Saturday, May 29, 2010

சிங்கம் - விமர்சனம்


நீங்கள் முனியாண்டி விலாசுக்கு போனால் கொத்து பரோட்டாவும், கோழி குருமாவும் தான் கிடைக்கும். தெரிந்தே சென்று விட்டு அங்கு வெண் பொங்கல் இல்லை, பட்டர் ரோஸ்ட் இல்லை என்று சொல்வதில் எந்த  பிரயோஜனமும்  இல்லை. ஹரி படங்களில்  நான் லீனியர் திரைக்கதை  உத்தியயியோ  வித்தியாசமான கதாபாத்திரங்களையோ   நீங்கள் எதிர்பார்ப்பதும் அப்படியே. அவரது எல்லா படங்களில் இருக்கும் மசாலா கலவைதான் இதிலும்.   

வழக்கமான திருடன் போலீஸ் கதைதான். ஆனால் வேகமான திரைக்கதை மூலம் 2 1/2 மணி நேரத்தை அனாயசியமாக கடக்க வைத்திருக்கிறார் ஹரி. 

சொந்த ஊரில் போஸ்டிங் வாங்கிகொண்டு, ஊர் மக்களின் அன்போடு  சப் - இன்ஸ்பெக்டராக  இருக்கும் சூர்யா, சென்னையில் தாதாவாக இருக்கும் பிரகாஷ் ராஜ்,  இருவரையும் விதி ஒரு கண்டிஷன் பெயில்  கையெழுத்து பிரச்சனையில்  இணைத்து வைக்க, சொந்த ஊரில் அவர் மீது கை வைக்க முடியாது என தனது செல்வாக்கால் சென்னைக்கு இன்ஸ்பெக்டராக மாற்றல் செய்ய வைக்கிறார் பிரகாஷ். சென்னையில் பிரகாஷ் கோஷ்டி கொடுக்கும் குடைச்சலை சமாளித்து எப்படி வில்லனை வேரருக்கிறார் என்பதை மணக்க மணக்க மசாலா பொறியலில் பரிமாறியிருக்கிறார் ஹரி. 

காலில் சுடு நீரை கொட்டியது போல பரபரவென பறக்கிறது படம். திரைக்கதையுடன், ஒளிப்பதிவும், எடிட்டிங்கும் இதற்க்கு பெரும் உதவி செய்திருக்கிறது. வெகு ஜன ரசிகனின் சுவை அறிந்து விருந்து கொடுத்தமைக்கு ஹரிக்கு ஒரு சபாஷ்.

இது விஜய்க்காக செய்யப்பட்ட கதையாம். ஒரு வேளை விஜய் நடித்திருந்தால் அவர் கொடுக்க நினைத்திருக்கும்  உழைப்பை விட மிக அதிகமாகவே உழைத்திருக்கிறார் சூர்யா. மிடுக்கான போலீஸ் நடையும், எக்ஸ்செர்சைஸ் பாடியும், அப்பாத்திரத்தோடு இயல்பாக பொருந்துகின்றன. ஆனால் கண்கள் சிவக்க, பக்கம் பக்கமாக  வாய் வலிக்க வசனம் பேசுவதை குழந்தைகள் கூட  " இந்த மாமாவுக்கு என்ன ஆச்சு என"  மிரட்சியோடு பார்க்கின்றன.
அட்டகாசமான பில்ட் அப்புடன் அறிமுகம் ஆகும் பிரகாஷ் ராஜ், போக போக ஸ்ருதி குறைத்து கிளைமாக்ஸ் வரும் வரை  அடக்கி வாசிக்கிறார். ஆனாலும் கிடைக்கும் கேப்புகளில் தான் ஒரு தேசிய விருது பெற்ற நடிகன் என்பதை அலட்டலின்றி நிரூபிக்கிறார். 


காரமான பிரியாணியின் மேல் ஒரு  செர்ரி பழம் போல அனுஷ்கா. வழக்கம் போல ஹீரோவின் நல்ல மனசையும், வீரத்தையும் பார்த்து காதலிக்கும் வேலை மட்டுமே. அம்மணியின் உடை வடிவமைப்பாளர் எங்கிருந்தாலும் வாழ்க. "என் இதயம் " பாடலில் இவர் வரும் ஒரு காஸ்ட்யுமுக்கு மொத்த தியேட்டரும் பெரு மூச்சு விட்டு  அத்தனை ஏசியிலும் வியர்த்தது. 

இரட்டை அர்த்த வசனம் இன்றி இனிமேல் விவேக்கால் காமெடியே செய்ய முடியாதா? காமெடி என்ற பெயரில் இவர் செய்வதெல்லாம் கடி. புது புது அர்த்தங்கள் விவேக்  இன்னமும் மனசில் நிற்கிறார். புரிந்து செய்தால் அவர் வருங்காலத்துக்கு  நல்லது.

தேவி ஸ்ரீ பிரசாத் பாடல்களில் கவர்ந்தாலும், பின்னணி இசையில் ஒட்ட மறுக்கிறார். வடிவேலு பாணியில் சொல்வதானால்   "இன்னமும் பயிற்சி தேவை"
படத்தின் குறைகளாக சொல்வதானால், மித மிஞ்சிய ஹீரோயிசமும், ஏற்கனவே பார்த்த படங்களை ஞாபகபடுத்தும் காட்சிகளும். இருப்பினும் வேகமான திரைக்கதை அதை மறக்கடித்து விடுகிறது. 

(+) பிளஸ்
விறுவிறுப்பான திரைகதை 
சூர்யா
அனுஷ்கா ( ஹீ.. ஹீ..)
பாடல்கள். 

(-) மைனஸ் 
பின்னணி இசை.
ஓவர் ஹீரோயிச சண்டைகள் 
விவேக் (சில இடங்களில்)
வழக்கமான டெம்ப்ளேட் காட்சிகள்

VERDICT : சிங்கம், 2 1/2 மணி நேர டைம் பாசிற்கு உத்தரவாதம்.
RATING    : 4.5 / 10

EXTRA பிட்டுகள்

நேற்றைய இரவு காட்சியில், நிறைய பெண்கள் மற்றும் குழந்தைகள் கூட்டம். நீண்ட நாட்களுக்கு பிறகு குடும்பத்துடன் தியேட்டருக்கு  வந்து படம் பார்ப்பவர் எண்ணிக்கை அதிகமாக இருந்ததற்கு சூர்யா காரணமாக இருக்கலாம். மகிழ்ச்சி. 

NOTE : உங்கள் கமெண்ட்டுகள் என்னை செதுக்கிக்கொள்ள உதவும்.

Tuesday, May 25, 2010

நொறுக்கு தீனி - 2

 S.S.L.C தேர்வு முடிவுகள் நாளை வெளியாகின்றன... வழக்கம் போல பெண் பிள்ளைகள் தான் அதிக அளவில் தேர்ச்சி பெறுவார்கள் என்றாலும் நம்ம பசங்களும் சரி நிகராக வருவார்கள் என நம்புவோமாக.. ஆண் பிள்ளைகளுக்கு படிப்பதை தவிர நிறைய கடமைகள்  உண்டு. கிரிக்கெட், நண்பர்கள் வட்டம், சினிமா, என்று  பல பொறுப்புகள் இருக்கிறது.  இதை எல்லாவற்றையும் சமாளித்துக்கொண்டே பசங்க  படிப்பதை நாம் பாராட்ட வேண்டும். அதை விட்டு விட்டு பெண் பிள்ளைகள் படிப்பதோடு ஒப்பிட கூடாது...அவர்கள் படிக்கும் முறையே வேறு.   இரு பாலருக்குமே என் வாழ்த்துக்கள். தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்வதில் இருக்கும் த்ரில்லும், பயமும் எப்போதுமே ஒரு  சுகமான  அனுபவம்தான். இப்போது போல இன்டர்நெட் சமாச்சாரங்கள் அப்போது இல்லை. இப்போது  நம்பரை டைப்பி ENTER கொடுத்தவுடன் மொத்த ஜாதகமும் வந்து விடுகிறது. நான் பத்தாவது படிக்கும் போது, நியூஸ் பேப்பரில்  எண்களை துழாவி, நம் நம்பரை கண்டதும் வரும் ஒரு உற்சாகம் சொல்லில் அடங்காதது. அதே போல மதிப்பெண் வாங்குவதற்கு பெற்றோருடன் வரிசையில்  நிற்கும் போது ஒரு பயம்  வந்து வயிற்றை கலக்குமே... அப்பப்பா..  வகுப்பு ஆசிரியர் ஓவ்வொரு மாணவனையும் ஓரக்கண்னால் பார்த்துக்கொண்டே  மதிப்பெண் சான்றிதழை கொடுப்பதும், அந்த கடைசி தருணம் வரை மதிப்பெண் தெரியாமல் மனசு தடுமாறுவதும்.. அது வேறு  மாதிரியான அனுபவம். 

--------------------------------------

பட்டா பட்டி படத்தில் ஹரிஹரன்,மஹதி பாடியிருக்கும் ஒரு டூயட் ரொம்பவே வசீகரம் செய்கிறது. "இது வரை இதுவரை " என தொடங்கும் பாடல் இரவு வேளைகளில் கேட்பதற்கு அருமையான தாலாட்டு. 
--------------------------------------

உங்கள் தமிழ் புலமைக்கு ஒரு சின்ன சவால். இனி வரும் நாட்களில் நான் கேட்கும் கேள்விக்கு ஐந்திலிருந்து பத்து நொடிகளுக்குள் நீங்கள் பதிலை சொல்லிவிட்டால் உங்களை நீங்களே தட்டி கொடுத்துக்கொள்ளுங்கள்.தமிழில் நீங்கள் கெட்டிக்காரர்தான்.
டம்ளர்  - இதற்க்கு தமிழில் என்ன?
உடனே கண்டுபிடித்து விட்டால் பின்னுட்டத்தில் குறிப்பிடவும்.
-------------------------------------------
வெயில் கொடுமை மண்டையே பிளக்கிறது. போபாலில் வெயிலுக்கு 3 மத்திய ரிசர்வ் போலீ்ஸ் படை வீரர்கள் மயங்கி இறந்தது ரொம்பவே வருத்தமான சம்பவம். உலக வெப்பமயமாதல் குறித்து ஒரு கூட்டம் காட்டு கத்து கத்திக்கொண்டிருந்தாலும் இன்னமும் மரங்களை வெட்டி, பிளாஸ்டிக்குகளை அதிக அளவில் பயன்படுத்தி முடிந்த அளவு இயற்கையே  நாம் நாசப்படுத்திக்கொண்டேதான் இருக்கிறோம். எப்போ விழிப்புணர்வு வந்து.. எப்போ திருந்தி.. போங்கடா.. 
-------------------------------------------

Monday, May 24, 2010

கொல கொலயா முந்திரிக்கா.. - விமர்சனம்


ஸ்டேஜில் போட வேண்டிய நாடகத்தை செல்லுலாயிடில் தந்திருக்கிறார் " வல்லமை தாரயோ " மதுமிதா. 
எந்த விதமான ஆபாசமின்றி, காதை கிழிக்கும் பன்ச் வசனங்கள், மசாலா கலவைகள்  தவிர்த்து குடும்பத்துடன் பார்க்க ஒரு சிரிப்பு படம் தர முயன்றிருக்கிறார். ஆனால் காட்சிக்கு காட்சி படம் பார்க்கிறோமா அல்லது நாடகம் பார்க்கிறோமா என்கின்ற உணர்வு  எழாமல் இல்லை. 

ஜமீன் குடும்பம், பங்காளி பகை, சொத்து முழுதும் உண்மையான வாரிசுக்கு போக வைரத்தை நான்கு நாற்காலிகளில் ஒன்றில்  ஒளித்து வைப்பது, பின் அதை கைப்பற்ற பல்வேறு குழுக்கள் போடும் திட்டங்கள், இடையில் ஒரு சிரிப்பு போலீஸ் என காமெடி திருவிழா நடத்த ஏற்ற களம்தான். ஆனால் சிக்சர்  அடிக்க வேண்டிய பந்துகளில் எல்லாம் 
சிங்கிள் மட்டுமே எடுத்திருக்கிறது மதுமிதா அன்ட் டீம்.

படத்தின் மெயின் வில்லன் லாஜிக் என்கின்ற வஸ்து. காமெடி படத்தில் இதை எல்லாம் எதிர் பார்க்க கூடாது என்றாலும், நம்பவே நம்ப முடியாத காட்சியமைப்புகளே  படத்தோடு நம்மை ஒன்ற விடாமல் செய்து விடுகிறது. 20 வருடங்களுக்கு முன் தொலைந்து போன மகள், தீடிரென தோன்றி நான் தான் உங்கள் பெண் என்றதும், எந்த கேள்வியும் கேட்காமல்  மொத்த குடும்பமும் கொண்டாடுவதும், எதிரும் புதிருமாக இருந்த ஹீரோவும், ஹீரோயினும் தீடிரென கூட்டு சேர்ந்து, பின் டூயட் பாடுவதும், திருவனந்தபுரம் என்கின்ற ஊர் பெயரை மட்டும் வைத்துகொண்டு நாற்காலி இருக்கும் இடத்தை சரியாய் கண்டுபிடிப்பதும், போங்க பாஸ்.....  நாடகங்களில் கூட இப்போது லாஜிக் பார்த்து காட்சி அமைக்கிறார்கள். 


அமெரிக்க மாப்பிள்ளை கார்த்திக், இந்த படத்தில் ஹீரோவாக ப்ரோமோஷன்.  பாடல்களில் பறந்து பறந்து நடனமாடுகிறார். ஓவர் ரியாக்ட் செய்யாமல் இயல்பாக வசனங்களை உச்சரிப்பது பிளஸ். இனி வரும் படங்களில் மேலும் மெருகேருவார். ஹீரோயின் சூப்பர் பிகர். பட் அவர் திறமையே வெளிக்காட்ட போதுமான காட்சிகள் இல்லை. அடுத்த படங்களில் நிறைய கலை சேவை ஆற்றுவார் என நம்பலாம். ஜெயராமுக்கு இது போதாத காலம். பிரின்சிபாலாக நடித்தாலும், போலீசாக நடித்தாலும் அவரை படு மட்டமான லூசாக காட்டுகிறார்கள். இனிமேலும் இப்படி நடித்தால் சிரமம்தான். MS பாஸ்கர், ராதா ரவி, ஆனந்தராஜ், என எல்லோருமே சிரிக்க வைக்க பெரும் முயற்சி செய்து சில இடங்களில் வெற்றியும் பெறுகிறார்கள். 

CRAZY மோகன் படம் முழுதும் கிச்சு கிச்சு மூட்டுகிறார். சில இடங்களில் வாய் விட்டு சிரிக்கவும் வைக்கிறார். இவரின் வசனம் இல்லையென்றால் படத்தின் கதியே நினைக்கவே பயமாக இருக்கிறது. 

இந்த மாதிரி காமெடி படங்களுக்கு திரைகதை எவ்வளவு முக்கியம் என்பதை சிங்கீதம் சீனிவாசராவ் படங்களை பார்த்து மதுமிதா அவர்கள் கற்றுகொண்டால் தேவலை. டாப் கியரில் வேகம் எடுக்க வேண்டிய காட்சிகளில்  எல்லாம் பஞ்சர் ஆன வண்டி போல படம் படுத்துக்கொள்கிறது.

படம் முழுக்க காமெடி தோரணம் கட்ட முயன்றிருக்கிறார்கள். ஆனால் மதுமிதா கட்டியது கயிறு மட்டுமே. 

பிளஸ் (+)

CRAZY மோகன் வசனங்கள் 
வெட்டு,குத்து,ஆபாசமில்லாத காட்சிகள். 

மைனஸ் (-)

திரைக்கதை 
லாஜிக் 
படம் முழுக்க இருக்கும் நாடகத்தன்மை

VERDICT : WATCH IT ONLY IF YOU ARE CRAZY FAN
RATING    : 3 .2   / 10 

EXTRA பிட்டுகள்

இந்த படம் திருப்பூரில் எங்கேயுமே ரிலீஸ் இல்லை. CRAZY  மோகன் மீதிருந்த ஆர்வத்தில், இரவில்    10- 12  KM  பயணம்செய்து  பல்லடத்தில்  பிரகாஷ் என்று இதுவரை கேள்விபட்டிராத தியேட்டர் சென்று கொசு கடியில் படம் பார்த்தது மிக கொடுமை. இதைதான் ஆப்பை தேடி போய் அமர்வது என்பார்கள்.

தியேட்டர் ஊழியர் ஒருவரை பற்றி இங்கு குறிப்பிட்டாகவே வேண்டும். தியேட்டரில் மொத்தமே  17 பேர். அத்தனை பேருக்கும் கவுன்டரில் டிக்கெட் கொடுத்து, பின் அரங்கு நுழைவாயிலில் அவரே கிழித்து தந்து, இடையில் வண்டி டோக்கன் கொடுத்து,  இடை வேளையில் பாப் கார்ன் விற்று,  கடைசியில் படம் முடிந்து உள்ளேயே தூங்கி விட்ட மூன்று பேரை எழுப்பி வீட்டிற்கு அனுப்பி பின் கேட்டை பூட்டிய வரையில் அவரது கடமை உணர்ச்சி மெய் சிலிர்க்க வைத்தது.

Friday, May 21, 2010

நொறுக்கு தீனி


பார்த்ததும் - படித்ததும் - கேட்டதும் 
ஜான் ஷெப்பர்ட் பாரோன்   லண்டனில்  காலமாகி விட்டார். யோசிக்காமல் அவருக்கு ஒரு சல்யூட் அடித்துவிடுங்கள். ஏன், எதற்கு என்று கேட்பவர்களுக்கு....  இவர் கண்டுபிடித்த ATM மெஷின் தான் நேரம், காலம் பார்க்காமல் நமக்கு பணம் எடுக்க இப்போது உதவியாய் இருக்கிறது.  நினைத்து பாருங்கள், ATM  இல்லாத தினங்களில் வங்கிகளில் கால் கடுக்க நின்றதும், விடுமுறை தினங்களிலோ,  தீடிர் தேவைக்காகவோ பணத்துக்காக அல்லாடிய பொழுதுகளும்...இந்த  மனிதருக்கும் அந்த காலத்தில் இப்படியொரு அனுபவம் ஏற்பட்டிருக்கிறது. அப்போதுதான் நினைத்தாராம்.... சாக்லேட்டுகளை  கொட்டும் மெஷின் போல பணம் கொட்டும் மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என...  அதன் பின்னர் முழு ஈடுபாட்டுடன் உழைத்து இவர் கண்டுபிடித்த ATM மெஷின் முதன் முதலில் ஜூன் 27 1967 லில்  லண்டன் BARCLAYS  வங்கியில் நிறுவப்பட்டது. 

அப்படியே, அவர் மனைவிக்கும் ஒரு தேங்க்ஸ் சொல்லிவிடுங்கள். ஏனென்றால் ஜான் முதலில் ATM  பாஸ் வோர்டை 6  இலக்க  எண்களாகத்தான்  தான் உருவாக்கினார். ஆனால் அவர் மனைவிக்கு முதல் 4  இலக்க எண்கள் மட்டுமே ஞாபகம் இருந்ததால் 4 இலக்க எண்கள் மட்டுமே பாஸ் வோர்டாக பயன்படுத்தப்பட்டு இப்போதும் உலகம் முழுவதும் அதே முறை பயன்படுத்த படுகிறது.
-------------------------------------

இன்றைக்கு 7 படங்கள் ரிலீஸ். ஆனால் எதுவுமே அதிக எதிர்பார்ப்பை தூண்டும் படி இல்லாதது ஒரு குறையே. நீண்ட நாளைக்கு பிறகு  CRAZY மோகன் சார் வசனத்தில் "கொல கொலயா முந்திரிக்கா" வருகிறது. இப்போதைக்கு என் எதிர்பார்ப்பு அந்த படத்திற்கே...

---------------------------------------

செம்மொழி மாநாட்டிற்காக கோவை புது பொலிவுடன் தயாராகி கொண்டு இருக்கிறது. மாநாடு முடிந்த பின் கோவையின் கதியே நினைத்தாலே பயமாக இருக்கிறது. எல்லாம் அவசர கோலம். நேற்று போட்ட ரோடு இன்று பெய்த மழையில் பல்லிளித்து கொண்டு நிற்கிறது. சாலையே அகலப்படுத்துகிறேன் என்று இருக்கும் மரங்களை எல்லாம் வெட்டி மொட்டை அடித்து விட்டார்கள். அதற்க்கு பதிலாக செயற்கை மரங்களை ஆங்கங்கே நடுவதை பார்த்தால்  சிரிப்பதா, அழுவதா என்று தெரியவில்லை. 5 வருடங்களுக்கு முன் எல்லாம் கோவைக்குள் நுழைந்தாலே சிலு சிலு வென வீசும் காற்றும், மெல்லிசாய் தூறும் மழையும் அவ்வளவு ரம்மியமாய் இருக்கும். இப்போது எல்லா மரங்களையும் வெட்டி விட்டதால்.. அடிக்கிற வெயில் சட்டையே கிழித்து கொண்டு திரிய வைக்கிறது.  இந்த லட்சணத்தில் துடியலூர் முதல் மேட்டுபாளையம் வரை மரம் வெட்ட டெண்டர் விட போகிறார்களாம். இந்த கதியில் போனால் உலகம் சீக்கிரமே அழிந்து விடும்.
----------------------------------------------


Thursday, May 20, 2010

செக்கிடோ


பீட்டர் பெஞ்சமின் விரல்கள் நடுங்க ஆரம்பித்தது. அமெரிக்காவின் புகழ் பெற்ற பாப்டிஸ்ட் மருத்துவமனையின் தலைமை மருத்துவர். மருத்துவ  ஆராய்ச்சியில் 30 வருட அனுபவம், ஆயிரக்கணக்கில் வெற்றிகரமான SRS சர்ஜரிகள். மருத்துவ துறையின் வாழ்நாள் சாதனையாளர், மொத்த புகழும் இப்போது காணாமல் போக போகிறது...ஒரே ஒரு சின்ன தப்பு, தான் புதிதாய் கண்டுபிடித்த மருந்தே தமக்கு இப்போது வேட்டு வைக்க போகிறது. மருந்தின் முழு தாக்கத்தையும் உணராமல் மூன்று நபர்களுக்கு செலுத்தியது எவ்வளவு பெரிய தவறாகிவிட்டது. அவரது உதவி டாக்டர் ஸ்டீபன் கதவை திறந்து கொண்டு உள் நுழைய, பீட்டர் பரபரப்பானார். "ஸ்டீபன்" அந்த மூன்று பேரது முகவரிகளையும் கண்டறிந்து விட்டாயா, இன்னும் இரு தினங்களுக்குள் அவர்கள் இந்த மருத்துவமனையில் அனுமதிக்கபட்டாக வேண்டும்" 

"நிச்சயம்  டாக்டர்"  அந்த மூவர்க்கும் மெயில் அனுப்பி விட்டேன். தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். எப்படியும் இன்றைக்குள் பிடித்துவிடலாம்".

"நல்லது, பிரச்சனை வெளியில் தெரிவதற்கு முன் இதை தீர்த்தாக வேண்டும்"

"டாக்டர், நீங்கள் தவறாக நினைக்க வில்லை என்றால் கேட்கிறேன்" எல்லா பரிசோதனைகளையும் கடந்து, அவர்களது ஒப்புதலுடந்தானே இதை நாம் செலுத்தியிருக்கிறோம். பின் பிரச்சனை எப்படி வரும் என்று நினைக்கிறீர்கள்."

பீட்டர் முன் வழுக்கை தலையே தேய்த்து கொண்டார். "ஸ்டீபன் YOU KNOW VERY WELL THAT, ஒரு முறை அந்த மருந்தை உள் செலுத்திவிட்டால் அதை முறியடிக்க கூடிய ஆண்டி பயாடிக் இன்னனும் நாம் கண்டு பிடிக்க வில்லை". 

"இது அவர்களுக்கும் தெரியும் தானே, இதற்க்கு ஒப்புக்கொண்டு கையெழுத்திட்ட பிறகே தானே இந்த மருந்தை நாம் செலுத்தினோம்"

பிரச்சனை அவர்கள் மூலமாக இல்லை

"பின்னே ...?"

"ஸ்டீபன்" நம்முடைய .... / மன்னிக்கவும், கதையில் குறுக்கிடுவதற்கு.. இந்த கதைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த ஒரு சம்பவத்தை பற்றி இங்கு  சொல்ல வேண்டியதாய் இருக்கிறது. இந்த இடத்தில்  அது  ஒரு  முக்கியமற்ற சம்பவம் எனினும் அதை பற்றி சொல்ல வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.

சுமதி, பட்டு சேலை சரசரக்க காரில் இருந்து  இறங்கினாள். ஒரு மாதிரியான பயம் தோன்றி வயிற்றை கலக்குவது போல இருந்தது.  கோவிலில், ராஜேஷும் அவனது பெற்றோரும்  இவர்களுக்கு முன்பாகவே காத்துக்கொண்டிருந்தனர். சுமதி கோவிலுக்குள்  நுழையும் போது பல ஜோடி கண்கள் தன்னை கவனிப்பதை உணர்ந்தாள். நெஞ்சு பட படவென அடித்துக்கொள்ள அம்மா  பின்னால் பிரகாரத்துக்குள் நுழைந்து கண்களை மூடிக்கொண்டாள். "பெருமாளேரொம்ப பயமாக இருக்கிறது. எல்லாம் சரியாக நடக்க வேண்டும், எனக்கு தைரியத்தை கொடு. அவர்களுக்கு என்னை பிடிக்க வேண்டும்". உனக்கு என் கையால்  மாலை கட்டி சாத்துகிறேன்"

அந்த பெண் பார்க்கும் வைபவம் ரொம்பவுமே அழகாக நடந்தது, சுற்றி இருப்பவர்கள்   தன்னையே உற்று பார்ப்பது சுமதியால் உணர முடிந்தது. குனிந்த தலை நிமிராமல் அமர்ந்தவள் கால்கள் மெல்லிசாக நடுங்க, உதடுகள் உலர்ந்து தாகம் எடுத்தது. என்ன மாதிரி அவஸ்தை இது. பரவசமா, தண்டனையா, "இது என் பையன் ராஜேஷ் " என ஒருவர் அறிமுகப்படுத்த " எல்லோருக்கும் வணக்கம், என் பேரு ராஜேஷ் " என்ற குரல் பிசிறில்லாமல் கேட்டது. குரலில் ஒரு   கம்பீரமான ஆண்மை மிளிர, கொஞ்சம் தைரியம் பெற்று, ஆர்வம் உந்தி  தள்ள தலை உயர்த்தினாள்.ராஜேஷ் நல்ல உயரமாக போட்டோவில் பார்த்ததை விடவும் அழகாக இருந்தான்.

"எனக்கு பெண்ணை பிடிச்சிருக்கு " என்ற ராஜேஷின் குரல் சுமதியின் உடலில்    சொல்ல இயலாத சிலிர்ப்பை ஏற்படுத்த " பெருமாளே THANKS"  என்றாள்.

அன்று இரவே, ராஜேஷிடமிருந்து போன் வந்தது..

"என்னை பிடிச்சுருக்கா ?

"ம்ம்"

நிஜம்மா...??!!

"ம்ம்ம்.."

"நான் நிறைய வாயடிப்பேன், என்னை பொறுத்துக்கணும்!

"ம்ம்ம்.."

நீ ரொம்ப அழகு..

"ம்ம்"

உனக்கு மியூசிக் பிடிக்குமா?

"ம்ம்"

ம்ம்.. தவிர தமிழில் வேற என்னென்ன வார்த்தைகள் தெரியும்..?

"பயமா இருக்கு."

HOW SWEET... லுக் சுமி, நான் உன்னை கல்யணம் செஞ்சுக்க போறவன். DONT WORRY ABOUT ANYTHING... BUT நீ வெட்கப்படறது எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு..  லைக் யு அண்ட்  "  லவ் யு"

சுமதிசடாரென போனை துண்டித்து விட்டாள். உடல் முழுதும் வியர்த்து கொட்டி  நடுங்கியது.  இதுவரை எந்த ஆணும் அவளிடம் ஐ லவ் யு சொல்லியது இல்லை. நெஞ்சு பட பட வென  என அடிப்பது நன்கு கேட்டது. உள்ளுக்குள் ஒரு இனம் புரியாத சிலிர்ப்பு ஏற்பட.. அவன் I LOVE YOU என்று சொன்னது சந்தோஷமாக இருந்தது.

அடுத்தடுத்த தினங்களில் அவர்களது  தொலைபேசி உரையாடல் மணிக்கணக்கில் நீள இருவரது ரசனைகளும், விருப்பங்களும், நிறைய I LOVE YOU  களுக்கு  இடையில் பரிமாறப்பட்டது. சுமதி மிக சந்தோஷமாக உணர்ந்தாள். அவன்  அவளுள் ஆழப்பதிந்து அவளுடைய உலகமானான்.

நிச்சயத்திற்கு இரண்டு நாள் முன்புதான், அசந்தர்ப்பமான அந்த நிகழ்வு ஏற்பட்டது. புரோக்கர் சொன்னதை முதலில் சுமதியால் நம்ப முடிய வில்லை. " பையன் வீட்டில் நிச்சயம் வேண்டாம்னு சொல்லிட்டாங்க"  நம்மளை விட வேற ஏதோ பெரிய வரன் வந்திருக்காம். பொண்ணு அமெரிக்காவில் டாக்டருக்கு    படிச்சவளாம்"
 ராஜேஷை  தொடர்பு கொள்ள முயற்சிக்க  அவன் மொபைல் சுவிட்ச் ஆப் செய்ய பட்டிருந்தது.  மூன்று நாள் தொடர் முயற்சிக்கு பின் ராஜேஷ் அவளுடன் பேசினான். " லுக் மிஸ் சுமதிஉங்களை எனக்கு பிடிச்சிருந்தது. I ACCEPT THAT, BUT  இப்போ என்னோட  காரியர் எனக்கு ரொம்ப முக்கியம், என்னுடைய வாழ்கையில் சிறந்ததை தேர்ந்தெடுக்க எனக்கு உரிமை உண்டு. அந்த மொபைல் பேச்சுகளுக்கெல்லாம் பெரிசா முக்கியத்துவம் கொடுக்காதீங்க, SORRY  AND GOOD BYE  "

சுமதிக்கு, முதலில் ஒன்றும் புரியவில்லை. ராஜேஷ் ஏகமாய் அவள் மனசை கலைத்து போட்டு விட்டு சென்றிருந்தான் . அவன் நினைவுகள் அழிக்க முடியாதபடி அவளுள் கலந்து கிடக்ககடவுளே, நான் உன்னை மட்டும்தானே நம்பினேன்.என் பிரார்த்தனைக்கு நல்ல பலன் கொடுத்திட்ட.. இனி உன்னை கும்பிட மாட்டேன் என்ற அவளது கண்ணீரும், விசும்பல்களும் யாருக்கும் கேட்க வில்லை. ஒருவேளை பெருமாளுக்கு கேட்டிருக்கலாம்.

நிற்க, பீட்டர் பெஞ்சமின், தன் சகாவிடம் எதோ சொல்கிறார் "ஸ்டீபன்" ஒரு ஆணை பெண்ணாக மாற்றும் நம்முடைய SEX RE-ASSIGNMENT SURGERY யில், வெஜினோ பிளாஸ்டி செய்து முடித்தவுடன் என்னுடைய புதிய மருந்தான '' செக்கிடோ" ஒரு பெண்ணுக்குரிய ஹோர்மோன்களை முழு அளவில் உற்பத்தி செய்ய ஆரம்பித்து விடுகிறது. இதன் மூலம், ஒரு பெண்ணுக்குரிய வளர்ச்சிகள் மட்டுமின்றி மன அளவிலும் அவன் ஒரு பெண்ணாக உணர ஆரம்பித்து  கூடிய விரைவில் பெண்ணாக மாறி விடுவான். இப்போது பிரச்சனை என்னவென்றால், அவர்களது செக்ஷுவல் லைப். அப்படி பெண்ணாக மாறியவர்கள் இன்னொரு ஆணுடன் உறவு கொள்ளும் போது, நம்முடைய மருந்து அவர்களது உடலுக்கும் பரவுகிறது... இதை பரிசோதிக்காமல் நாம்  மூன்று பேருக்கு அந்த  மருந்தை செலுத்தியிருக்கிறோம். இதன் மூலம் அவர்களிடம் உறவு கொள்ளும் ஆண்களுக்கும் செக்கிடோ பரவும் ஆபாயம் இருக்கிறது. இதனை எப்படியும் தடுத்தாக வேண்டும்" 

அதற்குள், ஸ்டீபன்னது செல் போன் சிணுங்க, எடுத்து பேசியவன், டாக்டர், அந்த மூன்று பேரில் இருவர் இருக்குமிடம் அறிந்தகிவிட்டது. மீதம் உள்ள ஒருவன், உங்களிடம் மருத்துவம் படித்தவனாம்இந்தியாவிற்கு பறந்துவிட்டனாம்.

 "ஆம் ஸ்டீபன், என்னுடைய ஸ்டுடென்ட் ஒருவன் பெண்ணாக மாறி வாழ விரும்பி இந்த சர்ஜெரி செய்து கொண்டவன்,, அவன் பெயர் என்ன.?

"ரத்தன் மல்ஹோத்ரா"

இந்த சம்பாஷனை நடந்த அதே சமயத்தில், ரத்தன் மல்ஹோத்ரா என்ற பெயரை  கெஜட்டில் ராதிகா மல்ஹோத்ரா என மாற்றிக்கொண்டு, தேனிலவு முடித்த களைப்பில் தன் கணவனின்  தோள்களில் சாய்ந்து உறங்கிகொண்டிருக்க, அந்த கணவன் ராஜேஷ், முந்தய இரவில் நடந்த இனிய நிகழ்வுகளை நினைத்து பார்க்க, உடனே கன்னம் சிவந்து வெட்கத்தில் தன் இரு கைகளையும் முகத்தில் மூடிக்கொண்டான். 

Tuesday, May 18, 2010

சிங்கம் - இசை விமர்சனம்

 
"ஆறு"க்கு  பிறகு  தேவி ஸ்ரீ பிரசாத், ஹரி, சூர்யா கூட்டணி இணைந்திருக்கும் படம். ஒரு மசாலா படத்திற்கு என்ன தேவையோ அதை அப்படியே கொடுத்திருக்கிறார் DSP. ஆல்பத்தில் குறிப்பிட வேண்டிய பாடல், பாபா சீகல் குரலில் வரும் "காதல் வந்தாலே" . இது வில்லு பட " வாடா மாப்பிளை" யின் அச்சு அசலான காப்பி  என்றாலும்  ரிதத்திலும், வித்தியாசமான இன்ஸ்ட்ருமேண்ட்டல்  தேர்வும் நம்மையும் அறியமால் தாளம் போட வைக்கிறது. நிச்சயம் ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும். 

சாதாரணமான மெட்டு கூட சுசித்ரா பாடும் போது கொஞ்சம் ஸ்பெஷல் ஆகி விடுகிறது. ஹஸ்கி வாய்சில் அவர் பாடும் " என் இதயம்"  பாடல் அவரின் குரலுக்காக கேட்கலாம். 

ராகங்களை வளைத்து, நெளித்து, குழைத்து படுவதில் "ஷான்" ரொம்பவுமே பிரபலம். "SHE STOLE MY HEART" பாடலில் அதற்க்கு அவ்வளவு வேலை இல்லை என்றாலும் வெஸ்டர்ன் சாயல் இசையும், வேகமான கிட்டார் நோட்டுகளும் ரசிக்க வைக்கிறது. 

DSP ராக்ஸ்.. , கற்க கற்க பாடலை போல ஒரு போலீஸ் ஆபிசரின் திறமைகளை பற்றி பாடும் " சிங்கம் சிங்கம் "வேகமான மெட்டும், DSP  குரலும் பெரும் பலம்.  இப்பாடலுக்கு  சரியான படமாக்கல் இருந்தால் நிச்சயம் ஹிட் ஆகும். 

"நானே இந்திரன்" வழக்கமான ஹரி பட ஒபனிங் சாங்.மெட்டும் வரிகளும் ஏற்கனவே கேட்டது போல ரொம்ப பரிச்சயமாக இருக்கிறது. 

DSP தனது முந்தைய பட பாடல்களின் மெட்டுக்களை கொஞ்சம் நகாசு வேலை செய்து அப்படியே அடித்திருக்கிறார். இருந்தாலும் பாடல்களை ரசிக்க முடிவதற்கு காரணம் உற்சாகமான துள்ளல் இசை. கேட்பதற்கு போரடிக்காமல் இருக்கிறது.  ஒரு மசாலா படத்திற்கு அதுதானே வேண்டும். 

VERDICT : 2 .9  STARS

Thursday, May 13, 2010

DONT MISS THIS VIDEO - INDIAN STRENGTH

ஒற்றுமை எவ்வளவு வலிமையானது என்பதை உணர்த்தும் அட்டகாசமான வீடியோ இது. ஷங்கர் மகாதேவன் குரல் உச்ச ஸ்தாயியில் ஒலிக்கும் போது நம்மையும் அறியாமல் உடல் சிலிர்ப்பதை உணருங்கள்.

Wednesday, May 12, 2010

பானா - இசை விமர்சனம்யுவனின் துள்ளல் குரலில் ஆரம்பிக்கும் "தாக்குதே" பாடல் ஆல்பத்தில் அழகான காதல் பொக்கே.  நா.முத்துக்குமார் வரிகளில் சர்க்கரை தடவிய சுவை. "ஒரு பைத்தியம் பிடிக்குது " கார்த்திக்கின் குரலில்  ஒரு வித வசீகரத்துடன் ஆரம்பிக்கிறது    ஆனால் சரணம் மிக மெதுவாக செல்வது மைனஸ். காதல் பாடல்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை  யுவன்  ஐட்டம் பாடல்களுக்கு கொடுப்பதில்லை. "உள்ளார பூந்து பாரு" ஒரு AVERAGE ஐட்டம் சாங். ஸ்ரேயா கோஷல்  குரலில் " என் நெஞ்சில்" பாடல் ஒரு சோலோ லவ் சாங். மென் சோக குரலும், வரிகளும் காதலின் வலியினை  எளிதாக உள் புகுத்திவிடுகிறது. "குப்பத்து ராஜாக்கள்" படத்தின் ஆரம்ப பாடலாக இருக்ககூடும். கேட்கலாம். 

லோ பட்ஜெட் படம் போல இது லோ பட்ஜெட் இசை. எல்லா பாடல்களிலும்  ரொம்பவுமே எளிமையான ARCHESTRATION. யுவனின் முந்தைய ஆல்பத்தோடு (பையா) ஒப்பிடும்போது இதில் யுவனின் பாதி அளவு திறமைதான் வெளிப்பட்டிருக்கிறது. 

VERDICT : 2 .5  STARS

Monday, May 10, 2010

இரும்பு கோட்டை முரட்டு சிங்கம் - விமர்சனம்


புளித்த மசாலா தோசைகளையே சாப்பிட்டு கொண்டிருந்த நமக்கு, தமிழ் ஸ்டைலில் சிம்பு தேவன் பரிமாறியிருக்கும்  ஒரு அமெரிக்கன் சாண்ட்விட்ச் தான் இ கோ மு சி. 
இது ருசி மிகுந்ததா, ருசி குறைவா என்பதை பின்னால் பார்க்கலாம். 

ஏறக்குறைய மறந்துவிட்டிருந்த கௌபாய் கலாச்சார கதைகளை திரையில் கொண்டு வந்தமைக்காகவும், இந்த கால குழந்தைகளுக்கு அதை அறிமுகம் செய்து வைத்ததற்கும் சிம்புவுக்கு முதலில்  ஒரு சபாஷ்.  

அநியாயம் செய்யும் வில்லன், அதை தட்டி கேட்கும் புரட்சி  ஹீரோ, ஆள் மாறாட்டம், இடையில் ஒரு காதல், கிளைமாக்சில்  புதையல் வேட்டை என தமிழ் சினிமாவுக்கு பழக்கமான கதையே, கௌபாய் மக்கள், குதிரைகள், சுழலும் துப்பாக்கிகள்,  செவ்விந்தியர்கள் பின்னணியில் சொல்லியிருக்கிறார்கள்.

இது முழுக்க முழுக்க ஒரு நேரடியான காமெடி படம் அல்ல . BLACK HUMOUR வகையே சார்ந்தது. கசப்பு  மருந்தை வாழை பழத்தில் வைத்து தருவதை போல    சமூக கருத்துக்களை நகைச்சுவை போர்வையில்  சொல்லியிருப்பதில்  இயக்குனர்  சிம்பு தேவன் வித்தியாசப்பட்டு தெரிகிறார். முக்கியமாக அணு குண்டு  ஒப்பந்த காட்சியில்,  நாம் அமெரிக்காவுடன்  முட்டாள் தனமானமாக செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தை   V S  ராகவன் அவர்கள் கேட்கும் கேள்வியின் மூலமாக கொட்டுபவர், படம் முழுதும் நடைமுறை சமூக பிரச்சனைகளை வசனங்கள் மூலம் தொட்டுப்போகிறார். இது போன்ற குறியீடுகளாலேயே நகைச்சுவை காட்சிகள் அமைந்திருப்பதால் எல்லா தரப்பு ரசிகனுக்கும் இது புரியுமா என்பதே கேள்வி. 

மற்றபடி, படம் நெடுக காட்சிபடுத்துதல்களில் சின்ன சின்ன ரசனையான ஹைகூகளை தெளித்து தன் கார்டூனிஸ்ட் திறமையே நிலை நாட்டியிருக்கிறார் இயக்குனர். "இங்கு குரல் வளை நெறிக்கப்படும், தின ஒப்பாரி, ஜெய் ஷங்கர் புரம்" என புன் முறுவல் பூக்க வைக்கும் விஷயங்கள் படத்தில் ஏராளம். 

படத்தின் மெயின் ஹீரோ, MS பாஸ்கரும், அவரது மொழி பெயர்ப்பாளராக வருபவரும்தான். மட்ட  குதிரை போல மெதுவாக செல்லும் காட்சிகள் இவர்கள் வந்ததற்கு பிறகு ரேஸ் குதிரை வேகம் எடுக்கிறது. இயல்பான உடல் மொழியிலும், வசன உச்சரிப்புகளிலும் பிரமாத படுத்தி இருக்கிறார்கள். ராகவா லாரன்சின் துப்பாக்கி சுழற்றும் ஸ்டைலும், நடனமும் குழந்தைகளை கவரும் அம்சங்கள். மூன்று ஹீரோயின்கள் இருந்தும் யாருக்கும் பெரிதாய் திறமையே காட்ட சந்தர்ப்பம் இல்லை. 


படத்தில் குறிப்பிட்டு சொல்ல பட வேண்டியவர் கலை இயக்குனர். குங் பூ புத்தர் சிலை, மர வீடுகள் என படம் முழுதும் இவரது உழைப்பு பாராட்ட பட வேண்டிய ஒன்று. 
இந்த படத்தின்  மெயின் வில்லன் கிழக்கு கட்டை நாசர் அல்ல. இசையமைப்பாளர் GV பிரகாஷ் குமார் தான். ஒவ்வொரு பாடல் வரும் போதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாரா பட்சம் இல்லாமல் கேண்டீனை நோக்கி படை எடுக்கின்றனர். பாடல்கள் அனைத்தும் அவ்வளவு மொக்கை. கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது என புத்தகத்தில் படித்திருக்கிறேன். இப்போதுதான் நேரில் பார்க்கிறேன் GV பிரகாஷ் குமார் உருவத்தில். 

லக்கி லுக் கௌபாய் கதைகளை காமிக்ஸ் புத்தகத்தில் படிக்கும் போது நம் கற்பனையின் அளவு எல்லையற்று படு பிரம்மாண்டமானதாய் இருக்கும். இயக்குனரும், தயாரிப்பாளரும் ரொம்பவே கஷ்டப்பட்டு காட்சிபடுத்தியிருந்தாலும், திரையில் பார்க்கும் போது நம் கற்பனையின் அளவோடு இங்கு  ஒப்பிட்டு போகாதது ஒரு குறையே. காமிக்ஸ் கதைகளை படமாக்கும் போது எதிர்கொள்ள வேண்டிய முக்கிய பிரச்சனை இதுவே. 

இருப்பினும், இந்த மாதிரி BLACK HUMOUR படங்கள் வரவேற்க பட வேண்டியதே. சிரிக்க மட்டுமில்லாமல்.. சிந்திக்கவும் வைப்பதால்....

பிளஸ் (+)

கலை இயக்கம்
வசனங்கள்
MS பாஸ்கர் மற்றும் அவரது மொழி பெயர்ப்பாளர்

மைனஸ் (-)
இசை
திரை கதை
ஹீரோயின்கள்

VERDICT  : பார்க்கலாம், தவறில்லை. 
RATING     :  3 .9  / 10

EXTRA பிட்டுகள் 

கான்டீன் உரிமையாளருக்கு அளவில்லா சந்தோஷம், "இப்படி எல்லா படத்திலையும் பாட்டு இருந்தா போதும் சார், நான் சீக்கிரம் மேலேறிடுவேன்"

 ஒரு குழந்தை, தன் அப்பாவிடம்,  " அப்பா உன் பேச்சை கேட்டு நான் இந்த படத்திற்கு வந்தேன்ல..  நீ என் பேச்சை கேட்டு நாளைக்கு குட்டி பிசாசுக்கு வரனும்" என்றது. அந்த தகப்பன் "சரி சரி" என உறுதி அளிக்க, கல்யாணம் , குழந்தை என ஆகும் போது இப்படிப்பட்ட பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டும் என்பதே வயற்றில் புளியே கரைக்கிறது.

Friday, May 7, 2010

ராவண் - ராவணன் - இசை விமர்சனம்

 
மொசார்ட் ஆப் மெட்ராஸ் இன் அடுத்த சிக்ஸர். இந்தியில் பாடல்கள் வெளியானவுடனேயே அதை பற்றி எழுத  விரல்கள் துடித்தது. தமிழில் வரும் வரை காத்திருந்து இதோ, ராவண் - ஒரு இசை அனுபவம். 

BEERA BEERA  - விஜய் பிரகாஷின் கம்பீர குரலில்,  இதுவரை கேட்டிராத இசை கருவிகள் உற்சாக அருவியாய் கொட்ட, கேட்டவுடன் பிடித்து போகிறது... இந்த வருடத்தின் MOST WANTED SONG  நிச்சயம் இதுதான்.  அருமையான  ஒரு  ENERGETIC SONG .

BEHNA DE  - வரிகள் புரியாவிடினும், காதலின் வலியே கார்த்திக்கின் குரலில் நன்கு உணர முடிகிறது.  பாடல் முழுதும் ரஹ்மான் சாரின்  சின்ன சின்ன மேஜிக்கல் டச் பரவி இருக்கிறது. 

THOK DE KILLIசுக்விந்தர் சிங்கின் கணீர் குரலில், மற்றுமோர் ENERGETIC SONG. மெட்டும், அர்க்கேஸ்ட்ரேஷனும், வித விதமாய் சரணத்தில் வரிகள் நீளும் அழகும் உலக தரம்.

RANJHA RANJHA -  ஆல்பத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். ரீனா பரத்வாஜின் போதையேற்றும் குரல் நம்மை  ஒரு ரொமாண்டிக் மூடிற்கு அழைத்து செல்கிறது. ஜாவித் அலியின் குரலும் கச்சிதம். திரும்ப திரும்ப கேட்க தூண்டும் மெட்டும் இன்னொரு  பிளஸ் பாயிண்ட்.

KHILI RE  - கொஞ்சம் மெதுவான, ஆனால் ரசனையான மெலடி. ஆச்சரியம் ரான்ஜா ரான்ஜா வில் நம்மை கட்டி போட்ட ரீனா இதில் மயிலிறகு போல மென்மையான குரலில் வசீகரிக்கிறார்.

KATA  KATA -  ஸ்லம் டாக்  மில்லியனிரில் பாடிய இலா அருண் குரலில்,  I THINK இது ஒரு கல்யாண சாங் போல கேட்க நன்றாகவே  இருக்கிறது. தமிழ் பதிப்பில் நிச்சயம் சில பல பாட்டிகள் இந்த பாடலை பாடலாம்.


மொத்தத்தில் எல்லா பாடல்களும் அட்டகாசமாக இருக்கிறது. ரஹ்மான் பின்னியிருக்கிறார்.  ஆனால் தமிழில் பாடல்களை கேட்கும் போது சற்று ஏமாற்றமாகவே இருக்கிறது. வரிகள் அவ்வளவு கச்சிதமாக ஒட்டவில்லை. வைரமுத்து அவர்கள் வரிகளில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.  சில இடங்களில் டப்பிங் பட பாடலை கேட்பது போல ஒரு நெருடல்.

VERDICT : SONGS WORTH TO LISTEN... - 4 STARS OUT OF 5

Wednesday, May 5, 2010

திருமலை திருப்பதி - ஒரு பரவச அனுபவம்

  இரண்டு நாள் விடுமுறையில் பெருமாளை சேவிக்க திருப்பதி  சென்று வந்தது  பல்வேறு அதிர்வலைகளை மனசுக்குள் ஏற்படுத்தியது.  பெருமாளை வழிபட எத்தனையோ கோவில்கள் உண்டென்றாலும் திருப்பதி சம்திங் ஸ்பெஷல்.  பெருமாளுக்கும் நமக்கும் ஒரு நேரடி தொடர்பை ஏற்படுத்தும் இடம் போல விளங்குவதுதான் இதன் சிறப்பு.

வருடம் முழுதும் பெருமாள் இங்கு படு பிஸியாக இருக்கிறார். ஆரம்ப காலத்தில் தரிசனம் செய்யும் முறைகளிலிருந்து இப்போது நிறையவே நவீன படுத்தப்பட்டு இருக்கிறது. நம்முடைய ஊரிலிருந்தே தரிசனம் செய்யும் நேரத்தை முன் பதிவு செய்து விட்டு வரலாம். (TTD- THIRUMALAI TIRUPATHI DEVASATANAMS  முக்கிய ஊர்களில்  இந்த  சேவையினை வழங்குகிறது. )  இணையத்தில் கூட  முன் பதிவு செய்யலாம். அப்படி இருந்தும் நாள் முழுக்க காத்திருந்து தரிசனம் செய்யும் பக்தர்கள் கூட்டம் இங்கு மிக அதிகம்.

நாங்கள் சென்ற இந்த இரண்டு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் திருமலையில், ஓய்வெடுக்க அறைகள் கிடைக்காமல்,  கோவிலை சுற்றியுள்ள  பாதைகளிலும், மரத்தடிகளிலும்,  தங்கி  உறங்குவதை பார்க்கும் பொழுது  அவர்களது பக்தியின் அளவீடு மலைக்க வைக்கிறது. தரிசனத்திற்கு மட்டுமில்லாது முடி காணிக்கை செய்யும் கல்யாண கட்டாவிலும் கட்டுக்கடங்கா கூட்டம். மொட்டை அடிக்க ஒரு நாள் முழுதும் கியூ வில் நிற்கும் ஜனத்திரளை பார்க்கும் போது கொஞ்சம் பயமாகத்தான் இருக்கிறது. .

திருப்பதியே பொறுத்த வரை சரியான திட்டமிடலும், முன் பதிவும் மிக அவசியம். நாங்கள் இரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே முன் பதிவு செய்திருந்ததால் தரிசனத்திற்காக நீண்ட நேரம் காத்திருக்காமல் சற்று விரைவாகவே கோவிலுக்குள் நுழைந்துவிட்டோம். எந்த வித  முன்பதிவும்  செய்யாமல், ஒரு தீடிர் தோன்றலில் திருப்பதி வருபவர்கள் உடனடியாக தரிசனம் செய்ய வாய்ப்பே இல்லையா என நீங்கள் கேட்கலாம். அதற்கென ஒரு புதிய திட்டத்தை அமல் செய்திருக்கிறார்கள்.  300  ரூபாய் கட்டணத்தில் "சீக்கிர தரிசனம்"  என்கின்ற பெயரில் 1  - 2  மணி நேரத்தில் தரிசனம் செய்து விடலாம்.


கோவிந்தா கோவிந்தா என்றபடி கோவிலுக்குள் மெல்ல நகரும் வரிசையில் வடக்கு, தெற்கு பேதமில்லாமல் எல்லா மாநில மக்களும்  கலந்திருக்க, எல்லோருடைய கண்களிலும் உச்ச கட்ட ஆர்வமும், பக்தியும் வழிய,  கோவிலின் உள் பிரகாரத்தில் நுழையும் போது நம்மையும் அறியாமல் ஒரு பரபரப்பும், பயமும் இயல்பாய் தொற்றி கொள்கிறது. மெல்லிசான தீப வெளிச்சத்தில், சாம்பிராணி புகைக்கு மத்தியில்  தூரத்தில் கர்ப்பகிரகத்தினுள்  நெற்றி நிறைய நாமம் இட்டு கம்பீரமாய் பெருமாள் வீற்றிருக்க பார்க்கும் நமக்கு உடல்  சிலிர்த்து, அந்த சிற்சில நொடிகளில் வைகுண்டத்திற்கே வந்தது போன்ற உணர்வை  தரும் அற்புதம் இங்கு மட்டுமே.   கோவில் சேவா ஊழியர்கள் நம்மை நிற்க விடாமல் தள்ளி துரத்துவது  சங்கடமாக இருந்தாலும் பின்னால் மணிக்கணக்காக காத்திருக்கும் மக்களை நினைக்கும் போது வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. அந்த சில நொடி நேர அனுபவத்திற்காக  எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் காத்திருக்கலாம், தவறில்லை.

அடுத்த நாள் சுப்ரபாத தரிசனத்தின் போது, நான் பெற்ற அனுபவம் இதற்க்கு நேர்மாறானது. ஒரு நாளில்  150 நபர்கள் மட்டுமே அனுமதி. கர்ப்பகிரகம் மூடபட்டிருக்க கோவில் உள் பிரகாரத்தில் கூட்ட நெரிசலின்றி அமைதியாய் காத்திருக்கிறோம். 90 % பிராமினர்களால் நிரம்பியிருக்க, பெண்கள் பெருமாளை துயில் எழுப்ப  அழகாக பாடுகிறார்கள். சரியாக 3 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டு கருவறை திறக்கபடுகிறது, கர்ப்பக்கிரகத்தின் கடைசி வாயில் வரையிலும் பக்தர்கள் அனுமதிக்க படுகிறார்கள். அவ்வளவு கிட்டத்தில், எளிமையான அலங்காரத்துடன் பெருமாளை  பார்க்கும் போது நம் ஊர்  கோவில் பெருமாளை காண்பது போலவே இருக்கிறது. சுப்ரபாத தரிசன வாய்ப்பு கிடைத்தால் தவற விடதீர்கள், அது ஒரு வேறு மாதிரியான அனுபவம்.

நிச்சயம் திருப்பதி நம் மனதை RE-FRESH செய்யும் ஒரு அற்புதமான ஆலயம். இன்னும் 200-300 வருடங்கள் கழிந்தாலும், நம் கொள்ளு பேரன், பேத்திகள்  சுஜாதா சார் தனது திமலா சிறுகதையில் சொல்வது போல பெருமாளை கண்டு " ITS AMAZING" என்பார்கள், சத்தியம்.வரவேற்க்கத்தக்க மாற்றங்கள் 

வயதானவர்களும், மாற்று  திறன் படைத்தோரும், குழந்தைகளும், விடுதலை போராட்ட தியாகிகளும்  எளிதாக சாமி கும்பிடும் வகையில் கோவிலுக்கு முன்புறம் தனியாக ஒரு கியூ வரிசை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மிக விரைவில் தரிசனம் செய்யலாம்.

உலக புகழ் பெற்ற ப்ரசாதமான  லட்டு  வாங்குவதற்கெனவே  ஒரு தனி காம்ப்ளெக்ஸ் அமைக்கபட்டுள்ளது. நூற்றுகணக்கான கவுன்ட்டர்கள் மூலம் எளிதில் லட்டு கிட்டும்.

அதே போல எக்ஸ்ட்ரா லட்டு வாங்கவும் இந்தியன் வங்கி சார்பில் ஒரு தனி கவுண்ட்டர் அமைக்கபட்டுள்ளது. 100 ரூபாய்க்கு 4 லட்டு என்கின்ற அளவில் வேண்டிய அளவில் பிரசாதம் வாங்கலாம்.

Monday, May 3, 2010

சுறா - திரை விமர்சனம்ஆங்கிலத்தில் ஒரு சொல் வழக்கு உண்டு.

SOME THING IS BETTER THAN NOTHING
NOTHING IS BETTER THAN NONSENSE

அதாவது, வெறுமனே சும்மா இருப்பதற்கு எதாவது படம் பார்த்து விமர்சனம் செய்யலாம். அதி பயங்கர மொக்கை படம் பார்த்து தலை வலியோடு விமர்சனம் செய்வதற்கு சும்மாவே இருந்து விடலாம். இதை நான் அமோதிக்கிறேன்.

பதிவர்களும், விமர்சர்களும்  இந்த படத்தை கிழித்து தொங்க போட்ட பிறகும் இந்த படத்தை பார்ப்பது எனக்கு நானே ஆப்பு வைத்து கொள்வது போல... SO இந்த படத்திற்கு இந்த விமர்சனமே போதுமானது.


விஜய் படத்தில் உலக சினிமாவிற்கு ஒப்பான விஷயத்தையோ, நல்ல கதையையோ எதிர்பார்ப்பது நம்முடைய தவறு. அடுத்த படத்திலாவது திருந்துவரா என எதிர்பார்ப்பதும் அப்படியே.

 நம் உடலும், உள்ளமும் நலமாக இருக்க இப்படிப்பட்ட பட போஸ்டர்களை கூட  பார்க்காமல்  தவிர்ப்பதே உத்தமம். 

பின்குறிப்பு : சத்தியமாக நான் அஜித் ரசிகன் அல்ல. நல்ல சினிமாக்களை பார்க்க துடிக்கும் சராசரி ரசிகன் அவ்வளவே...

you might like this also...

Related Posts with Thumbnails