Wednesday, March 23, 2011

நான் ஏன் தொடர் கொலைகாரன் ஆனேன்.... ?கவனிக்க : உயிர் வதை காப்பாளர்கள்  இந்த கட்டுரையே தவிர்ப்பது நலம். 

இரவு.... ரம்மியமானது.... பகலின் உஷ்ணத்தையும்... வியர்வை வீச்சுக்களையும் கடந்து வரும் இரவானது எல்லாருக்கும் பிடித்தமானது... எனக்கும்! ரகசியம் சொல்லும் காதலி போல் நிலா அருகில் இருக்க... இளையராஜாவோ, ரஹ்மானோ... இசையாய் செவி நுழைந்து மனம் தொட....அதை  தொடர்ந்து வரும் தூக்கமும் வண்ணங்களை பகுத்தறியமுடியாத கனவுகளும் ஒவ்வொருவருக்கும் வரம். கிட்டத்தட்ட  பூலோக சொர்க்கம்.எங்கேயோ கேட்கும் ரயில் ஓசை,  குளிர் நெருங்கும் போதெல்லாம் போர்வையில் ஒளிந்து கொண்டு கதகதப்பாகும் உடல், கண்களை உறுத்தாத இருள் என இரவு எப்போதுமே ஒரு கவிதை. தினம் தினம் புதிதாய் வாசிக்க தூண்டும் கவிதை. 

அனால் இப்போதெல்லாம்... இரவு நெருங்க நெருங்க மனசில் சொல்ல முடியாத அச்சம், படபடப்பு, கிட்டத்தட்ட மரண பயத்திற்கு ஒப்பான பீதி... நான் உறக்கம் தொலைத்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றது... இந்த இடைப்பட்ட இரவுகளில் எத்தனை ரத்தம்.... எத்தனை வலிகள்... எத்தனை உடல்கள்..

சென்னை தனக்குள் இப்படி ஒரு கோர முகத்தை வைத்திருக்கும் என்று நான்  கனவிலும் நினைக்கவில்லை.இவன் ரொம்ப நல்லவன் என்று எல்லோராலும்  சான்றுரைக்கப்பட்ட  என்னை... ஒரு கோபக்காரனாக கொலைகாரனாக  சாடிசம் பிடித்தவனாக... அரை கிறுக்கனாக... கிட்டத்தட்ட சட்டையே கிழித்துக்கொண்டு நடுஇரவில் ஓடலாம் என என்ன வைத்த இந்த சென்னை இரவுகளை என்னால் மறக்க முடியாது .

எப்போதும் போலான இரவுதான் அன்று... அனால் நிகழ்ந்த அந்த பயங்கரம் இதன் முன் நான் கண்டிராதது. சாரு கூட தனது தேகம் நாவலில் வதை பற்றி அவ்வளவு உள்ளுணர்வோடு குறிப்பிட்டிருக்க மாட்டார். வதை பட்டேன்... பின் வதம் செய்தேன்...


தூங்க ஆரம்பித்தவுடன்... அரை குறை  ஆடையுடன் அனுஷ்கா என் அருகில் வந்து  என் தலை கலைத்த நேரம்...சுருக்கென்றது...  அனுஷ்காவின் அழகுக்கு முன் அந்த வலி அப்படி ஒன்றும் பெரிதாய் என்னை இம்சிக்கவில்லை. மெல்ல அனுஷ்கா என் இதழ் நெருங்கி தன் இதழை கி ட் ட த் தி ல் கொண்டு வர... மீண்டும் சுருக். இம்முறை சற்று வலிமையாய்... கவனம் தொலைத்ததில் அனுஷ்கா கோபித்துகொண்டு புகையாய் மறைந்துவிட...  திடுக்கிட்டு விழித்ததில் என் கட்டிலை சுற்றி நான்கைந்து கொசுக்கள். சீ .. இவ்வளவுதானா என இப்போது நீங்கள் நினைத்தது போலவே நானும் நினைத்து போர்வையே நன்கு சுற்றி கொண்டு மீண்டும் அனுஷ்காவை துளாவ ஆரம்பித்தேன்... போர்வை என்னை முழுக்க மூடியிருந்தாலும் கால்களுக்குள் குறுகுறுப்பு..... தொடர்ச்சியாய் ஏகப்பட்ட சுருக் சுருக் சுருக்.... கடுப்படைந்து எழுந்தவன்.... கொலை வெறியோடு அவைகளை அடிக்க தொடங்க... விட்டலாச்சார்யா  படத்தில் வருவது போல கய முய கய முய என்று ஏகப்பட்ட கொசுக்கள்... அடிப்பேன் பின் தூங்குவேன்.... அவை கடிக்கும்.. மீண்டும் அடிப்பேன்.. பின் தூங்குவேன்... அவை கடிக்கும்... இப்படியே விடிய விடிய நடந்த தட்டல் சண்டையில் என் சார்பில் உறக்கத்தையும்.... அவர்களின் சார்பில் சில நூறு கொசுக்களும் பலியிடப்பட்டது.

அடுத்த நாள்  முன்னெச்சரிக்கை போர் நடவடிக்கையாக ALLOUT LIQUID       பொறுத்த...  பின்தான் தெரிந்தது.. ALL OUT  கொசுக்களை கொல்வதற்காக  அல்ல... கொசு கடித்தால் அதன் வலி நமக்கு தெரியாமல் இருப்பதற்காக என்று... கொஞ்சம் கூட கொசுக்களின் அராஜகத்தை குறைக்க முடியவில்லை. மாறாக பூஸ்ட் குடித்த உத்வேகத்துடன் மேற்கொண்டு அவை கொடுத்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் அன்றைய தின தூக்கமும்  போச்.

அடுத்த நாள்... ஒரு டஜன்  கொசுவர்த்தி  சுருள் என் அறை முழுதும் ஏற்றிவைக்கபட்டது. புகைந்த புகையில்... மூச்சு அடைத்து உடனடி மாரடைப்பு ஏற்படும் நிலைக்கு நான் ஆளானாலும்... ஒரு கொசு கூட சாகவில்லை. மாறாக... ரத்தம் ருசித்த களைப்பில் அந்த கொசுவர்த்தி சுருள் மீது அமர்ந்தே  அவை ஓய்வெடுத்ததை  பார்த்தவுடன் இன்னமும் என் பீதி அதிகமானது.

ரணகளமான இந்த இரவுகள் என் உடலில் தடிப்பையும், மனசில் கொலை வெறியையும் ஏற்ற... இவைகளை உயிரோடு விடக்கூடாது என செத்துப்போன என் பாட்டி மீது சபதம் எடுத்து அடுத்த ஆயுதத்தை தேடிய போதுதான்... கிடைத்தது  மஸ்கிட்டோ  பேட். ராமன் கையில் கிடைத்த வில்லை போல..பீமன் கையில் கிடைத்த கதத்தை போல... சச்சின் கையில் கிடைத்த  MRF BAT   போல... அந்த மஸ்கிட்டோ  பேட் என் கண்களுக்கு தரிசனம் தர,   உற்சாகத்துடன் " இறுக்கி பிடி, முறுக்கி அடி " என விதவிதமாய் ரக ரகமாய் அடித்து துவைக்க... பத்து நிமிடங்களில் அத்தனை எதிரிகளும் காலி. 


வெற்றியின் கொண்டாட்டங்கள் ஒரு மணி நேரம்தான்.... மீண்டும் அந்த ராட்சச ஜந்துக்கள் வெறித்தனமாய் என் மீது பாய... பட பட பட்டார்... என தாக்குதல் ஆரம்பமானது. இரவு பத்து... பின்  பன்னிரண்டு...  நடு நீசி ஒன்று, அப்புறம்  மூன்று என இடைவெளியற்ற துவண்ட யுத்தம். உறக்கம் தொலைத்த கண்கள் எரிய... மனம் இன்னும் விகாரமானது. கட்டிலில்  இருந்து இறங்கி சுவர் ஓரமாக நின்று கொண்டேன்.  கொசுக்களை பிடித்து... இறக்கை வேறு.. கால்கள் வேறு என பிய்த்து எறிந்து. அந்த எலக்ட்ரிக் பேட்டின் மீது போட்டு அவை வறுபடுவதை குரூரமாய் ரசிக்கும் என்னை பார்த்து எனக்கே சற்று பயமாகத்தான் இருந்தது. விடிய விடிய  பட்டாசு சத்தம் கேட்டு எழுந்த அறைநண்பன் சாமி, மாப்ள...  கொசு அடிச்சது போதும்,  மணி அஞ்சு ஆச்சு...   வா, டீ சாப்பிட்டுட்டு வரலாம் என்றான்... அடங்க்கொக்கமக்க...   முழு இரவும் தூங்காமல் கொசு அடித்திருக்கிறேன்.

ஒரே ஒரு நாள் மட்டும் உயிரோடு  இருக்கும் கொசு... இந்த பாடு படுத்துகிறதே என கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. இறுதியாக... இப்போது கொசு வலைக்குள் பதுங்க ஆரம்பித்திருக்கிறேன்.... வலையே சுற்றி கும்பல் கும்பலாக வந்து நோட்டமிடும் அந்த சாத்தான்களை கண்டால் இப்பவும் சற்று பயமாகத்தான் இருக்கிறது.

Wednesday, March 9, 2011

தேகம் - புத்தக விமர்சனம்சென்னை புத்தக கண்காட்சியில் சாருவின் "தேகம்" வாழைக்காய் பஜ்ஜி போல சுட சுட விற்றுக்கொண்டிருந்தது. அப்போது என் நிதி  நிலைமை சற்று சிறப்பாக இல்லாத படியால் வாங்க முடியாமல் போய் விட்டது. 

இடையில்... என் நண்பனொருவன்... புத்தகங்களின் மீது அதிகப்படியான ஈடுபாடு இல்லாதவன், என் தொடர் நச்சரிப்பின்  காரணமாக புத்தகம் படிக்க ஆரம்பித்து   சுஜாதா, கல்கி மூலமாக புத்தகம் வாசிக்கும் ஆர்வத்தை நிறையவே வளர்த்திருந்தான். புதிததாய் கல்யாணமான தன மனைவியுடன் திருப்பூரில் நடைபெற்ற புத்தக கண்காட்சிக்கு சென்றவன்... அங்கிருந்து செல்பேசியில்... என்ன புத்தகம் வாங்கலாம்... சொல்லுடா என்றான். நானும்.... இரண்டு மூன்று நல்ல சுஜாதா புத்தகங்களை சொல்லிவிட்டு... கடைசியாய்... சாருவின் தேகம் கிடைத்தால் வாங்கி படி..  ரொம்ப நல்ல இருக்குதாம் என்றேன். கணவன் மனைவி சகிதம் நான்கைந்து கடைகள் ஏறி இறங்கி.. தேடியலைந்து ஒரு வழியாய் 'தேகம்' வாங்கி படிக்க ஆரம்பித்திருக்கிறான். அன்றிரவே... எனக்கு போன்... எடுத்தால்... எழுத்தில் சொல்ல முடியாத தூய தமிழ் கெட்ட வார்த்தைகள் நான்கைந்தை சொல்லிவிட்டு வைத்துவிட்டான்.  இரண்டு நாட்களுக்குள்  அவனிடமிருந்து ஒரு கூரியர்... பிரித்தால் சாருவின் பள பளா தேகம். புத்தகத்தின் முதல் பக்கத்திலேயே  "படித்து வாழ்வில்  முன்னேற தகுந்த புத்தகம்" என அவன் கையெழுத்து.

படிக்க ஆரம்பித்தேன்.... இரண்டே இரவுகள்.... முடித்துவிட்டேன்..... இலக்கியம் என்றால் என்ன என்கின்ற ஆதாரமான கேள்விக்கு அப்பொழுதுதான் எனக்கு விடை கிடைத்தது.  இலக்கியம் என்றால் என்ன?   

முதல் தகுதி... படிக்கும் எவனுக்கும் ஒரு எழவும் புரிய கூடாது.... இரண்டாவது...  ஒரு கோர்வையில்லாமல் மனம் போன போக்கில் எதையாவது... எதைப்பற்றியாவது எழுதி  வைப்பது..... மூன்றாவது ஆண் பெண் பிறப்புருப்புக்களை... உடலுறவை பற்றி விலா வரியாக அலசுவது.. கடைசியாக பாயசத்தில் கொஞ்சம் முந்திரிகளை மிதக்க விடுவது போல... சில பல கெட்ட வார்த்தைகளை பிரயோகிப்பது... சாருவின் இலக்கியம் இந்த வட்டத்திற்குள்ளேயே  அடைபட்டு விடுகிறது.  புரியவில்லை.... என்ன மாதிரியான நோக்கத்திற்காக சாரு இப்படி எழுதுகிறார். என்ன சொல்ல வருகிறார். ஒரு வேளை.. திரும்ப திரும்ப வாசித்தால் எதாவது உள் அர்த்தம்...மனித குலம் அறிந்து.. விளங்கி.. ஆழ்மனம் பன்படும் அளவிற்கு அதில் புதைந்திருக்குமா  தெரியவில்லை... என் சிற்றறிவிற்கு  சத்தியமாக  ஏதும் தட்டுப்படவில்லை. 


தர்மா என்னும் ஒரு கதாபாத்திரம்... அவர் சில நேரங்களில் மூன்றாம் தர ரௌடி கும்பல்களோடு இணைந்து சுற்றிக்கொண்டிருக்கிறார்... சில நேரங்களில் ஷேக்ஸ்பியரே  தான் எழுதுவதெல்லாம்  ஒரு எழுத்தா என வெட்கி தலை குனியும்  அளவிற்கு கவிதை கிவிதை எல்லாம் எழுதுகிறார்... தான் ஒரு எழுத்தாளன்  என்று அவரே சொல்லிக்கொள்கிறார். ஊரில் இருக்கும் எல்லா பெண்களும் அந்த எழுத்தை கண்டு அவர் மீது காதல் வயப்படுகிறார்கள். ஒருத்தி பாரீஸில் இருந்து ஓடிவந்து அவர் மீது பைத்தியமாய்  உருகுகிறாள். நடுநடுவே தர்மா... மசாலா படங்களில் வருவது போல... கெட்டவர்களை கடத்தி வந்து வித விதமாக வதை செய்கிறார். ஒவ்வொரு  அத்தியாய  தொடக்கத்திலும் கீதை, ரிக் வேதம், பைபிள், ஜென் கதைகள் இவற்றில் இருந்து எடுத்துக்காட்டுகள்.  நாவலின் முடிவு நெருங்க நெருங்க...இன்னும் உச்சகட்டம்... சம்மந்த சம்மந்தமில்லாமல்... கண்ட கண்ட வார்த்தை பிரயோகங்கள்...  என்ன கன்றாவிடா இது... ஒரு இழவும் புரியவில்லையே என குழம்பினால்.... மன்னிக்க..... இதுதான் இலக்கியமாம். 

அப்படி என்றால்.... நாஞ்சில் நாடன், எஸ்.ராமகிருஷ்ணன், சுந்தரா ராமசாமி அவர்கள் எல்லாம் எழுதுவது இலக்கியத்தில் எந்த வகையில் சேர்த்தி. பிரபு ஒரு படத்தில் வெண்ணிற ஆடை மூர்த்தியிடம் சொல்வார்.... படிக்கிறவன் மதிக்கற மாதிரி எழுது... படிச்சுட்டு வந்து மிதிக்கிற மாதிரி எழுதாதே  என்று...   என்னடா இவன் சாருவை பற்றி தப்பாக பேசுகிறானே என்று தீவிர சாரு ரசிகர்கள் என் மீது கோபப்பட வேண்டாம். சுஜாதாவும், கல்கியும், மட்டுமே படித்து வளர்ந்த எனக்கு இந்த எழுத்துக்குகளை புரிந்துகொள்கிற அளவிற்கு பக்குவம் இல்லை... அவ்வளவே...  

ஆனாலும் நாவலில் சிலாகிக்க வேண்டிய சில விஷயங்கள் இருக்கத்தான் செய்கிறது... முக்கியமாக எழுத்து நடை.... இரண்டு இரவுகளில் மொத்த புத்தகத்தையும் ஒரே மூச்சில் படிக்கவைத்த எழுத்து நடை. ரெண்டாவது தர்மாவிற்க்கும் அவன் காதலிக்கும் உண்டான காதலும்... அந்த நெருக்கமும் மனம் கொத்தி பறவையாய் நம்மை எதோ செய்கிறது... 

நிச்சயம் சாருவின் எழுத்துக்குள் வேறு வகை ஜாதி... அதை படிக்கவும் பிடிக்கவில்லை.. படிக்காமல் இருக்கவும் முடியவில்லை... இதுதான் சாருவின் சிறப்போ..... ?


பதிப்பகம் : உயிர்மை. 
விலை : RS.90/- 

Thursday, March 3, 2011

நடு நீசி நாய்கள் - விமர்சனம்இப்படி ஒரு கப்பித்தனமான  படத்தை கௌதமிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை. கதை என்ற பெயரில் வக்கிரத்தை வாந்தி எடுத்து வைத்திருக்கும் அவரது இந்த படம் தமிழ் சினிமாவிற்கு ஒரு கருப்பு புள்ளி. 

அதீத சகிப்புத்தன்மை,  வித்தியாச சினிமா மீதான காதல், போதுமான  தலைவலி மாத்திரைகள்  என, என்ன காரணங்கள்  உங்களிடம் இருந்தாலும் இந்த படம் உங்களுக்கு வேண்டாம். காரணம்.... மனித மனம் விலங்கு என்றாலும்.... மிருகமாகிவிடக்கூடது என்றுதான் நாம் வளர்க்க படுகிறோம்... நம் ஆறாவது அறிவும் அதைதான் பன்படுத்துகிறது... இந்த படம் நம்மை... நம் மனதை  மிருகமாய் மாற்ற செய்யும் ஒரு கூறுகெட்ட முயற்சி.  


ரசனையான தலைப்பு, அட்டகாசமான மார்க்கட்டிங், கெளதம் மேனன் என்னும் லேபிள்,  என பலபேரை தியேட்டருக்கு உள்ளே வரவழைத்தாலும் வந்த வேகத்தில் பின்னங்கால் பிடரி அடிக்க ஓடவைக்கும் திரைக்கதையும், கன்றாவி காட்சிபடுத்தல்களும் போடங்..............தா என கௌதமிற்கு மிக பிடித்த வார்த்தையேயே நம்மையும் சொல்ல வைக்கிறது. 

ஒரு வேளை, இந்த படம் உங்களுக்கு மிகவும் பிடித்திருந்தால், நல்ல மனநல மருத்துவரை உடனே பார்க்கவும்.


(+) பிளஸ்

ஒன்றுமே
இல்லை


(-) மைனஸ்

எல்லாமே......


VERDICT : குப்பை
RATING   :  0.0 /10.0

EXTRA பிட்டுகள் : 

பரங்கிமலை ஜோதி.... நான் சென்னை வருவதற்கு முன்பாகவே இந்த தியேட்டரின் புகழ்பெற்ற வரலாறு  எனக்கு தெரியும். குறைந்த  செலவில் பலபேருக்கு பாலியல் கல்வி போதித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய இந்த  தியேட்டரில்    இப்படி ஒரு அட்டு படத்தை பார்க்க நேர்ந்தது என் துரதிர்ஷ்டமே... தியேட்டருக்குள் நுழைந்த உடனேயே ஜவ்வாது மனமும், முருகனின் பக்தி பாடல்களும், எதோ வழி தவறி கோயிலுக்குள் நுழைந்த உணர்வு... என்ன ஒரு செண்டிமேன்ட்டோ... .......  


you might like this also...

Related Posts with Thumbnails