Saturday, November 15, 2014

திருடன் போலீஸ் - விமர்சனம்அப்பாவை கொன்றவனை பழி வாங்கும் அமிதாப் காலத்து கதை. இதுதான் கதையா என்றால் ஆம் என்று தலையாட்ட முடியவில்லை. அப்பா செண்டிமெண்டில் மெல்ல மூவ் செய்து, கடைநிலை போலீஸ் படும் அவஸ்தைகளில் வேகம் எடுத்து,  காதல் ஸ்பீட் ப்ரேக்கர்களில் தடுமாறி, பழி வாங்கும் படலத்தில் பாதை மறந்து நிற்கும் போது, வேறு வழியில்லாமல்  காமெடி என்னும் யு டர்ன் அடிக்கிறார்கள்.  

படம் பார்த்து வெளியே வருபவர்களிடம் இது எந்த மாதிரியான படம் என ஒரு கேள்வி கேட்டு சரியாய் விடை சொல்பவருக்கு ஒரு எவர்சில்வர் குடமோ, ஒரு வெள்ளி குத்து விளக்கோ பரிசாக கொடுக்கலாம். அந்த அளவிற்கு, இது அக்ஷன் த்ரில்லரா...? சென்டிமென்டல் டிராமாவா?, ப்ளாக் காமெடி வகையா என நம்மை குழம்ப வைத்து கும்மியடிக்கிறார்கள். ஆனாலும், சரியான அளவில் சரியான நேரத்தில் வரும் காமெடிகள் படத்தை காப்பாற்றுகிறது. 


நான்கடவுள் ராஜேந்திரன் (ஆண்ட்டி) ஹீரோவாக அறிமுகம் ஆகியிருக்கும் படம். இரண்டாவது ஹீரோவாக அட்டகத்தி தினேஷ்.   மற்ற படங்களில் எல்லாம்,  எபோலா வைரஸ் போல பய பீதியே கொடுக்கும் ராஜேந்திரன் இதில் அம்புலிமாமா ரேஞ்சுக்கு எல்லோரையும் கிச்சு கிச்சு  மூட்டுகிறார். சரியான டைமிங்கில் இவர் அடிக்கும் ஒன் லைனர்களில்  தியேட்டர் அல்லு சில்லாகிறது. கூடவே இவரது தம்பியாக வரும் ஜான் விஜய், அவரது முழியும், உடல் மொழியும் படத்தின் எக்ஸ்ட்ரா  பில்லர்.

ரசனையான வசனங்கள் இப்படத்தின் பெரும்பலம். தினேஷ் நண்பனாய் வரும் பால சரவணன்  போலீஸை கண்டு மிரளும் பப்ளிக் பற்றி பேசும் போது   தியேட்டர் முழுக்க கைதட்டல்களால்  லைக்ஸ் அள்ளுகிறது.காதல் என்னும் வஸ்து படத்தில் இல்லையென்றால் அதை எதோ ஆர்ட் பிலிம் என்று தமிழன் நினைத்து விடுவான் என ஊறுகாய் அளவிற்கு காதல். ஹீரோயின் ஐஸ்வர்யா ஊறுகாய் போலவே ஒரு சிலீர் சுவை கொடுத்து சப்பு கொட்டி பார்க்க  வைக்கிறார். அட்லீஸ்ட், ஒரு பொரியல், கூட்டு ரேஞ்சுக்கு  அவரது காட்சிகளை விஸ்தாரம் செய்திருக்கலாம் என்பது அகில உலக ஜொள்ளர்கள் சங்கத்தின் ஒட்டுமொத்த ட்வீட்.

மிக சுவாரசியமாக கடலை போட்டுக்கொண்டிருக்கும்போது டாப் அப்  செய்ய மறந்து கனக்ஷன் கட்டானால் என்ன கடுப்பு வருமோ அது போல காமெடி விருந்துக்கு  நடுவே குறுக்கிடும் சென்டிமென்டல் உப்புமா ஆயாசத்தை ஏற்படுத்துவது உண்மை. 

படம் ஆரம்பிக்கும் போதும், இடைவேளை முடிந்து தொடங்கும் போதும் புகை பிடிப்பதை தவிர்த்துடுங்கள் என்கிறார்கள். ஆனால் மொத்த  படம் முழுவதிலும் தம் அடித்தே ஆக வேண்டும் என்கின்ற கட்டாயத்தை உண்டு செய்கிறார் யுவன். இந்துவாக இருந்தாலும், முஸ்லீமாக மாறினாலும் அவரது முதல் கடவுள் இசை என்பதை அவர் புரிந்து கொண்டால் நமக்கு புண்ணியம்.

படம் பார்த்துக்கொண்டிருக்கும்போதே, அடடா இந்த சீனை இப்படி எடுத்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்குமே என எல்லா சராசரி ரசிகனும் யோசிக்கும்படி செய்து   படம் பார்க்கும் அனைவருக்கும் இயக்குனர் ஆகும்  ஆசையே தூண்டியிருக்கிறார் இயக்குனர் கார்த்திக் ராஜு.

காதல், சண்டை, அழுத்தம் இல்லாத செண்டிமெண்ட், பழிவாங்கல் என எல்லா மசாலாக்களையும்  சேர்த்து கொத்து பரோட்டா போட்டிருந்தாலும்  வாய் விட்டு சிரிக்க நல்ல காமெடி இருப்பதால்  மறப்போம் மன்னிப்போம்.

(+) பிளஸ்

நான் கடவுள் ராஜேந்திரன்
வசனங்கள்


(-) மைனஸ்

யுவன்
லாஜிக் பொத்தல்கள்
செண்டிமெண்ட் அட்ராசிட்டிகள் 

VERDICT : நான் கடவுள் ராஜேந்திரன் ராக்ஸ்......

RATING : 4.2 / 10.0


EXTRA பிட்டுகள்

ஒன்பது மணி வரை காற்று வாங்கிக்கொண்டிருந்த காசி அடுத்த ஒரு மணி நேரத்தில் ஹவுஸ் புல்  ஆனது தீடிர் ஆச்சரியம்.


Friday, October 24, 2014

கத்தி - விமர்சனம்

தொடங்குவதற்கு முன்... சாமி சத்தியமாய் நான் விஜய் ரசிகன் அல்ல.

சினிமாவை சினிமாவாக பார்த்தால் இந்த படம் உங்களுக்கும் பிடிக்கலாம்... இணையத்தில் கத்தி கத்தி நடக்கும் சண்டைகள்  நிச்சயம் ஒரு சினிமாவுக்காக அல்ல... தனி நபர் மீது உள்ள வெறுப்போ... அல்லது தன்  அதி புத்திசாலிதனத்தை  பறைசாற்ற ஏற்படுத்திக்கொள்ளும் துடிப்போதான் சில நண்பர்களுக்கு இருக்கிறது. என்னென்ன குறைகள்... குற்றங்கள் கண்டுபிடிக்கலாம் என யோசித்துக்கொண்டே இருக்கையில் அமர்ந்தால்  எந்த உலக சினிமாவாலும் அவர்களை திருப்தி படுத்த முடியாது.  

ஹாலிவுட்டில் அமெரிக்க அதிபரையே வில்லனாக சித்தரித்து... வேற்று கிரக வாசிகளையும் நியூயார்க் நகர வீதிகளில் உலா வர வைக்கலாம்... எவனும் எதற்கும் கேள்வி கேட்பதில்லை... அவர்களை பொறுத்த வரை ஜஸ்ட் லைக் தட் அது ஒரு சினிமா அவ்வளவே... அதற்க்கு மேல் ஒரு இழவும்  இல்லை அதற்க்கு முக்கியத்துவம் கொடுப்பதும் கிடையாது.  ஒரே விஷயம் அவர்கள் எதிர்பார்ப்பது... படம் அவர்களை வசீகரிக்கிறதா... இல்லையா... அவ்வளவே...  

கோலா குடிக்கும் இவன்  விவசாயத்தை பற்றி பேசி நடிக்க என்ன தகுதி இருக்கிறது? ஒப்புக்கொள்கிறேன்... இயற்க்கை ஆர்வலர் நம்மாழ்வாருக்கு அந்த தகுதி இருந்தது... அவர் சொன்ன விஷயங்கள், எழுதிய புத்தகங்களை நம்மில் எத்தனை பேர் அறிந்திருப்போம்...? ஒருவேளை அவர் விவசாயம் பற்றி பேசி  ஒரு திரைபடத்தில் நடித்திருந்தால் எத்தனை பேர் அதை பார்க்க தியேட்டர் பக்கம் ஒதுங்கியிருப்போம்.?  மனசாட்சி தொட்டு சொல்லுங்கள் தூர்தர்ஷன் காலத்தில் ஒளியும் ஒலியும் போடுவதற்கு முன்னால் வரும் வயலும் வாழ்வை எப்படா இது முடியும் என்று எத்தனை பேர் திட்டி தீர்த்திருக்கிறோம்?  என்னையும் சேர்த்துதான்.... நிச்சயம் வயலும் வாழ்வை விட ஒளியும் ஒலியும் ஒன்றும் பயனுள்ள நிகழ்ச்சி அல்ல... ஜஸ்ட் டைம் பாஸ்தான்... அது போலதான்  சினிமாவும்.  உங்களை ... உங்கள் நேரத்தை சந்தோஷமாக வைத்துக்கொள்ள உதவும் ஒரு  ஊடகம் அவ்வளவே... நீங்கள் பார்க்கும் இரண்டரை மணி நேரம் அந்த படம் உங்களை சந்தோஷப்படுத்தியதா என்பது மட்டும்தான் முக்கியம்... அந்த இரண்டரை மணி நேரத்திலும் ஒரு நிமிஷமாவது எதாவது ஒரு விஷயம் உங்களை சமூக நோக்கில் சிந்திக்க... யோசிக்க வைத்தால் அது போனஸ். கத்தி நிச்சயம் அதை செய்திருக்கிறது. 

ஒரு சராசரி சினிமா ரசிகனை இந்த படம் நிச்சயம் திருப்தி படுத்தும். நம்ப முடியாத விஷயங்கள் படம் நெடுக தொடர்ந்தாலும் அதை ரசிக்கும்படி கொடுத்திருப்பதுதான் இந்த படத்தை  வெற்றி பெற வைத்திருக்கிறது. 

விஜய் தனது நாலந்தர மசாலா படங்களில் இருந்து விலகி இப்படி கொஞ்சம் கதையம்சம் கொண்ட படங்களில் நடித்தாலே போதும்... அவரின் சினிமா வாழ்க்கை நிச்சயம் ஜொலிக்கும்...  

ஷார்ப்பான வசனங்கள்... துள்ள வைக்கும் இசை... ரசிக்க வைக்கும் மாஸ் சண்டை காட்சிகள் அதை எல்லாம் மீறி சமூகத்தில் நடக்கும்  அவலங்களை சொல்ல முயற்சித்த வகையில் இந்த படம் பாஸ்தான். 


(+) பிளஸ் 

வசனங்கள் 
இயக்கம் 
விஜய் 
அனிருத் 
முருகதாஸ் 


(-) மைனஸ் 

கதாநாயகி என்கின்ற விஷயம் 
முதல் இருபது நிமிடங்கள் 
லாஜிக் VERDICT : நிச்சயம் பார்க்கலாம்... 

RATING   : 5.1 / 10.0


EXTRA பிட்டுகள் 

முதல் நாள் காசி தியேட்டர்....  ஆர்வமிகுதி ரசிக குஞ்சு ஒன்று போஸ்டருக்கு பாலபிஷேகம் செய்து கொண்டிருந்தது...  ஒரு மழை நாள் இரவில் பால் வாங்க மறந்து... மனைவியால் பால் வாங்க வெளியே துரத்தப்பட்டு... கடை கடையாக ஒரு பாக்கெட் பாலிற்கு பரதேசி போல அலைந்து கிடைக்காமல்... அன்றைய இரவு குழந்தையின் பசி அழுகையில் நரகமாய் கழிந்தது ஏனோ கண் முன்னே வந்து போனது.  தமிழகத்தில்... சினிமா மீதான நம் பார்வையே வேறு....நடிப்பு அவர்கள் தொழில்.  நடிகர்களை நடிகர்களாக பார்க்காமல் நமது எதிர்காலமாய் பார்ப்பதுதான் நாம்  செய்யும் தவறு.      

you might like this also...

Related Posts with Thumbnails