Sunday, June 19, 2011

அவன் இவன் - விமர்சனம்பல வருடங்களுக்கு ஒரு முறை வரும் திருவிழா போல பாலாவின் புதிய படைப்பு அவன் இவன். 

 பக்கத்தில் இருக்கும் காசியில் மதியம் மூன்று மணி முதலே  இரவு காட்சிக்கு ஹவுஸ் புல்.  உதயத்திலும் அதே நிலை. சத்யம், PVR  சினிமா எல்லாவற்றிலும் அடுத்த இரண்டு நாளைக்கு டிக்கெட் இல்லை. என்ன செய்ய.... பாலா படம் முதல் நாளே பார்த்தாக வேண்டும் என்கின்ற வெறி...   சரி கடைசியாய் பாலியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்திய பரங்கி மலை ஜோதியில் முயற்சிக்கலாம் என்று வண்டியே கிளப்பினால்... வழியெங்கும் வாகன ஊர்வலம். பயங்கர டிராபிக் ஜாமில் என் SPLENDOUR PLUS மிதந்து... ஊர்ந்து.. நகர்ந்து.. கிடைத்த சிறு சிறு இடைவெளிகளில் உயிரை பணயம் வைத்து அங்கே சென்றால்.... அனுமார் வால் போல நீண்ட நெடிய வரிசை. கடைசி நேர காத்திருப்புக்கு பின் கிடைத்தது டிக்கெட். 


பரமுக்கு போன் அடித்தால், அவன் தன் வருங்கால துணையுடன் தி நகரில் பனியன்  எடுத்துக்கொண்டிருக்க.... அவன் இவனுக்கு டிக்கெட் கிடைத்து விட்டது என சொன்னவுடன்...... உலகம் மறந்து.. தன் துணை... மனை ..  மறந்து அடுத்த எலெக்ட்ரிக்  ட்ரெயின் பிடித்து  வருவதாக சத்தியம் செய்ய... வாசலில் காத்துக்கொண்டிருக்கிறேன்... 


 மணி பத்து அடித்து விட்டது.. பரமு இன்னும் வந்த பாடில்லை... படம் ஆரம்பித்து விட்டதற்கு  அறிகுறியாக பரங்கி மலை ஜோதியினுள்  மணி அடிக்க... என்னுள்   கொலை வெறி எகிற ஆரம்பித்து ... விரல்கள் நடுங்க ..பரமுக்கு போன் அடிக்க... அவன் பரங்கி மலை ரயில்வே நிலையத்தில் இருந்து 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஜோதியே நோக்கி ஓடி வந்து கொண்டிருப்பதாக தகவல் சொன்னான். 

அதற்குள்  படம் ஆரம்பித்து விடுமோ என மனசுக்குள் ஆயிரம் ஆயிரம் பட்டாம் பூச்சிகள் வித  விதமாய் பறக்க... நகம் கடித்து பின் விரல்  கடிப்பத்தற்க்குள்  பரமு  வந்து சேர.... அவசர அவசரமாய்  உள்ளே நுழைந்து இருக்கையில் அமர்ந்தோம். 


இத்தனை ஆர்வமாக முதல் நாளே படம் பார்த்த   அத்தனை   பாலா ரசிகர்களையும் அவன் இவன் திருப்திபடுத்தியதா  என்றால்... விடை சொல்வது கொஞ்சம் கஷ்டம்தான். 


பாலா படம் என்றாலே அதில் கதை, லாஜிக், பாடல்கள், ஹீரோயிசம், என எதையும் எதிர் பார்க்க கூடாது. பாலா படங்கள் என்றாலே, அதில் நமக்கு கிடைப்பது ஒன்றுதான். அது ' அனுபவம்' .  புதிய புதிய வித்தியாசமான அனுபவங்கள் மட்டுமே. .   


 பாலாவின்  அவன் இவனும்   ஒரு வித அனுபவம்தான். வித்தியாசமான ஒரு ஊர். அதில்  வித்தியாசமான ஒரு வாழ்ந்து கெட்ட ஜமீன்தார். அவரது அடிபொடிகளாக வித்தியாசமான அண்ணன் தம்பிகள். அவர்களுக்கு வித்தியாசமான ஒரு குடும்பம். அவர்களுக்குள் நடக்கும் சம்பவங்களே படம்.


 மருந்துக்கு கூட கதை என்கின்ற விஷயம் இல்லாமல் இரண்டரை மணி நேர படம் காட்டியிருப்பது பாலாவின்   திறமை. அனால் அவரது திறமை முழுவதும் வெளிப்படாமல் போனது திரைக்கதையில்.

வழக்கமாக தனது படங்களில் ஹீரோவை மட்டுமே பெண்டு நிமிர்த்தும் பாலா இதில் பாரபட்சம் இல்லாமல் ஹீரோ, ஹீரோயின், வில்லன், இன்ன பிற நடிகர்கள் என எல்லோரையும் பெண்டு நிமிர்த்தியிருக்கிறார். சாணியில் புரண்டு, குட்டிகரணம் அடித்து, ராவாக சரக்கடித்து, நிர்வாணமாக ஓட விட்டு,  என கண்டபடி  சித்தரவதை  செய்திருக்கிறார்.


விஷாலுக்கு கொஞ்சம் நடிக்கவும் தெரியும் என்பதை மட்டுமே இந்த படம் தெளிவாக வலியுறுத்துகிறது. மற்றபடி பிதாமகன் பார்ட் 2 பார்க்கும் அனுபவத்தைதான் இந்த படம் கொடுக்கின்றது.இந்த படத்திற்கு எதற்கு ஒன்றுக்கு இரண்டாக ரெண்டு ஹீரோயின்கள்.. சத்தியமாக  புரியவில்லை. நடித்து முடிக்கும் வரை அவர்களுக்கும் புரிந்திருக்க வாய்ப்பில்லை. வழக்கமாக பாலாவின் கதை மாந்தர்களோடு இயல்பாக ஒட்டிக்கொள்ளும் நம் மனது இதில் தனித்தே இருப்பது நிச்சயம் பெரிய குறை. 


கதை என்பதை விட... காட்சிகளின் தாக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் பாலா. நிறைய காட்சிகள் ஓங்கி செவிட்டில் அறைந்தது போல இருக்கின்றது.  முக்கியமாக வசனங்கள்.. எஸ். ராமகிருஷ்ணனின் வசனங்கள் பெரும் பலம். 

இந்த படத்திலும், பாலா காட்டியிருக்கும் மனிதர்களும், உலகமும் அசாதாரணமானது. படைப்பின் மீதான  அவரது  மெனக்கெடல் ஒவ்வொரு காட்சியிலும் தெளிவாக தெரிகிறது.


யுவனும், ஆர்தர் வில்சனும் சோறு தண்ணி இல்லாமல் இந்த படத்திற்காக உழைத்திருக்கிறார்கள் என்பத்தை நிச்சயம் குறிப்பிட்டாக வேண்டும். யுவனின் அட்டகாசமான இரண்டு பாடல்களை வெட்டியிருப்பது கொடுமை.


விஷால், ஜி.எம் குமார் இருவரும் இந்த படத்திற்காக பட்டிருக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்பதை படம் பார்க்கும் அனைவருக்கும் புரியும். ஆனால் வலுவற்ற  திரைக்கதை இவ்விருவரது கடின உழைப்பையும் வீண் செய்திருக்கிறது. 


பாலா கொடுக்கும் விருந்தில் குறையிருக்காது எனினும் யானை பசிக்கு இது வெறும் சோள பொரிதான்.


 (+) பிளஸ்

வசனங்கள்
சில காட்சிகள் ஏற்படுத்தும் தாக்கம்.
விஷால்


(-) மைனஸ்

திரைக்கதை
லாஜிக் ஓட்டை உடைசல்கள்
வழக்கமான பாலா கதை.


VERDICT :  பயமாக இருக்கிறது.

RATING :  4.8/10.0


 EXTRA பிட்டுகள் :


இத்தோடு வெறும் ஐந்தே படங்கள். ஆனால் பாலா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் படு பயங்கரம். பரங்கி மலை ஜோதியில் கூட நேற்று ஹவுஸ் புல். 

you might like this also...

Related Posts with Thumbnails