Monday, February 21, 2011

கோப்பையும்... கனவும்..... "நமக்கு ஒரு அடிமை சிக்கீட்டாண்டா..." என்கின்ற கோஷத்துடன் முதல் போட்டியையே ஆர்ப்பாட்டத்துடன் ஆரம்பித்திருக்கிறார்கள் நம் பசங்கள்... வருடம் முழுதும்  பிரியாணி  தின்றாலும், இரண்டு  வருடத்திற்க்கொருமுறை  வன  பத்ரகாளியம்மன்  கோவிலில் பொங்கல் வைத்து கெடா வெட்டி சுட சுட சாப்பிடும் பிரியாணி போல... எத்தனையோ தொடர்கள் நடந்தாலும் உலகக்கோப்பை தனி விசேஷம்... தனி விருந்து... 

1996 ம் வருட உலகக்கோப்பை... இந்தியாவும்... பங்காளி பாகிஸ்தானும்... இரண்டாம் பாதி ஆட்டத்தில்  அன்வரும்... அமீர் ஷோகைலும் மதம் கொண்ட காட்டெருமைகளை  போல...காட்டுத்தனமாய் விளாசி... கடுப்பை கிளப்ப... அதே ரீதியில் அமீர் கடைசி வரை விளையாடியிருந்தால் போட்டியின் முடிவு வேறு மாதிரி  அமைந்திருக்கும்... எவன் ஒருவன் ஆணவத்தில்.. தலை  கனத்தில் ஆட ஆரம்பிக்கிறானோ... அப்போதே அவன் அழிவு ஆரம்பமாகிவிடுகிறது... பச்சை புள்ளை கணக்காய் பந்து வீசிகொண்டிருந்த வெங்கடேஷ் பிரசாந்தை  தேவையில்லாமல் சீண்ட... அடுத்து வீசிய பந்தில்... ஸ்டம்ப் சிதறி  மொத்த இந்தியாவும் உற்சாகத்தில் எகிறியது... என் காதலி என்னிடம் தன்  காதலை சொல்லிய  நிமிடத்தில் கூட நான் அவ்வளவு  சந்தோஷ கூச்சல் போட்டிருப்பேனா  என்பது சந்தேகமே... உடல் சிலிர்க்க அந்த போட்டியே பார்த்துக்கொண்டிருக்கும் போது தீடிரென பவர் கட். உலகமே இருளானது போல ஒரு பீதி.. செல் போன் இல்லாத அந்த காலத்தில் லேன்ட் லைன் போனை கொண்டு ஏதாவதொரு நம்பரை அடித்து  "ஸ்கோர் சொல்லுங்க ப்ளீஸ்" என கெஞ்சியது இன்னமும் நினைவில் இருக்கிறது... இருப்பு கொள்ளாமல் தவித்து.. நண்பர்களுடன் தெரு முக்கு பிள்ளையார் கோவிலுக்கு சென்று... இந்தியா ஜெய்க்கனும்... தேங்காய் உடைக்கிறேன் என வேண்டிக்கொண்டதெல்லாம்    அழிக்க முடியா கல்வெட்டு.


அந்த உலககோப்பையில் இருந்து இதுவரைக்கும்... கோப்பை என்பது கைக்கு எட்டாத ஒரு சரக்காகவே இருக்கிறது... இடையில் ஒரு முறை FINAL   வரை சென்று ஆஸ்திரேலியா அடித்த அடியில் பஞ்சர் ஆகி நாடு திரும்பியது ஒரு கருப்பு சரித்திரம். 


ஒவ்வொருமுறை உலகக்கோப்பை துவங்கும் போதும் ... வழக்கம் போல இந்தியா ஜெய்க்கும்   என்று எதிர்பார்த்தாலும்  மதில் மேல் பூனை போலத்தான்  இருக்கும் நம் அணியின் செயல்பாடுகள். ஒன்று உலக சாதனை படைத்து ஜெயிப்போம்   . இல்லையேல்  படு கேவலமாய் மண்ணை கவ்வுவோம். அனால் இம்முறை... உள்ளுக்குள் எதோ ஒரு பட்சி சொல்கிறது.. கோப்பை நமக்குதான் என்று....அதற்க்கு கரணம்... போட்டிகள் இம்முறை உள்ளூரில் நடப்பது... ரெண்டாவது... கேப்டன் தோனிக்கு நிச்சயம் அவரது மர்ம ஸ்தானத்தில் நாலணா சைஸ்சுக்கு  மச்சம் இருக்க வேண்டும்... அவரது தலைமையில் எக்குத்தப்பாய்  நம் அணி  வெற்றிகள் குவிப்பது... மூன்றாவது.. முன் எப்போதும் இல்லாததை விட  BATTING  படு பயங்கர பலமாய் இருப்பது. இத்தனை   சாதகங்கள் இருந்தாலும் நம் அணியின் பந்து வீச்சு பல்லை இளிக்கிறது. அதில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கனவு நனவாகலாம். . 


இவை எல்லாவற்றையும் விட கிரிக்கெட் பிதாமகன்   சச்சின் விளையாடும் கடைசி உலகக்கோப்பை இது. நம் பசங்கள் இந்த கோப்பையே அடித்து அவருக்கு பரிசளிப்பதுதான் அவரது கிரிக்கெட் வாழ்விற்கு நாம் செய்யும் மிகபெரிய பிரதியுபகாரமாக    இருக்கும். இப்போது இல்லையேல் எப்போதும் இல்லை என்கின்ற  சித்தாந்தத்துடன்  அடித்தால் ஆஸ்திரேலியா என்ன பாகிஸ்தான் என்ன... நாம்தான் தாதா. 

ALL THE BEST MY DEAR INDIA..... 

Thursday, February 17, 2011

யுவனின் அசத்தல் இசை - "பேசு" - இசை விமர்சனம்.F.M. என்றாலே எனக்கு கொஞ்சம் அலர்ஜி. நல்ல இசைக்கு நடுவே தேவையற்ற விளம்பரங்களும், அரட்டைகளும் நிரம்பி வழியும் இடியட்  பாக்ஸ் அது. ஆனால் அதே F.M. யுவனின் அற்புதமான இசையே எனக்கு அறிமுகபடுத்தி வைத்தது... தேங்க்ஸ் FM . 

யதோட்சையாக FM  கேட்க நேர்ந்த போது, "I HAVE A DREAM" என யுவன் உருகிக்கொண்டிருந்தார்.   என்னடா இது...மனுஷன் சொந்த குரலில் இனிமேல் பாடமாட்டேன் என்றாரே...இதுவரை கேட்டறியாத புது பாடலாக இருக்கிறதே என தோண்டி துருவியதில்.. யுவனின் லேட்டஸ்ட் ஆல்பம் "பேசு".
இப்படி ஒரு படம் வரவிருக்கிறது  என்று  இதுவரை எந்த தகவலுமே இல்லை. ஆனால் பாடல்களை தரவிறக்கம் செய்து கேட்டதில் எல்லாமே... அட்டகாசமாக அதுவும் காதல் பாடல்களாக இருக்கிறது. 

முதல் பாடலான " I HAVE A DREAM" ஆல்பத்தின் மோஸ்ட் வாண்டட் சாங். யுவனின் குரலில் காதல் ஐஸ் கிரீம். மெட்டும் அற்புதமாக இருக்கிறது. 

ஆல்பத்தின் அடுத்த காதல் ஐஸ் கிரீம், ராகுல் நம்பியார், ரீட்டா  குரல்களில் "இதயம் பேசுதே" மென்மையான மெலடி... அதிலும் இடையில் வரும் அந்த பெண்ணின் ஹம்மிங் உங்கள் இதயம் கரைத்து அப்படியே உருக்கி விடும். 
கோரிஷ், ராஜலக்ஷ்மி குரல்களில்  வரும் "உந்தன் வார்த்தையில்" பாடல் ஏற்கனவே கேட்டது போல இருந்தாலும் பாடலின் ஆர்கெஸ்ட்ரேஷன் பிரமாதமான ஒன்று. உற்சாகமான இசை கருவிகளை தேர்ந்தேடுப்பதில் யுவன் யுவன்தான். 

"என் பேர் தேவதை" ஹரிசரண்,ரோஷினி குரல்களில் ஆர்ப்பாட்டமில்லாத அழகான டூயட். பாடலின் வரிகள் ரொம்பவும் வசீகரிக்கின்றன. 
  விஜய் யேசுதாஸ், பிரியா  பாடியிருக்கும் "கெட்டிமேளம்" பாடல் கேட்க கேட்க பிடிக்கக்கூடிய ஒன்று. 
ஒரு வெயில் காயும் தினத்தில், தீடிரென பெய்து குளிர்விக்கும் மழை போல.. இந்த ஆல்பம் இசை பிரியர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்  மழை. 
RATING : 2.6 /5.0.
SONGS CAN LISTEN : 
I HAVE A DREAM 
உந்தன் வார்த்தையில்..


Sunday, February 13, 2011

பயணம் - விமர்சனம்


ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு விஷயத்தில் பயம் இருக்கும். என்னுடைய பயம் விமான பயணத்தில். பூமிக்கும் வானுக்கும் எந்த வித சப்போர்ட் இல்லாமல் அந்தரத்தில் இப்படி பறக்கிறதே... விழுந்து கிழுந்து வைத்தால்... ஒன்றுமே மிஞ்சாதே என்கின்ற பயம். அதுவும் ட்வின் டவர் தாக்குதலுக்கு பிறகு... விமான பயணம் பற்றிய என் பயம் பாம்பை கண்ட எலி போல இன்னும் எகிற ஆரம்பித்து விட்டது. இத்தனைக்கும் அதுவரை நான் ஒரு விமான பயணம் கூட மேற்கொண்டதில்லை. கடைசி வரை அப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காமல் போனாலும்  பரவாயில்லை என்கின்ற உயர்ந்த எண்ணம் என்னுள் இருந்தது. நம் ஆசை இப்படி இருந்தால் கடவுளின் ஆசை அதற்க்கு எதிராகத்தானே இருக்கும். ஒரு சுபயோக சுபதினத்தில் வலுகட்டாயமாக என்னை ஒரு விமானபயணம் செய்தே ஆகவேண்டும் என்கின்ற நிலைக்கு ஆளாக்கினார். டெல்லியில் இருந்து கோவை வரை நான் மேற்கொண்ட அந்த சாகச பயணத்தை பற்றி தனி பதிவாக போடுகிறேன். அவ்வளவு பயம் கொண்ட எனக்கு, ராதாமோகனின் இந்த விமான 'பயணம்' ஏகத்துக்கும் உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் கொடுத்து.... நாமும் அந்த விமானத்தில் இருந்திருக்கலாம் என்கின்ற எண்ணத்தையும்  ஏற்படுத்தியது. 

நம் அதிபுத்திசாலிதனத்தை, லாஜிக் பற்றிய நம் ஆழ்கிணறு  தோண்டல்களை தியேட்டர் வாசலிலேயே விட்டு விட்டு ஒரு கிளீன் சீலேட்டாக இந்த படத்தை பார்த்தால்   நிச்சயம் இந்த படம் உங்களை வசீகரிக்கும். ஒரு மனிதனை வாய் விட்டு சிரிக்க வைப்பது அவ்வளவு லேசு பட்ட காரியம் இல்லை...  இவ்வளவு சீரியசான கதையில் அதை செய்துகாட்டியிருப்பதுதான்  ராதாமோகனின் ஸ்பெஷாலிட்டி.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட விமானம், பயணிகளை விடுவிக்க சிறையில் இருக்கும் தீவிரவாத தலைவனை விட சொல்லி  பேரம்... கமாண்டோ ஆபரேஷன் என  ஒன்றரை மணி நேரத்தில் சொல்லிவிட கூடிய ஹாலிவுட் பாணி கதையே இரண்டரை மணி நேரம் சொல்ல வேண்டிய சவால். முக்கால் வாசி படம் விமானத்திற்க்குள் நடப்பது போலான திரைக்கதை. பாடல்களும் கிடையாது. படத்தில் விஜயகாந்தும் இல்லை. பின்பு எப்படி...? இந்த மாதிரி  கதையே இப்படியும் சொல்லலாம் என நிரூபித்த ராதா மோகனுக்கும், அவருக்கு பைனான்ஸ் செய்த பிரகாஷ் ராஜுக்கும் வாழ்த்துக்கள்.     


தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்பார்கள். காமெடி இல்லாமல்  ராதாமோகன் படமே கிடையாது. இந்த படம் மட்டும் அதற்க்கு விதிவிலக்கா என்ன. சீரியஸ் விமான கடத்தல் கதையான இந்த படத்திலும் காமெடி கலந்து பறக்க வைத்திருக்கிறார்.

படத்தின் ஹீரோ நாகார்ஜுனா என்றாலும்,  காமெடி போர்ஷனில் கோல் அடித்து   MEN OF THE FILM விருதை பல பேர் தட்டிச்சென்றிருக்கிறார்கள்.  முக்கியமாக சாம்சும், பிரித்திவி ராஜும் முற்பாதி படத்தை சுமந்திருக்கிறார்கள். இரண்டாம் பாதியில் ஆட்டம் இன்னமும் சூடு பிடிக்கிறது. பிரம்மானந்தம், அசமஞ்சமாக வரும் ரங்கநாதன் கேரக்டர் என கிளைமாக்ஸ் வரை பரபரவென பயணிக்கிறது படம்.

இவ்வளவு நாள், ஹை டெசிபலில் கர்ஜித்து, கடப்பாரையே  தூக்கிக்கொண்டு  வில்லன்களை துரத்திய நாகார்ஜுனாவிற்கு ரொம்பவும் யதார்த்தமான அலட்டல் இல்லாத வேடம்.  கமேண்டோ உடையில் அழகாக பொருந்துகிறார். பாவம், இடை தடவி மழையில் நனைந்தபடி டூயட் பாடத்தான் அவருக்கு ஜோடி இல்லை. என்ன செய்ய... படத்தின் கதை அப்படி.தன் பாத்திரம் உணர்ந்து நடிப்பில் அண்டர் ப்ளே செய்திருக்கிறார் பிரகாஷ் ராஜ், இவரை போலவே பல கேரக்டர்கள் படத்தில் மிளிர்கிறார்கள். முக்கியமாக விமான பணிப்பெண் விமலாவை பற்றி சொல்லாவிட்டால் இரவு போஜனம் தங்காது. பொன் வைக்கின்ற இடத்தில் பூ வைப்பது போல, ஹீரோயின் இல்லாத குறையே முடிந்தவரை போக்கி மன ஆறுதல் தருகிறார். அவரது கண்களும், கால்களும் சிறப்பாக நடித்திருப்பதை அகில உலக ஜொள்ளர்கள் சங்கம் சார்பாக இங்கு குறிப்பிட்டே ஆக வேண்டும்.

நாலு டீஸ்பூன் காமெடிக்கு, ஒரு  டீஸ்பூன் செண்டிமெண்ட், ஒரு  டீஸ்பூன் தேச நலன் என்கிற விகித அளவில் தயாரிக்கப்பட்ட ராதா மோகனின்  திரைகதைக்கு பக்க பலமாக உள்ளது ஞானவேல் அவர்களின் வசனங்கள். விஜி இல்லாத குறையே இவர் போக்கியிருக்கிறார்.  K.V.குகனின் உறுத்தாத  ஒளிப்பதிவும் படத்தின் தரம் உயர உதவியிருக்கிறது.

 இப்போதுதான்,  காலேஜ் அட்மிஷன் வாங்கிய ஸ்டுடன்ட்ஸ் போல இருக்கிறார்கள் விமானத்தை கடத்திய தீவிரவாதிகள். அதே போல... விமானம் கடத்தப்பட்ட  பிறகும் எதோ பிக்னிக் போகும் மூடிலேயே எல்லோரும் இருப்பது ரொம்பவே உறுத்தல். 


முற்பாதியில், STARTING TROUBLE இருந்தாலும், கிளைமாக்சில் எதிர்பார்த்த ட்விஸ்ட்டை இடைவேளையிலேயே  கொடுத்து பரபரப்பாக்கியிருப்பதால், இரண்டாம் பாதி சடாரென  டேக் ஆப் எடுத்து வேகம் பிடிக்கிறது. அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாய் வரும் நகைச்சுவை... பயணத்தை இறுதி வரை ரசிக்க வைக்கிறது.

(+) பிளஸ்
 
காமெடி
வசனங்கள்
திரைக்கதை

(-) மைனஸ் 

தீடிரென முளைக்கும் செண்டிமெண்ட் வஸ்துக்கள்


VERDICT :  பயணம்..... நம்பி போகலாம். 
RATING   :  5.1 / 10.0

EXTRA பிட்டுகள். 

எல்லா தியேட்டரிலும் நடக்கின்ற விஷயம்தான் எனினும், வருத்தத்துடன்  குறிப்பிட்டாக வேண்டியிருக்கிறது. காசி தியேட்டரில், இடைவேளையின்  போது டாய்லட் போகும் வழி நெடுக  புகை விரும்பிகளால் படு பயங்கர புகை மண்டலம். அதற்குள் நுழைந்து   டாய்லட் சென்று திரும்பி வருவதற்குள் மூச்சு முட்டி ஒரு மாதிரி  ஆகி விட்டது.  PASSIVE SMOKING IS VERY BAD THAN ACTIVE SMOKING. புகை பிடிப்பவர்கள் புரிந்து கொண்டு இதை தவிர்க்க முயற்சி செய்யலாமே... இதை புகை பிடிக்கதவர்களுக்காக மட்டும்  சொல்லவில்லை.  அந்த ஒரு சிகரெட்டை அந்த இடத்தில் தவிர்ப்பதன் மூலம் உங்கள் ஆயுளும்  இரண்டொரு நிமிடங்கள் கூடலாம்.  

 

Sunday, February 6, 2011

யுத்தம் செய் - விமர்சனம்காட்சி அனுபவத்திற்கும், வாசிப்பு அனுபவத்திற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. காட்சி அனுபவத்தை விட வாசிப்பு அனுபவம் விசாலமானது... எல்லைகள் அற்ற கற்பனை உலகில் வாசகன் மிக எளிதாக பறக்க முடியும்.ஆனால் இங்கு,   மிஷ்கின் ஒரு சுவாரசியமான நாவல்  வாசிக்கும் அனுபவத்தை காட்சி ரீதியாக கொடுத்திருக்கிறார். FANTASTIC . 

 தமிழ் சினிமா, ஏகப்பட்ட  கிரைம்  த்ரில்லர் வகையறாக்களை கொடுத்திருந்தாலும், இந்த அனுபவம் கொஞ்சம் புதிதானது... மிக மெதுவாய் தொடங்கி... கொஞ்சம் கொஞ்சமாய் ஆர்வத்தை தூண்டி... இறுதியில் நம்மையும் வெறித்தனமாய் தேடவைக்கும் வேட்டைதான் யுத்தம் செய்.

போலீஸ்காரர்களை பற்றி எத்தனையோ  விமர்சனங்கள் இருந்தாலும், அனுதினமும் இறந்த உடல்கள் முகத்தில் முழித்து, அதன் பிரச்சனைகளோடு  குடும்பம் நடத்தும் அவர்கள் வாழ்வும் சில சமயங்களில் பரிதாபத்திற்க்குரிய  ஒன்றே....   நகரில் தொடர்ச்சியாக... வெட்டப்பட்ட கைகள் அடங்கிய பார்சல் பெட்டி முக்கியமான இடங்களை அலங்கரிக்க... வெட்டப்பட்டவர்களையும்... வெட்டியவர்களையும் தேடும் பொறுப்பு CB CID  சேரன் வசம்.. தன் தங்கை ஒரு மழை நாளில் காணாமல் போக.. அவளை கண்டறிய முடியாமல் தவித்துக்கொண்டிருக்கும் சேரனுக்கு... இந்த கேஸ் ஒரு சுமைதான் என்றாலும்... தன் தங்கை தொலைந்துபோனதற்கும்  இந்த வழக்கிற்கும் சம்மந்தம் இருப்பதை அறிந்தவுடன்... பரபரப்பாவது.... சேரன் மட்டுமல்ல... நாமும்தான். குற்றவாளிகளை தேடி.. சிலந்தி வலை போல... மெல்லிய பின்னல்கள் இணைய தொடங்க ...  இறுதியில் குற்றங்களின் வேர்  வேறொரு அதிர்ச்சியூட்டும் பின்னணியில் முடிகிறது. 

ரொம்பவும்  யதார்த்தமான போலீஸ் ஸ்டேஷன் காட்சிகள்... விசாரணை துருவல்கள்.....  அரசு இயந்திரங்களின் ஆதார நடவடிக்கைகள்,  தடயங்களை கண்டறியும் போலீஸ் மூளை, என ரொம்பவும் பிரெஷ்ஷான காட்சிகள், காண்பது சினிமா அல்ல நிஜம் என நம்பும் அளவிற்கு ஒரு பிம்பத்தை  கொடுத்திருப்பது இந்த படத்தின் பலம். முக்கியமாக பிணவறை காட்சிகளில்  உள்ள டீடெய்லிங் பிரமிப்பு. 

சேரனின் அழுமூஞ்சி . தங்கையே தொலைத்த போலீஸ்காரன் கேரக்டருக்கு  நன்றாக பொருந்துகிறது. அலட்டல் இல்லாத,   குற்றவாளிகளை தேடும்  அவரது பயணம் ரொம்பவும் இம்ப்ப்ரசிவ். இதற்க்கான கிரெடிட் நிச்சயம் இயக்குனர்க்குதான்.  


சேரனை விட... எதிர்பார்க்காத மிக அழுத்தமான கேரக்டர், அழகான பொம்மை அம்மாவாக மற்ற படங்களில் வளைய வரும் லட்சுமிக்குதான். நிச்சயம் இந்தப்படம் அவருக்கு வேறொரு அடையாளத்தை கொடுத்திருக்கிறது. பல இடங்களில்... முக பாவங்களில் வெளுத்து கட்டியிருக்கிறார்.

படம் வருவதற்கு முன்பாக.. MEMORIES OF MURDER கதையே  உருவியிருக்கிறார் என கதை விட்டவர்களுக்கு எல்லாம் அழுத்தமான கொட்டு கொடுத்து மேக்கிங்கில் மிரட்டியிருக்கிறார் மிஷ்கின். அவரது வழக்கமான லென்தி ஷாட்டுகள்.. மஞ்சள் சேலை குத்துபாட்டு, குறைவான வசனங்கள், அலைபாயும் கால்கள் என  ரீபிட் ஆனாலும்   ரசிக்க வைக்கிற அவரின் திரைக்கதை சாமர்த்தியத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. முக்கியமாக இடைவேளைக்கு முன்பான அந்த சண்டை காட்சி... மிக மிக நுணுக்கமாக... யதார்த்தம் மீறாமல்.... கவிதை படுத்தியிருக்கிறார். அதுவரை,  தியேட்டரில்   சேரனை நக்கல் விட்டவர்கள் கூட  கைதட்டி விசிலடிக்கிறார்கள்.  அதே போல.. ஒரு போலீஸ் காரரே தர்பூசணி பழம் திருடும் அந்த காட்சி.. நிச்சயம் டைரக்டர் டச். 

இசையும், ஒளிப்பதிவும் ஒரு படத்திற்கு எவ்வளவு முக்கியம் என்பதற்கு இந்த படம் ஒரு சிறந்த ஆவணம். டைட்டிலில் இருவரது பெயரும் போடாமலேயே... படம் முழுதும் அவர்களை பற்றி நினைக்க  வைத்திருப்பதில் இருவரின் திறமை பளிச்சிடுகிறது. 

மிக சிறந்த பின்னணிஇசை... படத்தோடு நம்மை ஒன்றவைப்பதில்  வெற்றி கண்டிருக்கிறது. குறிப்பாய்... வெட்டப்பட்ட கைகள் அடங்கிய பெட்டிகளை காட்டும் போது தடால் புடால் என அதிரவைக்காமல்..... சோகமான வயலின்களை  இசைக்க வைத்திருப்பது சூப்பர்.  இசையமைப்பாளர் 'கே' விற்கு ஸ்பெஷல் வாழ்த்துக்கள். 

நேர் வகிடு எடுத்து சீவிய முற்பாதி திரைக்கதை, பிற்பாதியில் கச முசாவென கலைந்து போவது ஏமாற்றம். இடைவேளைக்கு பிறகு வருகிற காட்சிகள் அனைத்தையும் யூகிக்க முடிவதால், பிரிட்ஜ்க்குள் வைத்து பாதுகாத்த முற்பாதி த்ரில்லிங்... பிரிட்ஜில் இருந்து  வெளியே  எடுத்த பனிக்கட்டி போல பிற்பாதியில் உருகி விடுகிறது. 

படம் பார்க்காதவர்கள்.... படம் பார்க்க விரும்புபவர்கள் .. இந்த பத்தியே தவிர்ப்பது நலம். எப்போதும் யதார்த்ததோடு கதை செய்யும் மிஷ்கின் இதில்  கொஞ்சம் ஜெர்க் அடித்திருக்கிறார். சேரனின் தங்கையே...கடைசி வரை வில்லன் குரூப் சாப்பாடு போட்டு பாதுகாப்பது எதற்கு என தெரியவில்லை. அதே போல... கொலையாளி யார் என தெரியாதவரை இருந்த ஒரு பிரமிப்பு... கொலையாளிகளை பற்றி தெரிந்தவுடன்...  சைக்கிளில்  இருந்து பிடுங்கிவிடப்பட்ட காற்று போல புஸ்சென  இறங்கி விடுகிறது. அதற்க்கு காரணம் நல்லவர்கள்... எப்போதும் நல்லவர்களாகவே இருப்பார்கள்..   குறிப்பாக பெண்கள் ரொம்பவும் மூர்க்கதனமாக இறங்க மாட்டார்கள் என  நம் எண்ணங்கள் ஆதி காலம் தொட்டே  நம் கலாச்சார உணர்வில் இருப்பது கூட காரணமாக இருக்கலாம். அதனால் இந்தபடத்தின் கிளைமாக்ஸ் அஞ்சாதே அளவிற்கு நம் மனதில் நிற்க்காதது வருத்தமே... 

இறுதி தருணங்களில் சிற்சில குறைகள் இருந்தாலும்... கதை சொன்ன விதத்திலும்... அதை காட்சிபடுத்திய விதத்திலும் நிச்சயம் மிஷ்கின் வெற்றி பெற்றிருக்கிறார்.    
(+) பிளஸ் 

திரைக்கதை
மேக்கிங்
வசனங்கள்
பின்னணி இசை.
ஒளிப்பதிவு
முற்பாதி.

(-) மைனஸ்

யூகிக்க முடிகின்ற இரண்டாம் பாதி.
கொஞ்சம் சினிமாத்தனமான  கிளைமாக்ஸ்.
தேவையற்ற குத்து பாட்டு.

VERDICT : WELL MADE THRILLER IN MISHKIN STYLE
RATING  : 5.4 / 10.0


EXTRA பிட்டுகள் 
 இம்முறை படம் பார்த்தது.. பழைய தமிழ் படங்களில் எல்லாம் அடிக்கடி காட்டுவார்களே   உதயம் தியேட்டர்... அங்கேதான். உள்ளே செல்லும் வரை ரொம்பவும் எதிர்பார்ப்புடன் சென்றேன். சந்திரன் தியேட்டர்   உள் நுழைந்ததுமே கொஞ்சம் ஏமாற்றமாக போனது... இவ்வளவு சின்ன ஸ்க்ரீனை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இருக்கை வசதிகள் நன்றாக இருந்தது. முற்பாதி வரை என் அருகில் அமர்ந்து படம் பார்த்த நபர்..பழகிய நண்பரை போல நன்கு அளவாடிக்கொண்டிருந்தார்.  இடைவேளை முடிந்ததும் ஆரம்பித்தது வினை. எதோ வாயில் போட்டு மென்று தன் காலுக்கு கீழேயே  'புளிச்' என துப்பியதும்... எதற்கு இங்கு இப்படி துப்புகிறீர்கள் என கோபத்தில் நான் எகிற.. பின் அவர் எகிற... சனிகிழமை... அதுதான். 

Wednesday, February 2, 2011

சென்னை விமான நிலையமும்.... சில மனிதர்களும்...ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங். சந்தானம் அனுபவித்து சொன்னாரோ இல்லையோ... ரொம்பவும் நிஜமான வார்த்தைகள்... நண்பனின் அண்ணனை வழி அனுப்பி வைப்பதற்காக விமான நிலையம் வரை சென்று வர வேண்டியதாய் இருந்தது.  அப்போது அங்கு பராக்கு பார்த்து கொண்டிருந்தபோது சுற்றிலும் நிகழ்ந்த சிற் சில விஷயங்களில் என்னை ஈர்த்தவை. 

மனித உணர்வு மிக நுட்பமானது... பிரிவின் தருணங்களில்... அதுவும் மனதுக்கு பிடித்தவர் தன்னை விட்டு வெகுதூரம் செல்லும் பொழுதுகளில் அது கொடுக்கும் வலியும் அதன் பின்னான தனிமையின் நிழலும் மிகுந்த துயரம் நிறைந்தது... பொது இடங்களின் நாகரீகம் கருதி அதனை மனதினுள் அடக்கி வைக்கும் போது அதன் வலி இரு மடங்காகிறது...  கழுத்தில் உள்ள தாலி இன்னமுமே  மஞ்சள் காயாமல் புதிதாய் இருக்கிறது... புது சேலை.. புது நகைகள்... அந்த பெண்ணும் புதிதாய்  பிறந்தவள் போல... கடைசி மாதங்களில் அல்லது கடைசி வாரங்களில் அவள் புதிதாய் பெற்ற உறவும்.. புது அன்பின்... புது காதலின்..மிக புதிதான ஒரு அன்யோநியத்தை இவ்வளவு சீக்கிரம் இழக்க போகிறோம் என்கின்ற பரிதவிப்பு அந்த பெண்ணின்  விழிகளில் அப்பட்டமாய் வெளிப்பட... அவள் கணவன் எல்லோரிடமும் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு,  மீண்டும் பணியில் சேர  விமானம் ஏற தயாராகிறான். தன் மாமனார், மாமியார், புது குடும்ப உறவுகள் சுற்றிலும் இருக்க  ஏதும் செய்ய இயலாமல்  தன் புது கணவன் விமானம் ஏறுவதை பொம்மை பிடுங்கப்பட்ட ஒரு குழந்தையின் முகபாவத்தோடு அவள் பார்க்க... விழிகளால் அவளிடம் போய் வருகிறேன் என சொல்லிவிட்டு அவன் நடக்க துவங்க.. பொங்கி வரும் கண்ணீரை அடக்குவதற்காக தன் கழுத்து செயினை தன் பற்களால் கடித்துக்கொண்டு..... யதோச்சையாய் திரும்பி பார்த்த தன் கணவனிடம் சைகையால் போன் செய்ய சொல்லி தலையசைத்த அந்த பெண்ணின் காதலும் பாசமும்  ரொம்பவுமே புனிதம். 

பணி நிமித்தம் காரணமாக தன் ரத்த  சொந்தங்களை... நட்புகளை விட்டு ஏதோ ஒரு  கிராமத்தில் இருந்து  துபாய் செல்ல அந்த பையன் காத்திருக்க.. அவனை வழி அனுப்பி வைக்க வந்திருந்த அவனது கிராமத்து நண்பர்கள் அங்கிருந்த பேக்கரியில் டீ சாப்பிட்டு கொண்டே அரட்டையடிக்கும் பொது வெளிப்பட்ட நட்பின் வருடல்கள் அவன் எந்த தேசத்தில் எந்த சூழ்நிலையில் வசித்தாலும் மறக்கமுடியாத மயிலிறகு தடவல்கள். ஒரு சூழ்நிலையில் கிராமத்து நண்பன் ஒரு பாக்கெட் பிஸ்கட் கேட்டு பணம் கொடுக்க.. கடைக்காரன் பத்து ரூபாய் பிஸ்கட்டுக்கு பதினாறு ரூபாய்  வசூல் செய்ய.. (இப்படி ஒரு கொடுமை ஏர் போர்ட்டில் நடக்கிறது... ஒரு பொருளுக்கு இருமடங்கு விலை  அதிகம்... விமானத்தில் போவோருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது...MRP ரேட்டை விட அதிகம் விலை வைத்து விற்பதற்கு யார் அனுமதித்தார்கள்.. ஏர்போர்ட் வளாகத்தில் லட்சகணக்கான ரூபாய் லஞ்சம்  கொடுத்து காண்ட்ராக்ட் எடுத்து அந்த தொகையே ஈடு செய்ய நாம் வாங்கும் பத்து ரூபாயில் பொருளில் அநியாய கொள்ளை அடிக்கும் விற்பனையாளர்  மீது தவறா.. இல்லை லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீதா... எப்போதும் பாதிக்கபடுவது பரிதாபத்திற்குரிய  பொது ஜனம்தான்).மொத்த கிராமத்து நண்பர்களும்  கடைக்காரனோடு  மல்லுக்கட்ட... நிகழ்ந்த களேபரத்தில்.. கொஞ்சம் அப்பாவித்தனமும்... கொஞ்சம்  ஆவேசமும்...நிறைய நியாயமும்  வெளிப்பட்டது..

பாலகுமாரன் சார் தனது பயணிகள் கவனிக்க நாவலில் ஒரு விமானநிலைய நடவடிக்கைகளை அவ்வளவு அழகாக சொல்லியிருப்பார்...  அந்த நாவலின் அடிநாதம் நான் பார்த்த நிறைய மனிதர்களிடத்தில் இருந்தது. தன் மனைவி இறந்த விஷயம் கேள்விபட்டு அவசர அவசரமாக அழுதபடி வெளிவந்த கோட் சூட்  அணிந்த  பிசினஸ் மேன் முகத்தில்... வாயில் நுழைய முடியா ஒரு சீன பெயரை.. அட்டையில் எழுதி வைத்தபடி.... போவோர் வருவோர் முகத்தை எல்லாம் ஏக்கமாய் பார்த்தபடி காத்திருக்கும் ட்ரேவல்ஸ்  டிரைவர் முகத்தில்... தன் காதலிக்காக ரோஜா   பொக்கேவோடு  காத்துகொண்டிருந்த தாடி வைத்த அந்த காதலன் முகத்தில்...  முதன் முறை விமானம் பார்க்கும் குழந்தையின் பரவச முகத்தில்...  நிஜம்தான்... ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு பீலிங்....  

you might like this also...

Related Posts with Thumbnails