Monday, August 30, 2010

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 2


சென்னையில் துரந்தோ ரயிலை நெருங்கியதுமே மின்சாரம் போல அந்த அதிர்ச்சி எங்களை தாக்கியது. சார்ட்டில், 65 வயது ராஜாத்தி அம்மாளை தவிர மற்ற எல்லோருமே ஆண்கள். அட ராமா... எங்கள் கோச் முழுதுமே சேவல் பண்ணையாக காட்சியளிக்க,  சைட் அடிக்க ஒரு பிகர் கூட இல்லாத வருத்தத்தில் துரந்தோ ஏறினோம்.

இந்த இடத்தில் துரந்தோ ரயிலை பற்றி சொல்லியே ஆக வேண்டும். இது ஒரு நான் ஸ்டாப் ரயில்.  சென்னையில் கிளம்பினால் டெல்லி சென்று தான் நிற்கும். இடையில் சில ஸ்டேஷன்களில் நின்றாலும், யாரும் ஏற மாட்டார்கள்.

வேகம் என்றால் அப்படி ஒரு வேகம். உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், கையில் காபி கோப்பையே பிடித்தவாறு ஜன்னல் அருகே அமர்ந்து கொண்டிருந்தேன். தீடிரென எதிர் ட்ராக்கில் ஒரு ரயில் கடக்க,  கடந்த வேகத்தில் கையில் இருந்த காபி கப் அப்படியே பாதியாய் மடங்கி என் உடை நனைத்தது. அந்த அளவு வேகம். அதிக பட்சமாக 160 KM வேகத்தில் செல்லும் என TTR குறிப்பிட்டார். ஒவ்வொரு வெள்ளி அன்றும் காலை 6.40 க்கு சென்னையில் இருந்து புறப்படுகிறது. சரியாக 28 மணி நேரத்தில் (10.40 AM) க்கு டெல்லி சென்றடைகிறது.

இந்த ரயில் அதிக வேகம் செல்வதற்காக, ரயிலில் ஏகமாக எடையே குறைத்திருக்கிறார்கள்.  படுக்கையில் இருக்கும் மெத்தையின் அளவு பாதியாய் குறைக்கபட்டிருக்கிறது. பாத்ரூம் சென்று தரையே ஓங்கி ஒரு  உதை விட்டால் இரண்டாக பிளந்து கொள்ளும் போல.. எடை குறைவாக இருப்பதால் காற்றில் ரயில் ஆட்டம் போட்டு செல்வதை நன்றாக உணரலாம்.


இதே போல வேகத்துடன் ராஜதானி எக்ஸ்பிரஸ் சென்றாலும். அதில் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி இல்லை.  3 டயர் AC மட்டுமே. துரந்தோவில் ரூபாய் 750 க்கு நான்கு வேளை உணவுடன் இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி இருப்பதால் மிடில் கிளாஸ் மக்களுக்கு இது ஒரு வர பிரசாதம்.

உணவை பொறுத்தவரை குறை சொல்ல முடியாது. காலையில் ஆங்கில தினசரி கொடுக்கிறார்கள். (அது சாப்பிட இல்லை... படிக்க... ) இரண்டு பிஸ்லெரி வாட்டர் பாட்டில்கள்.  அப்புறம் டீ. சரியாக 9 மணிக்கு பிரேக் பாஸ்ட்.  டிக்கெட் புக் செய்யும் போதே VEG - நான் VEG என நம் உணவு விருப்பத்தை டிக் செய்து விட வேண்டும். VEG  என்றால் இரண்டு வடையும், ஐந்து இட்லியும். NON -VEG  என்றால் ஆம்லெட்டும், ப்ரெட் டும் கொடுக்கிறார்கள். மதியம் இரண்டு சப்பாத்திகளுடன் அரிசி சாதம். நான் VEG  என்றால் எக்ஸ்ட்ராவாய் குழம்பில் ஒரு முட்டை மிதக்கும். அவ்வளவே. மற்றபடி சிக்கன் மட்டன் வகையறாக்கள் எல்லாம் இல்லை. அப்புறம் சாயந்திரம் காபி, இரவில், மதியம் கொடுத்தது போலவே அரிசி சாதம்.

ஆரம்பத்தில், இதில் கொடுக்கப்படும் உணவின் தரம், படு கன்றாவியாக இருந்தது எனவும், இப்போது கொஞ்சம் மேம்பட்டுள்ளது என்றும்  அதில் அடிக்கடி பயணம் செய்யும் நண்பர் ஒருவர் கூறினார்.

துரந்தோவில் ஏதும் சமைப்பதில்லை. குறிப்பிட்ட சில ஸ்டேஷன்களில் உணவு ஏற்றிக்கொள்ள படுகிறது. அதனால் அந்தந்த ஊருக்கு தகுந்தபடி ருசி மாறுகிறது. இருப்பினும் உணவு நன்றாகவே இருக்கிறது.


ஒவ்வொரு கோட்சிலும் சார்ஜ் செய்யும் வசதி இருந்தாலும். இரண்டாம் வகுப்பில் எதுவுமே இயங்குவதில்லை.  3 டயர் AC சென்றுதான் சார்ஜ் ஏற்றிக்கொள்ள வேண்டும்.

ரயில் சிநேகிதம் நிலையானது அல்ல என்றாலும், அந்த தருணங்களில் அது ஒரு அற்புதமான விஷயம்.   அகில், ராமதாஸ், கேட்டரிங் ஊழியர் மனோகர் போன்றோரின் நட்பு மறக்க முடியாதது.

துரந்தோவில் சாகசம் செய்யும்  பரமு 

சனி கிழமை அதிகாலை ரயில் டெல்லி நோக்கி விரைந்து கொண்டிருக்க, எனக்கும் பரமுக்கும் ஒரு அழகிய ஆசை மனதில் இருந்து கிளம்பியது. போகும் வழியில் தான் தாஜ் மாஹல் இருக்கிறது. இவ்வளவு தூரம் வந்து உலக அதிசயத்தை காணாமல் போவதா.. ஆக்ராவில் இறங்கி கொள்ளலாம் என ஒரு தீடிர் தீர்மானம் போட்டோம். சரியாக 7 மணிக்கு ஆக்ரா வரும். ஆனால் சில சமயங்களில் மட்டும்தான் அங்கு ரயில் நிற்கும், மற்றபடி மிக மெதுவாக ஸ்டேஷனை கடந்து விடும் என நண்பர் எச்சரிக்க, குளிக்க கூட நேரம் இல்லாமல், உடல் முழுதும் பூச்சி மருந்தை அடித்துக்கொண்டு  அவசர அவசரமாக ஆக்ராவில் இறங்க ஆயுத்தம் ஆனோம்.

ஆக்ரா ஸ்டேஷன் நெருங்க.. ரயில் கொஞ்சம் வேகம் மட்டும் குறைத்து நிற்காமல் கடக்க ஆரம்பித்தது.. நான் ஓடும் ரயிலில் இருந்து திடுமென குதித்து.. தலை குப்புற விழுந்து மூக்குடைபட இருந்து சமாளித்து எழுந்து நிற்க.. பரமுவால் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முடியவில்லை. "குதிடா..குதி..." என என் அலறல் காற்றில் கரைய..   என்னை மட்டும் தனியாக விட்டு விட்டு, துரந்தோ பரமுவுடன் ஆக்ரா ரயில் நிலையத்தை கடக்க ஆரம்பித்தது. .

                                                             - பயணம் எக்கு தப்பாய் போகும்.

Friday, August 27, 2010

நான் மகான் அல்ல - விமர்சனம்

 அப்பாவை கொன்றவர்களை பழி வாங்கும் மகன். எல்லா மொழிகளிலும் துணி கிழிந்து போகும் அளவுக்கு துவைத்து பிழிந்தெடுத்த கதை. ஆனால், இந்த படத்தின் வசீகரம் கதையில் அல்ல.. காட்சி படுத்துதலில்.

முதல்  படத்தில், அமைதியான  கிராமத்து காதலை மயிலிறகு தடவுவது  போல கதை சொன்ன சுசீந்தரனா இவர். நம்பவே முடியவில்லை  இந்த படத்தில் ராட்சசதனமாக இருக்கிறது இவர் கதை சொல்லியிருக்கும் விதம். 

ஒரு நல்ல இயக்குனருக்கு அடையாளமே... எந்த இடத்திலும் தன்னை அடையாளபடுத்தி கொள்ள முடியாதபடி வித விதமான கதை களங்களில் புகுந்து விளையாடுவதுதான்.  அந்த  வகையில், இரண்டாவது படத்திலேயே படு வித்தியாசம் காட்டிய  சுசீந்தரனுக்கு கோடம்பாக்கம் கோட்டையில் ஒரு சீட் நிச்சயம். WELL DONE  DIRECTOR !

வேலை இல்லாத ஹீரோ, பார்த்தவுடன் காதல் , அன்பான குடும்பம், இளம் பெண்களை கற்பழித்து கொலை செய்யும் கும்பல், அதனால் பாதிக்கப்படும் ஹீரோ குடும்பம், கிளைமாக்சில் பழி வாங்கும் படலம் என வழக்கமான டெம்ப்ளேட்  கதையமைப்பு என்றாலும் படத்தை ரசிக்க முடிவதற்க்கான காரணம், சரவெடி போல வெடித்துக்கொண்டு போகும் திரைக்கதையும், அதற்க்கு உறுதுணையாய் நிற்கும் இசையும், ஒளிப்பதிவும்தான்.

பருத்தி வீரன் சாயல் தொலைத்து, யதார்த்த சென்னை பையன் ஜீவாவாக கார்த்தி. இடைவேளை வரை சிரிக்க சிரிக்க வளைய வருபவர், பிற்பாதியில் கொலையாளிகளை தேடும் போது பரிதவிப்பையும், தூக்கி போட்டு மிதிக்கும் போது கொலை வெறியினையும் கண்களில் நன்கு வெளிப்படுத்துகிறார். மனசில் இருப்பதை அப்படியே கொட்டிவிடும் கதாபாத்திரம் கார்த்திக்கு நன்கு பொருந்துகிறது.


பார்க்கும் போதே எச்சில் முழுங்க வைக்கும்   ஐந்தரை அடி ரசகுல்லாவாய் காஜல் அகர்வால். அப்படியே கடித்து சாப்பிட்டு விட தூண்டும் அழகு. அழகான பெண்கள் எல்லாம் கொஞ்சம் அரை லூசாக இருக்க வேண்டும் என்கின்ற தமிழ் சினிமா மரபை இவரும் பின் பற்றியிருக்கிறார். உண்மையில் காஜலின் குழந்தைதனமான அழகை கண்டு  முழு லூசாவது நாம்தான். இவ்வளவு அழகை இடைவேளைக்கு பிறகு காட்ட மறுத்த இயக்குனருக்கு அகில இந்திய   காஜல் ரசிகர் மன்றத்தின் சார்பாக எமது கண்டனங்கள்.  ( அடேய் மனோ,  அழகான பெண்களை பற்றி எழுதும் போது மட்டும் வார்த்தைகள் எப்படித்தான் உனக்கு சரமாரியாக வந்து விழுகிறதோ..)

 கார்த்தியின் அப்பாவாக ஜெய பிரகாஷ். வெகு இயல்பாக  கலக்கியிருக்கிறார். காஜலிடம் பெற்றவர்களின் அருமை பற்றி பேசும் இடம் அழகான கவிதை. அப்புறம் முக்கியமாக அந்த வில்லன்கள் கூட்டம்.  இளம் வயது குற்றவாளிகளாக மிரட்டியிருக்கிறார்கள். பேச்சு, பார்வை, உடல் மொழி எல்லாமே பக்கா.


சின்ன சின்ன மெனக்கேடல்களில்  இயக்குனரின் திறமை பளிச்சிடுகிறது.  தன்னை மிரட்டுவதற்காக  காஜலின் அப்பா அனுப்பிய தாதாவை நண்பனாக்கி கொள்வது,    கொலை செய்வதற்காக ஸ்கெட்ச் போட்டு தரும் அந்த மாமா கேரக்டர்,  என மிக சரியான கதாபாத்திர தேர்வுகள்  படத்திற்கு பெரும் பலம்.

யுவனின் இசை படத்திற்கு வேறொரு நிறம் தருகிறது. ஆரம்பத்தில் அமைதியாக தொடங்கும் அந்த  பின்னணி இசையில் இருந்து , கடைசி கட்டங்களில் தட தட வென பயணிக்கும் கிட்டார் பீட் வரைக்கும் இசை ராஜாங்கம் நடத்தியிருக்கிறார். இறகை போல பாடலை மொத்த தியேட்டரும் கை தட்டி, விசில் அடித்து கொண்டாடுகிறது.

மதியின் ஒளிப்பதிவு, பாஸ்கர் சக்தியின் வசனம், ராஜீவன் கலை எல்லாமும் படு யதார்த்தம் + அழகு.


படத்தில் ஒரே ஒரு சண்டைதான். ஆனால் அதை படமாக்கியிருக்கும் விதமும், சரியான டைமிங்கும்  திரை தீப்பற்றிக்கொள்ளும் அளவுக்கு பரபரக்கிறது. எதிராளியின் கால்களை பற்றி கொண்டு தடுமாறவைப்பது, கடிப்பது என அந்த சண்டை காட்சியில் உள்ள ரியலிசம், பறந்து பறந்து அடிக்கும் வழக்கமான  ஸ்டன்ட் காட்சிகளுக்கு மத்தியில் வெகு புதுசாக இருக்கிறது. CONGRATS  அனல் அரசு.

என்னதான் யதார்த்தமாக காட்சி படுத்துகிறேன் என்றாலும், தியேட்டரிலும், பொது இடங்களிலும் ஹீரோ முத்தமிடுவது ஆரோக்யமான விஷயமா என்ன.. தெரியவில்லை.
அதே போல, போலீஸ் மீதான திறமையே குறைத்து மதிப்பிட்டிருப்பதும் உறுத்தல்.


(+) பிளஸ்

திரைக்கதை
இசை, வசனம், ஒளிப்பதிவு
வில்லன்கள்
காஜல் (ஹி ஹி )

(-) மைனஸ்

 வழக்கமான கதை

VERDICT  : சிற்சில குறைகள் இருந்தாலும் கார்த்திக்கு இது ஒரு வெற்றி படமே.

RATING  : 4.9 / 10.0


EXTRA பிட்டுகள். 

என்னதான் காஜலுக்கு முக்கியத்துவம் கொடுக்காத போதும், சின்ன சின்ன பெண் கதா பாத்திரங்களுக்கு கூட அழகழகான பெண்களை போட்டு மனசை குளிர செய்த இயக்குனருக்கு அகில உலக ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக வாழ்த்துக்கள்.


Wednesday, August 25, 2010

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்பத்தூர் பையனும்... (18+) - 1


வாய்ப்புகள் நம்மை தேடி வராது. நாம்தான் வாய்ப்புகளை தேடி போக வேண்டும் என்கின்ற சித்தாந்தத்தை நம்புபவன் நான். ஆனால், டெல்லியில் மத்திய அரசு கட்டுப்பாட்டில் உள்ள HANDLOOM & HANDICRAFTS CORPORATION OF INDIA என்கின்ற அரசு சார் நிறுவனத்தில் ஒரு நேர்முக தேர்வுக்கு நான் அழைக்க படுவேன் என்று கனவிலும் நினைக்கவில்லை. கிடைத்த வாய்ப்பை வீணடிக்க வேண்டாமென்று நினைத்து டெல்லி செல்ல அனுமதி பெற்று, போகும் போது ரயிலிலும் வரும் போது விமானத்திலும் வருவதாய் ஏற்பாடு செய்தேன். 

நேர்முக தேர்வுக்கு நான், எனது தம்பி பிரபு, பிரபுவின் நண்பன் பரமு ஆகிய மூவருடன்   பெயர் தெரியாத ஒரு முன்னூறு பேரும் அழைக்கப்பட்டிருந்தோம். எனது தம்பி ஏற்கனவே டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருவதால் நான் மட்டும் கோவையில் இருந்து கிளம்பினேன். பரமு சேலத்தில் என்னுடன் இணைந்து கொள்வதாக கூறி விட்டான். 

நேர்முக தேர்வு 23.08.10 திங்கள் மதியம். ஆனால் நாங்கள் இரண்டு நாட்கள் முன்னதாக சென்று டெல்லியே சுற்றுவதாய் ஒரு உயரிய நோக்கம் கொண்டிருந்தோம். சென்னை சென்று அங்கிருந்து மாற்று ரயிலில் (துரந்தோ எக்ஸ்பிரஸ்)  டெல்லி செல்வதாய் திட்டம். இதோ, எனது டெல்லி பயணம் மழை தூறிய அந்த வியாழன் (19.08.10) அன்று நீலகிரி எக்ஸ்ப்ரஸில் இனிதே  துவங்குகிறது. இதை தொடர்ந்த ஐந்து நாட்கள் நான் பெற்ற அனுபவங்கள் தான் இந்த பயணக்கட்டுரை தொடர்.

எனக்கு தெரிந்து நீலகிரி எக்ஸ்பிரஸ் கொஞ்சம் ஆசுவாசமாய், நெரிசலின்றி சென்றதாய் ஞாபகமே இல்லை. எத்தனை எத்தனை மனிதர்கள்..எத்தனை விதமான காரணங்கள். சந்தோஷங்கள்... வருத்தங்கள்.. எதிர்பார்ப்புகள்.. கடமைகள்.. எல்லாவற்றையும் சுமந்து கொண்டு அந்த கம்பீர ஊர்தி இரவை கிழித்து கொண்டு சென்னை நோக்கி முன்னேறி கொண்டிருந்தது.  அவசர அவசரமாக  கிளம்பியதில் என் செல்பேசி மிக குறைந்த அளவு  மின் சக்தியுடன் இருக்க.. சார்ஜ் செய்யும் வசதி என்னுடைய கோச்சில் இல்லாததால்  பக்கத்துக்கு கோட்சிற்கு  சென்ற போதுதான் அந்த ஜோடிகளை  கண்டேன். கதவை ஒட்டி வாஷ் பேசின் அருகே தரையில் அமர்ந்திருந்தார்கள். அந்த பையன்  அப்பெண்ணின் தோள் மீது கை போட்டபடி  அவள் கைகளை பற்றி ஜோதிடம் பார்த்து கொண்டிருந்தான். அந்த பெண்  கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கலாம். கூச்சத்திலும், வெட்கத்திலும் நெளிந்து கொண்டிருந்தது.  கொஞ்சம் அன்யோநியமாக இருந்த இருவரும் என் வருகை கண்டு விலகி அமர, நான் அருகிலிருக்கும் ப்ளக் பாயிண்டில் சார்ஜரை இணைத்து விட்டு எதிர்புற கதவை திறந்து கொண்டு வெளியே வேடிக்கை பார்த்தபடி நின்றிருந்தேன். யதொட்சையாக திரும்பியதில் அந்த பையனின் கண்களில் இருந்த விரோத உணர்ச்சி என்னை எதோ செய்ய.. அப்படியே திரும்பி போய் விடலாமா என்று நினைத்தேன். பரமு வேறு சேலத்தில் போன் செய்வான். அவனை அழைத்து கொள்ளவாவது சிறிதளவு சார்ஜ் வேண்டுமென நினைத்து அங்கேயே நின்றேன். இப்போது அந்த பெண் இயல்பாக அவனிடம் பேசி கொண்டிருக்க, அவன் காதுகளின் கவனம் அவளிடத்திலும், கண்களின் கவனம் என்னிடத்திலும் நிலை கொண்டிருந்தது. எனக்கு  முகம் எல்லாம் முடி முளைத்து, கருப்பாய் கரடி போல் ஆனது போன்ற உணர்வு. யார் இவர்கள்...வீட்டை விட்டு வெளியேறிய  காதலர்களாய் இருக்கலாம்.  அல்லது நல்ல நண்பர்களாய் கூட இருக்கலாம். இப்படி பாதுகாப்பின்றி பயணம் செய்கிறார்களே என  மனசுக்குள் ஆயிரம் கேள்விகள் கத்தி சண்டை போட.. அபத்தாந்தவனாய் TTR வந்து சேர்ந்தார். 

வந்தவர் அவ்விருவரிடமும் சரமாரியாக கேள்விகள் கேட்டவர், இருவருக்கும் தனி தனி பெர்த் அலாட்  செய்து தர.. சத்தியமாக சொல்கிறேன்.. எனக்கு என்னவோ சொல்ல முடியாத ஒரு மன திருப்தி ஏற்பட்டது.

சேலத்தில் பரமுவை ரிசீவ் செய்து கொண்டு பின் தூங்கிய தூக்கத்தில் அந்த பெண்ணின் பயந்த முகம் கனவில் வந்து போனது நிஜம்.

காலையில் சரியாக ஐந்து மணிக்கு நீலகிரி  சென்னை வந்தடைய.. டெல்லி செல்லும் துரந்தோ எக்ஸ்பிரஸ்சை  நோக்கி சென்ற எங்களுக்கு அந்த பெரிய அதிர்ச்சி காத்துக்கொண்டிருந்தது. 

                                - பயணம் எக்குத் தப்பாய் போகும். 

Thursday, August 19, 2010

லீவ் லெட்டர்


நண்பர்களே.. 

ஒரு நேர்முக தேர்வுக்காக டெல்லி செல்வதால், பதிவுலகத்திற்கு 4 நாள் விடுமுறை.செவ்வாய் அன்று மீண்டும் உங்களை சந்திக்கிறேன். அது வரைக்கும் என் தொந்தரவு இல்லாமல் கொஞ்சம் ஜாலியா இருங்க.. 

மீண்டும் சந்திப்போம். 

நட்புடன்,
மனோ

Wednesday, August 18, 2010

உமா சங்கர் I.A.S

 

செய்கின்ற வேலைக்கு  நேர்மையாகவும், மனசாட்சிக்கு பயப்படுபவராகவும் இருக்க விரும்புபவரா நீங்கள். அப்படியானால் உங்களுக்கு அரசு உத்தியோகம் சரிபட்டு வராது. இரவு, பகல் பாராமல் கஷ்டப்பட்டு படித்து, தேசிய அளவில் நல்ல  ரேங்கில் வந்து, இந்த நாட்டுக்கு தன்னால்  இயன்ற அளவு   ஏதேனும் நல்லது  செய்ய முயன்ற ஒரு IAS அதிகாரிக்கு  இப்போது கிடைத்திருப்பது தற்காலிக பணி நீக்கம். உண்மையான காரணங்கள் சத்தியமாக வெளி வர போவதில்லை. இதை பற்றிய நம் கேள்விகள் கொஞ்ச நாட்களில் எந்திரன் விளம்பர வெளிச்சங்களிலும், கிரிக்கெட் பரபரப்புகளிலும் நம்மால் மறக்கப்பட்டு விடும்.யார் எக்கேடு கெட்டு போனால் என்ன.. நம் வீட்டு குழாயில் தண்ணி வருகிறதா.. இரவானால் வீட்டில் பல்பு எரிகிறதா... அதுதான் நமக்கு முக்கியம். வாழ்க ஜனநாயகம்.

Tuesday, August 17, 2010

வம்சம் - விமர்சனம்


ஒரு  இயக்குனருக்கு முதல் படமே மிக பெரிய  வெற்றிப்படமாக அமைந்து விட்டால்,  இரண்டாவது படம் கத்தி  மேல் நடப்பது போல. ஆனால்  பாண்டிராஜ் கத்தி மேல் அனாயசியமாக   ஒரு திருவிழாவே  நடத்தி ஆட்டம்  போட்டிருக்கிறார்.  

ஒரு குறிப்பிட்ட  சமூகத்தை கதை களனாக கொண்டு, அந்த சமூகத்தின் உட் பிரிவுகளில் இருப்பவரிடைய உள்ள பகை, வஞ்சம், திருவிழா கலாச்சாரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை  நிறைய ஹோம் வொர்க் செய்து திரைக்கதையில்  கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஊரில் எல்லா விஷயத்திலும் தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நஞ்சுன்டான் மாஓசி வம்சத்தை    சேர்ந்த சீனிகண்ணு, தனக்கு போட்டியாய் இருக்கும் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாதவர் வம்சத்தை  சேர்ந்த கிஷோரை வஞ்சகமாக விஷம் வைத்து கொல்ல, இறந்து போன  கணவன் போல தன் மகனும் ரௌடியாக மாறி இறக்க கூடாதென  அஹிம்சையே போதித்து வளர்க்கிறார் அவன் அம்மா.  தன்னை யாரவது வெட்ட வந்தால் கூட ஓடி போய் தன் மாமாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஹீரோ, ஒரு கட்டத்தில்  தன் காதலிக்கு அதே சீனி கண்ணு ரூபத்தில்  பிரச்சனை வரும் போது திரும்பி நின்று எதிராளியின் மூக்கை பெயர்ப்பதும் அதன் பின் நடக்கும் பர பர சம்பவங்களுமே கதை.

இந்த கதை பேரரசு, ஹரி வகையறாக்களிடம் கிடைத்திருந்தால் ஸ்க்ரீன் முழுக்க ரத்த சிதறல்களாக இருந்திருக்கும் ஆனால் பாண்டிராஜ் இந்த கதைக்கு கொடுத்திருக்கும் வித்தியாசமான  ட்ரீட்மென்ட் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முக்கியமாக  செல்போனை மையமாக வைத்து வரும்  காதல் காட்சிகள் எல்லாம் தித்திக்கிற அச்சு வெல்லம். யதார்த்த கிராமத்து எள்ளல்களும், சீண்டல்களும், படம் முழுதும் இழையோடும் நகைச்சுவையும்   முற்பாதியே  டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்ய வைக்கிறது. இரண்டாம் பாதி, கொஞ்சம் நீளமான பிளாஷ் பேக்கும், துரதல்களுமாய் சென்றாலும் ஓகே ரகம்.


ஆறடி உயர  அருள்நிதி ஆரம்பத்தில் தடுமாறினாலும்  கொஞ்ச நேரத்திலேயே சமாளித்து  தன் கேரக்டரோடு கலந்து விடுகிறார். டயலாக் டெலிவரியில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கூடிய விரைவில் உடன்பிறப்புக்களின் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார். கிராமத்து மலராக சுனைனா, குளு குளு குச்சி ஐஸ்.  தன் குறும்புத்தனமான நடிப்பால் அழிச்சாட்டியம் பண்ணுகிறார். போன் இல்லமாலேயே, தூரத்தில் இருக்கும் தனது தோழியே  ஒரு   மாதிரி குரல் கொடுத்து கூப்பிடும் காட்சியில், தியேட்டரே   கைதட்டலால் கிழிகிறது. காதல் காட்சிகளில் சிக்ஸர் அடிக்கும் அவரது முக பாவங்கள் அட்டகாசம்.
வில்லன் என்றால் தொண்டை கிழிய கத்த வேண்டும் என்கின்ற மரபை அடித்து துவைத்துவிட்டு, கண்களாலும், உடல் மொழியிலாலுமே மிரட்டுகிறார் ஜெய ப்ரகாஷ். மனசில் வன்மத்தை வைத்து கொண்டு, வெளியே புன்னகைக்கும் அவரது நடிப்பு வில்லன்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பால பாடம்.

படத்தில் எல்லா கதாபத்திரங்களும் முழுமையாக வடிவமைக்கபட்டுள்ளது. அருள் நிதியின் அம்மா, சுனைனாவின் தோழி, குடும்ப கட்டுப்பாடு ஏஜண்டாக வரும் கஞ்சா கருப்பு, ரௌடி ரத்தினமாக  வரும் கிஷோர் என எல்லோரும் எளிதில் கவர்கிறார்கள்.


மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவில் அம்புட்டு யதார்த்தம். நாமும் அந்த கிராமத்தில் நடந்து, திரிந்து, ஓடுவது போலான உணர்வு. அறிமுக இசையமைப்பாளர் தாஜ்நூர் "மருதாணி பூவ போல" பாடலில் கவனிக்க வைத்தாலும், பின்னணி இசையில் அனுபவமின்மை காரணமாக கோட்டை விட்டிருக்கிறார்.    இசை இன்னும் கொஞ்சம் பக்க பலமாய் இருந்திருந்தால் இந்த படம் மேலும்  உயரம் சென்றிருக்கும்.

ஆர்ப்பாட்டமாய் காட்சி படுத்த வேண்டிய காட்சிகளில் கூட அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம். லோ-பட்ஜெட்.  முற்பாதியில் படம் ரொம்பவுமே அவசர அவசரமாக ஓடுவது  போலான  உணர்வு. எடிட்டிங்கில் கவனித்திருக்கலாம்.

 பசங்க படத்தில் வரும் அத்தனை சிறுவர்களையும், கதாபாத்திரத்தின் பெயர்களை கூட இடைசொருகல் இல்லாமல்  சென்டிமென்டலாக இயக்குனர்  உபயோகபடுத்தியிருக்கிறார்.   துரத்தும் எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க, அவர்களை திசை திருப்பி வாய்காலில் இறங்க வைத்து, பின், வேலி முள் சுருளை தண்ணீரில்  போட்டு இன்னொரு பக்கத்தை மின்சார கம்பியின் மேல்  போட்டு விடுவதாக  ஹீரோ மிரட்டி தப்பிக்கும் இடத்தில் பாண்டிராஜின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது.


மொத்தத்தில், கிளைமாக்ஸ் தவிர்த்து யதார்த்தமான கிராமத்து படம் தந்த விதத்தில் பாண்டிராஜ் எளிதாக ஜெயிக்கிறார்.

பிளஸ் (+)

திரைக்கதை
இயக்கம்
சுனைனா
ஜெயப்ரகாஷ்
படம் முழுதும் வரும் நகைச்சுவை

மைனஸ் (-)


வழக்கமான தமிழ் மசாலா பட கிளைமாக்ஸ்
இசை

VERDICT  : வம்சம் - அம்சம்
 RATING    : 5.0 / 10.0

EXTRA பிட்டுகள் 

கோபு அண்ணன் பற்றி இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். ஊரில் எங்கு என்ன பிரச்சனை நடந்தாலும் அவர்தான் பஞ்சாயத்து தலைவர். எத்தனை பேர் குறுக்கே பேசினாலும், சண்டையிட்டாலும் சாமர்த்தியமாய் சமாளித்து, பேசியே  பிரச்சனைக்கு ஒரு பைசல் பண்ணிவிடுவார்.  நேற்றைய படத்தில் ஒரு காட்சி.. ரௌடியாக வரும் கிஷோரை தாக்குவதற்காக ஒரு கூட்டம் கையில் கம்போடு சுற்றி வளைக்கும். அப்போது கிஷோர் கம்பை கையில் வைத்து கொண்டு, 18 வகை சிலம்பாட்டம் உள்ளதென்றும், அது இன்னதென்றும்  வரிசையாக கூறுவார். அதைகேட்டு கூட்டம் சண்டையிடாமல் தெறித்து ஓடும். அதை பார்த்த எங்கள் குரூப்பில் உள்ள நண்பன் S.R. "டேய், இவன் நம்ம கோபு அண்ணன்டா, பேசியே எல்லாரையும்  துரத்தி விட்டுடாண்டா" என டைமிங்காக போட்டு தாக்க, அதை கேட்டு எங்கள் குரூப் மொத்தமும் கைதட்டி ஆர்ப்பரிக்க, கோபு அண்ணன் முகத்தில் கிலோ கணக்கில் வெட்கம் வந்து முகம் சிவந்து போனது.

Monday, August 16, 2010

பதிவுலகில் நான் - தொடர் பதிவு

நண்பர் வினோவிற்கு என் நன்றிகள் பல.. பதிவுலகில் நான் என்னும் தொடர் ரயில் பெட்டியில் எனக்கும் ஒரு இடம் கொடுத்ததற்காக...   

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

மனோ - A BABY FROM COIMBATORE ( சத்தியமா நான் குழந்தைதாங்க.. என் மனசில் .. என் சேஷ்டைகளில் ) 
 

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

சாந்தாமணி(என் செல்ல அம்மா)  வச்சது மனோகரன். (அம்புட்டு அழகா இருப்பேனாம் சின்ன வயசுல.. இப்ப.... வேண்டாம் விடுங்க பொண்ணுக தொந்தரவு ஜாஸ்தி ஆயிடும்.)

என் மாமா  என்னை ஸ்கூல்ல  சேர்க்கும் போது மனோகர் ஆச்சு. 
அது அப்படியே நண்பர்கள் வட்டத்திலே  சுருங்கி மனோ ஆயிடிச்சு.  


3.
நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

அது ஒரு சரித்திர பிரசித்தி பெற்ற நிகழ்வு. அன்றைய தினம் ஆயிரம் குறிஞ்சி மலர்கள் பூத்து, பெருமழை பெய்து, வானவில் ஒளிர்ந்தது. பயபடாதீங்க.. அப்பிடீன்னு எல்லாம் நான் கதை விட மாட்டேன்    வலையுலகம் ஒரு கடல். எடுத்த எடுப்புல நான் தொபுக்கடிர்னு குதிச்சிடலை. நான் ஒரு புத்தக புழு.... இல்லை இல்லை புத்தக எருமை. என் வாசிப்புக்கு வலையுலகம் நிறைய தீனி போட்டுச்சு.   ஒரு ரெண்டு வருஷம் பதிவுகளை படிக்கிறது மட்டும்தான் என் வேலை. அப்பவே நாமளும் பதிவுலகில் நாம கத்துக்கிட்ட, தெரிஞ்ச விஷயங்களை பத்தி எழுதணும் ன்னு ஆசை. ஒரு சுப யோக சுப தினத்தில்   எனக்கு தெரிஞ்ச விஷயங்களை எனக்கு தெரிஞ்ச நடையில் எழுத  ஆரம்பித்திருக்கிறேன்... இன்னும் நீந்த வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது.


4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

அந்த கொடுமையே ஏங்க கேட்கறீங்க. ஒரு பதிவை போஸ்ட் பண்ணிட்டு.. ஆளே இல்லாத கடையில் டீ ஆற்றுவதை போல யாராவது வந்து படிப்பாங்களான்னு காத்துட்டு இருப்பேன். யாரும் வந்து படிக்கலைன்ன நம்ம பசங்களுக்கு போன் போடுவேன். என்னுடைய ப்ளாக் ன்னு சொல்லாமல்,  முகவரி மட்டும் கொடுத்து, மச்சான் இந்த ப்ளாக் பக்கம் போய் பாரு.. அம்புட்டு அம்சமா இருக்குது ன்னு ஒரு பிட்டை போடுவேன். அவனுகளும் போய் பாத்துட்டு, ஏன்டா உனக்கு வேலை வெட்டி இல்லன்னா, எங்களுக்கும் இல்லைன்னு நினைச்சியா ன்னு காறி துப்புவானுங்க... ஆன இப்ப அவனுங்களே சில சமயம் போன் போட்டு, மச்சான் நல்ல எழுதியிருக்கடா ன்னு சொல்லும் போதும் ரொம்ப சந்தோஷமா இருக்கும். அப்புறம் மற்ற பதிவர்கள் உதவியுடன் தமிலீஷ், தமிழ்மணம் பத்தி கேள்விப்பட்டு அதில் இனைச்சேன்.  வாசிப்பவர்கள் என்னையும் நம்பி கொஞ்சம் கொஞ்சமா இப்ப வர துவங்கியிருக்காங்க.. 


5.
வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?என்னுடைய வாத்தியார் சுஜாதா சார் சொல்வார். "என்னுடைய எழுத்துக்கள் நூறு சதவீத கற்பனையும் இல்லை. நூறு சதம் உண்மையும் இல்லை. நான் பார்த்த, அனுபவித்த விஷயங்களை கொஞ்சம் கற்பனை சேர்த்து அதை சுவாரசியமாக்கி எழுதுகிறேன்" என்று. அது போலதான்.. என் எழுத்தும்..
விளைவுன்னு பார்த்தா.  என் காதலை.. என்னை நேசிப்பவளை பற்றி   நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  அதுக்காக அந்த பொண்ணு வீட்ல இருந்து எப்ப ஆட்டோ வரும்னு தெரியல. 


 
6.
நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா? 

 
பொழுது போக்குன்னு கூட சொல்ல முடியாதுங்க... படிக்கறது, எழுதறது எனக்கு ரொம்ப பிடிச்சமான விஷயம். ஒரு சந்தோஷத்திற்காக, நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளவதை போல நினைத்துதான் எழுதுகிறேன். நம்ம எழுத்தை மத்தவங்க படிக்கறதே பெரிசு.. இதுல சன்மானம் வேறயா... போங்க பாஸ். காமெடி பண்ணிக்கிட்டு..


7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு? 
ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணுங்க..  எனக்கு இங்கிலீஷ்ல எழுதறது பிடிக்காது (தெரியாதுங்கறது வேற விஷயம்) ஆகவே என்றும்.. எப்போதும்...தமிழ் மட்டும்தான். 

 
8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொதுவா எனக்கு கோபப்படறதே பிடிக்காது. பொறமைன்னு பார்த்தா நிறைய எழுத்தாளர்கள் மேல உண்டு. அதுக்கு காரணம் அவங்க எழுத்தை பற்றிய பிரமிப்பு. எனக்கு அதிஷா எழுத்துக்களில்  உள்ள ஈர்ப்பு, கேபிள் சார் எல்லா மொழி சினிமாவை பற்றி அலசுற விதம், ஜாக்கி அண்ணாவோட யதார்த்தமான  பக்கத்துல உட்கார்ந்து பேசறது போலான எழுத்து நடை,  யுவ கிருஷ்ணாவோட சமூக அக்கறை,  ஆதி தாமிராவின் கவிதை தனமான அனுபவங்கள்,  ப்ரியமுடன் வசந்தோட CREATIVITY , புதுசு புதுசா எதையாவது எழுதும் ஜில் தண்ணி, தினம் ஒரு கவிதை எழுதும் பனித்துளி சங்கர்னு நிறய பேர் பொறமை பட வச்சிருக்காங்க.. 

 

9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?


ப்ரியமுடன் வசந்த்.. எங்க வாத்தியார் சுஜாதா பத்தி எழுதியதற்காக அவரிடம் இருந்து வந்த முதல் கமெண்ட் தான் எனக்கு கிடைத்த பாராட்டு.  அப்புறம் ஆரம்பத்தில் இருந்து  தொடர்ந்து என் எழுத்தை வாசித்து கமெண்ட் போடும்  மோகன் குமார், எனக்கு போன் போட்டு பாராட்டிய புது பதிவர் பொன் சிவா,  எல்லோருக்கும் இந்த தருணத்தில் என் நன்றிகள். 


10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் கூறுங்கள்.


முகம் பாராமல்,  குரல் கேட்காமல், எழுத்தை மட்டுமே வாசித்து புது புது நண்பர்களை,  நட்பு உலகத்தை உருவாக்கும் பதிவுலகத்தில் நானும் ஒரு  பதிவர் என்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷமும், பெருமையும்.  வாசிப்பனுபவம் மட்டும் இல்லாது நல்ல நட்புக்கும் வழி வகுக்கும் இந்த கடலில் உங்களோடு நீந்தும் சக நண்பன்தான் நானும். 
எல்லோரையும் நேசிப்போம்.. நட்பு வளர்ப்போம். 


இந்த தொடர் பதிவை தொடர நான் அழைப்பது.. 

நண்பர் மோகன் குமார்
நண்பர் பொன் சிவா 
நண்பர் கலா நேசன் 

Friday, August 13, 2010

மிக எதிர்பார்ப்புக்குரிய 12 திரைப்படங்கள்

சில படங்கள் பூஜை போட்ட உடனேயே .. இந்த படத்தை எப்போது பார்க்க போகிறோம் என்கின்ற பரபரப்பு தொற்றிக்கொள்ளும். படத்தின் இயக்குனர் மீதோ, அதன் டெக்னிக்கல்  டீம் மீதோ அப்படி ஒரு எதிர்பார்ப்பு குவிந்திருக்கும். அப்படி முதல் நாள் பார்த்தே தீர வேண்டும் என்கின்ற ஆவலை தூண்டும் 12 திரைப்படங்கள்.


12. வம்சம் 

இயக்குனர் பாண்டி ராஜ், வெள்ளந்தியான முகம், கிராமத்தான் போல தோற்றம். ஆனாலும்  முதல் படத்திற்கே  (பசங்க) உலக அளவில் பிரபலம் ஆன தங்க யானை விருது பெற்று தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்த்த அற்புதமான படைப்பாளி. பசங்க படத்தில் இவர் காட்டிய குழந்தைகளின் உலகம் அவ்வளவு யதார்த்தமானதும் அழகானதும் கூட.. இவரது இரண்டாவது படமான வம்சம் ட்ரைலரில் வரும்  காட்சிகள்  மற்றும்  தமிழ் மன்னர்கள்  பெயர்கள்.. படம் பற்றிய எதிர்பார்ப்பை ஏகத்துக்கும்  தூண்டுகிறது. இந்த படம் இன்று (13.08.10) வெளியாகிறது. 11 . மங்காத்தா

பர்சனலாய் அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது வெளிப்படையான  பேச்சுக்காகவும், உதவி செய்யும் குணத்துக்காகவும். ஆனால் அவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளை கண்டாலே பற்றிக்கொண்டு வருகிறது. ஏகன்,அசல் படத்தில் எல்லாம் தலை எப்படி தலையே நுழைத்தாரோ என்று அடிக்கடி தோன்றும். ஒரு சரியான இயக்குனர் கிடைக்காமல் திண்டாடி கொண்டு இருந்தவருக்கு வெங்கட் பிரபு வாய்த்திருக்கிறார். வெங்கட் பிரபுவின் ஹியுமர் சென்ஸ் எல்லோரையும் வசீகரிக்கும் விஷயம். பார்க்கலாம் மங்காத்தா எப்படி என்று. கோவா போல, கதை இல்லாமல்  வெங்கட் பிரபு கும்பலாய் கும்மியடித்தால் கோவிந்தாதான்.10 . நகரம் 

ஒரு விநியோகஸ்தராக சினிமா வாழ்கையே ஆரம்பித்து, இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் காட்டும் சசி குமாரை முதன்  முதலில் உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது அவர் இயக்கிய  'சுப்ரமணியபுரம்'. படத்தில் வரும் அந்த நீளமான கிளைமாக்ஸ் ஷாட்டும், "கண்கள் இரண்டால்" பாடல் படமாக்கிய விதமும் இன்னமும் பேசப்படும் விஷயம். 1980 களின் மதுரையையும்,  காதலின் கவிதை சந்தோஷங்களையும், நட்பின் துரோகங்களையும் காட்டியவரின் அடுத்த படைப்பு "நகரம்". இந்த படத்தின் ஹீரோ 65 வயது முதியவர் என்பதே இந்த படத்தின் மீது மொத்த கவனமும் கொள்ள வைக்கிறது. 


9 .பயணம்

எந்த வித ஆர்ப்பாட்டங்களும், ஆடம்பரங்களும் இன்றி மனதை வருடும் மயிலிறகு படைப்புகளை தருவதுதான் இயக்குனர் ராதாமோகனின் ஸ்பெஷல். அழகிய தீயே, மொழி, அபியும் நானும் என இவரின் படங்கள் அனைத்தும் யதார்த்த வாழ்வின் மனிதர்களையும், அவர்களின் சுக துக்கங்களையும்  நகைச்சுவையின் ஊடே நம் கண்களுக்குள் புகுத்தி மனசில் ஒட்ட வைக்கும் ரகங்கள். இவரது எல்லா படங்களும் அன்பை போதிப்பவை.  பயணம் திரைப்படம் இவரின் முந்தைய படங்களிலிருந்து வேறுபட்டு நிற்கும்   ஆக் ஷன் முயற்சி. காத்திருப்போம்.. 8 .மாலை நேரத்து மயக்கம் 

ஆயிரத்தில் ஒருவனில் ஏகப்பட்ட எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து சறுக்கினாலும், இவரின் 7G யும், புது பேட்டையும் ஏற்படுத்திய தாக்கங்கள் பலமான ஒன்று. மனித மனசின் காதலை, கசடுகளை,  அப்படியே காட்சிபடுத்தி தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் ஒரு சிறந்த இயக்குனர். செல்வா இப்போது ஒரு அடிபட்ட புலி. இவரின் அடுத்த பாய்ச்சல் சற்று வேகமாகவும் , உறுதியாகவும் இருக்கும் என நம்பி காத்திருக்கும் அவரது ரசிக கண்மணிகளில் நானும் ஒருவன். 


7. நடு நீசி நாய்கள்

DVD பார்த்து காப்பியடிக்கிறாரோ இல்லை சொந்த சரக்கோ.. ஸ்டைலிஷான மேக்கிங்குக்கு கெளதம் மேனன் அட்டகாசமான சாய்ஸ். இவரின் 'காக்க காக்க ' அதிரடியான அதே சமயம் நம்பும் படியான ரியலிசம் கொண்ட அக்ஷன் அட்வென்சர். இவர் பாடல்களை படமாக்கும் விதமும், தன் கதாபாத்திரங்களுக்கு சுத்தமான தமிழ் பெயர் சூட்டுவதும் அலாதியான விஷயம். இவரின் புதிய படமான  'நடு நீசி நாய்கள்' பாடல்கள் இல்லாத திரில்லர் என்பதே எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏகத்துக்கும் ஏற்றி விட்டுள்ளது. 


6.யுத்தம் செய்  

மிஷ்கின் என்னும் இயக்குனரை பார்த்து நான் மிரண்டது 'அஞ்சாதே' படம் பார்த்து. இவ்வளவு யதார்த்தமாக ஒரு திருடன் போலீஸ் கதையே எடுக்க முடியுமா.. ? ஆரம்ப காட்சியில் இருந்து கிளைமாக்ஸ் வரைக்கும் இயக்குனர் நின்று விளையாடியிருப்பார். நரேன், பிரசன்னா இருவருக்கும் வேறு வேறு தளங்களை கொடுத்த படம். படம் முழுதும் CAT & MOUSE GAME எனினும் சொன்ன விதம் சீட்டின் நுனியில் அமர்ந்து பார்க்க செய்தது . யுத்தம் செய்.. அஞ்சாதே வின் இரண்டாவது பாகம் என்பது படத்தின் மீது கூடுதல் எதிர் பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

5.ஆதி பகவன் 

பருத்தி வீரன் பாதிப்பு இன்னமும் அதை பார்த்த நமக்கும் இருக்கிறது. அதில் நடித்த கார்த்திக்குக்கும் இருக்கிறது (அவரின் மற்ற படங்களில்) அந்த அளவு மதுரை மண்ணில்  படம் பார்த்த நம்மையும் புரட்டிபோட்டு  எடுத்த யதார்த்த காவியத்திற்கு சொந்தக்காரர். இடையே மேக் அப் போட்டு  நடிக்க போய் விட்டாலும், தமிழ் ரசிகன் ஹீரோ அமீரை விட இயக்குனர் அமீரையே மிகவும் விரும்புகிறான் என்பதே நிஜம். இவரின் அடுத்த படைப்பான 'ஆதி பகவன்' ஓட்டு மொத்த தமிழ் சினிமா  இண்டஸ்ட்ரியும் எதிர்பார்க்கும் படைப்பு. 
4 . அவன் இவன் 

இந்த ஆள் நார்மலான ஒரு இயக்குனரா, இல்லை கஞ்சா குடுக்கியா, இல்லை சைக்கோவா என ஆளாளுக்கு ஒரு கருத்து சொன்னாலும்  தமிழ் சினிமாவின் அற்புதமான படைப்பாளிகளில் இவரும் ஒருவர் என்பதை ஒட்டுமொத்த  ஊரும் மறு பேச்சின்றி ஒப்புக்கொள்ளும். இத்தனைக்கும் இவர் இதுவரை இயக்கியது மொத்தமே நான்கே நான்கு படங்கள். அதற்குள் இவ்வளவு உயரம் என்பது பாலாவுக்கு மட்டுமே சாத்தியம். தேசிய விருது பெற்ற இயக்குனரின் அடுத்த படம் 'அவன் இவன்' வேகமாக தயராகிறது என்பது தமிழ் ரசிகனுக்கு சந்தோஷத்தையும், ஆச்சரியத்தையும் ஒரு சேர தரும் செய்தி.3. 7 ம் அறிவு 

ரமணா பட வெற்றி விழாவில், மேடையேறி பரிசு வாங்கிய அந்த இளைஞனை கண்டு எல்லோர்க்கும் ஆச்சரியம். இவ்வளவு சிறு வயது பிள்ளையா இப்படிப்பட்ட படத்தை இயக்கியது என்று. அதுவரை காணாமல் போயிருந்த விஜயகாந்தையும்,  புத்திசாலிதனமான  திரைக்கதையையும், தீ பிடிக்கிற வேகத்தில் செல்லுலாய்டில் செதுக்கிய A .R . முருகதாஸ் இப்போது தமிழில் மட்டுமல்ல பாலிவூட்டிலும்  MOST WANTED இயக்குனர். கஜினியின் மாபெரும் வெற்றிக்கு இவரது மிக பிரெஷான திரைக்கதையும், மேக்கிங்கும் முக்கிய காரணம். அதே டீம் தற்போது தமிழில் 7 ம் அறிவு என தொடங்கிய நாள் முதல் பயங்கர எதிர்பார்ப்பு. ரமணா, கஜினி மேஜிக் இதிலும் இருக்கும் என தாரளமாய் நம்பலாம். 


2 . மன்மதன் அம்பு 

உலக நாயகனின்  அடுத்த அம்பு. கமல் எப்படி நடித்தாலும் ரசிக்கும் கூட்டத்தில் நானும் ஒருவன். இந்தியாவின் ஒப்பற்ற கலைஞன்.  நடிப்போடு மட்டும் அல்லாது அவரின் புத்திசாலிதனமான வசனங்களுக்காகவும்,  ரொமாண்டிக் காட்சிகளுக்காகவும் கொஞ்சம் ஜொள் விட்டபடி   எதிர்பார்த்திருக்கும் படம் மன்மதன் அம்பு. 


1 . எந்திரன் 
எனக்கு ரஜினி பிடிக்கும், ஏன், எதற்கு என்றெல்லாம் தெரியாது. தெரிந்து கொள்ளவும் விருப்பம் இல்லை. முதல் நாள் தியேட்டரில் அத்தனை ரசிகர்களும் ஒரு சேர ஆர்ப்பரித்து, விசிலடித்து ரஜினி வரும் முதல் காட்சியே ரசிப்பதே ஒரு அற்புதமான அனுபவம். முதுகு தண்டை சிலிர்க்க செய்யும் ஒரு  ஆனந்த அனுபவம் அது . எங்கு இருந்து கிடைக்கிறது அத்தனை உற்சாகம், மகிழ்ச்சி.. நிஜத்தில் அது ஒரு திருவிழா..   அந்த எனர்ஜிக்காகவே ரஜினி சாரை கொண்டாடலாம். 

இம்முறை இந்த திருவிழாவில் ரஜினியோடு இந்திய சினிமாவின்  டாப் மோஸ்ட் மனிதர்கள் AR .ரஹ்மான், ஷங்கர், ஐஸ்வர்யா ராய் இணைந்திருப்பதால் கொண்டாட்டத்திற்கு நிச்சயம் குறைவிருக்காது. 

இவை எல்லாவற்றியும் மீறி, இந்த படத்தை எதிர்ப்பார்த்து காத்துக்கொண்டிருப்பது எங்கள் வாத்தியார் சுஜாதா சாருக்காக.. அவரின் கடைசி பங்களிப்பு இந்த படம். அவரின் உற்சாக வசனங்களையும்,  திரைக்கதையில் அவரின்  பங்களிப்பையும் காண காத்து கொண்டிருக்கும் அவரின் கோடி கணக்கான சிஷ்ய பிள்ளைகளில் நானும்  அடக்கம். 

-------------------------------------------------------------------------------------------------------

கொசுரு  :   ஆரண்ய காண்டம், அரவான்,  கோ, பலே பாண்டியா, அழகர் சாமியின் குதிரை என  பார்க்க வேண்டிய படங்கள் எக்ஸ்ட்ரா லிஸ்டில் இருக்கிறது. அது அடுத்த பதிவில். 

கொசுறு :  இம்ம்புட்டு எழுதி இருக்கேன். ஒரு வரியிலாவது கமெண்ட் போட்டுட்டு போங்கப்பு..

Thursday, August 12, 2010

வேலையற்றவன் - படித்ததில் பிடித்தது சுறு சுறுப்பான சாலையில்

புதிய புதிய கார்களில்       

விரைந்து செல்லும்

மனிதர்கள் மேல்

பொறமை படாதே..

ஒருவனுக்கு "பைல்ஸ்"

ஒருவனுக்கு 'ஹார்ட்'

ஒருவனை பொண்டாட்டி ஏமாற்ற

ஒருவனுக்கு பெண் கர்ப்பம்
(ஓட்டல் சர்வரிடம்)

ஒருவனுக்கு டாக்ஸ் பயம்

ஒருவனுக்கு மரண பயம்

ஒருவனுக்கு கேன்சர்

ஒருவனுக்கு ஒரு கிட்னி

ஒருவனுக்கு மூணு படி மூச்சிறைப்பு

ஒருவனுக்கு பேஸ் மேக்கர்

ஒருவனுக்கு வேலை நிரந்தர பயம்.

இவை அனைத்தும் இன்றி
மூக்கை நோண்டிக்கொண்டு

பிளாட்பாரத்தில் பராக்கு
பார்த்துக்கொண்டிருக்கும் நீ
பாக்கியவான் !

              கவிதை : விருத்தம் விஸ்வநாதன் அவர்கள்

Monday, August 9, 2010

பாணா - விமர்சனம்தமிழில் தற்போது நல்ல  கதை களங்களும், காட்சி படுத்துதலில் வித்தியாசத்தையும் கொண்ட படங்கள்   அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 10 வருடங்களுக்கு முன்பான ஸ்டீரியோ டைப் திரைக்கதையுடன்  வந்துள்ள படம் பாணா. 

வட சென்னையில் உள்ள ஒரு  ஏழை  பையன், பணக்கார  ஹை கிளாஸ் பெண்ணை காதலிப்பதும், இடையே ஹீரோவுக்கும் ஒரு நல்ல ரௌடிக்கும் (ரௌடியில் நல்ல ரௌடி, கெட்ட ரவுடி என்ற பாகுபாடு சினிமாவில் மட்டுமே சாத்தியம்)  உள்ள உறவையும், ஒரு கட்டத்தில் அந்த நல்ல ரௌடியே  சூழ்நிலை காரணமாக ஹீரோவை கொலை செய்ய முயலுவதும் கதை. கதையே இல்லாத விஷயத்தை கூட மேக்கிங்கில் மிரட்டி வெற்றியடையும் இந்த கால கட்டத்தில், குழப்பமான அரை குறை காட்சியமைப்புகளும், திரைக்கதையும்  படத்தை பார்வையாளன் மனசில் பதிய தவறிவிட்டது. 

ஒரு சினிமாவிற்கு பாத்திர படைப்பு எந்த அளவு முக்கியம் என்பதை  இயக்குனர் சுத்தமாக மறந்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்தின் முழு இயல்பையும் இயக்குனர் காட்சிபடுத்தவில்லை.  ஹீரோ, பட்டம் விடுவதில் கில்லாடி என்கிறார்கள். இடைவேளை வரை ஹீரோ பட்டத்தின் பின்னால் ஓடுகிறாரே தவிர, ஒரு முறை கூட பட்டம் விட்ட பாடில்லை.  இரண்டாவது  ஹீரோவும், ஹீரோயினும் நண்பர்களாக பழகி கொண்டிருக்க, தீடிரென ஹீரோ காரணமே இன்றி  காதல் வயப்படுகிறார். இருவருக்கும் இடையே உள்ளது நட்பு அல்ல காதல் என்று நம்ம காலேஜ் சீனியர் ஸ்டுடென்ட் முரளி ஒரு காட்சியில் வந்து பிட்டை போட்டு விட்டு போக (அந்த காட்சியில் முரளியை  சரியான காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார்கள்) , ஹீரோ உடனே இது காதல்தான் இன்று காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். இதை விட மச காமெடி, ஹீரோ தன்னை விரும்புகிறான்  என தெரிந்ததும் அதுவரை நட்பு வளர்த்த ஹீரோயினும் உடனடியாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார்.  இதில் கொடுமை என்னவென்றால்  ஹீரோ பள்ளிகூடத்தில் படிக்கிறார், ஹீரோயின் கல்லூரியில் படிக்கிறார். இருவருக்கும் உண்டான வயது வித்தியாசத்தை கிளைமாக்ஸ் நெருங்கும் வரை சொல்ல மறுக்கிறார்கள். ஸ்ஸ்ஸ் ... இப்பவே கண்ணை கட்டுதா.. பொறுங்க..

இது  ஒரு யதார்த்த படமா..லவ் ஸ்டோரியா, இல்லை மசாலா கலவையா என யூகிக்க முடியாத காட்சியமைப்புகளால்  படம் நூல் அறுந்த பட்டம் போல  கண்ணா பின்னா என்று அலை பாய்கிறது. கிளைமாக்சில்  படத்தை எப்படி முடிப்பது என இயக்குனர் பேய் முழி முழித்திருப்பது தெளிவாக விளங்குகிறது. யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் வைக்கிறேன் என படத்திற்கு கொஞ்சமும்  தேவையில்லாத அரை குறை கிளைமாக்ஸ். மிக பெரிய அதிர்வை கொடுத்திருக்க வேண்டியது  ஜஸ்ட் லைக் தட் என கடந்து போகிறது. 

படத்தில் பிளஸ் என சொல்ல வேண்டியது, வசனங்களும் ஒன்றிரண்டு காட்சிகளும். வசனங்கள் மிக யதார்த்தமாக இருப்பது கொஞ்சம் ஆறுதல்.  ஆதர்வாவுக்கு  காதல் வந்ததும், அவன் அம்மா அவனை  திட்டுவது கூட, அவனுக்கு சங்கீதமாக ஒலிப்பது போல கிராபிக்ஸ் செய்திருப்பது அழகு. அதே போல, தன் காதலை ஹீரோயின் ஒரு குறும்படம் போல ஹீரோவுக்கு ஆளில்லாத தியேட்டரில் திரையிட்டு காட்டுவது சிறப்பு. 


ஸ்கூல் பையன் போல தெரிந்தாலும்,  அதர்வா நடிப்பை பொறுத்தவரை பாஸ் மார்க் வாங்குகிறார். விண்ணை தாண்டி வருவாயாவில் ஒரு சிறிய கேப்பில் ஸ்கோர் செய்த சமந்தா இதில் படம் முழுதும் பிரம்மாண்டமான அழகுடன் வளைய வந்து பரவசப்படுத்துகிறார். படத்தின் ஹீரோ கருனாசா என்ன சந்தேகப்படும் படி படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள் கருணாஸை சுற்றியே நகர்கிறது.  காமெடியில்    மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். பிரசன்னா நல்ல ரௌடியாக  ஆர்பாட்டமில்லாமல் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். ஒரு காட்சியில், பட்டம் யாருக்கு சொந்தம் என ஒரு படு பயங்கரமான  பஞ்சாயத்துக்கு இவர் தீர்ப்பு சொல்ல நேர.. அப்போது ஒரு முக பாவம் காட்டுவார் பாருங்கள்.. செம கிளாஸ். 

டெக்னிகல் விஷயங்களை பொறுத்தவரை  யுவனின் இசை, ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு எல்லாமே ஓகே ரகம்.  படத்தின் முதல் சண்டை காட்சியில் இருக்கும் ரியலிசிம் ரசிக்க வைக்கிறது.

பாத்திரபடைப்பில் கவனம் செலுத்தி, திரைகதையில் அழுத்தம் கொடுத்திருந்தால் பாணா காத்தாடி நன்றாக பறந்திருந்திருக்கலாம். 

பிளஸ் (+) 

வசனங்கள் 
கருணாஸ் 
யுவனின்.. தாக்குதே பாடல். 

மைனஸ் (-)

லாஜிக் என்கின்ற வஸ்து 
பழசான கதை, அதை விட அரதபழசான திரைக்கதை. 
அழுத்தம் அற்ற கதா பாத்திரங்கள் 

VERDICT  : AVERAGE
RATING    : 3.4 / 10

 EXTRA பிட்டுகள் 

 தெலுங்கில் சக்கை போடு போட்ட வேதம், தாகம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகியிருந்தது.  முதலில் அந்த படத்திற்கு போகலாம் என்று என் நண்பன் குட்டியானை கூப்பிட, தினசரி கட்டை யோகா செய்யும் அவன், போஸ்டரில் இருந்த A சிம்பலையும், அனுஷ்க்காவின் கவர்ச்சி கோலத்தையும்  பார்த்து வர மாட்டேன் என்று மறுத்து விட்டான். எத்தனையோ சமாதானம் செய்தும், அந்த சாமியார் வர மறுத்ததால் வேறு வழி இன்றி  பாணா படத்தின் போஸ்டர் டிசைன்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியதால் அதற்க்கு போனோம். என்ன சொல்ல.. விதி வலியது. 

Wednesday, August 4, 2010

மின்னல் தருணங்கள்..

 

நாடி பார்த்த
வைத்தியர்
முகத்தில்
குழப்ப ரேகைகள்.....


எப்படி
ஒரு சில
வினாடிகளில் மட்டும்


ரத்த ஓட்டம்
உயர்ந்து
தாழ்ந்ததே
என்று..


பாவம்
அவருக்கு
எப்படி தெரியும்..?


அந்த
குறிப்பிட்ட
சில நொடிகளில்...


உன்
புன்னகை முகத்தை
நான்
நினைவு கூர்ந்து
பார்த்தது...!

----

Sunday, August 1, 2010

எந்திரன் - இசை விமர்சனம்


 1995 ம் வருடம்.  என்னுடைய விடலை பருவம்.  ரஜினி என்றால் ஏதோ சொல்ல தெரியாத ஈர்ப்பு. ஒரு பரவசம். அவரை போலவே, தலை கோதி, நடை பழகி, அவரின் பாடல்களை மனப்பாடம் செய்த  தினங்கள். அதே கால கட்டத்தில் ரஹ்மான் என்னும் புயல் புது புது மெட்டுக்கள், இதற்க்கு முன் கேட்டறியாத இசை கருவிகளின்  வினோத  ஒலிகள், என தனக்கென ஒரு இசை சாம்ராஜியத்தை நிறுவிய நேரம். இந்த இரண்டு தலைகளும் ஒன்று சேர்கிறார்கள் "முத்து" படத்திற்காக. மொத்த தமிழ் நாடும் அந்த பட பாடல்களை கேட்க மிக ஆவலாக இருந்தது. ஏனெனனில்  வழக்கமான ரஜினி பட பாடல்கள் ஒரே மாதிரி TEMPLATE  ஆக இருக்கும். ஆனால் ரஹ்மானின் இசை வேறு வகை. இவர்கள் இருவரும் சேரும் போது அதில் யாருடைய ஆதிக்கம் இருக்கும் என்பது எல்லோருக்குமான சந்தேகம். 

ஆனால், அப்போதைய ரஹ்மான் புத்திசாலித்தனமாக, தனது தனித்தன்மையையும் விட்டு கொடுக்காமல், ரஜினி ரசிகர்களுக்கு பிடித்த மாதிரியும் போட்ட மெட்டுக்கள்  பட்டி தொட்டி எங்கும் தில்லானா  தில்லானா என பட்டையே கிளப்பியது. "குலுவாலிலே" அக்மார்க் ரஹ்மான் ஸ்டைல் ரஜினி பாடல்.  ஆனால் நாளாக நாளாக ரஜினி என்னும் ஒரு மிக பெரிய இமேஜ் வட்டத்திற்குள்  ரஹ்மானின் தனி தன்மை குறைந்து போனதை மறுக்க முடியாது. ரஜினி சார் படத்திற்காக நிறைய காம்ப்ரமைஸ் செய்து கொள்ள வேண்டியதுள்ளது என்று  அவரே குறிப்பிட்டிருக்கிறார். அதனாலோ என்னவோ ரஜினி படங்களில் பாடல்கள் கேட்கும்படி நன்றாகவே இருந்தாலும் ரஹ்மானின் தனித்துவத்தை, ஒரு மேஜிக்கை   நாம் இழப்பது  வாடிக்கையாகி விட்டது.

ஆனால், எந்திரனில் ரஹ்மானின் பங்களிப்பு எப்படி..?  இதற்க்கான விடைதான் கொஞ்சம் சுவாரசியம்.

 "புதிய மனிதா பூமிக்கு வா"  - SPB யின் குரல் அவ்வப்போது சிலிர்ப்பூட்டினாலும் கொஞ்சம் வேகம் குறைவான மெட்டு இதை ரஜினியின் INTRO பாடலாக இருக்காது என்றே எண்ண வைக்கிறது.

விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல் பாடியிருக்கும் "காதல் அணுக்கள்" - ஆல்பத்தில் ரொம்பவுமே பிரெஷ்ஷான  பாடல். மெட்டும் சரி, வரிகளும் சரி கேட்டதும் பிடித்து போகும் ரகம். வைரமுத்து விஞ்ஞானத்தையும், காதலையும் மையில் கலக்கியடித்து கவிதை வடித்திருக்கிறார். என்னுடைய முதல் ஓட்டு இந்த பாடலுக்கே. ரஹ்மானின் ஸ்டைல் பாடலில் தெரிகிறது. 

ரஹ்மானின் குரல் ஒரு காந்தம் போல.. எளிதில் கவர்ந்து  பாடலோடு நம்மை பிணைத்து விடும். ஆனால், 'இரும்பிலே ஒரு இதயம்'  பாடல் எனக்கு சரி ஏமாற்றம்.  வீரியமற்ற மெட்டு கவனத்தை கலைத்தாலும் ரஹ்மானின் குரலால் தப்பிக்கிறது.

"கிளி மஞ்சரோ"  ஜாவித் அலி, சின்மயி குரல்களில் உற்சாகமான இசை சவாரி. பாடல் முழுக்க வித்தியாசமான இசை கோர்வைகள், சரணத்தில் சின்ன சின்ன தித்திப்புகள் என ரஜினி ரசிகர்களின் பிடித்தமான பாடலாக மாறும் தகுதி இதற்குண்டு. என்னுடைய இரண்டாவது ஓட்டு இந்த பாடலுக்கு. இனி இதை அடிக்கடி சூரியன் F .M இல் கேட்கலாம்.நிச்சயம்  இந்த பாட்டு எல்லோரையும் கவர்ந்து விடும்.

"அரிமா அரிமா" பாடலின் தொடக்கம் மிரட்டுகிறது. கம்பீரமான ஆர்கேஸ்ட்ரேஷன் பாடல் மீதான எதிர்பார்ப்பை  தூண்டி உள்ளே இழுக்க,  வைரமுத்து வரிகளுக்கு தகுந்த படி  ஹரிஹரன், சாதனா சர்க்கம்  ஸ்ருதியே ஏற்றி இறக்கி பாடியிருக்கிறார்கள். ஷங்கர் படம் என்பதால் பாடலுக்கு தகுந்த பிரம்மாண்டமான விஷுவலை பார்க்க இப்போதே ஆர்வமாக இருக்கிறது.


"பூம் பூம் ரோபோ டா"   ரஹ்மானின் தரத்திற்கு ரொம்பவுமே சுமாரான பாடல்.  எனக்கு பிடிக்கவில்லை.

"CHITTI DANCE SHOW CASE" - படத்தின் தீம் மியூசிக் போல இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சம் ஸ்லம் டாக் மில்லியனர்  சாயல் வந்தாலும் ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில், இந்த ஆல்பத்தை பற்றி என்ன சொல்வது.,மூன்று பாடல்களில் வெளுத்து வாங்கியிருக்கும் ரஹ்மான் மிச்ச பாடல்களில் இன்னமும்  கொஞ்சம் கவனம் செலுத்தி செதுக்கியிருக்கலாம்.  ஆனாலும் ரஹ்மான் ஸ்டைல் மியூசிக் இந்த ஆல்பத்தில் நிறையவே இருக்கிறது. நிறைய இடங்களில்  அதை ரசிக்க முடிகிறது.

SONGS CAN LISTEN

காதல் அணுக்கள் - விஜய் பிரகாஷ், ஸ்ரேயா கோஷல்
கிளி மஞ்சரோ - ஜாவித் அலி, சின்மயி 
அரிமா அரிமா - ஹரி ஹரன், சாதனா சர்க்கம்.

VERDICT : 3.1 / 5.0

you might like this also...

Related Posts with Thumbnails