Wednesday, March 31, 2010

சுறா - இசை விமர்சனம்


 விஜய் பட பாடல்களின் வழக்கமான பார்முலாவில் இருந்து துளியும் விலகாமல் இருக்கிறது சுறா படத்தின் பாடல்களும். ஹீரோ துதி பாடும் ஓபனிங் சாங். மூன்று டூயட்டுகள், அப்புறம் அநியாயத்தை தட்டி கேட்க புறப்படும் ஹீரோவை உசுப்பேற்றும் புரட்சிகர பாட்டு. இறுதியில் ஹீரோயினின் திறமையே நாட்டுக்கு உணர்த்தும் குத்து பாடல் ஒன்று. 

இதில் சோகமான விஷயம் என்னவென்றால்.. வேட்டைக்காரன் அளவிற்கு கூட  எந்த பாடல்களும் எளிதில் கவரவில்லை என்பதே..

எலெக்ட்ரிக் கிடாரின்  பீட்டோடு தொடங்கும்.."நான் நடந்தால் அதிரடி" ஓரளவிற்கு தேறுகிறது. "தஞ்சாவூர் ஜில்லாகாரி " ஏற்கனவே கேட்ட சாயல் இருந்தாலும் பரவாயில்லை, ரசிக்க முடிகிறது. மீதமுள்ள நான்கு பாடல்களை பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. BELOW AVERAGE.

மணி ஷர்மா இம்முறை  விஜய் காலை வாரி விட்டார் என்றே  தோன்றுகிறது. எனினும் சன் டிவி யின் உபயத்தாலும் , F . M  புண்ணியத்திலும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்து பாடல்களை ஹிட்டடித்து விடுவார்கள்.காதுகள் பத்திரம்.


VERDICT : 1 .5 STARS  - உப்பு சப்பில்லாத  சுறா .

Monday, March 29, 2010

அங்காடி தெரு - விமர்சனம்

 மனதுக்கு பிடித்த ஒரு ஷர்ட் - ஜீன்ஸ் எடுக்க எத்தனை நேரம் செலவழிப்போம் ? பொருளின் தரம் பற்றியும் அதன் விலை பற்றியும் அவ்வளவு உன்னிப்பாக கவனிக்கும் நாம், அதை தேர்வு செய்ய உதவிடும் கடை ஊழியர்களையும் அவர்களது வாழ்க்கை முறையையும் கொஞ்சமேனும் நினைத்து பார்த்திருப்போமா...? பளபளக்கும், பிரம்மாண்டமான நுகர்வு கலாச்சாரத்திற்கு  முன் மொத்தமாய் அமுங்கி போகிறது அவர்களது  முகங்களும், அவர்களின்  வேதனையான தினசரி வாழ்கையும்.

பிளஸ் டூ வில் பள்ளியில் முதலாவதாக வரும் ஜோதி லிங்கம் (அறிமுகம் மகேஷ்), விபத்தொன்றில் தனது தந்தையே இழக்க,  குடும்ப பொறுப்பின் காரணமாய் T - நகர் ரங்கநாதன் தெருவிலிருக்கும் ஒரு பல்பொருள் அங்காடியில் தனது நண்பன் மாரி முத்துவுடன் வேலைக்கு சேர்கிறான். அங்கு அவன் சந்திக்கும் நிகழ்வுகளும், மனிதர்களும் அவ்விடத்தின் உண்மையான முகத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. இடையில், அங்கு பணிபுரியும் கனியுடன் (அஞ்சலி) முதலில் மோதல், பின் காதல் என அதை தொடர்ந்து  நடக்கும் சம்பவங்களே கதை.

பொளேர் என செவிட்டில் அறைகிறது... படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள்... பல் பொருள் அங்காடிகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள்  நடத்தப்படும் விதமும்,  அவர்களின் கஷ்டங்களும், மாடுகளை விட கேவலமாக தனது மேலதிகாரிகளிடம் வாங்கும் அடிகளும், வசவுகளும் இது வரை நாம் யோசித்தே பார்த்திராதது. உண்மையை நேருக்கு நேர் சந்திப்பதால் ஏற்படும்  அதிர்ச்சியினை நன்கு உணர முடிகிறது.

அவர்களது குடும்ப சூழலை, வறுமையை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் முதலாளி வர்கத்தின்  சுய நல முகத்தை, பண பலத்தை  அப்பட்டமாய்  போட்டு தாக்கியிருக்கிறார்கள். 

இதற்கிடையில்,  சின்ன சின்ன கேரக்டர்கள் , பிளாட்பாரத்தில் கர்சீப்  விற்கும் கண் பார்வையற்ற முதியவர், உடல் வளர்ச்சி குன்றிய பிச்சைக்காரர், அவரது மனைவி, பொது கழிபறையினை வயிற்று பிழைப்புக்காக கட்டண கழிப்பறையாக மாற்றி வாழ்வை ஓட்டும்  நபர், கனியின் தோழி ராணி, கனியின் தங்கை  என எல்லோருமே அழுத்தமாக நம்மை கவர்கிறார்கள்.

 இயக்குனர் வசந்த பாலனின் மூன்றாவது படைப்பு. எளிமையான கதைதான். ஆனால் அதற்கான கதைகளமும், காட்சிபடுத்தியிருக்கும் விதமும் உலக தரம். முக்கியமாக கதை மாந்தர்களுக்கு பொருத்தமான நடிகர்களை தேர்வு செய்திருப்பது மிக சிறப்பு. எல்லோருமே அப்பாத்திரங்களோடு இயல்பாக பொருந்துகிறார்கள். வெயிலுக்கு பிறகு தன் மீது இருந்த எதிர்பார்ப்பை நிச்சயம் மனிதர் பூர்த்தி செய்திருக்கிறார்.
படத்தின் முதுகெலும்பாய் இருக்கிறது, ஜெய மோகன் அவர்களின் வசனங்கள். பொதுவாய் ஹீரோ பன்ச் டயலாக் பேசினால் மட்டுமே தியேட்டரில் விசில் பறக்கும். அனால் இங்கு  உடல் வளர்ச்சி குன்றிய பிச்சைகாரரின் மனைவி பேசும்  ஒரு இடத்தில் தியேட்டர் கைதட்டலால் அதிர்கிறது. வாழ்வின் சுக துக்கங்களை யதார்த்தமாக எழுத்தில் கொண்டுவந்திருக்கிறார் ஜெய மோகன். 

இசை, விஜய் ஆண்டனி - G .V பிரகாஷ் குமார். "அவள் அப்படி ஒன்றும் அழகில்லை " அற்புதமான காதல் தாலாட்டு. ஆனால் பின்னணி இசை தீடிர் தீடிர் என மாறி கொண்டே இருப்பது படத்தோடு ஒட்டவில்லை. 

நெரிசல் மிகுந்த ரங்கநாதன் தெருவில், எல்லோர் முகங்களும் தெளிவாக தெரிகிறது. ஒளிபதிவாளரின் (ரிச்சர்ட் நாதன் ) உழைப்பு படம் நெடுகிலும் இருக்கிறது. 

ஒரு நல்ல விருந்து சாப்பாட்டில், பல்லிடுக்கில்  சிறு கல் தட்டுபடுவதை  போல படத்தின் குறை, சற்றே மிகை படுத்தப்பட்ட காட்சி அமைப்புகள். இருந்தும் மன்னிக்கலாம்.

அடுத்த முறை, பெரிய கடைகளில் நாம்  உடைகளோ, பொருட்களோ தேர்வு செய்யும் போது நமக்கு உதவி  புரியும்  ஊழியர்களை பார்த்தால் நிச்சயம்  சிநேகமாய் புன்னகைக்க தோன்றும்.  அதுவே இப்படத்தின் வெற்றி. வானம் எல்லோர்க்கும் பொதுவானது, வாழ்க்கை இனிமையானது என்பதே இப்படம் சொல்லும் செய்தி.

(+) பிளஸ் 
 கதை களம்,
வசனம்
கதாபாத்திரங்கள்
இயக்கம்

(-) மைனஸ்

சில மிகை படுத்தப்பட்ட காட்சிகள் 
பின்னணி இசை. 

VERDICT  :  கண்டிப்பாக அங்காடி தெருவிற்கு போய் வரலாம்.

OUR RATING : 5.1 / 10

EXTRA பிட்டுகள்.

நேற்று WEEKEND என்றாலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. அயங்கரன் இப்படத்திற்கு இன்னும் பெரிய அளவில் மார்க்கெட்டிங் செய்திருக்கலாம். நிச்சயம் நல்ல OPENING கிடைத்திருக்கும். எனினும், PUBLIC  TALK மூலமாகவே இப்படம் வெற்றி பெறுவது உறுதி.

Thursday, March 25, 2010

நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 4

1 பொன்னியின் செல்வன் - அமரர்.கல்கி.


தமிழின் மிக சிறந்த புதினம்... இப்போதும்... எப்போதும்... இன்னொரு நூல் இது போல என்றும் வருவதற்கில்லை. 1950 ல் எழுதப்பட்ட இந்நூல் பல தலை முறைகளை கடந்தும் அதன் கம்பீரம் மாறாமல் இன்னமும் விரும்பி வாசிக்க படுகிறது.

பொன்னியின் செல்வன் ஒரு அபாயமான சுழல் போல... நம்மை அப்படியே  உள் இழுத்துகொள்ளும். ஐந்து பாகங்கள்.. தொண்ணுற்று ஒன்று  அத்தியாயங்கள் கொண்ட பிரம்மாண்டமான ஒரு புதினத்தை ஒரே மூச்சில் படிக்க செய்திடும்  மந்திர எழுத்துக்கள். இரவு, பகல், தெரியாமல்... பசி, தூக்கம் மறந்து இந்த புத்தகமே கதி என கிடக்க வைக்கும் அனுபவம்  எனக்கு மட்டுமல்ல படித்தவர் அனைவருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம்.

ஆச்சரியமான விஷயம்.. இப்போது நம் கைகளில் ஐந்து பாகங்களும் ஒரு சேர இருக்கிறது.. ஒரே மூச்சில் படித்து விடுகிறோம். அனால்.. இந்த கதை எழுதப்பட்ட காலத்தில், ஒரு தொடராக சுமார் 3 1/2 வருடங்கள்,  வாரம் ஒருமுறை நம் மக்கள் பொறுமையாய் காத்திருந்து படித்தது வியப்பான ஒன்று. வேறெந்த ஒரு தொடரும் லட்சகணக்கான மக்களை இவ்வளவு வருட காலம் வசீகரித்து வந்தததில்லை.

வந்திய தேவன், அருள்மொழி, குந்தவை, நந்தினி, பூங்குழலி, கரிகாலன், வானதி, சின்ன பழுவேட்டரையர், பெரிய  பழுவேட்டரையர் என அக்கதை மாந்தர்களோடு ஒருவராய், நாமும் பயணிக்கும் ஒரு மிக பிரம்மாண்டமான சரித்திர பயணம் இப்புத்தகம். 

குறிப்பாக, குந்தவைக்கும்  வந்திய தேவனுக்கும் இடையேயான காதலும், அவர்களின் உரையாடல்களும், மறக்கவே முடியாத பசுமையான பக்கங்கள். 

தமிழுக்கு பெருமை சேர்த்த புத்தகங்களில் பொன்னியின் செல்வனுக்கு என்றும் நிலையான ஒரு  இடம் உண்டு.  இதை வாசிப்பது நிச்சயம் ஓரு அற்புதமான அனுபவம்.

இந்த பதிவை, தொடர் பதிவாக எழுத இதை படிக்கும் எல்லோரையும் அழைக்கிறேன். இதன் மூலம், தமிழின் வேறு மிக சிறப்பான புத்தகங்களையும் அடையாளம் காண முடியும் என்கின்ற ஆசையில்.  புத்தகங்கள்... ஒரு நல்ல நண்பன் உங்களுக்கு பிடித்தமான நண்பர்களையும்  வரிசை படுத்துங்கள்.. ..வாசிக்க காத்திருக்கிறேன்.

Tuesday, March 23, 2010

காதலாகி...கசிந்துருகி... • ஒரு சிறுவன் இருந்தான்...
 • யதார்த்தமானவன்
 • இயல்பை விட்டுக்கொடுக்கதவன் 
 • அதிகம் கவலை பட தெரியாதவன்...
 • சந்தோஷமாகத்தான் இருந்தான்..
 • வெள்ளை சிறகுடன் தேவதை சிறுமி ஒருவள் வந்தாள்
 • என்ன வரம் வேண்டும் ? கேள் ..! என்றாள்..
 • எனக்கென்ன தேவை? தெரியவில்லை.. என்றான்..
 • சிறுமி சிரித்தாள்
 • அவன் தலை கலைத்தாள்
 • நிலா ரசிக்க சொல்லி கொடுத்தாள்
 • பட்டாம் பூச்சியுடன் விளையாட பழக்கப்படுத்தினாள் 
 • உலகின் நீள அகலம் உணர்த்தினாள்
 • அவன் வயது குறைத்து குழந்தையாக்கினாள் 
 • அவனின் இன்னொரு தாயானாள்
 • அன்பை குழைத்து பசி மறக்க செய்தாள்
 • அக்கறை மிகுந்தாள்
 • தினம் அவனோடு விளையாடினாள்
 • அவன் கடவுளால் ஆசிர்வதிக்கபட்டதை போலானான். 
 • அர்த்தம் உணர்ந்து முழுசாய் சிரித்தான். 
 • மழை பெய்தது. 
 • அவன் கண்களில் உலகம் அழகானது. 
 • சிறுமி ஒருநாள் வரவில்லை. 
 • முதலாய் உடல் நடுக்கம் உணர்ந்தான். 
 • ஒருமுறை சரியாய் பேசவில்லை. 
 • கோபம் என்கின்ற சாத்தான் அவனுள் வேதம் ஓதினான். 
 • உன்னோடு "கா" ,  'இனி பேசாதே' என்றான்.
 • தேவதை சிறுமி கன்னம் கிள்ளி செல்லக்  கொட்டினாள்
 • எல்லாம் மறந்தான்... தன்னையும் சேர்த்து..
 • இப்படி ஒவ்வொருமுறையும் 'கா' பழமானது... 
 • கண்ணாம்பூச்சி விளையாடலாம் என்றான்..
 • சிறுமி 'நாளை ' என்றாள்.
 • இரவை வெறுத்து உடனே விடியல் கேட்டான். 
 • தாமதமாய் வந்த தேவதை மறந்துட்டேன்  என்றாள்..
 • புதிதாய் இயல்பு தொலைத்தான்
 • சினம் மிகுந்தான். 
 • துரோகங்களை கூட மறக்க தெரிந்தவனுக்கு ....
 • ஏமாற்றங்களை மன்னிக்க தெரியவில்லை. 
 • முதலாய்.. ஒரு துளி கண்ணீர் இழந்தான். 
 • எங்கும் போகதே.. என்னோடு மட்டும் விளையாடு என்றான் 
 • "உலகம் பெரியது.. நான் எல்லோரையும் மகிழ்விக்க வேண்டும்" என்றது தேவதை. 
 • இயலாமை உணர்ந்தான். மௌனமானான். 
 • "உன்னோடும் நான் இருப்பேன்" என்றது தேவதை. 
 • அவன் தெளிவாகவில்லை. 
 • சமாதானம் தெளிவாக இல்லை. 
 • தேவதை தினம் வரும், புன்னகைக்கும் , போகும். 
 • ஏனோ அவன் பசிக்கு அது போதவில்லை. 
 • இடைவெளி மிகுந்தது..
 • எதையும் இழக்கவில்லை அவன், 
 • அனால் எல்லாம் தொலைத்தது போலானான். 
 • மாற்றங்களின் நியதி அவனுக்கு புரிபடவில்லை, 
 • ஏனோ, சிறுவன் இப்போது சந்தோஷமானவனாக  இல்லை. 

  Saturday, March 20, 2010

  நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 3

   4 . விஞ்ஞான சிறுகதைகள் - சுஜாதா 

  எங்கள் வாத்தியார் ஒரு  தீர்க்க தரிசி என்பதை பறை சற்றும் ஒரு அற்புதமான  சிறுகதை தொகுப்பு. 20 - 25 வருடங்களுக்கு முன்  கற்பனையாய் எழுதிய விஷயங்கள்  இப்போது நிஜத்திற்கு மிக அருகில். ஆங்கிலத்தில் மட்டுமே பழக்கப்பட்ட SCIENCE FICTION சமாச்சாரங்கள் முதன் முதலில் தமிழில், பிரமிக்க வைக்கும் எழுத்து நடையில் அமைந்த நூல் இது. இதில் வரும் "ஜில்லு" என்னும் சிறுகதை நிச்சயம் உங்களை தூங்க விடாது.

  3 . ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் - சுஜாதா

  ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் ஸ்ரீ ரங்கத்து தேவதைகள் ஒரு பொக்கிஷம். கதைகள் என்பதையும் தாண்டி ஒரு அழகான வாழ்வியல் அனுபவம். நமக்குள் ஒளிந்து கிடக்கும் நுண்ணிய உணர்வுகளை மயிலிறகு கொண்டு எழுப்புவதை போல  சிநேகமான எழுத்துக்கள். படிக்கும் ஒவ்வொருவரையும் ஒரு சேர சிரிக்கவும் வைக்கும், அதே சமயத்தில் கண்ணீர் சிந்தவும் வைக்கும் ஆச்சர்யம் இது. காதல், நட்பு, கடவுள், அரசியல், கிரிக்கெட் என எல்லா இடங்களையும் தொட்டு செல்லும் எழுத்து நதி இந்த புத்தகம். சாரலாய் தூறும் மழையில் நனைந்த படி உங்கள் மனம் பிடித்தவரின் கைகள் கோர்த்து நடக்கும் போது உணர்வீர்களே ஒரு சந்தோஷத்தை.... இந்த புத்தகமும் அதே உணர்வினை கொடுக்கும்.

  2 . காந்தளூர் வசந்த குமரன் கதை - சுஜாதா

  ராஜா ராணி  கதைகளை நான் அதிகம் படிப்பதில்லை . காரணம், "இளவரசி நடந்து வருகிறாள் " என்கின்ற ஒரு விஷயத்தையே 4 பக்கங்களுக்கு நீட்டி முழக்கி, எதுகை மோனை வர்ணனைகளுடன் கொட்டாவி விட வைக்கும் எழுத்து நடைதான். ஆனால் காந்தளூர் வசந்த குமாரன்  முற்றிலும் வித்தியாசமானவன். உங்களை மெல்லிசாய் புன்னகைக்க வைத்துக்கொண்டே  புயல் வேகத்தில் கடப்பவன். அவனுடைய காதல் குழந்தை தனமானது என்றாலும் அது ஜெயிக்க வேண்டும் என்று உங்களையும் அறியாமல் பிரார்த்திக்க வைக்கும். வரலாற்று பின்னணியில் சுஜாதா சார் எழுதிய ஒரு SWEET & CUTE LOVE STORY. இதிலும் கணேஷ் (கணேஷ பட்டர் ) வசந்த் (வசந்த குமாரன்) கதாபத்திரங்களை உள் நுழைத்து விளையாடியிருப்பார். மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் அருமையான படைப்பு.  இந்த புத்தகத்தை நான் அதிகம் விரும்ப இன்னொரு காரணம்... என்னை மிகவும் நேசிக்கும் ஒரு உயிருக்கு  நான் முதன் முதலில் பரிசளித்தது இந்த புத்தகத்தைதான்... அதனால் கூட இருக்கலாம்.. LOVE IS ALWAYS SWEET.
                                                                 
                                  - அடுத்த பதிவில் முடியும். 

  Thursday, March 18, 2010

  ரெட்ட சுழி - இசை விமர்சனம்


  மிக  நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டு வந்திருக்கிறார் கார்த்திக் ராஜா. 

  பவதாரணி குரலை ஒத்திருக்கும் ரீட்டாவின் "பர பர பம் பம் காற்று"   மெட்டிலும்,  இசையிலும்,அக்மார்க் பழைய கார்த்திக் ராஜா ஸ்டைல். இருந்தும் நம்மை வசீகரிக்கிறது. 

  பட்டாளம் பாருடா... குழந்தைகள் பாடும் பாடல்... பெரிதாய் ஈர்ப்பு இல்லை. 

  ராகுல் நம்பியார், தீபா மரியம் பாடியிருக்கும் "பர பர கிளி " இந்த அல்பத்தில் கவனிக்கத்தக்க பாடல்.. மெலடி பிரியர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். வரிகளும் அழகு.

  "பூச்சாண்டி " பாடல், ஹரிஹரன் குரலிலும், பெல்லி ராஜ் குரலிலும்  இருமுறை வருகிறது, சட்டென மனசில் ஒட்டாவிடினும் கேட்க கேட்க பிடிக்கின்ற ரகம்.

  "நான் என்ற சொல்" ஹரி ஹரன் அவர்களுடய குரலில்   ஒரு மொக்கையான  சோக பாடல்...  அவ்வளவே..,

  ரெட்ட சுழி, ஒரு AVERAGE ஆல்பம். கார்த்திக் ராஜா உங்களிடம் இருந்து இன்னும் நிறைய எதிர் பார்க்கிறோம்.

  VERDICT : 2.5 STARS

  Wednesday, March 17, 2010

  நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 2


  7 . நெடுங்குருதி - எஸ்.ராமகிருஷ்ணன் 

   நெடுங்குருதி.. யதார்த்தத்தின் மீதான ஒரு பிரம்மாண்டமான பயணம்.  இக்கதை மாந்தர்களோடு  சேர்ந்து நாமும் ஆறு பருவ காலங்களை கடக்கிறோம் வேம்பலை என்னும் ஒரு கனவுலகத்தில் நம்மையும் அறியாமல் அமிழ்ந்து போய் எது நிஜம் எது பொய் என பிரித்தறிய முடியா ஒரு தாக்கத்தை இப்புத்தகம் உங்களுக்கு ஏற்படுத்தும். படித்து முடித்து பல நாட்கள் ஆகியும் அந்த சூழ்நிலையை விட்டு வெளி வர முடியாமல் தவிப்பதே இந்த புத்தகத்தின் வெற்றி.

  6 . சொர்க்கம் என் பையில்  - ஜேம்ஸ் ஹாட்லி சேஸ்
        THE WORLD IN MY POCKET - 1959
  வேகம், வேகம், கொலை வெறி பிடித்த வேகம்,  50 வருடங்களுக்கு முன் எழுதப்பட்ட கதையா இது? படிக்க ஆரம்பித்தவுடன் பற்றிகொள்ளும் பரபரப்பு படித்து முடிக்கும் வரையிலும் விடாமல்  தொடரும்.... மில்லியன் கணக்கில் பணம் நிரம்பிய TRUCK. அதை கொள்ளையடிக்க முயலும் ஐவர். கற்பனைகெட்டா சாகசங்களும், திருப்பங்களும் கொண்ட ஒரு ரோலர் கோஸ்டர் சவாரி இந்த புத்தகம். 


  5.வந்தார்கள் வென்றார்கள்..  - மதன். 

  பள்ளி நாட்களில் வரலாறு ஒரு போர் அடிக்க கூடிய சப்ஜெக்ட். இந்த புத்தகம் அந்த நாட்களில் கிடைத்திருந்தால்... நிலைமை தலை கீழ் ஆகியிருக்கும். மொகலாய வரலாற்றை இவ்வளவு சுவாரசியமாகவும், எளிமையாகவும், எதோ பக்கத்தில் இருந்து பார்த்ததை போன்ற அனுபவத்தை தரும் அட்டகாசமான புத்தகம் இது. முதல் அத்தியாயத்தில் தைமூர் பற்றி படிக்கும் போதே விளங்கிவிடும்,  இது  ஒரு வேறு விதமான STORY TELLING என்று.  முழு புத்தகத்தையும் உற்சாகத்துடன் படிக்க வைக்கும் ஒரு MAGIC இவரது எழுத்துக்களில் ஒளிந்துள்ளது.  

                                                                        -தொடரும். 

  Monday, March 15, 2010

  யாதுமாகி.. - விமர்சனம்


  விதி வலியது... வேறென்ன சொல்ல... தம்பிக்கு இந்த  ஊரு.. மாத்தி யோசி படங்களின் விமர்சனங்கள் ஏற்கனவே பீதியே கிளப்பியதால் மீதமிருக்கும் ஒரே OPTION யாதுமாகி..  நம்பி தியேட்டர்க்கு போனேன்பா... சும்மா 2.5 மணி நேரம்.... கதற கதற.. மொக்கை போடுறாங்க... 

  கதை... பொன்னேட்டில் பொரித்து வைக்க வேண்டிய கதை. ஹீரோ சமூக சேவை காரணமாக அடிக்கடி பிரச்சனையில் சிக்கிக் கொண்டு காடாறு மாதம், நாடாறு மாதம் என வசிப்பவர். அதாவது.. வீட்டில் 15  நாள். மேன்ஷன்  நண்பர்களுடன் 15 நாள். விளம்பர நிறுவனத்தில் PHOTOGRAPHER.ஒரு வரலாற்று சிறப்பு மிக்க பிரச்சனை காரணமாக பழைய மேன்ஷனில் இருந்து புது வீட்டிற்கு  குடி போகிறார். வீட்டு உரிமையாளர் மகள் நம்ம ஹீரோயின். ஹீரோயின் நம்ம ஹீரோவை ஒரு தலையாய் லவ்வுகிறார். நம் ஹீரோ, ஹீரோயினை அவரது வேண்டுகோளுகிணங்க எடுத்த புகைப்படம் ஒன்று அவரது விளம்பர நிறுவன சகா மூலமாய் உள்ளாடை விளம்பரங்களில் மார்பிங் முறையில் பயன்படுத்தபடுகிறது. இதை அறியாத ஹீரோ வீட்டில் சொன்ன பெண்ணை கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்க.. லவ்வை சொல்லாத ஹீரோயின் மனமுடைந்து தன் தந்தையுடன் சொந்த ஊருக்கு சென்று விடுகிறார். மீண்டும் ஒரு சமூக சேவை காரணமாக கல்யாணத்தை நிறுத்தும் ஹீரோ.. வீட்டிக்கு பயந்து எதோ ஒரு பஸ் ஏறுகிறார். YES.. உங்கள் யூகம் சரி... அது சரியாக நம் ஹீரோயின் இருக்கும் ஊருக்கே செல்கிறது. அங்கு ஹீரோயினை கண்ட ஹீரோ காதல் வயப்படுகிறார். தன் புகைப்படம் தவறான விளம்பரங்களுக்கு பயன்படுவதை கண்ட ஹீரோயின் இம்முறை ஹீரோவை காதலிக்க மறுக்கிறார். எத்தனையோ முயற்சிகள் செய்தும் மனம் மாறாத ஹீரோயினை கண்டு நம் ஹீரோ மனம் வெறுத்து, தமிழ் படங்களின் குல வாகனமான தண்ணி லாரியில் அடிபட்டு சாக அதன் முன் பாய்கிறார். உடனே ஹீரோயின் இடையில் புகுந்து அடிபடுகிறார். அடிபட்ட ஹீரோயின் பிழைத்தாரா? ஹீரோவை ஏற்று கொண்டாரா என்பதை மனதில் நெஞ்சுரம் உள்ளவர்கள் தியேட்டர்க்கு சென்று தெரிந்து கொள்ளலாம். 

  ஒரு முழு ஆட்டு குட்டியே விழுங்கிய மலை பாம்பு போல படம் திக்கி திணறி நகர்கிறது. அழுத்தம் இல்லாத கதை. சுவாரசியமே இல்லாத திரைகதை, சவ சவ வசனங்கள் என படம் நெடுகிலும் நம் பொறுமையே சோதித்து சீட்டை கிழிக்க வைக்கிறது. 

  சுனைனா,  தமிழ் சினிமாவின் பாரம்பரிய வழக்கப்படி  ஒரு முழு லூசு ஹீரோயின்.படம் பூராவும் பாவாடை தாவணியில் வருகிறார். கெக்கே பிக்கே என சிரிக்கிறார். காரணமே இன்றி காதலில் விழுகிறார். ஆனாலும் படத்தின் ஒரே RELAXATION இவர்தான். ஹீ.. ஹீ..

  ஹீரோ புது முகம் சச்சின். , ஹீரோயினிக்கு சிறிதும் சளைத்தவர் அல்ல என்று அரை லூசாக வருகிறார். பிரேம்ஜி அமரன் போல தலையை ஆட்டி ஆட்டி பேசும் போது, நடு மண்டையில் சுத்தியலால் போடலாம் போல தோன்றுகிறது. 

  இயக்குனர் இந்த படத்தில் பல்வேறு புதுமைகள் செய்துள்ளார். ஹீரோவிற்கு அக்கா போன்று இருப்பவரை அவரது அம்மாவாகவும், ஹீரோயினிக்கு அம்மா போல இருப்பவரை அவரது தோழியாகவும் நடிக்க வைத்திருப்பது வெகு சிறப்பு. வேறு எதுவும் இயக்குனரை பற்றி சொல்ல தோன்றவில்லை.

  படத்தில் உருப்படியாக எதுமே இல்லையா என கேட்பவர்களுக்கு, ஜேம்ஸ் வசந்த் அவர்களின் இரண்டு பாடல்கள் தேறுகின்றன. அதுவும் சரியான சிச்சுவேஷனில் இல்லாததால் படத்தில் ஒட்டவில்லை.

  (+) பிளஸ்.
  அட விடுங்க பாஸ்.

  (-) மைனஸ்
  திரைகதை, வசனம். 
  1990 களில் வந்திருக்க வேண்டிய கதை.
  கேரக்டர் செலெக்ஷன் 

  VERDICT :  யாதுமாகி... மொக்கை தவிர வேறேதுமில்லை. 

  RATING   : 2.3 / 10.0

  EXTRA பிட்டுகள் : 

  கடும் கண்டனங்கள் : இந்த படத்தின் இயக்குனருக்கும். , பாதி படத்தில் எங்களை வெளிய விட மறுத்த ஜோதி தியேட்டர் வாட்ச் மேனுக்கும்.

  ஆழ்ந்த அனுதாபங்கள் : இந்த படத்தின் தயாரிப்பாளருக்கும், IPL போட்டிகளை புறக்கணித்து விட்டு என் நச்சரிப்பின் காரணமாக என்னுடன் படத்திற்கு வந்து மொக்கை வாங்கிய என் நண்பர்கள் குட்டி மற்றும் சிவாவிற்கும்

  Saturday, March 13, 2010

  நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 1


  புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள  தொடர்பு, ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் ஒரு அன்யோனியத்தை போன்றது . பொம்மையை இறுக்கி அணைத்து   தூங்கும்  குழந்தை போல புத்தகங்களோடு நான் நெருங்கி இருக்கின்றேன். புத்தகங்கள் எனக்கொரு உருவை, ஒரு தைரியத்தை, ஒரு தெளிவை தருகின்றன என்பதை நம்புபவன் நான். பின் வருபவை நான் மிக மிக நேசிக்கும் புத்தகங்களின் வரிசை. இதை விட மிக சிறந்த புத்தகங்கள் தமிழில் உள்ளன என்றாலும் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை மட்டும் இங்கே வரிசைபடுத்துகிறேன். 

  10 . தண்ணீர் தேசம்  - வைரமுத்து. 

  கடல் பற்றிய ஆச்சரியங்களை அழகான காதல் கலந்து சொன்ன படைப்பு. கவிதை நடையில் ஒரு நாவல். திகட்ட திகட்ட தமிழ் கடலில் மூழ்கி எழுந்த அனுபவம் இந்த புத்தக வாசிப்பில் கிடைக்கும். கவிதை மூலமாகவே  ஒரு பரபரக்க வைக்கும் கதை சொல்ல முடியும் என்பதை வைரமுத்து அவர்கள் அழுத்தமாய் நிரூபித்த படைப்பு இது. 

  09 . பிருந்தாவனமும் நொந்த குமாரனும் - பி.கே.பி.

  நம்புங்கள், இந்த புத்தகத்தை 12 - 15  வருடங்களுக்கு முன்,  பழைய புத்தககடையில் இரண்டு ரூபாய்க்கு வாங்கி  படித்தேன்.  PKP அவர்கள் எத்தனையோ காதல் கதைகள், துப்பறியும் கதைகள் எழுதியிருந்தாலும், நகைச்சுவையில் அவருடைய மாஸ்டர் பீஸ் இது. ஆரம்ப வரிகளில் தொடங்கும் காமெடி கலாட்டா முற்றும் போடும் வரையிலும் பின்னி பெடலெடுக்கும். சேட்டை கோபி, நந்து என்கின்ற நந்த குமார் அவர்களுடைய பஞ்ச கல்யாணி எனப்படும் மோட்டார் சைக்கிள் (இந்த வண்டிக்கு திரவ வடிவத்தில் இருக்கும் எதை ஊற்றினாலும் ஓடும்), குழாங்கல்லில் இருந்து எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வில்லன் என ஒரு அட்டகாசமான காமெடி படம் பார்த்த திருப்தி இந்த புத்தகத்தை வாசித்தால் கிடைக்கும். சமீபத்திய புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை 150 ரூபாய் விலையில் பார்த்ததாக ஞாபகம். 
  08 . நிலா நிழல்.  - சுஜாதா 

  சுஜாதா சாருடைய எழுத்துக்கள் எப்போதுமே ஒரு நண்பனை போல தோளில் கை போட்டு கதை சொல்லும். அந்த நடையில் கண்முன்னே ஒரு கிரிக்கெட் போட்டியே ஓட விட்டு அதில் காதலும் காமெடியும் கலந்த  ஒரு யதார்த்தமான நாவல் இது. படித்து முடித்த பின்னும் உங்கள் மனதில் முகுந்தனின் முதல் முத்தமும், முதல் விக்கட்டும் ரீ - ப்ளே ஆகும்.  தவறவிட  கூடாத படைப்பு.
                                                                               
                                                                              -தொடரும்.

  Thursday, March 11, 2010

  TOUR SPOT - நெல்லியம்பதி


   நெல்லியம்பதி - ட்ரக்கிங் பிரியர்களுக்கும், தனிமை விரும்பிகளுக்கும் ஒரு சேர ஏற்ற இடம். வருடம் முழுதும் ஒரு  ஐடியல் கிளைமேட் நிலவுவது (குளிர் காலத்தில்  - குறைந்த பட்சம் 15 டிகிரி. வெயில் காலத்தில் - அதிக பட்சம் 30 டிகிரி ) இதன் சிறப்பம்சம்.


  சுற்றிலும் டீ எஸ்டேட்டுகள், இன்னமும் மனிதர்கள் காலடி படாத வனச்சிகரங்கள், தீடிர் ஆச்சரியங்களாக ஆங்காங்கே தென்படும் சிற்றாறுகள் என நெல்லியயம்பதி நிறைய சுவாரசியங்களை கொண்டிருக்கிறது...

  பாலக்காடு மாவட்டம் நெம்மரா டவுனிலிருந்து 25 KM  மலை பாதையில் அமைந்துள்ளது நெல்லியம்பதி. மலை அடிவாரத்திலேய நம்மை வரவேற்கிறது பொத்துண்டி அணை.    

  பொத்துண்டி அணை 
   19 ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிக பழமையான இந்த அணை சிமெண்ட் ஏதுமின்றி வெறும் கற்களும், இரும்பு கலவைகளும் கொண்டு அமைந்தது.   ஆசியாவில் சிமெண்ட் இன்றி கட்டப்பட்ட 2  வது அணை என்ற பெருமை இதற்குண்டு.
  மாம்பாறை : நெல்லியம்பதியின் TOP MOST ATTRACTION  மாம்பாறை எனப்படும்  VIEW பாயிண்ட். கடல் மட்டத்திலிருந்து   5250 அடி உயரத்தில் அட்டகாசமாய் பச்சை கார்பெட் விரித்து நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது இயற்கை. ஜீப்பில் மட்டுமே செல்லக்கூடிய கடுமையான பாறைகள் மீதான  மலை  பாதை.  செல்லும் போது வாந்தி, பேதி, மயக்கம் என எல்லா உபாதைகளையும் தந்தாலும் சென்றடையும் இடம் சொர்க்கம். விக்ரம் மஜா படத்தில் சிந்து துலானி யோடு  ஒரு  பாடலுக்கு  ஆட்டம் போடுவாரே.. அதே இடம்தான்.  தனிமை விரும்பிகளுக்கு அற்புதமான சாய்ஸ்.


   மாம்பாறை செல்லும் வழி. 

  படகிரி வன சிகரம் :  ட்ரக்கிங் செல்வதற்கு ஏற்ற இடம். இரவில் கேம்ப்  பயர் எனப்படும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்கள் விடிந்த பின்னும் தொடர்கின்றன... யூத் ஸ்பெஷல்.

  சீத குண்டு  : 1000 மீட்டர் உயரத்தில் இருந்து விழும் ஆழகான அருவியும், அதை சுற்றி உள்ள  நெருக்கமான வன சூழலும் தரும் அனுபவம் எழுத்தில் புரியாது. ராமர்,லட்சுமன், சீதை வசித்த இடம் என்ற பெருமை இதற்குண்டு

  மேற்கு தொடர்ச்சி மலைகளின் அழகை மிக குறைந்த செலவில் அனுபவிக்க  நெல்லியம்பதி மிக சரியான தேர்வு.தங்குவதற்கு அருமையான RESORT கள் உண்டு. முக்கியமாய் கிரீன் லேன்ட்   ரிசார்ட். 

  தமிழ் நாடு ஸ்டைல், கேரளா ஸ்டைல் இரண்டு வகை உணவுகளும் கிடைகின்றன.

  பஸ் வசதி குறைவு. தனி வாகனங்களில் செல்வது நலம்.

  வழி காட்டி : 

  பாலக்காட்டில் இருந்து 75 K.M

  பொள்ளாச்சியில் இருந்து 70 K.M

  Monday, March 8, 2010

  பிக் பாக்கெட்


   பேருந்தில் ஏறி அமர்ந்ததுமே மழை பிடித்துக்கொண்டது.... அவசர அவசரமாக ஜன்னல் கண்ணாடிகளை அடைப்பவர்களிடையே "அப்பா, அப்பா, மழை பார்க்கணும் ஜன்னலை மூடாதீங்க" என்கின்ற குழந்தையின்  கோரிக்கை அதட்டலுடன் நிராகரிக்கப்பட்டது . மனசுக்குள் சிரித்துக் கொண்டேன். மழை அமிர்தம், நனைதல் வரம் என்கின்ற வரிகள் ஏனோ நினைவுக்கு வந்தது ... 

  படித்துறை தாண்டுவதற்குள் பேருந்து நிரம்பி வழிய, கண்டக்டர் வாய் ஓயாமல் எல்லோரையும் முன்னுக்கு வர சொல்லிகொண்டிருந்தார்... மழை நனைத்த கோழிகுஞ்சாய் ஒரு பாட்டி நடுங்கியபடியே இடம் தேட ... எழுந்து, அமர்வதற்கு இடம் கொடுத்தேன். 

  எங்கே போகணும்...?

  டவுன் ஹால் .... ஒரு டிக்கெட்... 

  டிக்கெட் கொடுத்தவர்.... மீதி சில்லறை கொடுக்காமல் நகர, சார், ஐம்பது பைசா மிச்சம் கொடுக்கணும் என கேட்க தோன்றியது. கேட்கவில்லை.  கேட்க விடாமல் தடுத்தது    தாரளமா.. இல்லை யாராவது சிரிப்பார்கள் என்கின்ற கூச்சமா?  உள்ளுக்குள் புகைந்த கோபம் ஒரு கெட்ட வார்த்தையாய் சத்தமில்லாமல் வெளிப்பட....நகர்ந்து வந்து படியருகே நின்று கொண்டேன்... மழை சாரலை முகத்தில் வாங்கிக்கொண்டு திரும்பும் ஒரு அசந்தர்ப்பமான நொடியில்தான் அந்நிகழ்வை பார்த்தேன்.. அவனது வித்தியாசமான செய்கை  முதலில் புரியா விடினும் ஒரு விபத்து போல.. ஓரிரு நொடியில் அவனது விரல்கள்  அப்பெரியவரின் பேன்ட் பாக்கட்டில்  நுழைந்து வெளியேறின.. வெளியேறிய விரலிடுக்கில் இருந்த ஐநூறு ரூபாய் கற்றை அவனது பேண்டிற்குள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் இடம் மாறியது...சூழ்நிலையின் தாக்கம் தாமதமாய் உரைக்க,   "பிக் பாக்கெட்"  "பிக் பாக்கெட்" என உரக்க கத்த வந்தவன் சற்றே தாமதித்தேன்,  அவனையும் அவனை சுற்றி நின்றவர்களையும் உற்று நோக்க, எல்லோருமே அவனுடைய  சொந்தகாரர்கள்  போல தெரிந்தார்கள்... இம்மாதிரி பிக் பாக்கெட் அடிப்பவர்கள் ஒரு குழுவாக, வாயில்  ப்ளேடு துகள்களோடு இருப்பார்கள் எனவும் பிரச்சனை சமயங்களில் அதை முகத்தில் துப்பி விட்டு தப்பிப்பார்கள் என்பதும் நினைவுக்கு வந்து தொலைத்தது. பேருந்தின் குலுங்கலில் இவை ஏதும் அறியா பெரியவர்  ஒரு கையால் கம்பியே பிடித்துகொண்டு மற்றொரு கையால் தன் ஹியரிங்  ஏய்டை காதில் பொறுத்த சிரமப்பட்டுக்கொண்டிருந்தார்.

  எதை பற்றியும் கவலைபடாமல் மழை வெளியே கொட்டிக்கொண்டிருக்க என் உடல் முழுதும் வெப்பம் வழிந்தது... எப்படியும் அவனை பிடித்து கொடுக்க வேண்டும், அப்பெரியவருக்கு அவர் பணம் திரும்ப கிடைக்க வேண்டும் என நினைத்தவன், அப்பெரியவரை நோக்கி மெல்ல முன்னேற, அவரை சுற்றி இருந்தவர்களில் ஒருவன் என்னை பார்வையால் என்ன வென்று கேட்டான்.  அவன் பார்வையின் அர்த்தம் அவ்வளவு யோக்கியமானதாக இல்லை. ஒன்றும் இல்லையென தலையாட்டிவிட்டு அப்படியே நின்றேன்.

  இதற்குள் பேருந்து ஒரு நிறுத்தத்தில் நிற்க, பெரியவர் அவசர அவசரமாக இறங்க எத்தனித்தார்.. எனக்குள் பெரும் கவலையும், ஏமாற்றமும் உருவாக, அவர் இறங்குவதை உதடுகள் துடிக்க வேடிக்கை பார்த்தேன். இறங்கியவர் யதோச்சையாக தன் பான்ட் பாக்கட்டில் கை வைக்க, தன் பணம் பறிபோனதை உணர்ந்து... "ஐயோ   ஐயோ" என் பென்ஷ......" அதற்குள் பேருந்து அவரை கடந்து விட்டிருந்தது  பேருந்தின் பின் கண்ணாடியில் மழைக்கு நடுவில்  அவர் தலையில் அடித்தபடி  பேருந்தை நோக்கி ஓடிவருவது  தெளிவில்லாமல் தெரிந்தது...

  என் இயலாமை மீதான கோபத்துடன், நான் அவனை நோக்க, எதுமே அறியாதவன் போல விசிலடித்துக்கொண்டிருந்தான்.எப்படி இவர்களுக்கு மனது வருகிறது, அடுத்தவர் உழைப்பில் வாழ... இப்படியும் ஜென்மங்கள் இருப்பார்களா?  பாவம் அந்த பெரியவர்.. அவருடய மகள் திருமனத்திற்க்கோ,  அவர் மனைவியின் மருத்துவ செலவுக்கோ அவசியமாய் இருந்திருக்கலாம்.  இப்படி கீழ்த்தரமான மனிதனிடம் பறி கொடுத்துவிட்டு அவர் மனம் எவ்வளவு கஷ்டப்படும். என்னுள் எழுந்த ஆத்திரம் நிச்சயம் அவனை சும்மா விடகூடாது என்றது. இதற்குள் அடுத்த வந்த நிறுத்தத்தில் அவன் இறங்குவதற்காய் என்னை கடந்து செல்ல அவன் தோள் மீது கை வைத்து அழுத்தினேன்.. திரும்பி பர்த்தவனிடம்,
   "உன்கூட  கொஞ்சம் பேசணும் .. இறங்கு"

  அவனோடு சேர்ந்து நால்வர் இறங்க,

  'என்ன' என்று பார்வையாலேயே கேட்டான்...

  "மனுஷனா நீ.., நான் பார்த்தேன், அந்த பெரியவரோட  பணத்தை அடிச்சதை நான் பார்த்தேன், உனக்கெல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா ? இதல்லாம் ஒரு பொழப்பா? பாவம் அவரோ ., "
   மேற்கொண்டு பேசுவதற்குள்  "பொறு " என கைகளால் சைகை செய்தான், ஒரு நொடி என் கண்களை பார்த்தவன்,.  உடனே பேன்ட் பாக்கட்டில் கை விட்டு எடுத்த நோட்டு கட்டில் இரண்டை உருவி என் கைகளில் திணித்து விட்டு மெல்லிசாய் சிரித்தான், பின் விசிலடித்துக்கொண்டே சாவதானமாய் நடந்து செல்ல ஆரம்பித்தான்..

  ஒரு விநாடி விக்கித்து நின்று, பின் சுதாரித்தேன், கையில் திணித்த நோட்டை மழை நனைக்காத படி உள் சட்டை பையில் வைத்துகொண்டு விடு விடு வென வீடு நோக்கி நடக்க துவங்கினேன்.

  -------------------

  (கதை கடியாக இருந்தாலும் கமெண்ட் இடவும், )

  Saturday, March 6, 2010

  காதல் நுழைந்த வழி...


  ஒற்றையடி பாதையில்...
  நான் செல்வதற்காய்
  நீயும்...
  நீ செல்வதற்காய்
  நானும்...
  வழி விட்டு  நிற்க...

  அப்போது
  எந்த இடையூருமில்லாமல்
  அங்கு  
  நம் காதல்
  பயணித்தது
  தெரியுமா... !

  Thursday, March 4, 2010

  உலகின் சின்னஞ்சிறு காதல் கதை...


  ஹாவென கொட்டாவி விட்டபடி தலையே திருப்பிய போதுதான் அவள் பேருந்துக்குள் ஏறி நான் அமர்ந்த திசை நோக்கி வர ஆரம்பித்தாள். என் கண்கள்  ட்யுப் லைட் போட்டது போல பிரகாசமாக... நடந்து வந்தவள் எனது பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 

  அந்த பெண் மிக அழகாக இருந்தாள். மிக அழகாக இருந்தாள் என ஒற்றை வரியில் கூறி விடுவது அவள் அழகையும் எனது பழகு தமிழையும் அவமதிப்பது  போலாகிவிடும். எனவே அவளை பற்றி குறைந்தது நான்கு வரிகளாவது வர்ணிப்பது இங்கே அவசியமாகிவிடுகிறது.. மெல்லிய தேகம், சரித்திர நாவல்களில் வரும் பெண்களுக்கு இருப்பது போல நீண்ட நெடிய கருங்கூந்தல். அப்பழுக்கற்ற கண்கள்.. குப்தா ஸ்வீட்ஸ் குலோப் ஜாமுன்களை நினைவுபடுத்தும் சிவந்த கன்னம்..காதுகளில் சின்னஞ்சிறு ஜிமிக்கி. நெற்றியில் குங்கும தீற்று. கண்களை உறுத்தாத சுடிதார்..பஞ்சு கால்களுக்கு சுமை ஏற்படுத்தாத மெல்லிய கொலுசு.. நேர் வகிடு எடுத்து சீவிய தலையில் மல்லிகை பூ,  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற பேரிளம் பெண்களுக்குரிய குணங்கள் அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாய் போட்டு அடித்தது போல சாந்தமான முகம். லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்திருந்த உதடு, அதன் கீழே மெலிதான மச்சம் என மொத்தத்தில்  சரவணா ஸ்டோர் குத்து விளக்கு போல பளிச் என இருந்தாள்..

    என் உடல் முழுதும் மெலிதாய் காய்ச்சல் அடிக்க தொடங்க.. நான் முடிவு செய்து விட்டேன்,   இவள்தான் என்  காதலி என..    என்ன  கண்டவுடன் காதலா... என்கிறீர்களா..? உங்களுக்கு விதி மீது நம்பிக்கை இருக்கிறதா..? சிட்டியில் இந்த ரூட்டில் மட்டும் 23 பஸ்கள் ஓட எப்படி இவள் இந்த பஸ்ஸில் மட்டும் ஏற வேண்டும். சரி, அப்படியே ஏறினாலும் எதற்காய் என் பக்கத்துக்கு இருக்கையில் அமர வேண்டும். எல்லாம் விதி. ஏற்கனவே இறைவனால் முடிவு செய்து வைத்தது. so, இவளை கண்டது,  இப்போது காதலிப்பது எல்லாமே அவனது திருவிளையாடல்களில் ஒன்று. என் தேவதை அமர்ந்த இடம் முழுதும் ஏதோ சுகந்த வாசனை பரவ... அந்த பேருந்தே ஒரு பூங்காவனம் போல மாறியிருந்தது.. தேவதை வெளியே பராக்கு பார்த்துகொண்டிருக்க, நான் தேவதையேயை பார்த்து கொண்டிருந்தேன்.. என் இதயம் முழுவதையும் ஏதோ ஒரு புறம்போக்கு நிலம் போல அவள் வளைத்து போட்டிருக்க, அவள் கண்ணசைத்தால் ஓடுகின்ற பேருந்தில் இருந்து தலை குப்புற விழுவதற்கு கூட சித்தமாய் இருந்தேன்.. பஸ் ஹாரன் எனக்குள் சங்கீதமாய் ஒலிக்க, கொஞ்ச நேரம்  வயிற்றுக்குள் யாரோ வயலின் வாசித்தார்கள்.


  தேவதை இப்போது மெலிதாக வாய் பிளந்து தூங்கிக்கொண்டிருந்தது..ஆஹா..எத்தனை அழகாக தூங்குகிறாள்..நல்ல வேளை இந்த பேருந்தில் வாலியோ, வைரமுத்துவோ பயணம் செய்யவில்லை. செய்திருந்தால் இவள் தூங்கும் அழகை கண்டு ஒரு கவிதை  தொகுப்பையே  வெளியிட்டிருப்பார்கள்..யதொச்சையாக என் அருகில் அமர்ந்திருத்த கிழத்தை கவனிக்க, அந்த கிழமும் என் தேவதை தூங்குவதையே ஜொள் வடிய பார்த்துக்கொண்டிருந்தது.. எனக்குள் ரத்த அழுத்தம் எகிற அந்த கிழத்தை தொட்டு சுட்டெரிக்கும்  விழிகளால் பார்த்தேன். கிழம் என் உக்கிர பார்வையை சமாளிக்க முடியாமல் தலையைய் கீழ் சாய்த்துக் கொண்டது. என்ன தைரியம் இதற்கு, காதலன் நான் ஒருவன் இருக்கும்போதே என் காதலியேய் ரசிப்பதற்கு... ச்சே... நாட்டில் அழகிய பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இந்த ஜனநாயகத்தையே மாற்றியமைக்க வேண்டும்,ஆளும் அரசை கலைக்க வேண்டும், நாட்டில் புரட்சி தோன்ற வேண்டும் என்று என் சிந்தனைகள் ஆத்திரத்தில் எக்குதப்பாய் எகிற ஆரம்பித்துவிட்டது..

  ஒரு கள்வனிடமிருந்து என் காதலியே  காப்பாற்றிவிட்ட திருப்தியோடு ஆதுரமாய் அவளை நோக்க... என் காதலை இவளிடம் சொல்லி, இவள் சம்மதத்துடன் திருமணம் செய்து,  இரட்டை பெண்  குழந்தைகள்  பெற்று என என் கற்பனை, சிறகு விரித்து பிரேக் இல்லாத ஏரோ பிளேன் போல பறக்க ஆரம்பித்தது... இதற்குள் எங்கள் காதல் வாகனம் ஒரு நிறுத்தத்தில் நிற்க.. அழுக்கு ஜீன்ஸ் அணிந்து, ஒரு மாத காலமாய் சவரம் செய்ய மறந்த ஒரு இளைஞன் ஏறினான். ஏறினவன் நேராய் என் தேவதை அமர்ந்த சீட்டில் அமர்ந்து அவள் தோள் தொட்டு "ஹாய் அனி" என்றான். உடனே, அவளும் 32 + 1 தெற்றுபல் தெரிய விளித்து " ஹாய் செல்வா " என்றாள். எனக்கு தட்டாமாலை வந்து தலை சுற்றுவது போல இருந்தது..அருகிலிருந்த கிழம் என்னை பார்த்து ஏளனமாய் சிரிக்க.. நான் அவனை பார்த்தேன். தினமும் ஜிம்மிற்கு போவன் போலும்... வெட வெட வென உயரமாய் ஒரு மல் யுத்த வீரன் போல் இருந்தான். இவனுடன் மற்போர் செய்து இவனை வீழ்த்தி, என்னவளுடன் இல் வாழ்கை அமைப்பதற்கான சாத்தியங்கள்  பேரரசு படம் ஆஸ்கருக்கு போவதற்குண்டான சாத்தியங்களோடு ஒப்பிட முடிந்தது... உடனே முடிவு செய்தேன்.. இவள் வேண்டாம்.. ஒட்டடை குச்சி போல இருக்கிறாள்.. இன்னமும் கட்டுப்பெட்டி தனமாய் நீளமான கூந்தலும், கையில் மருதாணியும், இவள் எனக்கானவள் அல்ல.. LEAVE THIS HELL...

  அப்போதுதான், இவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த அவளை கண்டேன், கிராப் கட்டிங், காதில் I -POD, ஜீன்ஸ் டி-ஷர்ட், வாயில் பேப்பர் மின்ட் என இன்னமும் FAREX சாப்பிடும் குழந்தை போல கொழுக் மொளுக் என இருந்தாள்... என் உடல் முழுதும் மெலிதாய் காய்ச்சல் அடிக்க தொடங்க.. நான் முடிவு செய்து விட்டேன்,   இவள்தான் என்  காதலி என.....

  (கதை கடியாக இருந்தாலும், கமெண்ட் இட மறக்க வேண்டாம்..) 

  Monday, March 1, 2010

  கிரிக்கெட் - தொடர்பதிவு

     00   மிக மிக மிக மிகப் பிடித்த கிரிக்கெட் வீரர் -  சச்சின்...

  1. பிடித்த கிரிக்கெட் வீரர்   
     
   யுவராஜ் சிங் :
  ஒரு அலட்சியம் கலந்த  BATTING ஸ்டைல்.... + 6 பந்துக்கு 6 சிக்சர் கொளுத்தி வான வேடிக்கை காட்டியதால்...
     
  2. பிடிக்காத கிரிக்கெட் வீரர்

    சைமன்ட்ஸ் &  பாண்டிங் :
  திமிர், செருக்கு, ஆணவம், அகங்காரம்,அகம்பாவம், கர்வம், தலைக்கனம்  (இன்னும் தமிழில் இது தொடர்பான எத்தனை வார்த்தைகள் உள்ளனவோ அத்தனையும் சேர்த்துக்கொள்க..) 
      
  3. பிடித்த வேகப்பந்துவீச்சாளர்

     ஷேன் பான்ட்   & ப்ரீட் லீ       : யப்பா எம்புட்டு வேகம்... 
     கர்ட்லி ஆம்ரோஸ்                  :  பந்து வீசும் போது அவர் கண்ல ஒரு கொலை வெறிய  பார்க்கலாம்..
   வாசிம் அக்ரம்                             : 6 பந்தும் 6 விதமா வரும்.
    
       
  4. பிடிக்காத வேகப்பந்துவீச்சாளர்

  வெங்கடேஷ் பிரசாத் : முகத்தில் ஆக்ரோஷத்தை காட்டாத பிஞ்சு மூஞ்சி... (EXCEPT WORLD CUP QUARTER  FINAL WITH PAK)
    

  5. பிடித்த சுழல்பந்துவீச்சாளர்

       அணில் கும்ப்ளே - மறக்க முடியுமா  - டெல்லி டெஸ்ட்... 10 விக்கெட்கள்..  + ஒவ்வொரு டெஸ்டிலும் மானம் காத்ததால்

      ஷேன் வார்னே : பந்துல மாயஜாலம் பண்ணுவார்யா..
    

  6. பிடிக்காத சுழல்பந்துவீச்சாளர்

       சக்லைன் முஸ்டாக்   : அவரோட ஸ்டைல் ஒரு மாதிரி இருக்கும்... 


  7. பிடித்த வலதுக்கை துடுப்பாட்ட வீரர் 
   
       சேவாக்      : காட்டு அடி அடிப்பதால்...
      டிராவிட்     :  பெருஞ்சுவர்.. + PERFECTION
       அசார்         :  மணிக்கட்டு மட்டும் ஆடும்..
     
    

  8. பிடிக்காத வலதுக்கை துடுப்பாட்ட வீரர்

        ஜெய வர்த்தனே  
         தில்ஷன்

  9. பிடித்த இடதுக்கை துடுப்பாட்டவீரர்
   
         லான்ஸ் குளுஸ்னர்: "எப்படி போட்டாலும் அடிக்கறாண்டா" என 99 உலக கோப்பையில் எல்லோரையும் புலம்ப வைத்தவர்..

      லாரா : ரொம்ப ஸ்டைலிஷான ஷாட்ஸ்...    

    கங்குலி : இறங்கி வந்து சிக்ஸ் அடிக்கும் அழகே அழகு.
   
  10. பிடிக்காத இடதுக்கை துடுப்பாட்ட வீரர் 

         ஜெய சூர்யா : வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் இந்தியா வை  நொங்கெடுப்பதால்
        

  11. பிடித்த களத்தடுப்பாளர்

    ஜான்டி ரோட்ஸ் :  இவருக்கு இணையாக வேறு யாரையும் குறிப்பிட மனம் வரவில்லை.
     

  12. பிடிக்காத களத்தடுப்பாளர்

         அணில் கும்ப்ளே : காதலன் காதலியைய் அணைப்பது போல பந்தை பிடிக்க வழுக்கி செல்வதால்...
     

  13. பிடித்த ஆல்ரவுண்டர்

          கபில் தேவ்           : உண்மையான ஆல்ரவுண்டர்
         க்றிஸ் கெய்ன்ஸ் (NZ )  : ரொம்ப நல்ல ஆல்ரவுண்டர்ங்க
            
   
  14. பிடித்த நடுவர்

         சைமன் டபில்    : தலை தப்பே பண்ணாது
         பில்லி பௌடன் : உற்சாக நடுவர்

  15. பிடிக்காத நடுவர்

         அசோகா டிசில்வா 
   
  16. பிடித்த நேர்முக வர்ணனையாளர்
   
          டோனி கிரேக் - கிரேக் சாப்பல் : ரொம்ப ஜாலி யா பேசுவார்கள்
          ஹர்ஷா போகலே : புள்ளி விவரம் நிறைய கொடுப்பார்...

  7. பிடிக்காத நேர்முக வர்ணனையாளர்

            அருண் லால் : ஒரே மாதிரி பேசி பேசி போரடிப்பார்

  18. பிடித்த அணி 

               EAST OR WEST INDIA IS THE BEST

  19. பிடிக்காத அணி 

                    ஆஸ்திரேலியா ,பாகிஸ்தான், ஸ்ரீ லங்கா..

  20. விரும்பி பார்க்கும் அணிகளுக்கிடையேயான போட்டி

                          இந்தியா - பாக்

  21. பிடிக்காத அணிகளுக்கிடையேயான போட்டி

                           பாக்- ஸ்ரீ லங்கா 


  22. பிடித்த அணி தலைவர்

                          கபில் : உலக கோப்பை வாங்கிய ஒரே இந்தியன்.
                          அசார் , டோனி.
       

  23. பிடிக்காத அணித்தலைவர்

                              பாண்டிங்

  24. பிடித்த போட்டி வகை

                         டெஸ்ட் & 20 - 20
        
  25. பிடித்த ஆரம்ப துடுப்பாட்ட ஜோடி
   
                              சச்சின் - கங்குலி 

  26. பிடிக்காத ஆரம்ப துடுப்பாட்ட  ஜோடி
   
                              சேவாக் - சிவ சுந்தர் தாஸ். 

  27. உங்கள் பார்வையில் சிறந்த டெஸ்ட் வீரர்
   
                                    சச்சின் , டிராவிட்

  28. சிறந்த கிரிக்கெட் வாழ்நாள் சாதனையாளர்
     
                                     சச்சின்

  இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள்

                                            ப்ரியமுடன் வசந்த்
                                             அண்ணா மலையான்

  you might like this also...

  Related Posts with Thumbnails