Saturday, November 27, 2010

நந்தலாலா.. - விமர்சனம்

 சொல்லப்படாத கதை என்று உலகில் எதுவுமே இல்லை. மிஷ்கின் இதில் சொல்லியிருக்கும் கதை ஏற்கனவே ஏதோ ஒரு மொழியில் சொல்லப்பட்டதாய் இருந்தாலும்.. நம் மொழிக்கும், நம் உணர்வுகளுக்கும் இம்மாதிரி மயிலறகு தடவல்கள்  ஒரு வரம்.   விரும்பி வரவேற்ப்போம் அதை....

நந்தலாலா.... தத்தமது அம்மாக்களை தேடி புறப்படும் இரண்டு குழந்தைகளின் கதை. ஒன்று வயதால் குழந்தை.. இன்னொன்று மனதால். ஒருவருக்கொருவர் எந்த வித ஈர்ப்பும் இன்றி, ஒரு அன்னியதன்மையோடு  பயணப்பட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாய்  அன்பின் வாசல்களுக்குள் நுழைந்து  அதில் கட்டுண்டு உறவாடும் வரை நீளும் அழகிய பயணம். இடையில் அவர்கள்  சந்திக்கும் மனிதர்களுக்குள்ளும் அந்த அன்பை விதைத்துக்கொண்டே செல்ல.... மூகமுடி அணியாத முழு மனிதர்களையும் அவர்களின் ஆழ்மன வெளிப்பாடுகளையும் ஒரு வித பிரம்மிப்போடு காண்கிறோம். 

மேய்ப்பனை பின் தொடர்ந்து செல்லும் ஆடுகள் போல....  கதையின் பின்னாலேயே நாமும் பயணப்பட தொடங்குவதில் ஆரம்பிக்கும்  வெற்றி.. இறுதியில் கண்கலங்கி.. கைதட்டி எழும் வரை தொடர்கிறது.   ஓவ்வொரு காட்சியும் ஒரு கவிதையாய்... ஒரு ஓவியமாய்...நம்மை கடந்து செல்ல... அதனுள் குறியீடாய்  ஒளிந்திருக்கும்  ஜென் தத்துவமும், பரிசுத்தமான அன்பும்...  எழுத்தில் விவரிப்பது கஷ்டம். படம் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு வசனங்கள்  அதிகம் இன்றி வெறும் காட்சிகளாலும் , உயிரை உருக்கும் இசையாலும் கதை சொல்லியிருக்கும் ஆச்சரிய தமிழ் சினிமா இது.

ராஜா சாரின் இசை   படம் முழுதும் சல சல வென ஓடும் நதியாகவும், சில இடங்களில் ஆக்ரோஷ அருவியாகவும்,  சில இடங்களில் அழ் கடல் அமைதியாகவும் இருந்து  ஒரு ஆக்சிஜன் போல படத்தை உயிர்ப்பிக்க வைக்கிறது. எத்தனை நாட்கள் ஆயிற்று... கடைசியாய்  சேதுவில் உணர்ந்தது. அதற்க்கு பிறகு இப்படத்தில் தான். ராஜாவின் கருணை குரலில் ஆரம்பிக்கும் தாலாட்டும்,  யேசுதாசின் "ஒன்னுக்கொன்னு" பாடலில்  வரும் அன்பின் தேடலும் நிச்சயம் கண்ணீர் விட வைக்கும் பொக்கிஷங்கள். 

மிஷ்கின்..... இந்த படத்தில்  ஒரு இயக்குனராக.. ஒரு நடிகராக.. நல்ல படைப்பாளியாக மிளிர்கிறார்.  முக்கால் வீசம் படத்திற்கும் பேண்டை கையில் பிடித்துக்கொண்டே நடப்பதும், ஓடுவதும், சண்டையிடுவதும், கண்விழி பிதுங்கி கீழே விழுந்துவிடுமோ என நாம் பயப்படும்படி விழிகளால்  வித்தை செய்திருப்பதும் எந்த வித ஸ்டார்களும் தளபதிகளும் செய்ய தெரியாத, செய்ய முடியாத அளவிற்கு அற்புதம். அதே போல அவரது குரலும் அட்டகாசம். சிறு வயது ராஜ சாரின் குரல் போலவே இருக்கிறது.

சிறுவன் அஸ்வத், ஸ்னிக்தா.. பன்னிரண்டு நொடிகள் வரும் நாசர், அந்த லாரி டிரைவர், இன்ஸ்பெக்டர், சைக்கிள் சிறுமி,  கலவரத்தின் போது வழிகாட்டும் மாற்று திறனாளி, பைக்கில் வரும் இரண்டு குண்டு மனிதர்கள் என அத்தனை கதாபாத்திரங்களும்  ஒரு தேர்ந்த சிற்பியின் கையால் செதுக்கப்பட்ட சிலை போல அத்தனை அழகு  + கச்சிதம்.


படத்தின் நீளமான ஷாட்களுக்கு தகுந்தபடி வைடு ஆங்கிள் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ட்ராஸ்கி மருது கலை வண்ணத்தில்   படம் நெடுக படர்ந்திருக்கும் அழகியலும் உலக சினிமாக்களின் உயரம் தொடுகிறது. 

மிஷ்கின் தனது ராஜபாட்டையே இந்த படம் மூலம் விஸ்தாரமாக்கியிருக்கிறார்.  கொஞ்சமே என்றாலும் கூர்மையான வசனங்கள்... அதில் மெல்லிசாய் கலந்திருக்கும் நகைச்சுவை, நேர்கோட்டில் செல்லும் தெளிவான  திரைக்கதை என  வலிமையான இயக்குனராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார்.
 
முற்பாதியில் இலவம் பஞ்சாய் நம் மனசை மாற்றி பறக்க வைத்து  விட்டு, படத்தின் இறுதியில் தீடிரென பெரும் பாரத்தை ஏற்றி விட்டு விடுவதை சமாளிப்பது சற்றே சிரமமாக இருந்தாலும் சுகமான சுமையே.

வழக்கமான தமிழ் சினிமா வழக்கப்படி சோகமாக முடிக்காமல் சந்தோஷமாக முடித்ததற்காக மிஷ்கினுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 

நந்தலாலா.. கண்களுக்கும், காதுகளுக்கும் மட்டுமல்ல... மனசுக்கும். 

(+) பிளஸ் 

மொத்த படமும்.

(இசை
திரைக்கதை, 
வசனங்கள்,
கதை மாந்தர்கள்
ஒளிப்பதிவு
கலை 
எடிட்டிங் )

(-) மைனஸ் 

குறை ஒன்றும் இல்லை..


VERDICT : தாலாட்டு
RATING    :7.0 / 10.0

EXTRA பிட்டுகள் :

நான் சென்னை வந்து பார்த்த முதல் படம் இது. எங்கள் ஏரியாவில் (ஈக்காட்டுதாங்கல்) உள்ள காசி தியேட்டரில் அறை நண்பர்கள் நால்வருடன் ஒரு மழை தூறிய இரவில் பெற்ற நல்ல அனுபவம். சென்னையில் தியேட்டர்கள் நன்றாகவே இருக்கிறது...  ஏசியில் கலந்த ஊதுபத்தி மனமும்... கை கோர்த்து படம் பார்த்த தம்பதிகளும்,  படம் முடிந்ததும்  எழுந்து நின்று கை தட்டி ரசித்த நல்ல சினிமா ஆர்வலர்களும் மிக்க சந்தோஷத்தை கொடுத்தார்கள். ஐஸ் கிரீம் தான் காலை வாரி விட்டது.
-

Wednesday, November 17, 2010

ஸ்பரிசம்....

 
தொட்டதும் சிலிர்க்கிறாய்..

நான் சிதறி போகிறேன்..

சிதறிய பாகமெல்லாம் ஓட்ட வைத்து

மீண்டும் உன்னை நெருங்கும் போது

சிரிக்கிறாய் நீ..

பறக்கிறேன் நான்.


-

Friday, November 12, 2010

வ - குவார்ட்டர் கட்டிங் - விமர்சனம்குவார்ட்டர்....   குவார்ட்டர்....  குவார்ட்டர்.... உச்சரிக்கும் போதே உள் நாக்கு இனித்து ஒரு மாதிரி கிளு கிளுப்பாக இருக்கிறதல்லவா... தமிழனுக்கு ரொம்பவே பிடித்த  ஆங்கில வார்த்தை.   இப்படி ஒரு அழகான.. அம்சமான தலைப்பை வைத்துக்கொண்டு புகுந்து விளையாடி இருக்க வேண்டாமா... ? ம்ம்ஹூம்... ஆட்டோவில் கெட்ட ஆட்டம் போட்டவர்கள் குவார்ட்டரில் மட்டையாகி விட்டார்கள்.

முதலில் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்த நீரவ் ஷாவிற்கு ஒரு புல் பக்கார்டி பார்சல். மனுஷன் ரசித்து ருசித்து  செய்திருக்கிறார். அந்த மஞ்சள் கலர் டோனும்,  கேமரா கோணங்களும் ரொம்பவே புதுமை + இனிமை.

விடிந்தால் துபாய் செல்லும் விமானம்.. அங்கு போனாலோ சரக்கடிக்க முடியாது.. ஆசை தீர இங்கு சரக்கடிக்கலாம் என்றால் தேர்தல் நேரம் காரணமாக டாஸ்மாக் அத்தனையும் விடுமுறை.  மனதை சிறிதும் தளர விடாமல் தேடுதல் வேட்டை தொடங்கும் விக்கிரமாதித்தனாக சிவா.. அவர் முதுகில் தொங்கும் வெள்ளை வேதாளமாக  கொழுக் மொளுக் SPB சரண்.  அதிரி புதிரியான லைன் தான். கடைசியில் சிவா குவார்ட்டரை அடித்தாரா இல்லையா என்பதை அவர்கள் சொல்லி முடிப்பதற்க்குள், கடுப்பில்  நாம் ஒரு குவார்ட்டரை அடித்தே ஆக வேண்டும் என்கிற எண்ணம் ஏற்படுவது மட்டும் நிச்சயம்.


சரக்கடிக்க குறைந்த பட்ச தேவையாய் இருக்கும் ஊறுகாய் அளவிற்கு கூட திரைக்கதை இல்லாதது படத்தின் பெரும் பலவீனம். ஒரே இரவில் நடக்கும் கதை. ஆனால் நின்று போன கடிகாரம் போல படம் ஒரே இடத்தில் ஆணி அடித்து  நிற்கிறது. இத்தனை நீளமான இரவை  ஷகிலா படத்தில் கூட பார்த்ததில்லை. 

பாரில் சைடு டிஷ்ஷாக  கொடுக்கும் பாப்கார்ன் போல குட்டி குட்டி கதாபாத்திரங்கள்  படம் முழுதும் ஏராளமாய் உலாவுகின்றன.  யார்.. எதற்கு என்று ஒரு காரண காரியமும் இல்லை. அழுத்தம் அற்ற கதாபாத்திரங்கள் மூலம் தண்ணி போடாமலேயே படம் தள்ளாட்டம் போடுகிறது.

அதே அலட்சிய சிவா.. கோயம்புத்தூர் தமிழில் கபடி ஆடுகிறார். சிரிக்காமல் இவர் அடிக்கும் கமெண்டுகள் சில இடங்களில் சுவாரசியம்.  மாட்டு டாக்டராக வரும் SPB  சரணின் வாய்ஸ் மாடுலேஷன் சிம்ப்ளி சூப்பர்.   ஹீரோயின் என்ற பெயரில் லேகா வாஷிங்டன். பீரில் இருக்கும் ஆல்கஹால் அளவிற்கு கூட படத்தில் இவரின் பங்களிப்பு இல்லை. இவருக்கு பதிலாக இன்ஸ்பெக்டர் சிங்காரி கூட பார்க்கும் போதெல்லாம்  கிக் ஏற்றுகிறார்.


வெறும் வசனங்கள் மூலம் படத்தை நகர்த்தி செல்ல முயன்றிருக்கிறார்கள் புஷ்கர்  காயத்ரி தம்பதியினர்.  ஒரு காட்சியில் வில்லன், சிவா கையே பிடித்து திருக..அதற்க்கு சிவா சொல்லும் டயலாக் படு சூப்பர். ஆனால் காட்சிபடுத்தலில் விஷயம் ஏதும் இல்லாததால்  விடிய விடிய  புல் அடித்தும் மப்பு ஏறாத மனநிலைதான் படம் பார்க்கும் நமக்கு ஏற்படுகிறது.

புஷ்கர் காயத்ரி BETTER LUCK NEXT TIME.

(+) பிளஸ் 

நீரவ் ஷா ஒளிப்பதிவு
வசனங்கள்
வித்தியாசமான கதை சொல்லும் முயற்சி

(-) மைனஸ்

திரைக்கதை
ஒட்டாத கதா பாத்திரங்கள்
மொக்கையான காட்சியமைப்புகள்


VERDICT  :  HANG OVER
RATING    : 3.8/10.0

EXTRA பிட்டுகள் :

பாதி படத்திலேயே நம் மக்கள் கூச்சல் போட ஆரம்பித்து விட்டார்கள். முதல்ல இவனுக்கு ஒரு குவார்ட்டரை வாங்கி கொடுத்து படத்தை முடிங்கடா என்று ஓவர் கூச்சல். 

Sunday, November 7, 2010

மைனா - விமர்சனம்


சினிமா ஒரு ஊடகம். நம் மனதை ஒரு விதமான கனவுலகத்திற்குள் இரண்டரை மணி நேரம் கடத்தி சென்று சிலிர்க்க, சிரிக்க, அழ வைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம். அதில், பருத்தி வீரன், காதல் போன்ற  ஒரு சில படங்கள் நம் வாழ்வியலோடு பின்னி பிணைந்து ஒரு உயிர்ப்போடு இருக்கும்.  மைனாவும்  அந்த வரிசையில் சேர்த்து வைத்து ரசிக்க கூடிய ஒரு அழகான படைப்பு. 

வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுப்பதில் பிரபு சாலமன் ஒரு கைதேர்ந்த  வித்தைக்காரர்.   ஆனால்,  சர்க்கஸ் கயிற்றில் பாதி தூரம் வெற்றிகரமாக நடந்து வந்து  கடைசி தாண்டலில் தலை குப்புற விழுவதை போன்று   அவரது முந்தைய படங்களின் ஆரம்பம்  மிக சிறப்பாக தொடங்கி இரண்டாம் பாதியில் அல்லது  கிளைமாக்சில் சொதப்பியிருப்பார்.  திரைக்கதை என்னும் ஒரு சீசா குச்சியின்  சப்போர்ட் இல்லாமல் கயிற்றின் மேல் நடப்பதால் கிடைக்கும் ரிசல்ட் அது.  மைனாவில் திரைக்கதையின் ஒத்துழைப்பு  நூறு சதவீதம் இருப்பதால்  மனிதரை பதினோரு வருட முயற்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக கரையேற்றி இருக்கிறது.       

நீண்டுயர்ந்த மலைகளும், பச்சை பசேல் காடுகளும் எப்பொழுதுமே நம் மனதை கொள்ளை கொள்பவை.  ஒரு வித ரகசியத்தை, ஒரு தேடலை தன்னுள் ஒளித்து வைத்திருப்பவை. அதன் பின்னணியில் அழகான ஒரு காதல் கதை என்பதால் முதல் ரீலில் இருந்தே நம்மை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது.


சுருளி, படிப்பு வாசனை பிடிக்காமல் சிறு வயது முதலே வேலைக்கு செல்பவன், வறுமையின் காரணமாக  தெருவில் நிர்கதியாய் நின்று  மேற்கொண்டு படிக்க முடியாமல் அழுது கொண்டிருக்கும் மைனாவையும் அவளது அம்மாவையும் அரவணைத்து  காப்பாற்றுகிறான். பால்ய வயது பாசமும் நட்பும், பருவம் வந்ததும் காதலாய் மாற, மைனாவின் அம்மாவோ, தன் மகளுக்கு வசதி கொண்ட வேறொரு சம்பந்தம் தேடுகிறாள். விவரம் அறிந்த சுருளி  கல் எடுத்து மைனாவின் அம்மா தலை மேல் போட முயல, பதினைந்து நாள் காவல்.  இதற்குள், மைனாவிற்கு   திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்க சிறையில் இருந்து தப்புகிறான். தப்பியவன் மைனா வீட்டு வாசலில் வந்து நிற்க, மைனா அவனுடன் இணைந்து கொள்கிறாள். இதனிடையே  தலை தீபாவளி கொண்டாடுவதை  தவிர்த்து இவனை தேடி கிளம்பும்  இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் சிறை காவலர் ராமையா,  இந்த நான்கு கதபாத்திரங்களும்  அவர்களுடைய உணர்வுகளும், ஈரம் படர்ந்த அந்த மலை காட்டிற்குள் மிக நுட்பமாகவும் யதார்தமாகவும்  சொல்லப் பட்டிருக்கிறது. 

சுருளியாக விதார்த், மைனாவாக (சிந்து சமவெளி) அமலா, இருவருக்கும் இடையேயான  அந்த காதல், அந்த மேற்கு தொடர்ச்சி மலைகளை போல பசுமையிலும் பசுமை. மைனா படிப்பதற்காக சுருளி மின்மினி பூச்சிகளை கொண்டு வெளிச்சத்தை உருவாக்க, அந்த வெளிச்சத்தில் இருவரையும் இணைத்து வைக்கும் அந்த முத்தம் தித்திக்கும் பரவசம். 

இன்ஸ்பெக்டர்  பாஸ்கராக புதுமுகம் சேதுவும்,  சிறை காவலர் ராமையாவாக தம்பி  ராமையாவும் போலீஸ்காரர்களின் யதார்த்த குணங்களான, கோபம், வன்மம்,  கடமைக்காக போடும் பொய் வேஷம் போன்றவற்றை    வெகு இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் மீறி மனசாட்சியும், மனித நேயமும் அவர்களிடம் இருந்து  வெளிப்பட வைக்கும் அந்த பஸ் விபத்து காட்சி படத்தின் மிக சிறந்த விஷயங்களில் ஒன்று.

கேமரா கண்கள் மூலமாக நம் கண்களுக்கு குளிர்ச்சியும், குளிரையும் ஊட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவும், குத்து, ரீ மிக்ஸ்  குப்பையில் இருந்து மீண்டு, ரம்மியமான மழையே போன்று படத்தோடு பயணிக்கும் இமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு அனுமார் பலம். 

சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட முக்கியத்துவம்  கொடுத்து கதையே நகர்த்த பயன்படுத்தியிருப்பது, கொஞ்சம் கூட ஆயாசம் கொடுக்காத திரைக்கதை, புற்களில் அமர்ந்திருக்கும்  பனி போல இயல்பாய் படம் நெடுக படர்ந்திருக்கும் நகைச்சுவை, நாடகத்தனம் இல்லாத வசனங்கள் என பிரபு சாலமன் ஒரு முழுமையான இயக்குனராக ஜெயித்திருக்கும் படம் இது. 

குறைந்த பட்ஜெட்டில் அழகாக  நெய்யப்பட்ட சேலை மைனா. குறைகளாக பார்த்தால், தமிழ் சினிமா வழக்கப்படி சோகமாக முடித்தால் படம் ஹிட்டாகும் என்கின்ற பார்முலாவை இதிலும் பயன்படுத்தியிருப்பது, பார்த்து சலித்த ஹீரோ கதாபாத்திரம், சிற்சில இடங்களில் மிகையாய் தெரியும் சில காட்சிகள் என குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் மறக்க வைக்கும் காதல் என்னும் அனுபவத்தை முழுமையாய் உணர வைக்கும் படைப்பு இது.


(+) பிளஸ் 

கதை களன்
யதார்த்தமான கதாபாத்திர தேர்வு
திரைக்கதை
ஒளிப்பதிவு
இசை


(-) மைனஸ்

தேடினால் கிடைக்கலாம். தேட மனம் வரவில்லை.
 

VERDICT : WORTH TO WATCH

RATING    : 5.3 / 10


EXTRA பிட்டுகள்

இந்த படத்தில், கிளைமாக்சிற்கு சிறிது முன் " கையே புடி" என்கின்ற ஒரு அற்புதமான பாடல் வரும். அந்த பாடல் வந்ததும், தியேட்டரில் பாதி கூட்டம் தம் அடிக்க வெளியில் சென்று விட, அப்படி என்னதான் அந்த கருமாந்திர புகையில் இருக்கிறது என வெகு எரிச்சல் வந்தது. ரொம்பவுமே ரம்மியமான பாடல் அது.

ஒரு  வரிசை முழுக்க, தாத்தா முதல் பேத்தி வரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்திற்கு வந்து  சிரிப்பும், உற்சாகமுமாய்  படம் பார்த்ததை  ரசிக்க முடிந்தது.  பண்டிகை நாட்களில் மட்டுமே உறவுகளுடனான இத்தகைய கவிதை சந்தோஷங்கள் வாய்க்கும். 


you might like this also...

Related Posts with Thumbnails