட்டிய அக்கறையும், தன்னம்பிக்கை வார்த்தைகளும் ஓவ்வொரு மனிதனும், தன் கஷ்டமான சூழ்நிலைகளில் தன்னுடைய உண்மையான நட்பிடம் இருந்து பெற்றிருக்க கூடும். நல்ல நண்பன் கிடைப்பது கூட ஒரு வரம்தான்.


திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்க படுகிறதோ இல்லையோ... வாழ்கையே சொர்க்கமானதாக மாற்றுவது....காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்தோடு செய்யும் திருமணம்தான். என் பரமுவிற்கு அந்த சொர்க்கம் வாய்த்திருக்கிறது. நாளை (11.09.11) அவனின் திருமணம்.  என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள்...   பயல் நூறாண்டு வாழட்டும் இன்னமும் சந்தோஷமாய்.... .
   

Sunday, September 4, 2011

மங்காத்தா - விமர்சனம் ஆஞ்சநேயா, ஜனா, ஏகன், அசல் என எத்தனை அரியர் வைத்தாலும், கோடம்பாக்கம்  கல்லூரியின் அழகான, அம்சமான ஸ்டுடென்ட் அஜித். ஒருவழியாய் மங்கத்தா மூலமாய் டிஷ்டிங்ஷனில் தேறியிருக்கிறார்.

 ஒரு மாஸ்  ஹீரோவின் ஐம்பதாவது படம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்காக  மங்காத்தா டீம் மொத்தமும் அஜீத்துக்காக ஆடி தீர்த்திருக்கிறது. ஆனால், சர்ப்ரைஸ் கிப்ட்டாக ஆட்டநாயகன் விருதும் அஜித்தே  அடித்திருப்பது  எதிர்பாரா ஆச்சரியம்.

 கோடி்கள்  புரளும் கிரிக்கெட் சூதாட்ட களத்தில்,  பந்தய பணம்  ஐநூறு கோடியே  கொள்ளையடித்து நோகாமல்  நோன்பு கும்பிட நினைக்கும் நால்வர் குழு ஒன்று.  ஒன் மேன் ஆர்மியாய் அதை ஆட்டையே போட துடிக்கும் போலீஸ் அதிகாரி் அஜித். மொத்த  சூதாட்ட கும்பலை பிடிக்க நினைக்கும்  சிபிஐ அதிகாரியாய் அர்ஜுன். பணத்தை பறிகொடுத்த ஆத்திரத்தில் துப்பாக்கியோடு அலையும் சூதாட்ட கும்பல். இவர்கள் எல்லோரும் சேர்ந்து ஆடும் ஆட்டம்தான் மங்காத்தா. 

சென்னை.28 , சரோஜா, என வெங்கட் பிரபுவிற்கு கைகொடுத்த அதே  கிரிக்கெட் களம் மங்காத்தாவிலும் உதவியிருக்கிறது. அஜித், டீமின் அதிரடி  பேட்ஸ் மேனாய்  சிக்சர்களாய் அடித்து நொறுக்க, ஒளிப்பதிவு, எடிட்டிங், பின்னணி இசை என எல்லோரும்  தன் பங்குக்கு  ஸ்கோர் செய்ய, கேப்டனாய் இருந்து்  அதிகம்  ஸ்கோர் செய்யாவிடினும் தோனி போலவே அதிர்ஷ்டத்தில் வென்றிருக்கிறார் வெங்கட்பிரபு. 


 அஜித், வாய்ப்பே இல்லை. ரொம்ப நாளைக்கு பிறகு பழைய பார்மி்ற்கு வந்திருக்கிறார். டயலாக் டெலிவரியில், உடல் மொழியில் ஏகப்பட்ட மாற்றங்கள். மாஸ் ஹீரோக்கள் செய்ய மறுக்கும் நெகட்டிவ் ரோலை அனாயசமாக செய்ததற்காகவே பாராட்டுக்கள் . முக்கியமாக இடைவேளைக்கு முன்பான அந்த செஸ் போர்டு காட்சிகள் செம.

 
 முழுக்க முழுக்க தல ஆடும் ஆட்டத்தினால்,  ஏகப்பட்ட நட்சத்திர  ஆட்கள் இருந்தாலும்  வேறு யாருக்கும் ஸ்கோர் செய்ய வாய்ப்பில்லை. எல்லா படத்திலும் தனித்துவம் கட்டும் ஜெயபிரகாஷ் கூட இதில் அடக்கி வாசித்திருக்கிறார்.
  வெங்கட் பிரபுவிற்கு என ஒரு  ஸ்டைல் இருக்கிறது. எவ்வளவு சீரியசான இடத்திலும் கொஞ்சம் காமெடியே புகுத்தி சிரிக்க வைப்பது. மகா சீரியசான இந்த படத்தில் அப்படி காமெடியே புகுத்தலாமா, வேண்டாமா என தினறியிருப்பது தெரிகிறது. புகுத்திய இடங்கள், காமெடிக்கு பதில் எரிச்சலை வரவழைப்பதுதான் படத்தில் சொல்லப்படாத ட்விஸ்ட். 


 தம்பியுடையான் படைக்கஞ்சான் என்பது பிரேம்ஜி விஷயத்தில் சரிவருமா என வெங்கட்பிரபு யோசிப்பது நலம். சில இடங்களில் பயங்கர கட்டை போட்டு நம் பொறுமையே ஏகத்துக்கும் சோதிக்கிறார். அஜித்தும், பிரேமும் தன்னியடித்து விட்டு காரில் வரும் காட்சிகளில் மட்டும் கொஞ்சம் சிரிப்பு சத்தம்.


 "தி இட்டாலியன் ஜாப்" படத்தை விரு்ம்பி பார்த்தவர்களுக்கு இந்த படம் பயங்கர அதிர்ச்சியையும், எரிச்சலையும் தரலாம். கொள்ளையடிப்பதை கூட கலைநயத்தோடு செய்யும் அந்த பட காட்சிகளை அப்படியே சுட்டு  இதில் கிக்கிலி பிக்கிலி காமெடி செய்திருக்கிறார்கள்.


 பின்னணி இசை இந்த படத்திற்கு எவ்வளவு உதவியிருக்கிறதோ, அதே அளவு படத்தின் பாடல்களும், அவை திடுமென முளைக்கும் இடங்களும் ஏகத்துக்கும் காலை வாரியிருக்கிறது. பாடல்களை துணிந்து  வெட்டலாம். ஒன்றிற்கு நான்காய் ஹீரோயின்கள். தேவையற்ற பாடல்களுக்கு தாரள மனதாய் உதவியிருக்கிறார்கள். அவ்வளவே. 


 இவ்வளவு ஓட்டைகள் இருந்தாலும், படம் கரை சேர்ந்து விடுவதற்கு காரணம் அஜித்தும், கொஞ்சம் பர்பெக்ஷனான மேக்கிங்கும்தான். சக்தி சரவணன் ஒளிப்பதிவு,  பிரவீனின் எடிட்டிங் என டெக்னிக்கல் சமாச்சாரங்கள் படத்தின் பெரும் பிளஸ்.

 அஜித்தின் மாஸ் இமேஜை, ஒரு பர்சென்ட் கூட குறைவில்லாமல் உபயோகித்துக்கொண்ட வி்தத்தில் வெங்கட் பிரபு ஒரு இயக்குனராக கவனம் ஈர்க்கிறார். திரைக்கதை துரத்தல்களில் இன்னும் கொஞ்சம் லாஜிக் சேர்த்திருந்தால் மங்காத்தா ஆட்டம் இன்னமும் சூடு பிடித்திருக்கும். 


 தல ரசிகர்களுக்கு  தலை தீபாவளி.


(+) பிளஸ்

அஜித்
ஒளிப்பதிவு
எடிட்டிங்
மேக்கிங்
திரைக்கதை


(-) மைனஸ்

பாடல்கள்
பிரேம்ஜி 
நீளமான சண்டைகள் 
வெங்கட் பிரபு டச் இல்லாதது.
  

VERDICT :  நிச்சயம் ஒரு முறை பார்க்கலாம். 
RATING   : 4.3 / 10.0EXTRA பிட்டுகள் 

   எத்தனை மொக்கை படங்கள் கொடுத்தாலும், அஜித்திற்கு இருக்கும் ஒபெனிங் மிக பெரியது. 'அசல்' போன்ற காவியத்திற்கே   முதல் நாள்  டிக்கெட் கிடைக்காமல் அலைந்தது நினைவிருக்கிறது. இந்த படம் வேறு பப்ளிக் டாக்கில் நன்றாக இருக்கிறது என பரவ, திருப்பூரில் 9 தியேட்டர்களில் ரீலீஸ். 7 தியேட்டர்கள் வரை அலைந்தும் எங்கும் டிக்கெட் கிடைக்க வில்லை. கடைசியாக சிட்டியில் இருந்து ரொம்பவே விலகி இருக்கும் MGB தியேட்டரில் இரவு பதினோரு மணி காட்சிக்கு டிக்கெட் கிடைத்தது.


  ஆனால், டிக்கெட் என கொடுத்தது சைக்கிள் டோக்கன் போல எதுமே எழுதபடாத ஒரு துண்டு சீட்டு. எல்லா டிக்கெட்டுகளையும் 60 ரூபாய் என ரவுண்டு ரேட்டில் விற்பனை செய்தார்கள். 60 ரூபாய்க்கு எங்கு போய் அமர்ந்தும் படம் பார்க்கலாம். இந்த விசித்திர விதிமுறையால், அதற்க்கு முந்தைய காட்சி முடிவதற்கு முன்னரே, ரசிகர் கூட்டம் முண்டியடித்து திரையங்கிற்க்குள் ஓடி துண்டு விரித்து இடம் பிடிக்க...  பயங்கர கலாட்டா.


 அதற்க்கு பின்னரும், இரவு இரண்டு மணி காட்சிக்கு  டிக்கெட் வாங்கும் கூட்டத்தை பார்த்து மிரண்டு விட்டேன். வைகுண்ட ஏகதேசிக்கு விடிய விடிய படம் காட்டுவதை போல...விடிய விடிய தல தரிசனம்தான்.


you might like this also...

Related Posts with Thumbnails