Wednesday, April 28, 2010

கிரிக்கெட் காதலன்


மூர்த்தி வெகு அலட்சியமாய் பபிள் கம்மை மென்றபடி சுற்றி நிற்கும் பீல்டிங் வளையத்தை கண்களால் அளந்தான். லாங் OFF , லாங் ஆன் இரண்டு புறமும் பீல்டர்கள் ஆணி அடித்தது போல நிற்க, எதிரணி கேப்டன்  மேலும் இருவரை லெக் சைடில் நிற்க வைத்து பாதுகாப்பு அரண் அமைத்தான். இரண்டே பந்துகள் 10 ரன்கள் தேவை. கடைசி பந்தில் மூர்த்தி அடித்த பவுண்டரி ஆட்டத்தை சூடு கிளப்பி வைத்திருக்க மொத்த கூட்டமும்  கண் இமைக்க மறந்து நகம் கடித்தது.. அந்த பௌலேர் உள்ளங்கை வியர்த்திருக்க , தரையில் கைகளை தேய்த்து கொண்டான். கேப்டன் அவனிடம் தீவிர ஆலோசனை செய்து  அவன் முதுகை தட்டி கொடுத்து உற்சாக படுத்த,  அந்த பௌலேர் சற்றே நிதானித்து.. சீராக அடி எடுத்து விக்கெட்டை நோக்கி ஓடி வர.. மூர்த்தி ஒரு முறை உடலை குலுக்கி ரிலாக்ஸ் செய்து கொண்டான். அந்த பௌலேர் சரியான லைன் அண்ட் லென்த்தில் விக்கெட்டிற்கு நேராக அசுர வேகத்தில் எரிய.. மூர்த்தி விடு விடுவென  ஸ்டெம்ப்பை கடந்து திரும்பி நின்று .. கிட்டத்தட்ட தற்கொலைக்கு இணையான ஷாட் அது..  நேராக கீப்பரின் தலைக்கு மேல் பந்தை அறைந்து  அனுப்ப.. அது இரட்டை வேகத்துடன் எல்லை கோட்டை தாண்டி சிக்சராக மாறியது. மைதானம் கைதட்டல்களால் அதிர.. மூர்த்தி ஒன்றும் அறியதாவன் போல பபிள்கம்மை மென்றபடி நின்றான். கடைசி பந்து.. வெற்றிக்கு தேவை 4 ரன்கள். இம்முறை மூர்த்திக்கு அந்த பௌலேர் பெரிதாய் வேலை வைக்கவில்லை. ஒரு வித பயத்துடனும் பதட்டத்திலும்  யார்க்கராய் வீச முயன்ற பந்து புல் டாசாக மூர்த்தியின் இடுப்பளவு உயரத்தில் வர , அழகாக லெக் சைடில் திருப்பி அதையும் சிக்சராக மாற்ற மொத்த கூட்டமும் ஆர்பரித்தபடி  மூர்த்தியே நோக்கி ஓடி வந்து அவனை தூக்கி வைத்து கொண்டாடியது.

மூர்த்திக்கு இது ஒன்றும் புதிதில்லை. எங்கள் கல்லூரியின் ஸ்டார் பேட்ஸ் மேன். கிரிக்கெட்டை ஒரு தவம் போல, கடவுளை விட அதிகமாக நேசிப்பவன். நீங்கள் அவன் விளையாடும் ஸ்டைலை பார்த்தாலே தெரியும்.. ஒரு தேர்ந்த சிற்பி போல, அவ்வளவு நுணுக்கமாய் இருக்கும் அவனது புட் ஓர்க்கும், ஷாட்  செலெக்ஷனும்.  அவன் பிட்சில் இருந்தாலே எதிரணி ப்ளேயர்களுக்கு எதோ மலச்சிக்கல் வந்தது போல ஒரு இறுக்கமான சூழல் நிலவும். எப்பேர்ப்பட்ட இலக்கையும் அலட்சியமாக விரட்டுபவன். அவனை அவுட் செய்வது  நிச்சயம் அவ்வளவு எளிதான விஷயம்  அல்ல.

விவசாய குடும்பம், சுமாராக படிப்பான். செமஸ்டர் சமயங்களில்  உரு போட்டு எப்படியாவது பாஸ் செய்து விடுவான்.  வகுப்பில் இருக்கும் நேரத்தை விட கிரௌண்டில் இருக்கும் நேரமே அதிகம். நாங்கள் எல்லோரும் சும்மா ஜாலிக்காக  கிரிக்கெட் விளையாடினால் அவன் எதோ கிரிக்கெட் தன் வாழ்வியலோடு ஒன்றிணைந்த விஷயம் போல அனுபவித்து ஆடுபவன். நிறைய டெக்னிகல் விஷயங்கள் சொல்லி கொடுப்பான். அவன் சொல்லுவதை காது கொடுத்து கேட்க வேண்டும். இல்லையேல்  தலையோடு சேர்த்து அடிப்பான். புகை, குடி, பாக்கு என எந்த கெட்ட பழக்கமும் கிடையாது.  யாரேனும் தண்ணி பார்ட்டி கொடுக்கும் போது, சண்டையிட்டு தன் பங்காக பணத்தை  வாங்கி கொள்பவன், அதில் சின்ன பொடியன்களுக்கு பேட்டும் , பந்தும் வாங்கி கொடுப்பதை நாங்கள் ஆச்சரியமாய் பார்ப்போம். 

முந்திய நாள் இரவில் கண்ட மலையாள படத்தையும், மிட் நைட் மசாலா பற்றியும் நாங்கள் விவாதித்து கொண்டு இருக்கும் போது, கென்யாவிற்கும்,  பங்களா தேஷிக்கும் இடையே நடந்த டெஸ்ட் போட்டியே நடு நீசி வரை பார்த்துவிட்டு வந்து சிலாகித்து சொல்வான். இதை எல்லாமாடா  பார்க்குற ? என்று கேட்டால், யார்  விளையாடுறாங்க   என்பது முக்கியமில்லை, கேம்தான் முக்கியம் மாப்பிளை என்பான். அவன் ஒருவனை வைத்து கொண்டே கல்லூரியில் மூன்று வருடங்களாக எங்கள் செட்  கிரிக்கெட் சாம்பியன் என சுற்றிகொண்டிருந்தோம். இதற்காய் துளி கூட அவன்  கர்வபட்டதில்லை. ஒரு விதத்தில் பார்த்தால் கிரிக்கெட் தவிர மற்றது ஏதும் அறியா அப்பாவி.

கல்லூரி காலம் முடிந்து நாங்கள் திசைக்கு ஒன்றாக பிரிந்தாலும், எங்கள் நட்பு வட்டம் சுருங்கவில்லை. அலைபேசியிலும், ஆர்குட்டிலும், ட்விட்டரிலும் நட்பினோம். மூர்த்தி தன் கிரிக்கெட் ஆட்டம் தடை பட்டு விட  கூடாதென சொந்த ஊரை விட்டு வெளிய வர மறுத்து உள்ளூரிலேய சொந்தமாக துணி வியாபாரம் செய்து வந்தான்.  தீடிரென போன் செய்வான். "மச்சான், குன்னத்தூர் டீமோடு விளையாடி செஞ்சுரி போட்டேண்டா" என்பான். ஞாயிறு முழுவதையும் கிரிக்கெட்டிற்காக  அர்ப்பணித்து விடுவான்.  நீங்கள் சொர்கத்திற்கே அழைத்தாலும்  ஞாயிறன்று மைதானத்தை விட்டு வெளிய வர மறுத்து விடுவான்.

சுற்றி இருக்கும் ஊர்களில் நடக்கும் எல்லா கிரிக்கெட் டோர்ணமண்டுகளிலூம்   மூர்த்தி தவறாமல் இருப்பான். இவன் அணி ஆடாத சமயங்களில் கூட மற்ற அணியினர்  இவனை தங்கள் அணிக்காக ஆட அழைத்து செல்வதுண்டு.  மெல்ல மெல்ல அவனது பெயர் மாவட்ட அளவில் பிரபலமாக ஆரம்பித்தது. சில போட்டிகளில் அவன் ஆட வருகிறான் என்றாலே போட்டி அமைப்பாளர்கள் அவன் டீமை சேர்க்க தயங்கிய சம்பவங்களும் நடந்தது. அந்த அளவிற்கு போகும் இடமெல்லாம் ரன்களை அடித்து நொறுக்க,  வீட்டில்,  T V ஸ்டாண்டில் டிவிக்கு பதிலாக   கோப்பைகளாய் குவிந்து கிடக்கும். வைக்க இடமில்லாமல் பாதி கோப்பைகளை மூட்டை கட்டி பரன் மேல் வைத்திருப்பதாக அவன் கூறுவதை நீங்கள் நம்ப மறுத்தாலும் உண்மை அதுவே.

இந்த கதை மூர்த்தியின் கிரிக்கெட் பராக்கிரமங்களை பற்றியது அல்ல... மூர்த்தியின் தெய்வீக காதல் பற்றியது. ஆம். மூர்த்தி காதலித்தான் என்பது நம்பவே முடியாத ஆனால் நடந்துவிட்ட ஒரு ஆச்சர்யம். உள்ளூர் அளவில் பிரித்து மேய்ந்து கொண்டிருந்தவனை நாங்கள் நண்பர்கள் அனைவரும் நச்சரித்து மாநில அளவில் விளையாட முயற்சி செய்யுமாறு கூற, ஒரு நல்ல நாளில் சென்னை கிளம்பி சென்றான். சென்றவன் இரண்டே நாட்களில் வெறுப்போடு திரும்பினான். "மச்சான், அங்க எல்லாமே காசும், சிபாரிசும் மட்டும்தாண்டா. திறமைக்கு அங்க மதிப்பில்லை". என்றவன் அந்த முயற்சியே கை விட்டாலும், அங்கு இருந்த பயிற்சியாளர் ஒருவர், இவனின் ஆட்ட திறமையே கண்டு தன் பயிற்சி மையத்தில் வந்து சேர சொல்ல, வாரம் ஒரு முறை  சென்னை சென்று பேட்டிங் பயிற்சி செய்து கொண்டிருந்தான். 

அவன் காதல் பற்றிய செய்தி எங்களுக்கு  சென்னை B2 போலீஸ் ஸ்டேஷன் தொலைபேசி வழியாகத்தான் முதன் முதலில்  தெரிய வந்தது. தொலைபேசியில் தான் போலீஸ் கஸ்டடியில் இருப்பதாகவும், வந்து காப்பாற்றுமாறும்  கதற, ஒன்றும் விளங்காமல் ஒரு வக்கீலை அழைத்து கொண்டு சென்னை விரைந்தோம். ஜாமீனில் அவனை மீட்டெடுத்து விசாரித்த போதுதான், தான் சென்னையில் ஒரு பெண்ணுடன் பழகி காதல் வயப்பட்டதாகவும் , அவள் அப்பா பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் எனவும், காதல் விஷயம் வீட்டிற்கு  தெரிந்து,  பெண்ணை பார்க்க அவள்  வீட்டு பக்கம் வந்தவனை வீட்டு சுவர் ஏறி குதித்து திருட வந்தான் என போலீசில் ஒப்பைடைத்த விதத்தையும் ஒப்புவித்தான்.

ஒரு மாதிரியாக போலீஸ் பிரச்சனைகளை சமாளித்து அவனை ஊர் கொண்டு வந்து சேர்த்தாலும், பயல் விஜி, விஜி, என அந்த பெண் பெயரயே பிதற்றிக்கொண்டு ஒரு மாத தாடியோடு கிரிக்கெட் கூட விளையாடாமல்  சுற்றிகொண்டிருந்தான். போனில்  அவனை அழைத்து உன் கவனத்தை கிரிக்கெட்டில் திருப்புடா.. பொண்ணுகளை நம்பாதே என்றதற்கு . மாமா, கிரிக்கெட் விளையாட மனசும், உடம்பும் தெம்பா இருக்கணும். இப்ப எங்கிட்ட ரெண்டுமே இல்ல என்றான்.

ஒரு மாத  முடிவிற்குள், தீடிரென அவனிடமிருந்து போன். மச்சான், விஜி வீட்டை விட்டு ஓடி வந்துட்டடா... அவ குடும்பம், சொத்து எல்லாத்தையும் விட்டுட்டு நான்தான் முக்கியம்னு  என்னை தேடி இங்கேயே வந்துட்டாடா. யாருக்கும் தெரியாம சிவன் மலையில் வச்சு கல்யாணம் பண்ணிட்டோம்டா... சாரி டா.. உங்களை யாரும் கூப்பிட முடியல.. வர வியாழகிழமை ஊர்ல RECEPTION . நீ கண்டிப்பா வரனும் டா.. என்றான். சந்தோஷம் பொங்க வாழ்த்து சொன்ன நான் தீடிர் அலுவல் விஷயமாக மும்பைக்கு துரத்தியடிக்க பட.. அவன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இடைப்பட்ட தினங்களில், ஒரு மகானுவன், என் முகத்தையும், உத்தியோகத்தையும் நம்பி தன் பெண்ணை எனக்கு தருவதாக சொல்ல, என்னுடைய கல்யாண ஏற்பாடுகள் நடக்க துவங்கியது. , அழைப்பிதழ் கொடுப்பதற்காய் மூர்த்தியே தேடி அவன் வீட்டிற்க்கு சென்றேன்.

நான் போன சமயம், மூர்த்தி பெருமாநல்லூர் அணிக்காக ஒரு T -20 மேட்ச் ஆட போயிருப்பதாகவும் மதியத்திற்குள் வந்து விடுவேன், வீட்டில் காத்திரு என்றும் சொன்னான். அவன் காதல் மனைவியே பார்த்து வாழ்த்து சொல்வதற்க்காய்  அவன் வீட்டில் நுழைய, அந்த பெண் விஜி நல்ல வெட வெடவென உயரமாய் , கொஞ்சம் ஒடிசலாய் இருந்தாள். என்னை வரவேற்று எனக்கு காப்பி வைத்து கொடுத்தவளிடம் " உங்க புருஷனை எப்படி சமாளிக்கிறீங்க.. இன்னமும் கிரிக்கெட் கிரிக்கெட்ன்னு ஊரை சுத்திட்டு இருக்கான். நாள் பூர கிரிகெட்டை மட்டும் பேசி உங்களை ஒரு வழி பண்ணியிருப்பானே" என்றேன். அதற்க்கு அவள், எனக்கும் கிரிக்கெட் தாங்க உயிரு. அவர் கிரிக்கெட் ஆடற அழக பார்த்துதான் அவரை நான் லவ் பண்ணினேன் என்றாள்.

பரவயில்லையே.. உங்களை மாதிரி பொண்ணுகளும், கிரிக்கெட் மேல ஆர்வமா இருக்கிங்களே என்றதற்கு,  சிரித்துகொண்டே , ஆக்சுவலா, நானும் ஒரு பிளேயர் தாங்க.. பாஸ்ட் பௌலேர், தமிழ்நாடு உமென்ஸ் அண்டர் 19 .  நைரோபில இப்போ நடந்துட்டு இருக்குற  உமென்ஸ் வேர்ல்ட் கப் டீம்ல என் பெயரும் இருந்துச்சு. கல்யாணம் ஆனதாலே இப்போ இங்கே இருக்கேன் என்றாள். ஆச்சரியமும், அதிர்ச்சியும் ஒரு சேர அவளை பார்த்தபடி, என்ன சொல்றிங்க, மூர்த்தி கிட்ட சொல்லியிருந்தா உங்களை எப்படியும் விளையாட வச்சுருப்பானே.. என்றதற்கு, ஒரு முறை என்னை நிமிர்ந்து பார்த்தவள், மெலிதாக சொன்னாள். " அவருக்கு நான் கிரிக்கெட் விளையாடினா பிடிக்காதுங்க" 

---------------------------------------
கதை கடியாக இருந்தாலும் கமெண்ட் இடவும்..

Friday, April 23, 2010

பலே பாண்டியா - இசை விமர்சனம்


புகை பட ஓவியர் சித்தார்த்தின் முதல் திரைப்படம். தேவன் எகாம்பரம் இசை இந்த படத்திற்கு துருப்பு சீட்டா இல்லையா என்பதை பார்க்கலாம். 

"சிரிக்கிறேன்" பாடல்  கானாவும், ராப்பும், வெஸ்டர்னும் இணைந்த ஒரு கலக்கல் காக்டெயில். தாளம் போட வைக்கும் மெட்டுடன் தொடங்கும் பாடல் சரணத்தில் திக்கு திசையின்றி அலைகிறது. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இந்த வருட  ஹிட் லிஸ்டில் சுலபமாக இடம் பிடித்திருக்கலாம். 

உன்னி கிருஷ்ணன், மிருநளினி குரல்களில் "கண்களே கமலாலயம்" மென்மையான காதல் டூயட். இருவரது குரல்களும்  மனசுக்குள் புகுந்து என்னவோ பண்ணுகிறது. அதை போலவே "ஆறாத கோபமில்லை" பாடலும், தனிமையில் இரவில்  ஐ பாடில் கேட்க நல்ல சாய்ஸ் இந்த இரண்டு பாடல்களும்.


"ஹாப்பி" பாடல் வித்தியாசமாக இருந்தாலும் மெட்டில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்திஇருக்கலாம். 

"இவன் தேடல்", "பலே பாண்டியா" என மற்ற இரண்டு பாடல்களும் சுமார் ரகம். சிரிக்கிறேன் பாடலிலும், இரண்டு மெலடிகளிலும் நம்பிக்கை அளிக்கிறார் புது இசையமைப்பாளர் தேவன்.

VERDICT  : 2 .4  STARS

Wednesday, April 21, 2010

PHOONK 2 - விமர்சனம்


ராம் கோபால் வர்மாவின் சிஷ்ய பிள்ளை இயக்கிய படம்.  ட்ரைலரையும்  முதல் பாகத்தையும்  நம்பி உள்ளே போனால் இருக்கிறது பெரிய ஆப்பு. 

பாழடைந்த பங்களா, அங்கு குடி வரும் குடும்பம், இரண்டு குழந்தைகள், ஒரு வேலைக்காரி, சந்தேகத்திற்கிடமான தோட்டக்காரன். சுற்றிலும் எந்த வீடுமில்லாத தனிமை.  மெல்ல நின்று நின்று நகரும் கேமரா, பீதியே கிளப்பும் பின்னணி இசை  என எல்லா பேய் படங்களிலும் வரும் பார்முலா அட்சரம் பிசகாமல் இதிலும் இருக்கிறது. 

வா அருகில் வா, 13ம் நம்பர் வீடு, உருவம், என எல்லா படங்களிலும் இருந்து காட்சிகளை சுட்டது போல மிக அரத பழசான திரைக்கதை.  முதற் பாதி முழுதும் வீட்டை ஒரு அங்குலம் விடாமல் சுற்றி சுற்றி வருகிறார்கள்....,  தீடிர்  தீடிரென கருப்பு நைட்டியில், தலை விரி கோலமாய், முகத்தில் கருப்பு பெயிண்ட் அடித்து ஒரு பெண்ணை காட்டுகிறார்கள். அவர்தான் பேயாம். அதை பார்த்ததும் நாம் பயந்து விட வேண்டுமாம், போங்கடா டேய்...இதெல்லாம் 20 வருசத்துக்கு முன்னாடியே  தக்காளி சீனிவாச அண்ணன் படத்தில பார்த்தாச்சு...

இரண்டாம் பாதியில் சம்பந்த சம்பந்தமே இல்லாமல் இழவு மேல்  இழவாக விழுகிறது... எவன் சாகிறான், எதுக்கு சாகிறான் என ஒரு முகந்திராமும் இல்லை. அவர்கள் கொல்லப்படும் விதமும் படு மொக்கை.  நடுவில்,  பிட்டு  படம் போல ஒரு முத்த காட்சி.. கிரகம் அதுவும் சிறப்பாக படமாக்கபடவில்லை. லாஜிக் என்கின்ற விஷயத்தை படத்தின் முதற்காட்சி எடுக்கும் போது பூசணிகாயுடன் சேர்ந்து உடைத்திருக்கிறார்கள். ஏகப்பட்ட கத்தி குத்து வாங்கியும் சாகாத கதாநாயகன்,  பேய் பிடித்த தன் மனைவியே மாடியில் இருந்து தள்ளி விட்டதும், கீழே விழுந்து பேய் இறந்து விடுகிறதாம். என்ன கன்றாவிடா   இது... 

கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆவது போல, டைட்டில் காட்சிகளில் காணப்படும் வித்தியாசமான  கேமரா கோணங்கள் போக போக காணமல் போய் சராசரியாகி விடுகிறது. இந்த படத்திற்கு இதுவே அதிகம் என ஒளிபதிவாளர் நினைத்திருக்கலாம். 

 100  பேர் வயலினை  வாசிக்க தெரியாமால் வாசித்தால் எப்படி இருக்கும்.. அப்படி இருக்கிறது  பின்னணி இசை கடைசி கட்டங்களில்.

மிக குறைந்த லோ பட்ஜெட் படம் என்பதால், ராம் கோபால் வர்மா தப்பித்துவிடுவார்.. மாட்டிக்கொள்வது    படம் பார்க்கும் நாம்தான். 

பிளஸ் (+)

அந்த குட்டி பெண் போகும் போது பேய் பிடித்த பொம்மை  தலை திருப்பி பார்க்கும் அந்த காட்சி மட்டும்.

மைனஸ் (-)

1980 க்களின் திரைகதை.
கதை, கிளைமாக்ஸ்.
அழுத்தம் இல்லாத காட்சிகள்

VERDICT  :  தலை வலி.

RATING : 2.1 /10

EXTRA பிட்டுகள்.  

இந்த படத்தை பெங்களூர் போரம் ஷாப்பிங் மாலில் உள்ளே PVR மல்டி பிளக்சில் பார்த்தேன். திரையரங்கின் உள்கட்டமைப்பும் , சவுண்ட் எபெக்டும் உலக தரம். ஆனாலும்  ஒரு பாப்கார்ன் 160 ரூபாய் என்பது பகல் கொள்ளை.

என் வரிசயில் அமர்ந்திருந்த இரண்டு டீன் ஏஜ் பெண்கள், படத்தில் எதாவது பயமுறுத்தும் காட்சி வரும்போது, இரண்டும் கத்திக்கொண்டே  ஒன்றைஒன்று   கட்டி பிடித்துக்கொண்டது  அவ்வளவு அழகு. படத்தை விட, அவர்களது லூட்டிகள் படு சுவாரசியம்.

Monday, April 19, 2010

தோனி அடித்த அடி - IPL SPECIAL


 நல்ல கிரிக்கெட் தெரு முனையில் விளையாடப்பட்டாலும் நின்று ரசிப்பவன் நான். ஆனால் IPL போட்டிகளை ஆரம்ப காலங்களில் நான் விரும்பவில்லை. காரணங்கள் ஒன்றல்ல நூறு. 

கபில் தேவ் என்னும் சாதனையாளன் புதிய கிரிக்கெட் வீரர்களை கண்டறிவதற்காக ICL என்று ஒரு அமைப்பை தொடங்க, அதை முடக்க அவசர அவசரமாக உருவாக்கியதுதான் IPL . கபிலுக்கு மீடியா சப்போர்ட் ஏதும் இல்லை. நவீன மைதானங்கள் கிடைக்க வில்லை. பிசிசிஐ யுடன் அரசியலும் சேர்ந்து விளையாட ICL ஓரம் கட்டப்பட்டது. அந்த பார்முலாவை அப்படியே காப்பி அடித்து IPL  இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. 

ரெண்டாவது, கிரிக்கெட்டை கிரிக்கெட்டாக விளையாடாமல் பணத்திற்காக விளையாடுவது. இப்போதெல்லாம் தேசிய அளவில் விளையாடுவதற்கு  கூட யாரும் ஆர்வம் காட்டுவதில்லை. வருடம் ஒருமுறை IPL சீசனில் பங்கேற்றாலே போதும். கோடிகணக்கில் வருமானம்.டப்பு மாமே டப்பு.

மூன்றாவது நாட்டுப்பற்று. கிரிக்கெட்டை இந்தியன் ஓவ்வொருவனும் நேசிக்க  அதனுடன் இணைந்த தேசிய பற்றும் ஒரு முக்கிய காரணம். பாகிஸ்தானுடன் விளையாடும் போதெல்லாம் இரண்டுபடி அதிகமாகவே ரத்தத்தில் சுரக்கும். IPL போட்டிகளில் அதற்க்கெல்லாம் வாய்ப்பே இல்லை. அதற்க்கு பதிலாக மாநில  ரீதியாக ஆர்வம் சுருங்குகிறது.


இவை எல்லாவற்றையும் மீறி, கிரிக்கெட் என்னும் வஸ்து நம்மை வசீகரிக்க காரணம் இயல்பாகவே நம்முள் ஊறி போன கிரிக்கெட்  மீதான காதலும் அது கொடுக்கும்  ஆனந்த அனுபவமும்தான். அதுதான், IPL போட்டிகளை பார்க்கவே கூடாது என்றிருந்தவனை இப்போது ஒரு போட்டி மிச்சம் இல்லாமல் பார்க்க செய்கிறது.(குறைந்த உடையில் நிறைந்த ஆட்டம் ஆடும் சியர் GIRLS ம்  ஒரு காரணம். )

நேற்றைய சென்னை சூப்பர் கிங்க்ஸ்  ஆட்டம் , கை, கால் விரல் நகங்களை ஒரு சேர கடித்து துப்ப வைத்தது,  அரையிறுதிக்கு செல்ல வேண்டுமானால் கட்டாயம் வென்றாக வேண்டும் என்கின்ற நிலையில் பஞ்சாப் 192 ரன்களை குவிக்க பதற்றம் தொற்றிக்கொண்டது. (அனையபோகும் விளக்கு பிரகாசமாக எரியும் என்பது போல கடைசி கட்ட போட்டிகளில் இந்த பஞ்சாப் செய்யும் லொள்ளுகள் தாங்க முடியலப்பா )


ஒரு கேப்டன் என்கின்ற முறையில் தோணி ஆடிய விதம் சபாஷ். கடைசி கட்ட ஓவர்களில் பவுண்டரிகளும், சிக்சர்களும்  ஜெட் வேகத்தில் பறக்க பஞ்சாப் பந்து வீச்சாளர்கள் கண்களில் பட்டாம் பூச்சி பறந்தது . கல்லூரி நாட்களில் எங்கள் கிரிக்கெட் செட்டில் பால சுப்பிரமணியம் என்கின்ற நண்பன் இருந்தான். தூங்கும்  நேரம் தவிர மிச்ச நேரம் கிரிக்கெட். அவனை நாங்கள் எல்லோரும் "காட்டான்" என்றே விளிப்பது வழக்கம். ஏனென்றால் அவன் அடிக்கும் சிக்சர்கள் நாங்கள் ஆடும் மைதானத்தை தாண்டி, அதற்க்கு பிறகு இருக்கும் ஒரு சிறிய மைதானத்தையும் கடந்து மெயின் ரோட்டில் சென்று லேன்ட் ஆகும். அப்படி ஒரு காட்டு அடி.  நேற்று தோணி ஆடிய விதமும் அப்படியே.. முஷ்டியே  மடக்கி கொலை வெறியுடன் எதிரியின் முகத்தில் ஓங்கி குத்துவதை போல கடைசி ஓவரில் அறைந்த அந்த  சிக்ஸர்  உடலின் அட்ரலின் மொத்தத்தையும் தூண்டி மயிர் கால்கள்  சிலிர்த்ததை நன்கு உணர முடிந்தது. என்றும் மறக்கவே முடியாத ஷாட். பாவம், இர்பானுக்குதான் நேற்று சோறு இறங்கியிருக்காது. 

வாத்தியரே, நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்றுதான், இதே அடியே வரும் உலககோப்பையிலும் காட்டுங்கள்...ப்ளீஸ்... கோப்பை நிச்சயம்.

ஒரு நல்ல கிரிக்கெட் ரசிகன் பார்வையில் , இப்போதைக்கு மும்பையும், பெங்களூரும் மிக சிறப்பாக ஆடி வரும் அணிகள்.  சச்சின், உத்தப்பா இருவரது ஆட்டமும் அட்டகாசமாக இருக்கிறது. இதில் எதாவது ஒரு அணிக்கே கோப்பை வெல்லும் வாய்ப்பு அதிகம். பார்ப்போம்.

Friday, April 16, 2010

வாடா, அம்பா சமுத்திரம் அம்பானி - இசை விமர்சனம்

 வாடா.

படத்திற்கு ஒரு பாடல்  மட்டும் ஹிட் கொடுக்கும் இமான் இதில் " மெஸ்மரிசம் " என்னும் பாடலில் மெஸ்மரிசம் செய்கிறார். நல்லதொரு ரொமாண்டிக் டூயட் இது.

மகா கவி பாரதியின் "அக்னி குஞ்சொன்று கண்டேன்"  ஷங்கர் மகா தேவனின் குரலை ஒத்த MLR கார்த்திகேயன் குரலில் கவர்கிறது. பாரதியின் வரிகளுக்காக கேட்கலாம். ஆனால் சுந்தர் C படத்தில் இந்த பாடலா என்பதுதான் பீதியே கிளப்புகிறது. பாடலின் பின்னணியில் சுந்தர் C பிகினியில் ஓடும் ஹீரோயினை மணல்  தெறிக்க துரத்தாமல் இருந்தால் கோடி புண்ணியம். 

சுந்தர்.C,  இமானின் பரம்பரை பழக்கமாக ஒரு ரீ-மிக்ஸ் . "என்னடி ராக்கம்மா " இந்த ரீ மிக்ஸ் கலாச்சாரத்தை இவர்கள் விடவே மாட்டார்களா.?  

மற்றபடி எண்ணிக்கைக்கு பாடல்கள் அவ்வளவே... 

VERDICT  : 2 STARS
-------------------------------------
அம்பா சமுத்திரம் அம்பானி 

கருணாசின் இசை அவதாரம்.. "பூ பூக்கும் தருணம் " கருணாசின் பழைய பக்கா பாப் சாங். அப்படியே இந்த படத்திற்காக உருவியிருக்கிறார். ஆல்பத்தில் இந்த பாடல் மட்டுமே கேட்கும்படி இருக்கிறது. மற்றவை.. ம்ம்ம்ஹூம். 

இதில் கொடுமை என்னவென்றால், இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் வாங்கியிருக்கிறது. நொடிக்கொருமுறை இந்த பட  பாடல்களை ஒலிபரப்பி நம் காதுகளில் ரத்தம் வர வைக்க போகிறார்கள். தமிழ் நாட்டு மக்களுக்கு ஒரு பெரும் சவால் காத்திருக்கிறது. 

VERDICT  : 1 .5  STARS

Wednesday, April 14, 2010

மதராச பட்டினம், கோரிப்பாளையம்- இசை விமர்சனம்

மதராச பட்டினம்


அறிமுக படத்திலேயே அசத்தலான பெயர் வாங்கிய G .V  பிரகாஷ் அந்த பெயரை காப்பாற்ற படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறார்.  பீரியட் பிலிம் என்பதாலோ என்னவோ இசை கருவிகளில் நிறையவே வித்தியாசம் காட்டியிருக்கும் பிரகாஷ் பச்சக்கென கேட்டதும் ஒட்டிக்கொள்ளும் மெட்டுக்களை போட்டிருந்தால்...அவருக்கு இது ஒரு முக்கியமான ஆல்பமாக அமைந்திருக்கும். 

"பூக்கள் பூக்கும் தருணம் " ரூப் குமார் ரத்தோட் குரலில் அழகான மெலடி. ஆல்பத்தில் சிறப்பான பாடலும் இதுவே. "வாம்மா துரையம்மா" பாடலில் எப்போதும் தமிழை கடித்து தின்று துப்பும் உதித் நாராயண் கொஞ்சம் புரியும் படி பாடியிருப்பது ஆறுதல். M.S.V., சீயான் விக்ரம், நாசர் சேர்ந்து பாடியிருக்கும் "மேகமே" கேட்க கேட்க பிடிக்கலாம். தமிழில் மிக சிறப்பான பாடகர்கள் இருந்தாலும், ஏன் வட இந்திய பாடகர்களை அதிக அளவு பயன்படுத்துகிறார்கள் என்பது தெரியவில்லை. இந்த ஆல்பத்திலும் பெரும்பாலோர் ஹிந்தி பாடகர்கள். ஹிந்தியில்  முக்கிய பாடகரான சோனு நிகாம் தமிழில் "ஆருயிரே" என்பதற்கு பதிலாக "ஹருயிரே" என்கிறார்.  முடியல...

பாடல்கள் நீளம் அதிகம் என்பதால்,  தியேட்டரில் தம் அடிக்கும் ஆர்வத்தை தூண்டும் அபாயம் இருக்கிறது. 

பாடல்களை  ஹிட் லிஸ்டிலும் சேர்க்க முடியாது... கடி லிஸ்டிலும் சேர்க்க முடியாது.. பிரகாஷிற்கு இது ஒரு AVERAGE ALBUM. அவ்வளவே. 

G.V. - STILL HAS TO BE GO......
RATING : 2.5 STARSகோரிப்பாளையம்

 ஆட்டோகிராப் படத்திலிருந்தே சபேஷ்- முரளி மீது ஒரு தனி மரியாதை இருந்தது. அதற்க்கு பிறகு இன்னமும் சரியான களம் கிடைக்காமல் இருக்கிறார்கள்

ஆல்பத்தில் அட்டகாசமான மெலடி, "என்ன இந்த மாற்றமோ" வெயில் பட "உருகுதே " சாயல் இருந்தாலும்,  கார்த்திக் குரலில் கேட்டவுடன் பிடித்து போகிறது. அதே போல "அழகு காட்டேரி" பாடலும்...சபேஷ் முரளி பெயர் சொல்லும். 

 இதற்கு பிறகு வரும் பாடல்கள் எல்லாம் ரண களம். "சிறுக்கி வாடி என் சிட்டு" விசிலடிச்சான் குஞ்சுகளை ஏகத்திற்கும் உசுப்பேற்றும் பாடல். 

அடுத்த பாடல்..மெட்டை விட்டு தள்ளுங்கள்.. பாடல் வரிகளை கவனியுங்கள்.. "
"ஓட்டை உடைச்சல் ஈயம் பித்தளைக்கு பேரிச்சம் பழம்
என் உசிரை புழியும் பொண்ணு கலரு அரஞ்சு பழம் " 
எவ்வளவு கருத்தாழம் மிக்க வரிகள்.. தமிழன் செத்தான். 

"ஆராரோ கேட்டதில்லை", தூக்கம் வராதவர்கள் கேட்டால் உடனடி தூக்கம் உத்தரவாதம்.

சபேஷ் முரளி மெலடிகளில் மட்டும்  கவனம் செலுத்தினால் எங்கேயோ போகலாம்.

RATING  : 2.4 STARS

Monday, April 12, 2010

என்னுயிர் காதலிக்கு...


 • பார்க்கும் பெண்கள் எல்லாம் உன்னை ஞாபகபடுத்தினாலும்... உன் வெட்கம் கலந்த புன்னகை யாருக்கும் வாய்க்காதது.. அதில் மிளிரும் காதல் எனக்கானது என்பதில் எனக்கு சற்று கர்வமே...

 • நீ பேசும் போது உன் முக பாவங்களையே ரசித்துக்கொண்டிருப்பதால் வேகமான ரயில் பெட்டிகளை போல கடந்து விடுகிறது நீ சொல்லி சென்ற விஷயங்கள்....  நீ அதை திருப்பி கேட்கும் பொழுது அசடு வழிவதில் உள்ள சுகம் ... சொர்க்கம்

  • குறுந்தகவல்களில் கொஞ்சி பேசும் நீ... நேரில் பார்க்கும் போது மௌனமாகி விடுகிறாய்... உள்ளுக்குள் கெஞ்சுகிறேன் நான்.. ஒரு முறையாவது கொஞ்சேன்....!

  • வேறு பெண்களை பற்றி சிலாகித்து  பேசும்பொழுது.. பார்வையால்  எரிக்கிறாய் நீ ...  சுகமாய் எரிவது நானும்....  சுட்டேரிந்து போவது.. பாவம் அந்த பெயர் தெரியா பெண்களும்..
   
  • பின் சீட்டில் அமர்ந்து என் தோள்களை இறுக பற்றிகொள்ளும் போது.. நான் த்ராட்டிலை திருகும்  வேகத்தில் தெறிக்கின்றன நமக்குள்  இருக்கும்  காதல்களும்... மறைந்திருந்த   உற்சாகங்களும்....

  • உதடுகளை ஈரப்படுத்திக்கொண்டே இருக்கிறேன்..  உன் உதடுகளுடனான சந்திப்பு எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்கின்ற பேராசையுடன்.....

  Friday, April 9, 2010

  டாக்டர்.குண்டு ராவ், M.B.B.S

    "ஐயோ" என  இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு வெளியேறிய என் கூக்குரல் என் வீட்டை கடந்து இரண்டாவது தெரு திருப்பத்தில் நுழைந்து  கரைந்தது. மாவு அரைக்கும் மெஷினை ஒத்த குறட்டை ஒலியுடன் தூங்கிகொண்டிருந்த   என் மனைவி கட்டில் அதிர எழுந்தமர்ந்து  நீண்ட பெரு மூச்சுடன் என்னை முறைத்தாள்.

  "ஏன்னா  இப்படி தினம்  அலும்பு பண்றேள், ராத்திரியில் கூட இந்த பொம்பளை அவ புருஷனை போட்டு அடிச்சு கொடுமை பண்றாள்னு பக்கத்தாத்துல இருக்கறவா எல்லாம் என்னை சந்தேகமா பாக்கறா... "

  "முடியலேடி ரமா... வலி பிராணனை போறது..." இந்த பைல்ஸ்  இப்படி படுத்தும்னு நினைக்கல..."

  "நல்ல டாக்டர் கிட்ட காட்டுங்கோன்னு சொன்னா  கேட்க மாட்டேன்கறேள். ரோட்ல போறவன்கிட்ட காசு குறைச்சல்னு  களிம்பு வாங்கி தடவினேள்...இப்போ பாருங்கோ அப்பளம் போல பொரிஞ்சு கிடக்கு"

  மருத்துவமனை செல்வது என்பது ஆதி காலத்தில் இருந்தே எனக்கு பிடிக்காத விஷயமாக இருந்தது... அதன் டெட்டால் வாசமும், வலி நிரம்பிய முகங்களும் என்னை மருத்தவமனையே விட்டு நூறு அடி தள்ளியே வைத்திருந்தது. ஆனால், இனிமேலும் முடியாது. பின் புறத்தில் சிவப்பு விளக்கு எரிகிறது.  விடிந்ததும், டாக்டரிடம் காட்டியே தீருவது என முடிவெடுத்தேன்.

  ஆபிஸ் செல்லும் வழியில், டாக்டர்.குண்டு ராவ், M.B.B.S  எனும் பெயர் பலகை, என்னை உள்ளே வா...  வா.. என்றழைக்க ...வண்டியே  நிறுத்திவிட்டு உள்ளே போனேன்.

  கிளினிக் கூட்டம் எதுவுமின்றி அமைதியாய் இருந்தது. , நான் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்தேன். அந்த அறை மிக மிக எளிமையாக காட்சியளிக்க .  டாக்டர் குண்டு ராவ் ஒல்லியாக இருந்தார். வழுக்கை தலை, வெண்மையான சட்டை, மூக்கு கண்ணாடி உதவியுடன் எதோ ஒரு ஆங்கில புத்தகத்தை படு கவனமாக படித்துக்கொண்டிருந்தவர் என் சத்தம் கேட்டு நிமிர்ந்தார். சில நொடிகள் என்னை உற்று பார்த்தவர் " PLEASE COME IN" "PLEASE BE SIT" என்றார்.  நான் அழுத்தம் கொடுக்காமல் நாற்காலி முனையில் அமர்ந்ததும்  " சொல்லுங்க.. WHATS YOUR PROBLEM" 

  நான், என்னுடைய பைல்ஸ் பிறந்து வளர்ந்து  வேரூன்றிய கதையே ஆழ்ந்த சோகத்துடன் சொல்லி முடிக்க , அன்பு நிறைந்த கண்களோடு என்னை பார்த்தவர், மிருதுவாக " கவலை படாதீங்க '' நான் பார்த்துக்கிறேன்" உலகத்தில் குணப்படுத்த முடியாத நோயென்று எதுவுமே இல்லை. உங்கள் பிரச்சனை சீக்கிரம் தீரும், நான் இருக்கிறேன், அதற்கு மேல் அந்த கடவுள் இருக்கிறார் " என்றார். அந்த நொடியில் வானத்தில் இருந்து தொபுகடீர் என குதித்த தேவ தூதன் போல எனக்கு அவர் காட்சியளித்தார். இவரை நம்பி என் பின் புறம் மட்டுமல்ல, மொத்த சரீரத்தையும் ஒப்படைக்கலாம் போல இருந்தது.


  என் பெயரை கேட்டு விட்டு,  வேக வேகமாக , ப்ரிஸ்கிரிப்ஷனில் கிறுக்கியவர்... "இந்த மருந்தெல்லாம் சாப்பிடுங்க.. ரெண்டு நாளில் குணமாயிடும்" .

  பிரச்சனைக்குரிய பிரதேசத்தை  பார்க்காமலே மருந்தெழுதி கொடுத்த அவரது அறிவினை வியந்தவாறே  கிளம்ப எத்தனித்தேன்.

  "கன்சல்டேஷன் பீஸ் 200  " என்றார் குண்டு ராவ்.

  ப்ரிஸ்க்ரிப்ஷனில் குறிப்பிட்டிருந்த மெடிக்கல் பூட்டப்பட்டிருக்க,  வேறு மெடிகல்களில் கேட்டதில்   உதடு பிதுக்கி, தலை ஆட்டி,  குறிப்பிட மருந்து இல்லை என்றனர். எனக்கேன்னோவோ மொத்த ஊரும், என் பைல்ஸ் பிரச்சனை சரியாக கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது போல தோன்றியது. ஒரு மிக பெரிய யுத்தம் நடந்த பகுதி   போல என் பின் புறம் மாறி விட்டிருக்க , நேரமானதால் மாலை பார்த்து கொள்ளலாம் என பல்லை கடித்துக்கொண்டு  ஆபீஸ்க்கு விரைந்தேன். மாலையில், கடை வீதி முழுதும் அலைந்து  திரிந்தும் எந்த மருந்து கடையிலும் டாக்டர் சொன்ன மருந்துகள் கிடைக்க வில்லை.

  மருந்து கிடைக்காத கவலையில் , அடுத்த நாள் டாக்டரை பார்க்க அவர் கிளினிக்கிற்கு சென்றேன். குண்டுராவ் இப்போதும் அதே கவனத்துடன் அதே ஆங்கில புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். என்னை பார்த்தவர், உள்ளே வாங்க, நான் சொன்ன மெடிசின்ஸ் எல்லாம் சாப்டீங்களா என்றார்.

  எங்க டாக்டர், எந்த கடையிலும் நீங்க எழுதி கொடுத்தது கிடைக்கலை. - டாக்டர் வலி உயிர் போறது.. கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்"


  "அப்படியா.. I AM EXTREMLY SORRY "அந்த டேபிள் மேல ஏறி படுங்க..."

  டேபிள் மேல ஏறி படுத்தவாறே " பேன்ட்டை கழட்டிடட்டுமா டாக்டர் "

  " நோ, நோ, அதெல்லாம் கழட்ட கூடாது" 

  உட்கார்ந்த இடத்தில் இருந்து என்னை பார்த்தவாறே " கொஞ்சம் வலது பக்கம் திரும்புங்க  ஓகே. " இப்போ இடது பக்கம் " .

  "OK , இறங்கிகோங்க... "

  ஒன்றும் புரியாமல் இறங்கி அவர் எதிரில் அமர்ந்தேன்.

  ஒன்னும் கவலைபடாதீங்க...என்று என் கைகளை பற்றிகொண்டவர் கீதையில் இருந்தும், குண்டலகேசியில் இருந்தும் சில உதாரணங்கள் சொல்ல ஆரம்பித்தார்.  நான் அமர்ந்து கொண்டிருப்பது கிளினிக்கிலா அல்லது பெருமாள் கோவில் கதா காலட்சேப கூட்டத்திலா என்று மெலிதாய் சந்தேகம் தோன்ற..

  டாக்டர், இதெல்லாம் சரிதான், ஆனால் என் வலிக்கு என்ன தீர்வு. உடனடியா இதுக்கு வைத்தியம் பாருங்கோ என்றேன்.

  விநாடி நேரம் யோசித்தவர்... அப்ப  ஆபரேஷன் பண்ணிரலாம்... ஒன்னும் பயப்படதீங்க...

  டாக்டர், நீங்க ஆபரேஷன் பண்ணாலும் சரி, சிசேரியன் பண்ணினாலும் சரி,,, வலி நிக்கணும் அவ்வளவே..

  "ஓகே, நான் சில புக்ஸ் எல்லாம் சொல்றேன். நைட்டே  உட்காந்து படிச்சுட்டு வந்துடுங்க... ஒரு வீடியோ சொல்றேன்.. அதையும் நல்லா பாத்துடுங்க.."

  எதுக்கு டாக்டர்... ?

  பைல்ஸ் உங்களுக்குதானே?

  ஆமாம்?

  அப்போ நீங்கதான் படிக்கணும்,,  இதெல்லாம்  பைல்ஸ் ஆபரேஷன் எப்படி செய்றதுங்கற புக்ஸ். நல்ல கவனமா படிங்க.. நாளைக்கு வந்து நீங்களே பண்ணிக்கலாம்.. ரொம்ப ஈஸி. ஒன்னும் பயப்படதீங்க..

  எனக்கு தலை கழண்டு கீழே விழுவது போல இருந்தது, பின் புறத்தில் சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிக்க, இனிமேலும் இங்கிருப்பது உசிதம் இல்லையென சரி டாக்டர் நான் கிளம்பறேன் என்றவரே எழுந்தேன்...

  "கன்சல்டேஷன் பீஸ் 200  " என்றார் குண்டு ராவ்.

   எனக்கு ஆத்திரம் உச்சியில் ஏற.. "எனக்கு நானே ஆபரேஷன் செய்ய  உமக்கு ஏன்யா 200  அழுவனும், நீர் என்ன வைத்தியம் பார்த்தீர்" என்றேன். 

  இதை கேட்டு ,  கோபத்தில் டேபிளை தள்ளிக்கொண்டு வெளியே  எழுந்து வந்தவரை கண்டு ஒரு கனம் விதிர்த்து நின்றேன்.     பேன்ட்  ஏதும் போடாமல் வெறும் அரை டிராயருடன், காட்சியளித்த குண்டு.. வெறி கொண்ட வேங்கை போல என் மீது பாய்ந்து " மாட்டிகீனியா, ஆபரேஷன் பண்ணினாத்தான் பீஸ் குடுப்பியா, வா, வந்து குப்பற படு, ஆபரேஷன் பண்றேன்.பம் பம் பஜக் பம்" என்றது.  

  நிலைமையின் விபரீதம் முழுதாய் எனக்கு உரைக்க, ஐயோ, ஒரு பைத்தியத்திடம் இரண்டு நாள் வைத்தியம் பார்த்திருக்கிறேன் என அதிர்ந்து விலக  நினைத்து, குண்டுவுடன் இரண்டு மூன்று குட்டி கரணங்கள் அடித்து, ஒரு சிக்கலான பிணைப்பில் குண்டு என முகம் நோக்கி நெருங்கி, படு ஆர்வமாய் என் மூக்கை கடிக்க... ஐயோ.......

  அரசு மருத்துவமனையில் இருந்த என்னை பார்த்து கண்ணில் நீர் வர சிரித்த என் அலுவலக சகாக்கள், டேய், அந்த குண்டு ராவ்  1 மாசத்துக்கு முன்னாடியே அந்த இடத்தை விட்டு காலி பண்ணிட்டு போயிட்டாராம்.. அங்க உக்காந்துட்டு இருந்தது மேல் மாடியில் குடியிருந்த அரை லூசு. அது கிட்ட போய் ட்ரீட்மென்ட் எடுக்க உனக்கு என்ன தைரியம். அந்தாளை நம்பி குப்பற படுத்திருந்தா உன் கதி என்ன ஆயிருக்கும்.... சிரிப்பொலியில்  ஆஸ்பத்திரி சின்னாபின்னமாக.. நான் உங்களை பார்த்து பரிதாபமாக கேட்கிறேன்.. என் பைல்ஸ்க்கும், மூக்கு கடிக்கும் ஒருசேர வைத்தியம் செய்யும் நல்ல டாக்டர் யாராவது இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.......

  ---------------------------------

  கதை கடியாக இருந்தாலும் கமெண்ட் இடவும்.

  Tuesday, April 6, 2010

  பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....


  பழனி -  தமிழ் கடவுள் குடி கொண்டிருக்கும் புண்ணிய  ஸ்தலம்.  தமிழ்நாட்டின் முக்கிய அடையாளம். வருடத்திற்கு 70 லட்சம் மக்கள் வந்து வழிபடும் இடத்தில் பக்தர்களிடம் வழிப்பறி கொள்ளை போல நூதன முறைகளில் பணம் பிடுங்கும் செயல்கள் இங்கு அதிகம். நமக்கு ஒரு கஷ்டம்னா, மன நிம்மதிக்காக  கோயிலுக்கு போறோம். ஆனா அங்க போனா...  ஊர்ல இருக்கிற அத்தனை கஷ்டமும் சுத்தி நின்னு டான்ஸ் ஆடினா எப்பிடி இருக்கும். அந்த நிலைமைதான்.. இங்கு வர்றவங்களுக்கு... முடிந்த வரை எச்சரிக்கையாக இருக்க சில குறிப்புகள்.

  வழிப்பறி # 1 
   எதாவது ஒரு கடையில போய் பூஜை சமான் எல்லாம் வாங்கறீங்க, எல்லா பொருட்களையும் PACK  பண்ணி கொடுத்துட்டு, 150 ரூபாய் சார் என்று சொல்லியபடியே அனுமார் வால் போல நீளமான ஒரு லிஸ்டை கொடுப்பார். லிஸ்டை CHECK  பண்ணாமல் பணம் கொடுத்தால்.. பணம் போயே போச்.. ஒருவேளை நீங்கள் லிஸ்டை CHECK செய்தால்.. உங்களுக்கு உங்கள் தமிழ் மொழியே மறந்து போக கூடும். சாம்பிளுக்கு ஒரு லிஸ்ட். 

  பூ         -   XXXXX 
  பழம்   -   XXXXX 
  சூடம்   -  XXXXX
   விபூதி - XXXXX
  கனி      - XXXXX
  வாழை - XXXXX
  தேங்காய் - XXXX
  ஊது பத்தி - XXXX
  எலுமிச்சை -XXXX
  வில்லை     -XXXX
  மலர்            - XXXX
  சந்தனம்      - XXXX
  கற்பூரம்       - XXXX
  ஜவ்வாது     - XXXX
  திருநீறு        - XXXX
  மாலை        - XXXX
  நன்றாக கவனித்தால் மட்டுமே விளங்கும், ஒரே பொருளை  இருமுறையோ , மூன்று முறையோ லிஸ்டில் இணைத்திருப்பது. எப்படியெல்லாம் யோசிக்கறாங்கப்பா...

  வழிப்பறி # 2

  தேமேயன கோவில் நோக்கி சென்று கொண்டு இருப்போம், பின்னால் இருந்து மிக அதட்டலாய் ஒரு குரல் நம்மை  அழைக்கும். திரும்பி பார்த்தால் அவ்வளவே.. அழைத்த நபர் " என்ன சார், செருப்பு காலோடு கோயிலுக்கு போறீங்க.. இங்க வந்து விட்டுட்டு போங்க சார்" என கட்டளை இடுவார். நம்ம்ம்பி போய் செருப்பை விட்டவுடன் , ஒரு டோக்கனை கொடுத்து "சார் பத்து ரூபா " என்பார். சரி தொலையட்டும் என கொடுத்துவிட்டு  1 KM சுடும் வெய்யிலில் நடந்து வந்து பார்த்தால், கோவில் முன்பு, காலணிகள் இலவசமாய்  பாதுகாக்கும் இடம் என்கின்ற பெயர் பலகை உங்களை பார்த்து நமுட்டு சிரிப்பு சிரிக்கும்.

  வழிப்பறி - 3 

  படியேறி கொண்டுஇருக்கும் போதே, பக்தி பழமாக கையில் தட்டோடு  ஒரு நபர் எதிர்ப்பட்டு "  சார் ஒரு நிமிஷம்" என்பார், என்ன, ஏது என்று கேட்பதற்குள்,   எதோ மந்திரம் சொல்லிக்கொண்டே தட்டில் இருந்த விபூதி, சந்தனம், குங்குமும் போன்றவற்றை உங்கள் நெற்றியில் வைப்பார். ஆஹா.. என்ன ஒரு பக்தி என நீங்கள் வியப்பதற்குள்.. சார் பத்து ரூபா கொடுங்க என்பார், எதற்கு என்று கேட்டால் " பிரசாதம் வச்சு விட்டதற்கு " என்பார், உடனே கொடுத்து விட்டால்..பிரச்சனையில்லை. வாதம் செய்தால், அவ்வளவே, மந்திரம் சொன்ன வாய், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகளை பிரயோகம் செய்யும். .

  இது போலவே, மொட்டை போட்டு வருபவர்களை குறி வைத்து ஒரு கூட்டம் காத்திருக்கும். எங்கிருந்தோ பாய்ந்து வந்து மொட்டையில் சந்தனமோ அல்லது அதை போல வேறேதோ.. தடவிவிட்டு ,  "சார் பத்து" என்பார்கள்... மொட்டையில்  சந்தனம்  தடவினா.. ஜில்லுன்னு  இருக்கும் சார்"  என்கின்ற உபதேசத்துடன்.
   
  வழிப்பறி - 4 

   எல்லோருக்கும் படியளந்து விட்டு மேலேறினால், நமக்காகவே ஒரு பூசாரி காத்திருப்பார்.. "வாங்கோ வாங்கோ " லைன்ல போனா தரிசனம் ஆக 3 மணி நேரம் ஆயிடும். 50 கொடுத்துடுங்கோ.. எல்லோர் பேர்லயும் அர்ச்சனை பண்ணி எல்லோரையும், SHORT CUT-ல முருகன் கிட்டே கொண்டு போய் சேர்த்துடறேன் என்பார். கொஞ்சம் சலனப்பட்டு, பணம் கொடுத்தவுடன், அர்ச்சனை தட்டை கையில் வாங்கி வைத்துகொண்டு எல்லோரும் பேஷா ஒரு முறை பிரகாரத்தை சுத்தி வந்துடுங்கோ" என்பார். ஒரு முறை அல்ல அதற்க்கு பிறகு நூறு முறை சுற்றி வந்தாலும் அந்த பூசாரி நம்  கண்ணில் படமாட்டார். GREAT ESCAPE.

  இன்னும், மொட்டை அடிக்கும் இடங்களில், பஞ்சாமிர்த கடைகளில், மலை ரயிலில் என ஏகப்பட்ட இடங்களில் இவர்களின் திருவிளையாடல்கள் தொடர்கின்றன. கூட்ட நெரிசல்களில் பிக் பாக்கெட்டுகளும் மிக சுதந்திரமாக உலாவுகின்றனர்.  என்னடா இவன் பத்து, இருபது பணம் போறதுக்கெல்லாம் பதிவு போடறனே என நினைக்க வேண்டாம். பணம் மட்டுமல்ல, வரையறையற்ற அத்து மீறல்களால் நாம் இழப்பது நம்முடைய நிம்மதியையும் தான்.

  வரலற்று பிரசித்தி பெற்ற கோயில்களில் , பராமரிப்பும், பாதுகாப்பும் இன்றியமையாதது. அரசும், கோவில் நிர்வாகமும்  வசூலை மட்டும் கவனிக்காமல்.. வரும் பக்தர்களையும் அவர்களின் சிரமங்களையும் கருத்திற் கொண்டால் நலம்.

  SO , பழனி செல்பவர்கள்.. கவனம் ப்ளீஸ்.....

  Saturday, April 3, 2010

  பையா - விமர்சனம்


  லிங்கு மீது எனக்கு ஒரு விதமான பயம் உண்டு. ரன், சண்டை கோழி போன்ற பரபரக்கும் படங்களை கொடுத்து கை தட்டவும் வைப்பார். அதே சமயத்தில் ஜி, பீமா போன்ற படங்களை  கொடுத்து சீட்டை பிராண்டவும் செய்வார். ஆனால் இம்முறை ஒரு CLEAN ENTERTAINMENT கொடுத்திருக்கிறார். தமிழில் ROAD TRIP  படங்கள் மிக குறைவு.  லிங்குவின் இந்த பயணம் ACTION, சேஸிங், காதல், என எல்லா தளங்களிலும் பயணிக்கிறது.

  பயணம் என்பது எல்லோருக்கும் பிடித்தமான விஷயம். எதிர்பாராத ஆச்சர்யங்களையும்  புது புது அனுபவங்களை கொடுக்கும் பயணத்தை யாருக்குதான் பிடிக்காது. தான் நேசிக்கும் பெண்ணுடன் நீண்ட பயணம் செய்யும் வாய்ப்பினை பெற்ற இளைஞன்  சந்திக்கும் சவால்களும்,   சாகசங்களுமே கதை. அதில் காதலை சர்க்கரை தடவி கொடுத்திருக்கிறார்கள்.. 

  பெங்களூரில் பார்த்த முதல் பார்வையில் காதல் வயப்படும் கார்த்தி, பிடிக்காத கல்யாணத்திலிருந்து தப்பித்து மும்பையில் உள்ள பாட்டி வீட்டில் சேர துடிக்கும்  தமன்னா.  இருவரையும்  விதி,  பயணம்  என்னும் ஒரு புள்ளியில்  இணைத்து வைக்க, பின்னால் துரத்தும் வில்லன்கள் கூட்டம், சேஸிங் என ஆக்சிலேட்டரை அட்டகாசமான டெக்னிக்கல் சமாச்சரங்களுடன் விரட்டியிருக்கிறார்கள்.

  அதே அலட்சிய பருத்தி வீரன் கார்த்தி. மாடர்ன் உடைகளில் வளைய வந்தாலும், தலை ஆட்டி பேசும் ஸ்டைலும், நடையும், பருத்தி வீரன் உடல் மொழியினை  சில இடங்களில்  ஞாபக படுத்துகிறது. இருந்தும் ஆள் ஜம்மென்று இருக்கிறார். பெண்களுக்கு இன்னொரு கனவு கண்ணன் ரெடி. தமன்னாவை அவர் பாட்டி வீட்டில் விட்டு வந்ததும்,  பிரிவின் வலியோடு  தன் நண்பியுடன் போனில் பேசி கலங்கும் இடத்தில் அழகாய் ஸ்கோர் செய்கிறார்.

  தமன்னா மாதிரி அழகான பிகர்  கூட வருவதானால் பாம்பே என்ன பாகிஸ்தான் வரைக்கும்   கூட கார் ஓட்டலாம்.  அம்மணி அம்புட்டு அழகு.  ஆனால், END CARD போடும் சமயத்தில் கார்த்தியின் நண்பர்கள் வந்து அவனது காதலை சொல்லும் வரை அவன் காதலை புரிந்து கொள்ளாத மக்கு பெண்ணாக இருப்பது  பரிதாபம். காதலின் பிரிவை இவரே  உணர்வது போல அமைந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். 

  கார்த்திக்கு  இணையான படத்தின் இன்னொரு ஹீரோ நம்ம யுவன். அதகள படுத்தியிருக்கிறார். படம் சற்றே தோய்ந்த வேளையில் " என் காதல் சொல்ல வார்த்தை இல்லை" என யுவன் ஆரம்பிக்கும் போது, மொத்த தியேட்டரும் நிமிர்ந்து உட்கார்கிறது. யுவனுடன் சேர்ந்து வரிக்கு வரி  பாடுகிறது.  யுவனுடன் சேர்ந்து காதலில் கரைகிறது. CONGRATS YUVAN.  பின்னணி இசையில், வில்லனை அடித்து விட்டு கார்த்தி நடக்கும் போது வரும் எலெக்ட்ரிக் கிட்டார் பீட் பிரமாதம்.

  பயணங்களின் போது  சாலையில் கடந்து செல்லும் மரங்களை போல, படம் முழுதும் மெல்லிய நகைச்சுவை வசனங்களூடே கடக்கிறது. உபயம் : பிருந்தா சாரதி. ஒரு நல்ல எழுத்தாளர் நல்ல வசனகர்த்தாவாகவும் மிளிர்கிறார்.

  மதியின் ஒளிப்பதிவு  சேஸிங் காட்சிகளில் பிரமிக்க வைக்கிறது. ஆண்டனியின் எடிட்டிங்கும் அப்படியே. கலை : ராஜீவன், சுத்துதே சுத்துதே பாடல் இவருக்கு மைனஸ். அசல் எது, நகல் எது என பிரித்தறிய முடியாதவாறு ஒரு கலை இயக்குனரின் பணி இருக்க வேண்டும். பாடலில் செட்டிங் வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. 

  படத்தின் மைனஸ், சண்டை காட்சிகளில் தென்படும் மிதமிஞ்சிய ஹீரோயிசம். 2 டஜன் அடியாட்களை ஹீரோ உதைத்து  பந்தாடும் போது நம் நெஞ்சின் மீதும் ஏறி மிதிப்பது போல இருக்கிறது. அதே போல வில்லனின் பங்களிப்பும் படு மோசம்.லிங்கு தனது வெற்றி படங்களிலிருந்து சில காட்சிகளை உருவி  அப்படியே பயன்படுத்தியிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

  எனினும், ஒரு 2 1/2 மணி நேர டைம் பாஸ் செய்வதற்கு இந்த படம் உத்தரவாதம். 
  பிளஸ் (+)
  இசை, 
  வசனம் 
  படமாக்கப்பட்ட விதம் 
  ஒளிப்பதிவு 
  கார்த்தி,தமன்னா

  மைனஸ் (-)
  சண்டை காட்சிகளில் தென்படும் மிதமிஞ்சிய ஹீரோயிசம்
  சோப்ளாங்கி வில்லன்,
  பழைய படங்களை நினைவூட்டும் காட்சிகள் 
  சாதாரணமான கிளைமாக்ஸ்
  VERDICT :பையா - A CLEAN ENTERTAINER

  RATING : 4.9/10

  EXTRA பிட்டுகள் 

  கோவையில் ISO 9001 அங்கீகாரம் பெற்ற  செந்தில் குமரன் தியேட்டரில் படம் பார்த்தது நல்ல விஷயம். புகை பிடித்தாலோ, எச்சில் துப்பினாலோ கழுத்தை  பிடிக்கிறார்கள். 12 ரூபாய் பெப்சி 12 ரூபாய்க்கே கிடைப்பது ஆச்சர்யம். 

  இரவு நைட் ஷோ முடிந்து வரும் போது, ஒரு போலீஸ்காரரிடம் சிக்கி கொண்டு பொழுது போவதற்காய் அவர் என்னிடம் முழு கதையையும் சொல்ல சொல்லி கேட்டது மிக கொடுமை. அதை தனி பதிவாகவே போட வேண்டும். 
  ------------------
  பதிவை படித்துவிட்டு கமெண்ட் அடிக்காமல் போனால் உம்மாச்சி கண்ணை குத்தும். சத்தியம்.

  you might like this also...

  Related Posts with Thumbnails