Saturday, December 24, 2011

ராஜபாட்டை - விமர்சனம்

நம்பிக்கையான இயக்குனர் என நம்ம்ம்ம்பி முதல் நாளே படம் பார்க்க போனால் காலை வாரி விட்டு முகத்திலேயே மிதிப்பது தமிழ் சினிமாவின் சாபக்கேடுகளில் ஒன்று. ராஜபாட்டையும் அந்த  பாதையில்... 

அழகர் சாமியின் குதிரை, நான் மகான் அல்ல.. என வித விதமான கதை களனில் கவர்ந்த சுசிந்தரன் முதல் முறையாய் வாங்கியிருக்கும் அடி... படம் பார்க்கும் நமக்கும் பார்த்து முடித்து வெளியே வரும் வரை வலிக்கிறது...

தமிழகத்தில் மோசமான வியாதியாக பரவியிருக்கும் நில அபகரிப்பு பிரச்சனைதான் கதையின் அடிநாதம். நல்ல கருதான். ஆனால் அதை சொல்லி சென்ற விதத்தில் ஒரு விவேகம் இருக்க வேண்டாமா? ஒரு மாஸ் ஹீரோவின் கால்ஷீட் இருக்கிறது என்பதற்காக தினசரிகளை மேலோட்டமாக மேய்ந்து விட்டு குத்து மதிப்பாக படம் எடுத்தால் உருப்படாது என்பதற்கு இந்த படம் நல்ல உதாரணம். விக்ரமை இந்த அளவு கன்றாவியாக எந்த படத்திலும் காட்டியதில்லை. அவரது  ஹேர் டிசைனருக்கு எதாவது சம்பள பாக்கியா என்ன என்பது தெரியவில்லை. ப்ளீச் செய்கிறேன் பேர்வழி என்று முடிந்தவரை அவரது இமேஜை டேமேஜ் செய்திருக்கிறார். முகத்தில் நன்கு தெரியும் சுருக்கங்களும், அவருக்கான  உடை தேர்வும்....  சீயான் இந்த படத்தில் நடித்ததை நினைத்து காலம் பூராவும் கண் கலங்க போகிறார்.

முதற்பாதி மொக்கை என்றால் இரண்டாம் பாதி படு மொக்கை. அழுத்தமில்லாத திரைக்கதையால்... நடந்தால் பாட்டு.. நின்றால் சண்டை என்று டெரர் கும்மி அடித்து பீதியே கிளப்புகிறார்கள்.
தமிழ் நாட்டையே தன் அதிகாரத்தால் கைக்குள் வைத்திருக்கும் அரசியல்வாதி வில்லி.. ஒற்றை ஹீரோவை அழிக்க லோடு லோடாக ஆட்களை அனுப்பிக்கொண்டே இருக்கிறார். அவரும் வந்தவர்களை எல்லாம் மிதி மிதி என மிதித்துக்கொண்டே இருக்கிறார். படம் பார்க்கும் நாம் டயர்டாகி போதும்டா சாமி என சொல்லும் வரைக்கும் மிதித்துக்கொண்டே இருக்கிறார். விடுங்க... நாம் பார்ப்பது தமிழ் சினிமா. உலக சினிமா இல்லை. 
ஹீரோயின்... ஆன்ட்டியா.... இல்லை நல்ல பிகர்தானா என முடிவு செய்வதற்குள் படத்தில் அவரது போர்ஷன் முடிந்து விடுகிறது. இந்த படத்தின் லவ் சீன்களை எல்லாம் சொல்ல ஆரம்பித்தால் தேவை இல்லாமல் உங்களை கெட்ட வார்த்தை பேச வைத்த பாவம் எனக்கு வந்து சேரும்.

நல்ல நடிகர்கள்... நல்ல ஒளிப்பதிவாளர், நல்ல வசனகர்த்தா, நல்ல இசையமைப்பாளர் என எல்லோரும் பாரபட்சமின்றி வீணடிக்கபட்டிருக்கிறார்கள். லட்டு போன்ற ஒரு குத்து பாடலை.... தலை முடியே பீய்த்துக்கொண்டு அவசரகதியில்   ஓடி வர வைக்கும் கேவலமான கிளைமாக்ஸ்க்கு  அப்புறம் சொருகிவிட்டிருப்பது  இயக்குனருக்கு  கற்பனை பஞ்சம் தலை விரித்தாடுவதை சொல்லாமல் சொல்கிறது.  லட்டு போன்ற ரெண்டு பிகர்கள்.. அருமையான மெட்டு... வெளிநாட்டு லொக்கேஷன்... என நிலத்தை விற்று.. நகையே விற்று... அதில்  செலவு செய்து எடுத்த பாடலை ஆளில்லாத தியேட்டரில் காண நேரும் தயாரிப்பளருக்கு நிச்சயம் ரத்த கண்ணீர் வரும். 
படத்தில் எந்த நல்ல விஷயமுமே இல்லையா என கேட்பவர்களுக்கு...  எங்கள் வாத்தியார் சுஜாதா சொல்வார், "ஒரு பியர் அடிப்பதற்கு ஒரு டாஸ்மாக்கையே வாங்க வேண்டுமா" என. அது போலத்தான், அவ்வபோது லேசாக கவரும் விஷயங்களுக்காக மொத்த படத்தையும் பார்ப்பது உங்கள் பொறுமை மற்றும் சகிப்புத்தன்மைக்கான சவால்.
 

படம் பூராவும்.. விக்ரம் தான் மலை மாடு போல புஜபலத்துடன் இருக்கிறார். கதையோ TB அட்டாக் ஆனா பேஷன்ட் போல எலும்பும் தோலுமாய் பரிதாபமாய் காட்சியளிக்கிறது.

(+) பிளஸ்
இந்த மொக்கை படத்திலும்  முழு அர்பணிப்பு காட்டிய விக்ரம். 


(-) மைனஸ்
திரைக்கதை
லாஜிக்  ஓட்டைகள்
இயக்கம்
சீட்டை பிராண்ட வைக்கும் இரண்டாம் பாதி. 


VERDICT : கசப்பான மசாலா. 
RATING    : 3.4 / 10.0


EXTRA  பிட்டுகள் 

இந்த நட்ட நடு ராத்திரியில் (மூன்று மணி) இதை எழுதுவதில் ஒரு சமூகம் சார்ந்த அக்கறை இருக்கிறது. உங்கள் பாக்கட்டில் இருக்கும் நூறு ரூபாய்
அநியாயமாக தொலைந்து போய்விட கூடாது என்கின்ற ஒரு பரிதவிப்பு இருக்கிறது. இது போன்ற மொக்கை மசாலா படங்களை  பார்ப்பதற்கு செலவிடும் நேரங்களில் நீங்கள் உபயோகமாய் உங்கள் மனைவிக்கு சமையலில் உதவலாம்.. விகடனில் ராஜு முருகன் எழுதும் "வட்டியும் முதலும்" வாசிக்கலாம். நல்ல இசையே கேட்கலாம். வேறு வேலை எதுவும் இல்லையா.. நிம்மதியாய் தூங்கலாம்.
 

Sunday, December 18, 2011

டிசம்பர் தமிழ் சினிமா இசை - ஒரு பார்வை


வருடம் முழுதும் மழை பொழிந்தாலும் ஒவ்வொரு முறையும் மேல் விழும் துளி புதிதுதான்... இசையும் அப்படிதான்.... "ச ரி க ம ப த நி" என  அதே ஏழு ஸ்வரங்கள்... ஆனால் கொடுக்கும் அனுபவங்கள் ஒவ்வொரு முறையும் புதிதுதான்....காதல் பிரிவின் வலியில், ஒற்றை குரலாய் கேட்டு பழகிய யுவனின் குரலை ஒரு பெப்பியான டூயட் பாடலில் கேட்கவே படு  உற்சாகமாக இருக்கிறது. "பப்பபப்ப " பாடலின் மெட்டும், யுவன் ரேணு குரலில் தெறிக்கும் உற்சாகமும் 2012 ன் சூப்பர் ஹிட் பாடல் வரிசையில்  சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. 

இரவில் உங்கள் அன்பிற்கினியவர் மடி சாய்ந்து ஒரு தாலாட்டு கேட்கும் சுகத்தை தருகிறது " நிலா நிலா" பாடலும் "உன்னை கொல்ல போறேன்" பாடலும்.   ஹரிணி, பவதாரணி குரல்கள் கடவுளின் கொடை என்றால் அதை கேட்க வாய்த்தது நமக்கு கிடைத்த வரம். முதல் படத்திலேயே ஈர்க்க வைத்து இன்னமும் எதிர்பார்க்க வைக்கிறார் இசையமைப்பாளர் கார்த்திக்.
 ராஜாவின் எண்பதுகளின் கிளப் டான்ஸ் பாடல்களை நினைவுபடுத்தும் ஆர்க்கெஸ்ட்ரேஷன் "லட்டு லட்டு " பாடலின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட்.


அதே படத்தில் "பனியே பனி போலவே"  பாடலும் அடிக்கடி முனுமுனுக்க வைக்கும் ரகம்.


ஊரே "கொலை வெறி"  பாடலை கொண்டாடும் போது அதை பற்றி சொல்லாமல் போனால் செவி நிறையாது. பாடல் வரிகள் தொடங்கி இசை, பாடிய ஸ்டைல் என எல்லாமே ஒரு விதமான அலட்சிய பாவத்தில் தொடங்கினாலும் மனசு குட்டி போட்ட பூனை போல அந்த பாடலின் பின்னாலேயே  செல்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை. பாடலின் நடுவில் வரும் அந்த சாக்ஸபோன் இசை சத்தியமாய் DIVINE.  சாமியாட்டம் ஆடியிருக்கிறார்கள் டி ஆரும், L.R.ஈஸ்வரியும். தமனின் மெட்டும் சரிபங்குக்கு டெம்ப்ட் ஏற்றியதில் "கலாசலா"   பாடல் கண்டபடி வெறி ஏற்றுகிறது. செம குத்து.G.V. பிரகாஷின் வளர்ச்சி நிஜமாகவே அபரிதமாகவே போய் கொண்டிருக்கிறது. புது புது பரிசோதனை முயற்சிகள் அவரை கவனிக்க வைக்கிறது. பொல்லாதவன் படத்தில் வந்த நீயே சொல் பாடலின் அப்பட்டமான காப்பி என்றாலும் "ஓ சுனந்தா" பாடல் அழகான ரொமாண்டிக் மூடை உண்டாக்குவது நிஜம்.

அதே போல... "மயக்கம் என்ன" வில் வரும் "பிறை தேடும் இரவினில்"   பாடல் இன்னமும் காதுகளுக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது. 

மொழிகளுக்கு அப்பாற்பட்டு அப்படியே ஜீவனை உருக்கி எடுக்கிறது ROCK STAR பட பாடல்கள். ஒவ்வொரு பாட்டும் ஒரு அனுபவத்தை தருகிறது.         "KUN FAYA KUN" ரஹ்மானின் அற்புதமான இசை ஞானத்தை வெளிப்படுத்தும் அழகான ஆவணம்.


"PHIR SE UD CHALA" பாடல் பல்லவி, சரணம் என எந்த எல்லைகளுக்கும் கட்டுப்படாமல் ஒரு அழகிய நதியாய் வரிகளுக்கு ஏற்றவாறு பயணம் செய்வது அத்தனை அழகு. 


"SADDA HAQ"   இசையும், வரிகளும், மொஹித் சவ்ஹானின் ஆக்ரோஷ குரலும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக்கொண்டு உடலில் நுழைந்து உண்டுபண்ணும் சிலிர்ப்பை சொன்னால் புரியாது. அனுபவியுங்கள்....
 

Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன... - விமர்சனம்
செல்வாவின்  படங்கள்   எப்பொழுதுமே  ஒரு   தனித்த    அனுபவமாய்...   படம் பார்த்து முடித்த பின்னும்,  ஞாபக செல்களில்  மறவாது       நீந்திக்கொண்டிருக்கும்.      மயக்கம் என்ன... சில பல ஆச்சரியங்களை, மன அதிர்வுகளை, ரியலிசத்தின் உச்சம் தொட்டு கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை.


ஆரம்ப காட்சிகள், ஆஹா.. தவறிப்போய் சேற்றுக்குட்டையில் காலை வைத்துவிட்டோமே  என நினைக்க வைத்தாலும்,  மெல்ல மெல்ல தெளிந்து,  சலசலக்கும் நீரோடையாய் பயணம் செய்து... பின் வேகமெடுத்து பொங்கும் ஆழிச்சுழலில் நம்மையும்  சிக்க வைத்து சிலிர்ப்பூட்டுகிறது. படம் நெடுக செல்வா கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியங்கள் தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் புதுசுதான் என்றாலும் வெகு ஜன ரசிகன் பொறுமையிழந்து கெட்ட வார்த்தையில் திட்டுவதையும் கேட்க முடிகிறது. எதையும் காம்ப்ரமைஸ் செய்யாமல் தன் மனம் சொன்னபடி கதை சொல்லவும் ஒரு துணிவு வேண்டும். செல்வாவிற்கு அந்த துணிவு நிறையவே இருக்கிறது. 

அவரின் மற்ற படங்களை காட்டிலும், இந்த படத்தில் திரைக்கதையின் வேகம் குறைவுதான். கமர்ஷியல் ஈர்ப்புகளும் அப்படியே. ஆனாலும் முந்தைய படங்களை விட மயக்கம் என்ன மிக எளிதாய் மனசுக்கு நெருக்கமாகி விட்டிருப்பதில் எதோ ஒரு மேஜிக் ஒளிந்திருக்கிறது. மனசின் நீள அகலங்களை யாராலும் அளந்து விடமுடியாது. ரகசியமான சில விருப்பங்கள், எண்ணங்கள், ஆர்வங்கள் என மனசு சொல்லும் எத்தனை விஷயங்களை மூளை அப்படியே செயல் படுத்துகிறது.  உள்ளே துடித்து வெளியே நடிக்கும் வாழ்க்கைக்கு நடுவில் செல்வா கொடுத்திருக்கும் இந்த பிம்பங்கள் ஒன்று உங்களை சிலிர்க்க வைக்கலாம் அல்லது கெட்ட வார்த்தை பேச வைக்கலாம். எல்லாமே அவரவர் மனசு சம்மந்தப்பட்ட விஷயங்கள்.


முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்து பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடும் அபாயமான  கேரக்டர். தனுஷ் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். ஏகப்பட்ட க்ளோஸ் அப் ஷாட்டுகள்..... காதல், ஏக்கம், ஏமாற்றம், சோகம், சந்தோஷம், கோபம் என வகை வகையாய் அவரது முகம் 
காட்டும் உணர்சிகள் அத்தனையும் நிஜம். தனுஷின் அட்டகாசமான    நடிப்பிற்கு  மிக சிறந்த  ஆவணம் இந்த படம்.   OUT STANDING PERFORMANCE.


முற்பாதி முழுக்க மாதவி போல வலம் வரும் ரிச்சா கதாபாத்திரம் பிற்பாதியில் கண்ணகி ரேஞ்சுக்கு நிறம் மாறுவது பெண்கள் மீதான
செல்வாவின் புது கண்ணோட்டத்தை காட்டுகிறது. காதல் மனைவிக்கு வாழ்த்துக்கள்.


படத்தின் மிக முக்கிய தூண், சுவர், பில்லர் என எல்லாமே ராம்ஜிதான். ஒளிப்பதிவு  கவிதை என்றால் அந்த போட்டோ ஷாட்டுகள் அத்தனையும் அற்புதமான ஹைகூக்கள்.   ஒளிப்பதிவு ஒரு  ஹீரோ  போல  கொண்டாடப்பட்டிருக்கும் படம் இது.   


 படத்தில் வரும் ஒரு நான்கைந்து காட்சிகள் நிச்சயம் அசத்தல் ரகம். முக்கியமாய் இடைவேளைக்கு முன்பு வரும் அந்த முத்தம்.  மிக இயல்பான  வசனங்களும்,  கொஞ்சம் கொஞ்சமாய் நெருக்கத்தை உண்டாக்கும் தருணமும், பின்னணியில் வரும் அந்த இசையும்   தனுஷ், ரிச்சாவின் உதடுகளோடு சேர்ந்து நம் உதடுகளும் துடிப்பதை நன்கு உணரலாம்.

அதே போல, தனுஷின் நண்பனோடு ரிச்சா காரில் பேசும் அந்த காட்சி. செல்வாவுக்கு மட்டுமே சாத்தியம்.


வசனங்கள் குறைந்த இரண்டாம் பாதியில் நீக்கமற நிறைந்திருக்கிறது ஜி.வீ. பிரகாஷின் பின்னணி இசை. "பிறை தேடும் இரவினில் " பாடலில் சைந்தவியின் குரல் தேன்.


இரண்டாம் பாதியில் தனுஷோடு மாடியில் இருந்து விழும் கதை சிற்சில நிமிடங்களுக்கு எழ முடியாமல் தடுமாறுகிறது. அதே போல டெக்னாலஜி நன்கு வளர்ந்து விட்ட இந்த காலங்களில், ஒரிஜினல் 
தன்னிடம் இருக்க, தன்னை ஏமாற்றிய அந்த புகழ் பெற்ற போட்டோ க்ராப்பரை  ஏதும் செய்யாமல் தேமேயன தனுஷ் பின்வாங்குவதை 
ஏன், எதற்கு, எப்படி என சாக்ரடீஸ் பாணியில் கேள்வி கேட்க வைக்கிறது.


குறைகளே இல்லாத படமில்லை இது.  ஆனாலும், . மூளை சொல்வதை கேட்காமல் மனசு சொல்வதை கேட்டு இந்த படம் பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்.


(+) பிளஸ்

தனுஷ்
ராம்ஜி - ஒளிப்பதிவு
இயக்கம்
வசனங்கள்
இசை.
ரிச்சா


(-) மைனஸ்

மிக மெதுவாய் நகரும் திரைக்கதை
 பின் புலன் இல்லாத தனுஷின் நண்பர்கள் வட்டம்.


VERDICT : MUST WATCH FOR DHANUSH AND CINEPHOTOGRAPHY
RATING   : 5.1 / 10.0EXTRA பிட்டுகள்.

உதயத்தில் முதல் நாளே படம் பார்த்ததில், கலவையான ரெஸ்பான்ஸ் 
இந்த படத்திற்கு. சென்னை போன்ற நகர் புறங்களிலேயே இந்த நிலைமை
என்றால் ரூரல் ஏரியாக்களில் இந்த படம் முற்றிலும் வெறுக்கப்படும் அபாயம் 
இருக்கிறது.  
Sunday, October 30, 2011

நீதானே என் பொன் வசந்தம்.....(சவால் சிறுகதை - 2011)ஞாயிறு உற்சாகங்கள் வடிந்து பணிச்சுமை தொடங்கிய திங்கள் காலை. விடிய மனமின்றி விடிந்த சூரியன்.  நகரம்,  பிடித்தும் பிடிக்காமல் அன்றைய வாரத்தின் முதல் தினத்தை ஒரு வித ஆயாசத்தில் தொடங்க... நான் முழு உற்சாகமாய் என் அலுவலக  கணிப்பொறியே உயிர்ப்பித்தேன். "WELCOME MAHESH" என்று என் பெயர் சொன்னது.   மனசு, நேற்றைய இரவின் சந்தோஷங்களை நினைத்து நினைத்து குதுகலித்துக்கொண்டிருக்க, பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே என் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளை முகப்பில் கொண்டு வந்து சேர்த்தேன். இடைப்பணியாக face book  அப் டேட்டுகளை மேய்ந்து கொண்டு  என் பர்சனல்  e-mail  id யே ஓப்பினேன். ஒரே ஒரு மெயில் பல்லை இளித்தது. அறிமுகமில்லாத முகவரி....  அலட்சியத்தோடு திறந்தவனுக்கு.... தந்தி போல மூன்றே வார்த்தைகள்... YOUR WIFE KIDNAPPED!

********

ஆரம்பத்தில், யாரோ அரை கிறுக்கன் வேலையின்றி விளையாடுகிறான்  என்றுதான் நினைத்தேன். ஒதுக்கிவிட்டு வேலையில் ஈடுபட நினைத்தாலும்,   உடனே அனுவுக்கு போன் செய்து பேச வேண்டும் போலிருந்தது.... மொபைலில் எண்களை ஒத்த, இளையராஜா " நீதானே என் பொன் வசந்தம்" என உருகினார்...போன் அடித்ததும் மெல்ல ஆசுவாசம் அடைந்தேன்... ஆனால் அவர்  உருகிக்கொண்டே இருந்தார்... முதன் முறையாக அந்த பாடலின் மீது அளவில்லாத வெறுப்புணர்ச்சி தோன்றியது... அனு, PICK THE CALL PLEASE.... மனசுக்குள் வேண்டினேன்... கெஞ்சினேன்... கட் செய்து விட்டு, லேன்ட் லைனை முயற்சி செய்ய அதுவும் என் பொறுமையின் எல்லை தொட்டு என்னை கெட்ட வார்த்தை பேச வைத்தது...  மீண்டும் அனுவின் செல்பேசியே தொடர்பு கொள்ள... இம்முறை அது SWITCH  OFF என்றது. முதுகுத் தண்டுவடம் சிலிர்த்துக்கொள்ள.... மீண்டும் அந்த மெயிலை பார்க்க... ஒரு சாத்தானை போல அது சிரித்தது.

*********

அரை நாள் லீவ் சொல்லிவிட்டு, அவசர அவசரமாக கிளம்பியவனை அலுவலகமே ஆச்சரியமாக பார்த்தது.. பைக்கை கிளப்பிய போது உடல் நடுக்கத்தை உணர்ந்தேன்... இல்லை.. அனுவுக்கு உடல் நலம் சரியில்லை. SLEEPING வில்லைகளை போட்டுக்கொண்டு நன்றாக தூங்கியிருப்பாள்.. அதுதான் கால் அட்டென்ட் செய்யவில்லை...  நிச்சயம் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது ஒரு குழந்தை போல தூங்கிக்கொண்டிருப்பாள். அப்படியே  வாரி  அனைத்து முத்தமிட போகிறேன்.  மனம் சமாதானம் செய்தாலும் மூளை இன்னொரு பக்க அபாயங்களையும் தேவைன்றி நினைவூட்டி என் பதட்டத்தை அதிகரிக்க செய்தது.                   
எதிரிகள் என்று யாருமே இந்த மென்பொருள் துறை  உத்தியோகத்தில் எனக்கு இல்லை. அனுவிற்கு...?  குழந்தைகளுக்கும், தேவதைகளுக்கும் யார் எதிரிகள் இருக்க கூடும்..? ஆனால் என் இரண்டாவது உத்தியோகத்தில்..... இல்லை இல்லை...என் இரண்டாவது உத்தியோகத்தை பற்றி உங்களிடம்  நான் சொல்ல கூடாது... அனுவுக்கே தெரியாது. வெளியே தெரியாத  வரைதான் அந்த உத்தியோகம் பாதுகாப்பானது.

ஸ்பீடா மீட்டர் நூறில் அலற, வண்டியே விரட்டினேன்... அனுவிற்கு இந்த வேகம் ரொம்ப பிடிக்கும். என்னை இறுக்கி அணைத்துக்கொண்டு உற்சாகத்தில் என் தோளை கடிப்பாள். என் ஐந்தரை அடி உலகம்.. என் உயிர்... மொத்த உலகத்துக்கும் தேவையான காதலை என் அனு என் ஒருவனுக்கு மட்டும் கொடுப்பதை உணர்ந்திருக்கிறேன்.  அந்த வகையில் கடவுளை விட அதிர்ஷ்டசாலி நான்... இப்போது அத்துனை கடவுள்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டை நெருங்க... வீட்டு கதவு மிக அட்சர சுத்தமாக பூட்டியிருந்தது.

***********

முகம் முழுக்க வேர்த்துவிட்டிருந்தாலும் , காலையில் அவள் கொடுத்த முத்தத்தின் ஈரம் கன்னங்களில் இன்னமும் மிச்சமிருந்தது. அருகாமை வீடுகள் அனைத்தும் தங்கள் வாழ்கையே அவர்களது நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன.  காதல் மனைவியே தொலைத்து விட்டு வாசலில் வெறித்து நிற்பவனை பார்த்து என்ன ஏதுவென்று கேட்க யாருக்கும் அக்கறை இல்லை, நேரமும் இல்லை.

மீண்டும் அனுவின் மொபைலை தொடர்பு கொண்டேன். SWITCH OFF. அடுத்து என்ன செய்வது? உறவுகள் என்று யாருமே இல்லாத தனி பறவைகள் நாங்கள்.அவள் அலுவலகத்திற்கு முட்டாள்தனமாய் போன் செய்தேன். காலையில் அவளுக்கு உடல்நலம் சரியில்லை வரமாட்டாள் என லீவ் சொன்னதே நான்தான். நினைத்தது போலவே... ரிஷப்ஷனில், "she is on leave today" என்றார்கள். அவள் நட்பு வட்டங்களிடம் இருந்தும் எந்த தகவலும் இல்லை.       

 மீண்டும் ஐ போனில் அந்த மெயிலை படித்தேன்... யார் இவர்கள்... தெரியாது.. எங்கிருந்து வந்தார்கள்... தெரியாது?  ஆனால் என் மனைவி கடத்தப்பட்டிருக்கிறாள் அது மட்டும்  நிஜம். அப்படியே உடைந்து அழுது விடுவேன் போலிருந்தது. எந்த திசையில் தேடுவது...? இருக்கும் ஒரே ஒரு உபயம்... S.P. கோகுல் மட்டுமே... நான்காவது ரிங்கில் போனை எடுத்தவர்...

"சொல்லு விஷ்ணு என்றார்?"

" உடைந்த வார்த்தைகளில்  விஷயத்தை சொன்னவுடன்...  

"MY GOD " என அவரிடம் இருந்து வெளிப்பட்ட அதிர்ச்சியினை போனிலேயே உணர முடிந்தது.


"அனுவோட ஆபீஸ், அவ FRIENDS வீடு எல்லா இடத்திலையும் செக் செஞ்சியா.."


"பேசிட்டேன் சார்... எங்கேயும் இல்ல..."

ஓகே, அந்த E -மெயிலை செக் பண்ணி அதிலிருந்து எதாவது TRACE பண்ண முடியுமான்னு பார்க்கலாம். உனக்கு சைபர் க்ரைம் ஆபீஸ் தெரியுமா..?


தெரியும் சார்,

அங்க செந்தில்னு ஒருத்தர் இருப்பார்... நான் போனில் அவர்கிட்ட பேசிடறேன். அவரை உடனே போய் பார். நான் இப்ப மினிஸ்டரோட பாதுகாப்பு பணியில் இருக்கிறேன். ஒரு ரெண்டு மணி நேரத்தில் நான் உன்னை மறுபடியும் கூப்பிடறேன்...

"சார், பயமா இருக்கு, SHE IS PREGNANT"  என குரல் உடைந்து தழுதழுத்தேன்.

தைரியமா இரு.. அனுவுக்கு ஒன்னும் ஆகாது.

***********
வண்டியே சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு விரட்டினேன்.... ஒரு சாமானிய மென்பொருள் பொறியாளனுக்கு ஒரு மாவட்டத்தின் சூப்பிரடன்ட்டிடம் என்ன உறவு என்று நீங்கள் குழம்பலாம். அது போலவே,      கோகுல் எதற்கு மகேஷ் என்று என்னை அழைக்காமல்  விஷ்ணு என விளித்தார் என்றும் நீங்கள் விழிக்கலாம்.

உங்களை குழப்ப விரும்பவில்லை. என் இரண்டாவது உத்தியோகத்தில் என் பெயர் விஷ்ணு.  ஒரு இன்பார்மர். இன்பார்மர் என்றவுடன் கையில் துப்பாக்கியும், வாயில் சிகரெட்டும், சுற்றி நாலு இளம்பெண்களும் இருக்கும் சினிமா துப்பறிவாளன் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். உண்மை எப்போதுமே அதற்கு நேர் எதிர். ஒரு இன்பார்மரின் கஷ்டம், தெரு நாய் படும் கஷ்டத்தை விட மேலானது...  நீங்கள் ஒரு இன்பார்மர் என்று வெளியே தெரிந்தாலே உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. யார் வேண்டுமானாலும் உங்களுக்கு எமனாக மாறக்கூடும். ஒரு அங்கீகாரமற்ற, பதவியில்லாத, அதிகாரம் இல்லாத, மாத சம்பளம் இல்லாத உத்தியோகம். கோகுல் மட்டுமே என் முதலாளி. அவரை தவிர மற்ற போலீசுக்கும், மொத்த உலகத்துக்கும் நான் ஒரு சாமானியன் அவ்வளவே...  இப்போது கூட பாருங்கள்... கோகுல் போன் செய்து சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்லாத வரை அந்த ஆபீஸ் உள்ளே கூட என்னை அனுமதிக்க மாட்டார்கள்.

 நிறைய விஷயங்கள் தினசரிகளில் படிப்பீர்கள். பல கோடிகளில் கருப்பு பணம், மூட்டை மூட்டையாய் கஞ்சா பொட்டலங்கள்... பலநாள் முடிவு தெரியாமல் குழப்பிய கொலை, கொள்ளை  வழக்குகளில், தீடிர் என குற்றவாளி கைது செய்யப்பட்டு அவனை பிடித்த போலீசுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டும் புகைப்படங்கள் என தினசரிகளில் நிரம்பி வழியும் ஒவ்வொரு குற்ற முடிச்சின் அவிழ்ப்புகளில் எங்களை போன்ற ஒற்றர்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். ஆனால் எந்த இடங்களிலும் எங்கள் முகங்கள் புகழ் வெளிச்சத்தில் நனைந்தது இல்லை. அதற்க்காய் நாங்கள் ஏங்கியதும் இல்லை.    ஒற்றை ஆளாய் இருந்தவரை இந்த வேளையில் இருந்த த்ரில் அனு என் வாழ்வில் வந்தவுடன் பயமாய் மாறி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் இந்த உத்தியோகத்திலிருந்து விலக எத்தனிக்கும் போதுதான்  அனுவை பறிகொடுத்துவிட்டு அலைகிறேன்.... என் சக இன்பார்மர் முருகேஷ் ஆட்டோ டிரைவர்,  ஒற்றன் என்று தெரிந்தவுடன் துண்டு துண்டுகளாக அடையாளம்  தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு கூவம் நதியில் கிடந்தது என் மனசில் வந்து போனது... கடவுளே... என் உயிரை எடுத்துக்கொண்டு அனுவை யும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் விட்டு விடு.. என வாய் விட்டு கதறினேன்.


**************


செந்தில், எனக்கு வந்திருந்த இ-மெயிலின் பூர்விகத்தை கண்டறிய உள்ளே போராடிக்கொண்டிருக்க, நான் வெளியே நகம் கடித்தபடி காத்துக்கொண்டிருந்தேன். அனுவுக்கு நாட்கள் தள்ளி போய், சென்ற வாரம் டாக்டர் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தபோது உண்டான பதட்டத்தை விட இது அதிகமாக இருந்தது. என் அனுவே ஒரு குழந்தை.. அவளுக்கு ஒரு குழந்தையா... என சந்தோஷ திக்கில் குதித்த தருணங்கள் நினைவுக்கு வர பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்.


வெளியே வந்த செந்தில்.... IT IS STRANGE... அந்த மெயில் சவுத் கொரியாவில் இருந்து அனுப்பபட்டிருக்கு என்றான்.

****************


நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போய், தளர்ந்து போய் நான் விழ..
தீடிரென என் மொபைல் அடித்தது. கடத்தியவனிடம் இருந்து அழைப்பா என படு அவசரமாக என் மொபைலை பார்த்தேன். UN KNOWN நம்பர். என்  இதயத்துடிப்பு எகிற.. நடுக்கத்துடன் ஹலோ சொல்ல... எதிர்முனையில் " SIR, WE ARE CALLING FROM HDHD BANK, WE ARE OFFERING LIFE INSURANCE FOR YOU AND YOUR FAMILY " என்றது. உச்ச ஸ்தாயில் நான் சொன்ன கெட்ட வார்த்தைகளை கேட்டு அப்பொழுதே அந்த பெண் ராஜினாமா செய்திருக்கலாம்.

குழம்பி நின்றவனுக்கு எதிர்பாரா விதமாக அந்த யோசனை தோன்றியது. வீடு பூட்டபட்டிருக்கிறது. SO , அனு வெளியே வைத்து கடத்தபட்டிருக்கிறாள்.  உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தவள் வெளியே கிளம்பியிருக்கிறாள் என்றால் யாரவது போனில் அவளை அழைத்திருக்கலாம் என முடிவு செய்து AIR  வாய்சில் இருக்கும் நண்பனை அழைத்தேன். என் அனுவின் நம்பரை சொல்லி இன்றைய கால் SUMMARYயே   கேட்டேன்.


முப்பது  நிமிடம் காத்திருக்க சொன்னான்.  நொடிகள் ஒவ்வொன்றும் நரகமாக நகர... மனம் தைரியம்  இழந்து  உள்ளுக்குள்  வேகமாய் நான் செத்துக்கொண்டிருப்பது நன்கு புலப்பட்டது.


"மகேஷ்,  இன்னைக்கு காலையில் இருந்து ஒரே ஒரு OUT GOING கால் உன் WIFE  செஞ்சிருக்காங்க... நம்பர் வந்து 9842 ******.   அட்ரஸ்ஸை செக் பண்ணினதுல, அந்த நம்பர் கோகுல் கின்ற பேரில் வாங்கபட்டிருக்கு.

************

அதிர்ச்சி விலகாமல் S.P. கோகுலை மொபைலில் பிடித்தேன்...

"சொல்லு விஷ்ணு" என்றார்

 "சார், ஏன் சார் இப்படி பண்ணுனீங்க" .


கண்டுபிடிச்சிட்டியா,   கிண்டியில் இருக்கிற என் வீடு உனக்கு தெரியும்தானே... அங்க வந்திடு மிச்சத்தை அங்க பேசிக்கலாம்.


வேக வேகமாய் மாடி படிகள் ஏறி, வெறித்தனமாய் கதவை திறந்தவுடன் எதிரில் சோபாவில்... அன்றலர்ந்த மலர் போல என் அனு அமர்ந்து கொண்டிருந்தாள்.
 
அருகே தன் இருக்கையில்  கோகுல் அமர்ந்துகொண்டிருக்க, அவரது மேசையின் மீது இரு துண்டு சீட்டுகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தது..

உனக்காகத்தான்  நாங்க ரெண்டு பேருமே காத்துட்டு இருக்கோம் விஷ்ணு...

நான் குழப்பத்துடன் அனுவை நோக்க...

 "மன்னித்துவிடுங்கள்" என்பது போல பரிதாபமாய் என்னை பார்த்தாள்.

ஆச்சரியப்படாதே நீ எனக்கு எப்படியோ... அதுபோலத்தான் எனக்கு அனுவும். YES.. SHE IS ALSO MY INFORMER. நீ வழி மாறி போனபோதே உன்னை பற்றி சொல்லி நீ அனுப்பின மெயில் காப்பிகளையும் என்கிட்டே கொண்டு வந்து கொடுத்துட்டா...  அப்பவே உன்னை அரெஸ்ட் செஞ்சு 3rd டிகிரி மெத்தேடில்  உன்கிட்ட இருந்து எல்லா உண்மைகளையும் என்னால் வாங்கியிருக்க முடியும். BUT... SHE LOVES YOU MORE THAN YOU  DO....   நீயாகவே உண்மைகளை என்கிட்டே வந்து சொல்லிடுவேன்னு நினச்சேன். அப்படி இல்லன்ன... அந்த முகம் தெரியாத கும்பலை CONTACT  பண்ணுவேன்னு நினைச்சேன். அந்த கும்பலோட  மெயில் i.d. யே ஒரு கட்டத்துக்கு மேல எங்களால் சேஸ் பண்ண முடியல. they destroyed that i.d. அதுதான் இந்த கடத்தல் நாடகம். ஆனா அதுக்கு முன்னாடியே அனு இருக்கிற இடத்தை நீ கண்டுபிடிச்சிட்ட... ஓகே...இப்பவும்  ஒன்னும் பிரச்சனையில்லை. சரியான குறியீடு என்ன.. தப்பான குறியீடு கொடுக்க சொல்லி உன்னை தூண்டியது யார்னு சொல்லிடு விஷ்ணு.... இப்பவும் நீ என நம்பிக்கைக்குரியவன்தான்.

நான் அப்படியே ஓரமாக சுவற்றில் சாய்ந்தமர்ந்து பெருங்குரலெடுத்து அழ தொடங்கினேன்.


-------------------------------------------------------------------------- 

டிஸ்கி - சவால் சிறுகதை போட்டிக்கான எனது மூன்றாவது  சிறுகதை. இந்த கதை உங்களை கவர்ந்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை யுடான்சில்   பதிவு செய்யவும்.

என் முதல் இரண்டு கதைகள்... .

ஒரு கிராம் சொர்க்கம் (சவால் சிறுகதை 2011)


ஒன்றுக்குள் இரண்டு (சவால் சிறுகதை 2011)Saturday, October 29, 2011

ஒரு கிராம் சொர்க்கம் (சவால் சிறுகதை 2011)
G.D.R. ENGINEERING COLLEGE - FRIDAY - 1:30 PM

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் அந்த தனியார் கல்லூரி மதிய வெயிலில் அனாமத்தாய் காய்ந்து கொண்டிருந்தது. நீண்ட அசோக மர நிழல்களுக்குள்  பதுங்கியிருந்த  மாணவிகள்   என்ஜீனியர் ஆகும் கனவில் கதைத்துக்கொண்டிருக்க, அதை ஓரக்கண்ணால் பார்த்துகொண்டிருந்த மாணவர் கூட்டம் அந்த மாணவிகளுக்கு எப்படி கணவன் ஆகலாம் என்கின்ற கனவில் அதி தீவிர யோசனையில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தது.

உதய், மதிய வகுப்பை கட் அடித்து விட்டு  படத்திற்கு  போகலாமா,  அல்லது சரக்கடிக்க  போகலாமா என்கின்ற  யோசனையில்  குழம்பி,  தெளிந்து  பின்  இரண்டையுமே  செய்யலாம்  என்கின்ற  முடிவுக்கு  வந்தவனாய் ஹோண்டாவை உதைக்க எத்தனிக்க.. 

மாப்ள..! என அலறிக்கொண்டே ஓடிவந்தான் சுகுமார். 

"ஏன்டா...?" ஏன் தெரு நாய்  துரத்தர மாதிரி ஓடி வர...  ?"

"டேய் மாமா, ஒரு கண்டக்டர்  பன்னாடை  என்னை                                                    அசிங்கப்படுத்தீட்டாண்டா! மவனே அவனை சும்மா விடக்கூடதுடா."

"மச்சான்... பொறு... என்ன நடந்துச்சு... தெளிவா சொல்லு." 

"மத்தியானம் லீவ் போட்டுட்டு வீட்டுக்கு கிளம்பினேன்..கோயம்பத்தூர் போற பஸ் அது. பஸ்சில ஏறின பிறகு, நான் இறங்க வேண்டிய தெக்கலூர்ல நிக்காது...இறங்குன்னு அட்டுழியம் பண்றான் அந்த கண்டக்டர்.நான்,"இறங்க மாட்டேன்.. ஏன் அங்க பஸ் நிக்காது? அங்க  இருக்கிறவன் எல்லாம் மனுஷன் இல்லையா"ன்னு பதிலுக்கு எகிற...
 பரதேசி என்னை கெட்ட வார்த்தையில் திட்டி...  வண்டியில இருந்து தள்ளி விட்டுட்டாண்டா..   அவனை சும்மா விடக்கூடதுடா...  சுகுமார் சொல்லும்போதே இயலாமை ஆத்திரமாய் வெளிப்பட அவன் கண்களில் கண்ணீர் கட்டிக்கொண்டு வந்தது." 
 
"மச்சான், டென்ஷன் ஆகாதே... . வண்டி நம்பரை நோட்  பண்ணினியா... ?"

"ம்... இருக்கு... TN37M9870, சேலம் TO கோயம்புத்தூர்...  கவர்ன்மென்ட் வண்டி. "

 "கவலைய விடு.. மணி இப்போ 1:30. இன்னும் ஒரு மணி நேரத்துல அந்த பஸ் கோயம்புத்தூர் போய்டும். ரெண்டேமுக்கால் மூணு மணிக்கு அது கிளம்பி நாலு மணிக்கு இங்க வந்திடும்... பசங்க நாம எல்லோரும் சேர்ந்து அந்த பஸ்ஸை மறிக்கிறோம். அந்த கண்டக்டர் பொறம்போக்கை உன் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வைக்கிறோம். o.k....."

"நிச்சயம் பண்றம்டா.... ஸ்டுடன்ட்ஸ் பவரை அந்த பரதேசிக்கு   காட்டுறோம்." 

கண்டிப்பாடா.. நான் பசங்களுக்கு  தகவல் சொல்லி எல்லோரையும் 
தயார் படுத்துறேன்.அமைச்சர் ராஜ துரை இல்லம் - கோயம்புத்தூர் - 2:00 PM


விஷ்ணு, மேசை மேல் பரப்பி வைத்திருந்த  வெள்ளை  நிற  பாக்கெட் பொட்டலங்களில் ஒன்றை உடைத்து கொஞ்சமே கொஞ்சம் தன் நாவில் வைத்து சுவை பார்த்தான்... கசந்தது...

ம்ம்ம்.. சுத்தமான ஆப்கான் விளைச்சல்... இன்னும் கொஞ்சம் இரத்தத்துக்குள் போனால் கால் தரையில் இருக்காது. காத்தோட காத்தா மிதக்க ஆரம்பிச்சிடுவோம்...   FIRST CLASS சரக்கு.  


ராஜ துரை , " விஷ்ணு, இதோட மதிப்பு துல்லியமா எவ்வளவு இருக்கும்? "

விஷ்ணு பெருமூச்சுவிட்டான். சினி பீல்ட், I.T., பெரிய இடத்து பிள்ளைகள்,  காலேஜ் ஸ்டுடன்ட்ஸ்  என  எல்லோருக்கும்  இந்த  ராஜ போதை தேவையா இருக்கு.  இன்னைக்கு தேதிக்கு ஒரு கிராம் முதல் தர  ஹெராயின், ஒரு கிராம் தங்கத்தின் விலையே விட அதிகம். அப்படி பார்த்தால் எப்படியும் இதன் சந்தை  மதிப்பு ஐம்பது கோடியே தாண்டிடும். அதையே   நாம கள்ள மார்க்கெட்டில் விற்கும் போது இதோட VALUE    ரெண்டு மடங்காகிடும். 


ராஜதுரை எச்சில் விழுங்கினார்.  "விஷ்ணு, நாம கண்டிப்பா இதை அவங்ககிட்ட கொடுக்கனுமா... நாமளே
வச்சுகிட்டா என்ன..?


ஐயா... அமைச்சரே... உங்க அரசியல் புத்தி   ஏன் இப்படி கோக்குமாக்கா சிந்திக்குது.. இதில் சம்மந்தப்பட்டவங்க எல்லோரும் பெரிய தலைகள்... பெரிய நெட்வொர்க்.  நிறைய மாபியா கும்பல்கள் இதில் கலந்திருக்கு. நாம அவங்களை ஏமாத்தனும்னு நினைச்சா  கூட போதும்... போட்டு தள்ளிடுவாங்க... பணத்தின் மேல் ஆசைப்படலாம். ஆனா பேராசை பட கூடாது. நமக்கு  இதில் இருந்து வரும் 2 பர்சென்ட்டே போதும். நாம செட்டில் ஆகிடலாம். 


"ஆனா  எப்படி இந்த சரக்கை அவங்ககிட்ட ஒப்படைக்கிறது.? S .P கோகுல் வேற இதை மோப்பம் பிடிச்சுட்டு ஊரு பூர வேட்டை நாய் போல தேடிட்டு இருக்கான். எப்படி பாதுகாப்பா கை மாத்தி விடறது?

தப்பான இன்பர்மேஷன் கொடுத்து, போலீசை  திசை  திருப்பி    ஏர்  போர்ட்டில் இருந்து எப்படி இதை கொண்டு  வந்தோமோ அதே  போலத்தான்...  என்னோட    யோசனை  சரியாய்   இருந்துட்டா இன்னைக்கே  இதை  சிரமம்  இல்லாமல்  அந்த  பார்ட்டி   கிட்ட ஒப்படுச்சுடலாம். OK. முதலில் இந்த சரக்கு  எல்லாத்தையும்  அந்த  புத்தகங்களில்  மறைச்சு  வச்சு  கிளியரா  பேக்  பண்ணிடலாம். 
 SUPERIDENT OF POLICE HEAD OFFICE - COIMBATORE - 2.30 PM

S.P.கோகுல் தீவிர சிந்தனையில் இருப்பதை அவரது நெற்றியில் தோன்றி மறைந்த சுருக்கங்கள் உறுதிபடுத்தியது.  "எங்கேயோ தப்பு நடக்கிறது... உளவு துறை கொடுத்த தகவலின்படி பல கோடி மதிப்புள்ள போதை மருந்துகள் கோயம்பத்தூரில் இருந்து கை மாற போகிறது. ஆனால் இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை.  விஷ்ணு கொடுத்த தகவல் உண்மை இல்லை என்றால்... ஒன்று, விஷ்ணுவிற்கு தவறான தகவல் கிடைத்திருக்கலாம். அல்லது விஷ்ணு தவறான தகவலை என்னிடம் கொடுத்திருக்கலாம். இந்த இரண்டிற்கு மட்டுமே வாய்ப்பு இருக்கிறது. காலையில் இருந்து என் போனை வேறு அட்டென்ட் செய்ய மறுக்கிறான். SO WE HAVE TO FOLLOW VISHNU TOO...

இண்டர்காமில், "வைத்தி, கோகுல் பேசறேன், விஷ்ணுவோட E -மெயில் IDயே ஹேக் பண்ண சொல்லியிருந்தேனே... என்னாச்சு...?"

"சார், நீங்க கொடுத்த I.D.யில் இன்னைக்கு காலையில இருந்து இப்ப வரைக்கும் ஒரே ஒரு மெயில் தான் அனுப்பபட்டிருக்கு. விஷ்ணு நமக்கு அனுப்பின மெயில் மட்டும்தான் அது . வேற எந்த  மெயிலும் வரவும் இல்லை, அனுப்பபடவும் இல்லை".


கோகுலின் குழப்பம் அதிகரித்தது, பின் சடாரென யோசனை உதித்தவராக, வைத்தி, இன்னொன்னும் செஞ்சிடுங்க... அவனோட I.P அட்ரசை ட்ரேஸ் செஞ்சு அந்த முகவரியில் இருந்து வேற எதாவது   இ-மெயில் i.d.க்கு மெயில்ஸ் போயிருக்கா இல்லை வந்திருக்கான்னு செக் பண்ணுங்க...
i need this information immd, make it fast....


பத்து நிமிட இடைவெளியில் வைத்தி கூவினார்...


"சார், அந்த bastard நம்ம கிட்ட டபுள் கேம் ஆடியிருக்கான்.  நமக்கு  அவன்  மெயில் அனுப்பின டைம் மார்னிங் 10.30,   10.35க்கு அவனுடைய I.P அட்ரசில் இருந்து வேறொரு email   id   மூலமா இன்னொரு   மெயில் அனுப்பபட்டிருக்கு
வெயிட்...அந்த ரெண்டு மெசேஜ் காப்பிகளையும் பிரிண்ட் எடுத்துட்டு வரேன்." 

தன் மேசையின் மீது இருந்த இரண்டு குறிப்புகளும்,  திரைக்கதையே தெளிவாக கூறியது கோகுலுக்கு.  இப்போது எல்லாம்  புரிந்துவிட்டது.  விஷ்ணு கொடுத்த குறியீடை கொண்டு  ஒரு கஞ்சா பொட்டலத்தை கூட பிடிக்க முடியாது.  துரோகி, விலை போயிருக்கிறான்.  அதே சமயம் கோகுலின் செல்போன் ஒலிக்க... டிஸ்ப்ளே "விஷ்ணு INFORMAR" என்றது. 

" சொல்லு விஷ்ணு... "

"சார், உங்க  மிஸ்டு  கால்  பார்த்தேன்... டிரைவிங்கில் இருந்ததால் அட்டென்ட் பண்ண முடியல... சொல்லுங்க சார்...

ஒரு பத்து நிமிஷம் என் ஆபீஸ் வரைக்கும் வந்துட்டு போக முடியுமா.. ?

SURE SIR... இப்பவே கிளம்பி வரேன்...

கோகுல்   மொபைலை கட்  செய்தபடி, வைத்தி,  விஷ்ணு  இப்ப  இங்க  வரான். போலீஸ்காரனை  ஏமாத்தினா  என்ன  நடக்கும்னு
தெளிவா  அவனுக்கு  புரிய  வைக்கணும்.  ரூமை  ரெடி  பண்ணிடுங்க.  இன்னைக்கு அவனை மிதிக்கிற  மிதியில்  எல்லா  உண்மைகளையும்  அவன்  கக்கனும்.  BYTHEWAY,   இந்த இன்னொரு மெயில் யாருக்கு அனுப்பபட்டிருக்குனு கண்டுபிடிச்சுடீங்களா... ? 

Yes sir, But the news is bad. அது நம்ம அசிஸ்டன்ட் கமிஷனரோட பர்சனல்  E-MAIL I.D

 கோகுல்  அழுத்தம் திருத்தமாக அந்த நான்கெழுத்து கெட்ட வார்த்தையே சத்தம் போட்டு சொன்னார்.


G.D.R. ENGINEERING COLLEGE -  3.00 PM

உதய், தன் செல்போனை ஆப்  செய்து கொண்டே... "மாப்ள.. பஸ் கோயம்பத்தூர் 
ரீச் ஆயிடிச்சு.  இன்னும் அரை மணி நேரத்தில் கிளம்பி 4:30 க்கு இங்க வந்திடும்.  நம்ம பசங்க எல்லாம் ரெடியா...?

"ரெடி டா மச்சான்".


அமைச்சர் ராஜ துரை இல்லம் - கோயம்புத்தூர் - 3:05 PM
ராஜதுரை, "விஷ்ணு,  கோகுல்   நம்மை மோப்பம் பிடிச்சிருப்பான்னு நம்பறியா?"

"இல்லை!  பட்  அதுக்கும்   வாய்ப்புகள் இருக்கு.  நான் இன்னும் அரை மணி நேரத்தில S.P. ஆபிசுக்கு போயிடுவேன்.  அதுக்கு முன்னாடியே சரக்கு பதுக்கி  வச்சிருக்கிற பார்சலை நம்ம பிளான் படி அனுப்பிடறேன்.    நாலு மணிக்குள்ள என் கிட்ட இருந்து எந்த தகவலும் வரலன்னா நான் கோகுல் கஸ்டடியில்  இருப்பேன்னு  அர்த்தம்.   நம்ம A.C. யே வச்சு  என்னை  வெளிய  கொண்டு வர பொறுப்பு உங்களுடையது."

"நிச்சயமா!"


SUPERIDENT OF POLICE HEAD OFFICE - COIMBATORE - 4.00 PM

 சொல்லு விஷ்ணு... LET TO BE FRANK... எங்களுக்கு எல்லா விஷயமும் தெரிஞ்சிடுச்சு. சரக்கு எங்கே ?

சார், நீங்க சொல்றது ஏதும் எனக்கு புரியல...

நொடி தருணத்தில், கோகுலின் கை விஷ்ணுவின் கன்னத்தை அசுர வேகத்தில் தாக்கியது.  உதடு  கிழிந்து  ரத்தம்  வெளிப்பட  நாவில்  பட்டு  புளித்தது. 

A.C  உன்கூட இருக்கார்ன்னு தைரியமா விஷ்ணு...? இப்பவே  உன்னை இங்கே   உயிரோட புதைக்க முடியும்.   

"அது ரொம்ப கஷ்டம் MR.கோகுல்" என்று சொல்லிக்கொண்டே A.C. பத்மநாபன் அந்த அறையில் நுழைந்தார்.

சார், என இருக்கையிலிருந்து கோகுல் எழுந்து நிற்க...

"என்னோட உத்தரவு படிதான் விஷ்ணு செயல்   பட்டுட்டு இருக்கிறார். " you should release him now"

ஆனா சார், இந்த கேசை நான் நேரடியா விசாரணை செய்துட்டு  இருக்கேன்.
எனக்கு ஏன் சார், தப்பான தகவல்களை கொடுக்கணும் ?

"சில டிப்பார்ட்மென்ட் ரகசியங்களை வெளியே  சொல்லிக்கொண்டிருக்க முடியாது MR.கோகுல். நீங்க கமிஷனர் கிட்ட போனாலும் இதே நிலைமைதான் என்று சொல்லி மெலிதாய் புன்முறுவல் பூத்தார். நீங்க இந்த கேசை மேற்கொண்டு துருவாதீங்க... உங்க நேர்மை  மீதே  மத்தவங்க  சந்தேகப்படற  மாதிரி  காட்சிகளை  மாற்ற  முடியும்.  Leave from this,  அதுதான் உங்களுக்கு நல்லது.  உடனே விஷ்ணுவை வெளியே விடுங்க..."

தன் துப்பாக்கியே எடுத்து A.C., விஷ்ணு என  எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டும் என்கின்ற வெறி கோகுல் கண்களில் தெரிந்தது. உயர் அதிகாரிகள், அமைச்சர்கள் என எல்லோரும் பணத்திற்கு மண்டியிட்டு கிடக்கும் போது நீதி நேர்மை போன்றவை எல்லாம் ஒன்றுக்கும் உதவாத வஸ்துக்கள்தான். இயலாமை நொறுங்க.... " வைத்தி, RELEASE THAT BASTARD" என்றார்.


G.D.R. ENGINEERING COLLEGE -  4.15 PM


உதய், செல்போனில் வந்த தகவல்களை உறுதிசெய்து கொண்டு, "டேய், அந்த பஸ் அவினாசி தாண்டி வந்துட்டு இருக்கு, இன்னும் பத்து நிமிஷத்தில் நம்ம
காலேஜ் கிட்ட வந்திடும். LET'S MOVE".

மாணவர் கூட்டம் மெல்ல தேசிய நெடுஞ்சாலையே அடைந்து குறுக்காய் அரண்
அமைத்து நிற்க,  

சுகுமார் சொன்ன பேருந்து தூரத்தில் புள்ளியாய் தெரிந்து விரிந்து , பின்  மாணவர் கும்பலை பார்த்து வேகம் குறைத்து நின்றது.

மாணவர்கள் பேருந்தை சுற்றி வளைக்க... ,

"டேய் கண்டக்டர், இறங்குடா முதல்ல.."

"தம்பிகளா... எதுக்கு இவ்வளவு பேர் பஸ்ஸை மறிக்கிறீங்க... என்ன பிரச்சனை?"

"எங்க பையனை திட்டி கீழே தள்ளிட்டு... இந்த ரூட்ல இனிமேல் நீ
போயிடுவியா... ஒழுங்கா அவன் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு..."

"மன்னிப்பா... தம்பிகளா.. நீங்க ஒரு ஆயிரம் பேர் இருப்பீங்களா... நாங்க அரசாங்க போக்குவரத்து துறை ஆளுக மட்டும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர் இருக்கோம்.நாங்க திரண்டு வந்தா நீங்க தாங்க மாட்டீங்க... தமிழ்நாட்டுல ஒரு பஸ் கூட ஓடாது. போய் படிக்கிற வழியே பாருங்க
தம்பிகளா.. செத்தாலும்  நான் மன்னிப்பு கேட்க மாட்டேன்". டேய் மணி, நம்ம ஆளுங்க, மீடியா பசங்க எல்லோரையும் போனை போட்டு இங்க வர சொல்லு. ஸ்டுடண்ட்டுங்குற பேர்ல இவனுக பண்ற ரௌடித்தனம் எல்லோருக்கும் தெரியட்டும்.

வாக்குவாதம் முற்றிய ஒரு உஷ்ணமான  நொடியில்...  முதல்  கல்  பஸ்சின்  முன் பகுதி கண்ணாடியே பதம் பார்த்தது.


அமைச்சர் ராஜ துரை இல்லம் - கோயம்புத்தூர் - 5:00 PM

 ராஜ துரை, "இனி அந்த கோகுல் பைய நம்ம வழில வரமாட்டானே...?"

"வரக்கூடாது, இந்த ஹெராயின் SMUGGLING கேசை நான் டேக் ஓவர் பண்ண போறேன். கொஞ்ச நாள் நடத்தற மாதிரி நடத்தி  அந்த கேசை மூடிடலாம்" என்றார் பத்மநாபன்.

விஷ்ணு  உதட்டில்  பட்ட  காயத்தை  துடைத்துக்கொண்டே,  "நேர்மையான
 ஆளுங்களையெல்லாம் எதுக்கு சார் உங்க டிப்பார்ட்மென்ட்டில் சேர்க்கறீங்க ... பாருங்க.... எவ்வளவு ரத்தம் சிந்த வேண்டியிருக்கு "

பத்மநாபன் சிரித்துக்கொண்டே, "ஓகே விஷ்ணு  சரக்கை  எப்படி  சேலத்துக்கு அனுப்பிச்சே"  

ரொம்ப பெரிசா எல்லாம் திட்டம் போடலை,   கொரியர் சர்வீஸ் போல  இங்கிருந்து சேலம் போற பஸ்ஸில் நம்ம பார்சலை கொடுத்து ஐம்பது ரூபா தனியா டிரைவருக்கு வெட்டின போதும் பத்திரமா சேலம் பஸ் ஸ்டாண்ட்டில் நம்ம பார்சலை வாங்கிக்கலாம்.  பொதுவா அரசு பொது பேருந்துகளில் அவ்வளவா சோதனை இருக்காது. அப்படியே இருந்தாலும் போக்குவரத்து விதிகள் படி இப்படி பார்சல்கள் வாங்கிட்டு போவது தப்பு என்பதால் டிரைவர்கள் அதை வெளிய காட்ட மாட்டங்க.. பஸ்சின் மறைவான இடத்தில் அது பத்திரமா இருக்கும்.ரொம்ப சிம்பிளான கடத்தல்  டெக்னிக் இது.  


ஓகே... வண்டி நம்பரை குடு.. நான் சேலத்தில் இருக்கும் நம்ம பார்ட்டிகிட்ட சொல்லிடறேன்.

 ,
"TN37M9870  ஆறரை மணிக்கு சேலம் ரீச் ஆகிடும்"

விஷ்ணு சொல்லிக்கொண்டே  யதோட்சையாய்    அருகில்           ஓடிக்கொண்டிருந்த  T .Vயே பார்க்க...  பிளாஷ் நியூசில்,  "அவினாசி அருகே 
 தேசிய நெடுஞ்சாலையில்,  தனியார்கல்லூரி மாணவர்களுக்கும், அரசு பேருந்து நடத்துனருக்கும்  இடையே நடந்த மோதலில், கோவையில் இருந்து சேலம் சென்ற  அரசு பேருந்து ஒன்று மாணவர் கூட்டத்தால் தீ வைத்து எரிக்கப்பட்டது,  பேருந்தில்  இருந்த  அனைவரும்  ஆரம்பத்திலேயே  வெளியேற்றபட்டதால் உயிர் சேதம் ஒன்றுமில்லை"  என்ற வாசகங்கள்  மின்ன.... விஷ்ணு தனக்கு நெஞ்சு வலிப்பதை தெளிவாக உணர்ந்தான்.

-------------------------------------------------------------------------- 

டிஸ்கி - சவால் சிறுகதை போட்டிக்கான எனது  இரண்டாவது சிறுகதை. இந்த கதை உங்களை கவர்ந்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை யுடான்சில்   பதிவு செய்யவும்.
Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு - விமர்சனம்
250 பக்க நாவலில் சொல்ல வேண்டிய விஷயத்தை இரண்டரை மணி நேரத்தில் அவசர அவசரமாக சொல்லியிருப்பதுதான் ஏழாம் அறிவு.


"கல் தோன்றா மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்த குடி நம் தமிழ் குடி". நான்காம் வகுப்பில் படித்தது இன்னமும் ஞாபகசெல்களில் மிச்சமிருக்கிறது.  தமிழுக்கென்று தமிழர்களுக்கென்று உள்ள பல சிறப்பியல்புகளை அசாதாரணமாக தொலைத்து விட்டு அமெரிக்கன்  பீட்சா சாப்பிட்டு இங்கிலிஷில் கதைக்கும் வாழ்க்கைமுறைக்கு நாம் வந்து வெகு நாட்களாகிவிட்டது. திருக்குறள், தஞ்சை பெரிய கோவில் என சிற்சில
 அடையாளங்கள்தான் இன்று நம்மிடம்.நாம் பாதுகாக்க மறந்து,    தொலைத்த பல அரிய மருத்துவங்களை, கலைகளை, விஞ்ஞானத்தை, வீரத்தை நம்மிடம் நினைவூட்டிய  விதத்திற்காக A.R. முருகதாசிற்கு ஒரு பெரிய சபாஷ்.கொஞ்சம் டாகுமெண்டரி வாசம் வீசினாலும், முதல் இருபது நிமிடங்கள் இந்த படத்தின் டெக்னிக்கல் விஷயங்கள் உலக சினிமாவின் உச்சம். ஒளிப்பதிவு, கலை, இசை என எல்லா விஷயங்களும் கண்களை இரண்டு சென்டிமீட்டர் விரிய வைக்கிறது. அதன் பின்னான விஷயங்கள் திப்புடு திப்புடு என இலக்கில்லாமல் ஓடுவதுதான் கொஞ்சம் நெருடல்.

  
வேகமான திரைக்கதைக்கும், வேக வேகமாய் போகிற திரைக்கதைக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. என்ன வேகத்தில் போனாலும் ரசிகனின் கையே விடாமல் அவனையும் கதைக்குள் இழுத்துக்கொண்டு போகிற திரைக்கதைதான் வெற்றிக்கான சூட்சமம். இங்கு, திரைக்கதை வேக வேகமாய் போனாலும், ரசிகன் இன்னமும் ஆரம்ப இடத்திலேயே நின்று கொண்டு மலங்க மலங்க விழிக்கிறான். சரியான நேரத்தில் பொழியாமல்  திடும் திடுமென பெய்யும்  மழை போல முளைக்கும் பாடல்களில் நனைய மனமின்றி  வெளியே ஒதுங்குகிறான் ரசிகன்.


சூர்யா நாளுக்கு நாள் படு மேன்லியாய் உருமாறிக்கொண்டிருக்கிறார். போதி தர்மன் கேரக்டரில் அவரது கண்களில் இருக்கும் கனிவும்,  அமைதியும் அந்த கேரக்டருக்கு வலுவூட்டுகிறது. ஆனால் அரவிந்த் 
கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்ய வாய்ப்பின்றி தடுமாறுவதையும்  கவனிக்க முடியாமல் இல்லை. ஸ்ருதி ஹாசன்.....அழகையும் மீறி கமலஹாசன் மகள் என்னும்  விசிட்டிங் கார்டு அவரை ரசிக்கமுடியாமல் இம்சிக்கிறது.  கஜினி படத்தில் வருவது போல பிரெஷான, அழகான காதல் காட்சிகள் இந்த படத்தில்  இல்லாததது அவரின் மீதான கவன ஈர்ப்பை மேலும் குறைக்கிறது.வில்லனாய் வரும் அந்த சீனா பார்ட்டி அதிக அலட்டல் இல்லாமல் மிரட்டினாலும், ஒரு நொடி பார்வையில் ஹிப்னாடிஸ் செய்து தற்கொலை செய்ய தூண்டுவதெல்லாம் கொஞ்சமே கொஞ்சம் ஓவர்தான்.

ரவி கே சந்திரன்,  ஹாரிஸ் ஜெயராஜ், ஆண்டனி என சினிமாவில்  மெத்த படித்த டீம்  படத்தின் டெக்னிக்கல் ப்ளஸ்களுக்கு ரொம்பவே உதவியிருக்கிறது. 


எழுதி இயக்கியிருக்கும் A.R.முருகதாஸ் தமிழ் சினிமாவின்       வழக்கமான
வட்டத்தில் சிக்கிகொள்ளாமல் கொஞ்சம் இன்டர்நேஷனல் லெவலில்
படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முயன்றிருக்கிறார்.     ஆனால்
அதற்காக கொடுத்த ஓவர் பில்ட் அப் தான் படத்திற்கு முதல் மைனஸ். அதீத எதிர்பார்ப்பு, ஒரு மனிதனை.. தாலி கட்டிய மனைவி என்றாலும், காத்திருந்து படம் பார்த்தாலும், இன்னமும் கொஞ்சம் நன்றாக இருந்திருக்கலாமோ என்றுதான் எண்ண வைக்கும். மனித மனதின் அங்கலாய்ப்பு அது. ஒன்றும் செய்ய முடியாது அதை.


இலங்கை தமிழர் பிரச்சனை, தமிழர் கண்டறிந்த விஷயங்களை வெள்ளைக்காரன் பேட்டன்ட் போட்டு விற்பது,  தமிழரின் பாரம்பரிய அடையாளங்களை ஒழிக்க நினைத்தது, யாழ்ப்பாணத்தில் ஒரு லட்சம் தமிழ் புத்தங்கங்களை எரித்தது (சுஜாதா சார் இதை பற்றி ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார்) என தமிழ், தமிழர் பற்றிய அக்கறையே தொட்டு சென்ற விதத்தில் இந்த படத்தை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். 


சிற் சில குறைபாடுகள் இருந்தாலும்,   ஒதுக்கிவிட முடியாத படைப்புதான் ஏழாம் அறிவு.  பிளஸ் (+)

சூர்யா
ஒளிப்பதிவு.
இரண்டாம் பாதி
எடுத்துக்கொண்ட மெசேஜ்
முன் அந்தி பாடல்.

மைனஸ் (-)

முதல் இருபது நிமிடங்களை தவிர்த்த முற்பாதி
ஸ்பீட் பிரேக் பாடல்கள்
லாஜிக் மீறல்கள்
அழுத்தம் இல்லாத காதல் எபிசொட்.


VERDICT : பார்க்கலாம்... தவறில்லை.
RATING   : 4.8 / 10.0


EXTRA பிட்டுகள்


நீண்ட நாட்களுக்கு பிறகு, திருப்பூர் நண்பர்களுடன் இரவுக்காட்சி. உற்சாகபான மிகுதியில் தியேட்டரில் கத்தி கூச்சல் போட்டு அட்டகாசம் செய்யும் சில்லறை சந்தோஷங்கள்  திருமணம் முடிந்து சில பல குழந்தைகளுக்கு தகப்பனான பின்னும் தொடர்வது  நண்பர்களுடன்  இருக்கும் போது மட்டுமே வாய்க்கும்.

Friday, October 21, 2011

ஒன்றுக்குள் இரண்டு (சவால் சிறுகதை 2011)நான் தேவ்.... இந்த கதையின் நாயகன். நாயகன் என்றவுடன் ரொம்ப நல்லவன் ஏழை பங்காளன் என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள். நான் கொஞ்சம் வேறு மாதிரி. எல்லா சராசரி மனிதனுக்கும் எதாவது ஒன்றில் தனிப்பட்ட ப்ரியம் இருக்கும். இசையின் பால்..  புத்தகங்களின் மீது.. கிரிக்கெட்,அளவில்லாத பணம், ஸ்டாம்ப் கலக்ஷன், ஓவியம் இப்படி எதாவது ஒன்றில். எனக்கு பெண்கள் மேல்.... சிரிக்காதீர்கள்!  பெண்களை எல்லா ஆண்களுக்கும் பிடிக்கும் என்றாலும் என் விருப்பங்கள் கொஞ்சம் ஆழமானவை. ஆரம்ப காலங்களில் உங்களை போலவே எனக்கும் புரியாத புதிர்தான் பெண்கள்! இப்போது கொஞ்சம் பரவாயில்லை. ஆனாலும் இன்னமும் மிச்சமிருக்கிறது... கடலின் ஆழத்தில் ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் போல... நிச்சயம் சில விசேஷங்கள் வாய்த்திருக்கிறது அவர்களிடத்தில்! அதுதான் என்னை வெறித்தனமாய் இன்னமும் அவர்களுக்குள் தேட வைத்துக்கொண்டிருக்கிறது.  சரியான எண்ணிக்கை இல்லையென்றாலும் 
பத்து அல்லது பன்னிரண்டு இருக்கலாம் இதுவரை. என் கேள்விகளுக்கு விடை சொன்ன எந்த பெண்ணும் இப்போது உயிரோடு இல்லை. என்னை பொறுத்த வரை பெண்கள் என் ஆராய்ச்சி கூடத்து எலிகள்.  இல்லை ... இல்லை... முயல்கள்! விரல்களால் வருடும் போது காது சிலிர்க்கும் அழகான முயல்கள்! ஹலோ பாஸ்... வெயிட்.. வெயிட்.. அவசர அவசரமாக நான் ஒரு ரேப்பிஸ்ட் என்று முடிவு செய்து விடாதீர்கள். என் தேடல்கள் அதற்க்கு மேலும் இருக்கிறது. ஆரம்பத்திலேயே சொன்னேன் அல்லவா... நான் வேறு ஜாதி!   


பெண்களின் அனடாமியே மிகவும் ஆர்வத்துக்குரியதுதான். அந்த மிருதுவான தேகம். நகம் பட்டவுடன் உடனே சிவக்கும் அவ்வளவு மென்மை அவர்களுக்கு மட்டுமே உண்டான சாத்தியம். முழுதாய் உடல் மறைத்த கிளியோபட்ராவின் கால் கட்டை விரலை யதொச்சையாய் ஒரு போர் வீரன் காண நேர்ந்தால் கூட உடனே உணர்ச்சிவசப்பட்டு விடுவானாம் கிரேக்க காலங்களில். தீயையும் மழையையும் தனக்குள் ஒரு சேர வைத்திருக்கும் விசித்திரங்கள் அவர்களது உடல்கள். அது மட்டுமல்ல, மெலிதாய் எட்டிபார்க்கும் வெளிச்சம் படாத பிரதேசங்களின் வெண்மை, நீளமான விரல்கள்... அதில் கவனம் ஈர்க்கும் அந்த நெய்ல் பாலிஷ் வாசனை, முகத்தில் மிக மெல்லிதாய் படர்ந்திருக்கும் பூனை மீசை, எப்போதும் ஈரமான உதடுகள், சின்னஞ்சிறு பூப்போட்ட கை குட்டை, அதில் பரவியிருக்கும்  வித்தியாசமான  வியர்வை வாசனை என எல்லாமே எனக்குள் ஏற்படுத்தும் கிளர்ச்சிகள் எண்ணிலடங்காதவை. உயிர் போன பின்பு கூட அந்த கண்களில் தெரியும் வெளிச்சம்... பெண்களுக்கு மட்டுமே உண்டான சாத்தியம். 


காதல் அல்லது காமம் இந்த இரண்டை தவிர ஒரு இளம் பெண்ணை பார்த்தவுடன் வேறு எதாவது உங்களுக்கு தோன்றுமா.. ? வாய்ப்பே இல்லை. ஆரம்பங்களில் நானும் உங்களை போல ஒருவன். சாப்ட்வேர் குப்பைகளுக்கு மத்தியில் மூளையில் காதல் என்கின்ற பூ பூக்க.. காதலை அவளிடம் சொன்ன போது, சற்றும் தாமதிக்காமல் அந்த பெண், ஐந்து விரல்களையும் மடக்கி நடு விரலை மட்டும் உயர்த்தி காட்டினால் உங்களுக்கு எப்படி இருக்கும்.........? எனக்கும் அப்படிதான் இருந்தது. நீண்ட நாள் யோசனைக்கு பிறகு, ஒரு மழை அடித்த இரவில் அவளை கடத்தி வந்து விட்டேன். 


காதலையும் காமத்தையும் மீறி புது புது ஆர்வங்களும் உணர்சிகளும் பிறந்தது அந்த இரவில்தான்! மறக்க முடியாத இரவு அது. நாற்காலியோடு உடல் முழுதும் பிணைக்கப்பட்டு, வாய் கட்டப்பட்ட அவளால் அதிக பட்சம் அழ மட்டுமே முடியும் என்கின்ற நிலைமை. நிறைய நேரம் அவளின் பயந்த...கெஞ்சும் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தேன். நேரம் கடக்க கடக்க மூளை துறு துறுக்க ஆரம்பித்தது. மெல்ல  அவள் வலது கையின் நடு விரலை மட்டும் விடுவித்து உயர்த்தி பிடித்தேன். ஒரு வெண்மையான துணியில் பாட்டிலில்  இருந்த பெட்ரோலை நனைத்து விசேஷமான அந்த நடு விரலில் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு சுற்றினேன். தீக்குச்சியே பற்ற வைக்கும் தருணத்தில் அவள் விரல்களை போலவே என் விரல்களும் நடுங்கியது ஒரு முரணான கவிதை. அது விஷமா... அல்லது வரமா... அனுபவங்களின் நீட்சியில் உடல் எடை இழந்து காற்றோடு காற்றாய் மிதந்த நொடிகள்... அவளின் அலறல் என் அறை சுவர்களில் மோதி, எனக்குள் நுழைந்து, மயிர் கால்கள் சிலிர்த்துக்கொள்ள... அசுர வேகத்தில் என் ரத்த நாளங்களில் பயணம் செய்து என் மூளையின் உணர்வு கதவுகளை பலமாக தட்டிய போது... ஹையோ..... அதுதான் சொர்க்கமா? இரண்டு ஹெவி டோஸ் பெத்தடின் உங்கள் உடலில் நுழைந்தாலும் அத்தனை இன்பம்... அந்த அனுபவம் கிட்டுமா... தெரியவில்லை. அன்றைய இரவு முழுவதும் நாங்கள் இருவருமே தூங்கவில்லை. என்னையும் அறியாமல் அதிகாலையில் உறங்கி எழுந்த போது, அந்த பெண் செத்துவிட்டிருந்தாள்.  ஏனோ அவள் மீது எவ்வித கழிவிரக்கமோ, அனுதாபமோ எந்த இழவுமே தோன்றவில்லை. 
அதன் பின்னான என் வேட்டைகள் சில நேரங்களில் பசித்த புலியின் வேகத்தோடு ஒத்திருக்கும்.. அல்லது பீத்தோவனின் மூன் லைட் சொனாட்டா போல மெல்ல மெல்ல உருகி வழிந்து நாள் முழுதும் மிதந்து போகும். சில நாட்களில் தரை முழுதும் ரத்தம் நிறைந்து அதன் இளஞ்சூடு கால்களில் குறுகுறுக்கும் போது உடல் அப்படியே சிலிர்த்துக்கொள்ளும். ஒருவேளை பெண்களே இல்லாத உலகம் எப்படி இருக்கும்? நிச்சயம் அந்த உலகத்தில்  நான் ரொம்ப நல்லவனாக இருந்திருப்பேனோ என்னவோ.. ? என் வேலை, என் புத்தகங்கள், எனக்கான இசை என்று. ஆனால் நிஜம் இன்று வேறு. என் அடுத்த வேட்டைக்கான யோசனையில் இருந்த போதுதான் மொபைல் போன் என் கவனம் கலைத்தது.. டிஸ்ப்ளே "விஷ்ணு இன்பார்மர் " என மிளிர... கேள்விக்குறியோடு எனக்குள் கேட்டுக்கொண்டேன் "எவன்டா விஷ்ணு ?.....


நீங்கள் ராஜேஷ் குமார் படித்திருக்கிறீர்களா.? விவேக்கை உங்களுக்கு தெரியுமா.. ? தெரியாது என இடம் வலமாக தலையாட்டினால் மேற்கொண்டு இதை நீங்கள் தொடர்வதே அபத்தம். இங்கேயே விலகி விடுங்கள். நான் விஷ்ணு. கிட்டத்தட்ட விவேக்கின் ஜெராக்ஸ் போல. என்ன ரூபலா போன்ற அழகான பிகர்தான் கூட இல்லை. விடுங்கள்... நமக்கு கடமையே விட காதலா முக்கியம்? வெறும் மூன்று சென்டிமீட்டர் உயரம் பற்றாமல் போலீஸ் வேலைக்கு மறுக்கப்பட்டவன்.(165 cm) ஷெர்லாக் ஹோம்ஸ், துப்பறியும் சாம்பு, சுபா, PKP என தொடங்கி  கடைசியாய் சுஜாதா வரை எல்லா சாகச நாவல்களையும் கற்று தேர்ந்திருக்கிறேன். துப்பறியும் ஆர்வம் கூடவே பிறந்து வளர்ந்ததால் வருமானம் குறைவாக இருந்தாலும் பிரைவேட் டிடெக்டிவ் என ஊருக்குள் சுற்றிக்கொண்டிருக்கிறேன். அதற்காக என் திறமையே குறைவாக மதிப்பிட்டு விடாதீர்கள்.. பாதி எரிந்த ஒரு சிகரெட்டின் மிச்சத்தை தடயமாக வைத்துக்கொண்டு  ஒரு கொலை குற்றவாளியே கண்டறிந்திருக்கிறேன் தெரியுமா.. ?   அது எப்படி என கேட்பவர்களுக்கு.. இந்த கதை பாதி எரிந்த சிகரெட்டின் மிச்சத்தை  வைத்துக்கொண்டு ஒரு கொலையாளியே கண்டுபிடித்ததை பற்றியல்ல... தேவ் என்னும் ஒரு கூறுகெட்ட சைக்கோவை சட்டத்தின் முன்னால் நிறுத்துவதை பற்றியது. SO அந்த சாகச நிகழ்வை பிறிதொரு தருணத்தில் சொல்கிறேன். இப்போதைக்கு தேவ்... 


MR.கோகுல், S W H2 6F இதுதான் குறியீடு, கவனம்- விஷ்ணு. துண்டு சீட்டில் எழுதி நான்காக மடித்து வைத்து கொண்டேன்.  முதலில் இந்த விஷயத்தை கோகுலுக்கு தெரியப்படுத்திவிடலாம். கோகுல் கெட்டிக்காரர். நிச்சயம் விரைந்து வந்து அவனை பிடித்து விடுவார்.
அப்பப்பா... எவ்வவளவு பெரிய கம்மனாட்டி பையன் இந்த தேவ். ராட்சசன், யதொட்சையா இவன் ரூமுக்குள் நுழைஞ்சு இவன் டைரியே படிச்ச எனக்கே வயித்தை கலக்குதே.. இவன் கையிலே மாட்டுன பொண்ணுக கதி?  இவனை போலீசில் சிக்க வைப்பதால் எத்தனை எத்தனை பெண்கள் இந்த விஷ்ணுவால் காப்பற்றபடுகிறார்கள். ஊர்ல இருக்கிற அத்தனை பொண்ணுகளும் சேர்ந்து தெரு முக்குல  எனக்கு சிலை வச்சாலும் ஆச்சரியம் இல்ல.. 


என் வெண்கல சிலை உருவத்தை பற்றி மனசுக்குள் சிலாகித்து கொண்டிருந்த போதே பின்னந்தலையோடு சேர்த்து விழுந்தது அந்த அடி.. 


கழிசடை நாயே.. என்னையா போலீசில் மாட்டி விட பாக்கிற.. நீ இங்கிருந்து உயிரோடு வெளிய போனதானே... 


தேவ்... நான் பிரைவேட் போலீஸ்... என் மேல கை வைக்காதே... மரியாதையா சரண்டர் ஆயிடு....


ங்..***********......  உன் சாவு இன்னைக்கு என் கையாலதான்... 


டேய்....ப்ளீஸ்... ப்ளீஸ்... கழுத்தை நசுக்காதடா.... ஹக்..  MR.GOKUL  D K M 35W " DEV IS KILLING ME"  SAVE ME... ஹக்..ஹக்..


உயிர் போகும் போது கூட மெசேஜ் அனுப்புவியா... சாவுடா நாயே..! 

அரசு மருத்துவமனை...தலைமை மருத்துவர் அறை.


யார் சார் இந்த அரை கிறுக்கன் ? ஒரு வாரமா நம்ம உயிரை எடுத்துட்டு இருக்கான். உங்க ட்ரீட்மென்ட் மூலமா எதாவது விஷயம் கிடைச்சுதா?


எரிச்சலோடு கேட்ட இன்ஸ்பெக்டரை பார்த்து ஆம் என்பது போல தலையாட்டினார் சீப் டாக்டர். 


ரொம்ப பெக்குலியரா ஒன்னும் இல்லை. அவனை ஆழ்ந்த தூக்கத்தில் உட்படுத்தி அவன் ஆழ்மனசில் இருந்து சில விஷயங்களை சேகரிக்க முடிந்தது. சாப்ட்வேர் ஆசாமி, வேலை போனதில் இருந்து கொஞ்சம் மென்டலா டிஸ்டர்ப் ஆகியிருக்கிறான். அது போக நிறைய ஏமாற்றங்கள், நிராகரிப்புகள்... குறிப்பா பெண்கள் கிட்ட இருந்து. அதுதான் ஒருமாதிரி மனசிதைவு நோய்க்கு அவனை தள்ளியிருக்கு. 


அவன் டைரியே படிச்சதிலே, பெண்களை வித விதமா சித்ரவதை பண்ணி கொலை செஞ்ச மாதிரி இருக்கே.. அப்படி எதாவது செயல்களில் இவன் ஈடுபட்டிருக்கானா டாக்டர் ?


you know... இது வரைக்கும் இவன் யாரையும் கொலை செஞ்சதில்லை.தன் ஆழ் மன ஆசைகளை, வண்டல்களை டைரியில் கொட்டி  வச்சிருக்கிறான்...அவ்வளவே.   

ஆனா டாக்டர், அவன் ரூம் பூரா சின்ன சின்ன துண்டு சீட்டுக்கள், விஷ்ணுன்னு ஒருத்தன் யாரோ கோகுலுக்கு தகவல் சொல்ற மாதிரி.. ஒரு இழவும் விளங்கலை.. பாயே பிராண்ட வச்சுடுச்சு டாக்டர். 


ஒரு உண்மையே சொல்லட்டுமா... தேவ், விஷ்ணு இந்த ரெண்டுமே இவன் ஒருத்தன்தான். ரெண்டு வேறுபட்ட குணாதிசயங்கள்  இவன் மூளையில் ஆழ பதிஞ்சு ரெண்டு மனிதர்களா கொஞ்ச நாள் வாழ்ந்திருக்கிறான். உங்களுக்கு புரியற மாதிரி சொல்லனும்னா "MULTIPLE PERSONALITY DISORDER"  அந்த ரெண்டு கேரக்டரும் ஒரு கட்டத்தில் தொடர்ந்து  மாத்தி மாத்தி வெளிப்பட்ட  ஒரு குழப்பமான சூழ்நிலையில் அவனே தன் கழுத்தை தான் மயக்கமாகும் வரை நெருக்கியிருக்கிறான். நீங்க ஆரம்பத்தில் சொன்ன மாதிரி இவன் கழுத்தில் இவன் கைரேகைகள் மட்டுமே இருந்ததற்கு இதுதான் காரணம்.   


VERY STRANGE DOCTOR... அப்ப அந்த கோகுல்? 


கோகுல்னு ஒரு ஆளே இல்லைன்னுதான் நான் நினைக்கிறேன். அவன் படிச்ச புத்தகங்கள், அல்லது  பார்த்த சினிமா இதுல அவன் மனசை பாதிச்ச ஒரு நேர்மையான போலீஸ் உண்மையில் இருக்கிறதா நினைச்சுக்கிட்டு அவர் பேருக்கு துண்டு சீட்டில் தன் கண்டுபிடிச்சதா நினைச்ச சில விஷயங்களை கிருக்கியிருக்கிறான்னு நான் நம்பறேன். in fact ராஜேஷ் குமார் நாவல்களில் வர இன்ஸ்பெக்டர் பேர் கூட கோகுல்நாத் தான். அந்த பாதிப்பா கூட இருந்திருக்கலாம். 
  
அப்ப இந்த கேஸ் கோர்ட்டுக்கு போகாது.. கீழ் பாக்தான் போகும்னு சொல்றீங்க.... இல்லையா... டாக்டர்?  


 "ofcourse "


இவர்கள் விவாதித்து கொண்டிருந்த அதே நேரம், தனி அறையில் படுக்க வைக்கபட்டிருந்த அவன் ஒரு சிறிய துண்டுசீட்டில் கிறுக்க ஆரம்பித்தான்.. 
  
"SIR, 


எஸ்.பி.கோகுலுக்கு நான் தவறான குறியீடைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம். - விஷ்ணு. 


" ஹையோ... கழுத்து இன்னமும் வலிக்குது... துப்பறியும் வேலையே விட உயிர் ரொம்ப முக்கியம்."


---------------------------------------------


டிஸ்கி - இந்த கதை உங்களை கவர்ந்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை யூடான்சில் மட்டும் பதிவு செய்யவும்.


Sunday, October 2, 2011

வெடி - விமர்சனம்சொந்த காசில் தனக்கு தானே சூனியம் வைத்துக்கொள்வதற்க்கும் வெடி படத்தை தியேட்டரில் சென்று பார்ப்பதற்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை.  


காதல் ஒரு மனிதனை எவ்வளவு  பைத்தியம் ஆக்கிவிடும் என்பதற்கு சிறந்த உதாரணம் பிரபுதேவா. மனிதர், நயன்தாராவிடம் மனதோடு சேர்த்து மூளையையும் பறிகொடுத்து விட்டாரா என்பது தெரியவில்லை. வில்லு, எங்கேயும் காதல் போன்ற உலக வரலாற்று காவியங்களின்  வரிசையில் அவரின் அடுத்த  படைப்பு  வெடி.
தெலுங்கு   ரசிக கண்மணிகளை  பொறுத்த  வரை  எல்லாமே அவர்களுக்கு  மிதமிஞ்சியதாகத்தான்  இருக்க வேண்டும் .  பிரியாணியில்  காரம்  அதிகமாக  இருப்பதில் தொடங்கி...ஹீரோயிசம், ஆக்ஷன், கவர்ச்சி, காமெடி என எல்லாவற்றிலும் உச்சபட்ச எல்லைகளை தொட்டு பார்க்கும்  ரசனைக்காரர்கள் அவர்கள். அதை அப்படியே தமிழ் படுத்தும் போது ரொம்பவே படுத்துகிறது.


ஒரு நேர்மையான போலீஸ், அநியாயம் செய்யும் வில்லன், அவனின் ரௌடி மகன்,அவர்களுக்குள் நடக்கும் மோதல்கள், இடையில்  பாடல்களை நகர்த்த  கவர்ச்சியான ஹீரோயின்  என கீறல்  விழுந்த  அதே  ரெகார்ட். அதில் அண்ணன் தங்கச்சி பாசம் என்கின்ற ஒரு உப ஆலாபனை வேறு கர்ண கடூரமாய் ஒலிக்கிறது.
அவன்  இவனில்  கொஞ்சம்  வித்தியாசம்  காட்டி  கவனிக்க  வைத்த விஷால்... நான் அந்த அளவுக்கு எல்லாம் வொர்த் இல்லைங்க என்று இதில் சறுக்கியிருக்கிறார்.  படம் ஆரம்பித்த நொடியில் இருந்து முடியும் வரை ஏதோ கஷாயம் குடித்தவன் போல முகத்தை படு இறுக்கமாக வைத்து கொண்டு வசனம் பேசுகிறார், சண்டையிடுகிறார்... டூயட் பாடுகிறார்.  விடுங்க  அவரிடம்   இருந்து நாம்  என்ன நடிப்பு நவரசத்தையா எதிர்பார்க்க முடியும்.


வில்லன் வந்து இடுப்பை தொட்டால் கோபப்படும்  ஹீரோயின்... ஹீரோ  வந்து தொட்டதும்  உடனே காதல்  வயப்படுகிறார்.   எந்த  மாதிரி  டெக்னிக்கில் இடுப்பை வளைத்தால் காதல் வரும் என்கின்ற டெக்னாலஜியே இனிவரும் படங்களில் பிரபு தேவா விளக்கினால் பிகர் கிடைக்காமல் கஷ்டப்படும் இளைஞர்கள் பார்த்து,தெளிந்து ஒரு பிகரை   வளைக்க ஏதுவாக  இருக்கும்.
ஒரு படத்தில் ஹீரோயின் மட்டும்தான் லூசாக இருக்க வேண்டும் என்கின்ற கட்டாயமா என்ன...?  ஹீரோயின், ஹீரோயின் குடும்பம், காமெடியன், வில்லன், துணை கதாபாத்திரங்கள்  என எல்லோருமே பாரபட்சமின்றி லூசாக திரிகிறார்கள்.  பத்து  இருபது  பைத்தியங்களுக்கு  மத்தியில்   படம் பார்க்கும் நாமும்  சிக்கிக்கொண்டதை போன்ற ஒரு பீதியே தந்த விதத்தில் இயக்குனர் ஜெயித்திருக்கிறார்.
R.D. ராஜா சேகரின் கேமரா சமீரா ரெட்டியின் முகத்தை விட, அவரது பரந்த மனசை காட்டுவதில் அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. சண்டை காட்சிகளில் ஓகே ரகம்.


கையேந்தி பவனில் கூட கணினி மையம் செய்யப்பட்ட இந்த காலத்திலும், வில்லனின் அடியாட்கள் இன்னமும் துப்பாக்கிக்கு மாறாமல் கத்தி, கபடா வகைகளை தூக்கி சுற்றிக்கொண்டிருப்பதை பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. சாயாஜி ஷிண்டே என்கின்ற நல்ல நடிகனை கத்த மட்டும் வைத்து வேடிக்கை பார்த்திருக்கிறார்கள்.சின்ன கலைவாணர் என்கின்ற பட்டத்தை தயவு செய்து விவேக் திரும்ப கொடுத்துவிடுவது அந்த பட்டத்திற்கு மரியாதை. காமெடி என்கின்ற பெயரில் கடிக்கிறார்.


போக்கிரி, தூள் போன்ற மசாலா படங்களில்  பரபரவென வெடித்து கிளம்பும் திரைக்கதையும், அடுத்து என்ன நடக்கும் என்கின்ற பதை பதைப்பும் சுவாரசியமாக படம் பார்க்க வைத்தது. ஆனால் வெடியில் அடுத்த சீன் என்ன என்பதை  புதிதாய் சினிமா பார்க்கும் குழந்தை கூட யூகித்து விடுவதுதான் படத்தின் முக்கிய மைனஸ்.இந்த கதை A சென்டருக்கு மட்டும்தான் பிடிக்கும் , இந்த  கதை  C சென்டரில்  வொர்க் அவுட் ஆகும்  என்கின்ற காலம்  எல்லாம் மலை  ஏறி  போச்.... முன்வரிசை பின் வரிசை என்கின்ற பாகுபாடின்றி,  தினசரி வாழ்வியல் நிகழ்வுகளை அதன் யதார்த்தம் மாறாமல் கொடுக்கும்  நல்ல படைப்புகளை ரசிக்கும் பக்குவத்திற்கு தமிழ் ரசிகர்களின் ரசனை வந்து  விட்டது என்பதை  மசாலா பட இயக்குனர்கள் உணராத  வரை இப்படிப்பட்ட  தண்டனைகள்  தொடர்ந்து  கொண்டுதான் இருக்கும்.(+) பிளஸ் 

இப்படி மழை அடித்தால் பாடல்..
இரண்டாம் பாதி சுவாரசியங்கள்..


(-) மைனஸ்

யுகிக்க முடிகிற திரைக்கதை
லாஜிக் ஓட்டைகள்
காமெடி
புளித்த மாவு கதை 


VERDICT : நமுத்து போன வெடி
RATING  : 3.4/10


EXTRA பிட்டுகள் 


காசி.. பால்கனி. பக்கத்துக்கு சீட் இளைஞர்கள் இருவர் பெப்சி பாட்டிலில் கலந்த சரக்கோடு சந்தோஷமாக படம் பார்க்க ஆரம்பித்தார்கள்.... படம் ஆரம்பித்து இருபது நிமிட மொக்கையில் அடித்த சரக்கெல்லாம் தெளிந்து போய் மலங்க மலங்க விழித்த அவர்களை பார்க்க ரொம்ப பரிதாபமாக இருந்தது.

இவர்கள் இப்படி என்றால், பின் சீட்டில் மூன்று பேர், விஷாலின் அதி தீவிர ரசிகர்கள்... ரசிகர் மன்றத்தின் நல்ல பதவியில்  இருப்பவர்கள் போல.   படத்தின் காலை காட்சி பார்த்து விட்டு, இரவு காட்சியில் அடுத்து வரும் காட்சிகளை பற்றி சிலாகித்து பேசிக்கொண்டிருந்தது இரண்டாம் உலகப்போர் கொடுமை.


---------------------------------------------

டிஸ்கி - தமிழ் 10 , யுடான்ஸ், இன்ட்லியில் ஓட்டு போட உங்களுக்கு 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலே போதுமானது. SO... VOTE PLEASE... IF YOU LIKE THIS.....Tuesday, September 27, 2011

ஜாக்கியும்.... நானும்.....நாய்களுடனான என் உறவு ஹிட்லருக்கும் யூதனுக்கும் உள்ள உறவை போன்றது.   எந்த காலத்திலும் ஒத்து போனதே இல்லை. நாய்கள் மீதிருந்த  அச்சமும் வெறுப்பும் சிறு வயதில், ஒரு முட்டு சந்தில் என்னை துவட்டி எடுத்த அந்த குறிப்பிட்ட கருப்பு நாயிடம் இருந்து பிறந்திருக்கலாம்.

சிவனே என்றுதான் படுத்துக்கொண்டிருந்தது. பதின்ம வயதின் குறும்புகள் என்  மூளையில் பிறந்து கால் வழியாய் வெளியேறி அதன் வாலை மிதிக்க, கும்பகர்ணனின்   தூக்கத்தை  கலைத்தால் கோபத்தில் எப்படி வெறித்தனமாய்   
பாய்வானோ அதே வேகத்தில் என் தொடையே குறி வைத்து பாய்ந்து கடித்து குதறி தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டது. 

இப்போது இருப்பது போல ஒற்றை ஊசி வைத்தியம் எல்லாம் அப்போது இல்லை.  குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருந்துகள் வாங்கி வந்து தினம் ஒரு ஊசி என என் குடும்ப மருத்துவர் பதினெட்டு நாட்கள் என் தொப்புளை துளைத்தார். ஒவ்வொரு முறை ஊசி ஏற்றும் போதும் நாய்கள் மீதான என் வன்மம் என் மனசுக்குள் ஏற ஆரம்பிக்க அதிலிருந்து நாய்கள் என்றாலே லத்திகா பட போஸ்டரை கண்டது போல தெறித்து விலக ஆரம்பித்தேன்.


நாம் நாய் வழியில் குறுக்கிடா விட்டாலும் அது நம் வழியில் அடிக்கடி குறுக்கிடும், இரவு காட்சி சினிமா முடிந்து வீடு திரும்பும் பொழுதுகளில் விஸ்வரூபம் கொண்டு அது துரத்தும் போதெல்லாம் அதன் மீதான ஆத்திரம் ராஜபக்ஷே மீதுள்ள ஆத்திரத்தை விட சில பல மடங்குகள் அதிகரிக்கும்.


இப்படி நாய்கள் மீது வெறித்தனமான வன்மம் கொண்டிருந்த என் வாழ்க்கையில்தான் ஜாக்கி உத்தரவின்றி உள்ளே நுழைந்தது. வீடு ஒன்றை  வாடைகைக்கு தேடிக்கொண்டு அந்த புது வீட்டிற்க்குள் நான் நுழைய அது எங்கேருந்தோ வந்து என் மீது தாவி ஏற,  கற்பழிக்க வந்த வில்லனை கண்ட கதாநாயகி போல "வீல்" என உச்சஸ்தாயியில் கதறினேன்.   அந்த வீட்டு உரிமையாளர் பெண் வயது ஐந்து ஆறுதான் இருக்கும். அது எதோ கன்றுகுட்டியே அரவணைப்பது போல அப்படியே அந்த ஜாக்கியே அரவணைத்து இழுத்து கொண்டு போக என் உடலெல்லாம் நடுக்கத்தில் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது.


அந்த வீடு, வீட்டு உரிமையாளர், உரிமையாளரின் இரண்டு சுட்டி குழந்தைகள் என எல்லாம் பிடித்து போனாலும், ஜாக்கி மட்டும் பயமுறுத்தியது. இருந்தும் அந்த வீட்டிற்க்குள் நண்பர்களுடன் குடி புகுந்து அந்த ஜாக்கியிடம் இருந்து மட்டும் விலகியிருக்க ஆரம்பித்தேன்.


லேபர்டர் வகையே சேர்ந்த ஜாக்கி நான் வீட்டிற்குள் நுழையும் போதெல்லாம்  குரைப்பதற்கு பதிலாக என்னை கண்டவுடன் நக்கலாக சிரிப்பது போல் இருக்கும். போதாகுறைக்கு அந்த குட்டி பெண் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அதனோடு விளையாடுவதும், அதனை எட்டி உதைத்து அடிப்பதை கண்டவுடன் என் தன்மானம் உசுப்பேற ஜாக்கியே கண்டு பயப்படாமல் இருப்பது போல நடிக்க ஆரம்பித்தேன். எதிரியே வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அவனை நண்பனாக்கி கொள்வதுதான் என்ற முடிவோடு மூன்று ரூபாய் டைகர் பிஸ்கட்டோடு ஜாக்கியே நெருங்க... முதன் முதலாக அதன் முகத்தில் என்னை அல்லது என்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை கண்டவுடன் ஒரு அன்பு, ஒரு விருப்பம், ஒரு காதல் தெரிந்தது.. 


எப்படி அந்த ரசாயன மாற்றம் என்னுள் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஜாக்கி என்னிடம் வெகு சீக்கிரத்தில் ஒரு குழந்தை  போல நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டது. இதற்காக தினமும் ஒரு பாக்கெட் பிஸ்கட் செலவானது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். ஒரு நாள் பிஸ்கட் போட மறந்தாலும் அல்லது மறுத்தாலும் விடாமல் குரைத்து குரைத்து அன்றைய தின இரவை தூங்க விடாமல் செய்து விடும். இடைவெளி இன்றி அது குரைப்பதை பார்த்து என் அறை நண்பன் சுமி என்னை குரைக்க ஆரம்பித்தான். முதலில் உன்னையும் இந்த நாயையும் ஒழிச்சாத்தான் நான் நிம்மதியாக  தூங்க முடியும் என்பான். 


இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே ஜாக்கி என் சொல்படி கேட்க ஆரம்பித்தது. என்னை கண்டவுடனேயே அதன் கண்களில் தெரியும் ஒரு ஆர்வமும் துருதுருப்பும் என்னவோ பயங்கர சந்தோஷத்தை எனக்குள் ஏற்படுத்தியது.    ஒரு அலட்சிய பாவத்தில் தொடங்கிய எங்கள் நட்பு அடி ஆழமாய் வேரூன்ற  எது காரணமாக இருந்திருக்கும். நாய்கள் மீதான என் பயத்தை அது போக்கியதாலா... அல்லது உருவத்தில் மிக பெரிதாக இருந்தாலும் குழந்தைதனமான முகத்தினாலா.... ஒரு ஐந்தறிவு ஜீவன் என் மீது கொண்ட அன்பினாலா... சரியாக தெரியவில்லை.  எங்களுக்கு எதாவது உணவு வாங்கும் போதே ஜாக்கிக்கும் எதாவது வாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் அப்போதிருந்தே தோன்ற ஆரம்பித்துவிட்டது.


வளர்ப்பு மிருகங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றையும் தங்கள் குழந்தைகள் போலத்தான் நினைத்து வளர்ப்பார்கள் என்பதில் நம்பிக்கை தவறியிருந்த நான் ஜாக்கியின் நட்பில் அது உண்மையென உணர்ந்தேன். நிச்சயம் மனிதர்கள் போல அதற்க்கு துரோகம் நினைக்க தெரியாது... அன்பை... அன்பை மட்டுமே கொடுக்கும் உன்னதமான ஆத்மாக்கள் அவை.


ஒரு உற்ற தோழன் போல விளங்கிய ஜாக்கிக்கு வயது வெறும் ஆறே மாதங்கள். கம்பீரமாக வீட்டை சுற்றிக் கொண்டிருந்தவன், சென்ற ஞாயிறு மொட்டை மாடியில் அனாதையாய் செத்து கிடந்தான். அவன் தங்கியிருக்கும் சிறு அறையே சுத்தம் செய்யும் பொருட்டு, அவனை மொட்டை மாடி பில்லர்    சுவற்றில்  கட்டி வைத்திருக்க.... சுடு வெயிலின் தாக்கம் தாங்காமல்.. எம்பி குதித்தவன் கழுத்து  சங்கிலி எதிர்பாரா விதமாக கழுத்தை இறுக்கி கொள்ள... கத்த கூட திரணியற்று துடிதுடித்து இறந்திருக்கிறான்.


 விஷயம் அறிந்து... பதறிக்கொண்டு போய் பார்த்த போது கால்கள் விடைத்து பற்கள் இறுக கிடந்தவன் கண்களில் மட்டும் யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்கின்ற ஏக்கமும் ஏமாற்றமும்  தேங்கி கிடந்தது.


ஊருக்கு சென்றிருந்த வீட்டு உரிமையாளரின் ஆறு வயது மகள் திரும்பி வந்து ஜாக்கியே கேட்டால் என்ன சொல்வது என்கின்ற பதில் யாருக்கும் தெரியவில்லை. இனிமேல் நாய்களை கண்டால் பயப்படுவேனா.. நெருங்கி பழகுவேனா  என்பதற்கும் எனக்குள் விடை இல்லை.  தினசரி அதன் சத்தம் தாங்காமல் அதை ஒழிக்க வேண்டும் என அனுதினமும் புலம்பும் என் அறை நண்பன் சுமி.." நல்ல நாயடா அது " என கதறி கண்ணீர் விட்டதை பார்க்கும் போது எந்த கேள்வியுமே எனக்கு புரியவில்லை.

---------------------------------------------

டிஸ்கி - தமிழ் 10 , யுடான்ஸ், இன்ட்லியில் ஓட்டு போட உங்களுக்கு 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலே போதுமானது. SO... VOTE PLEASE... IF YOU LIKE THIS..... you might like this also...

Related Posts with Thumbnails