Friday, October 15, 2010

வணக்கமுங்க.....


வணக்கமுங்க.. இது என்னோட 100 வது பதிவு. நமக்கு புஸ்தகம் படிக்கிறதுன்னா ரொம்ப உசுருங்க. இந்த பொட்டி வந்ததுக்கப்புறம் தமிழ்ல படிக்க நெட்ல தொழாவும்  போதுதான் இந்த வலைபதிவுகள் (BLOGS ) கண்ணுல பட்டுச்சு. (ENGLISH ல படிக்க நமக்கு புடிக்காதுங்க.. ஏன்னா.. ENGLISH ல படிக்க நமக்கு தெரியாதுங்க..)  நமக்கு புடிச்ச விஷயங்களை நிறைய பேர் எழுதறதை பார்த்ததும் பச்சக்குன்னு மனசுல ஒட்டிக்கிச்சு..  ரொம்ப வருஷமா படிச்சுட்டு மட்டுமே இருந்தேன். ஒரு நாள் மல்லாக்க படுத்துட்டு வெட்டியா  யோசிச்சுட்டு இருக்கும்போது   தோனுச்சு.. ஏன் நாமளும் எழுத கூடாது ன்னு..  அது வரைக்கும் நான் டைரி மட்டும்தான் எழுதியிருக்கிறேன். அந்த தகுதி மட்டும் போதுமான்னு எனக்கு பயங்கர சந்தேகம். சரி ஒரு கை பார்க்கலாமுன்னு எழுத ஆரம்பிச்சுட்டேன். 

அது பாருங்க, திடு திப்புன்னு நூறு பதிவு ஆய்டிச்சு, கோயம்பத்தூர்ல இருக்கிற வரைக்கும் பொட்டி தட்ட நிறைய நேரம் கெடச்சதுங்க... இப்ப சென்னை வந்த பிறகு சுத்தமா நேரம் கிடைக்க மாட்டேங்குதுங்க.. ஆடின காலும், பாடின வாயும் சும்மா இருக்குங்களா...? அது மாதிரியே எதாவது எழுதியே ஆகணும்னு  கை எல்லாம் ஞம ஞம ங்குதுங்க. அதுதான் இந்த தீபாவளிக்கு ஒரு லேப் டாப் எப்படியாவது வாங்கிபோடனும்னு ஒரு மாதிரி வெறித்தனமா சுத்தீட்டு   இருக்கேனுங்க.. அதுக்கப்புறம்... நின்ன, நடந்தா... தூங்குனா.. பதிவுதானுங்க.. மக்கா... அதுவரைக்கும் என்னை ஞாபகம் வச்சுக்கிட்டு இருங்க..இவன் ஏதும் எழுதறது இல்லைன்னு மறந்து கிறந்து போய்டாதீங்க..

இந்த பதிவுலகத்தை ஆயுளுக்கும் நம்மால விட முடியாதுங்க... எத்தனை எத்தனை நண்பர்களை எனக்கு சம்பாதிச்சு குடுத்துருக்கு.. சென்னை வந்த புதுசுல கொஞ்சம் மனசளவுல தளர்ந்து போய் நின்னப்ப போன் மூலமாகவும், மெயில் வழியாகவும் எனக்கு ஆறுதல் சொன்ன நண்பர்கள் எல்லாத்தையும் பார்க்கணும், பேசணும்னு ஆசையா இருக்குங்க.. இப்ப கூட பாருங்க... எப்படியாவது வலை பதிவு படிக்கனும்னு, செல்போன்ல நெட் CONNECTION வாங்க ஏர்  செல் கஸ்டமர் கேர் ல வார கணக்கா முட்டி மோதி, ஒருவழியா GPRS வசதி பெற்று, ஆசை ஆசையா நம்ம ப்ளாக்க   திறந்தா எல்லாமும் பொட்டி பொட்டியா தெரியுது. என்னடா இதுன்னு.. குழம்பி நின்னப்ப MM அப்துல்லா சார் தமிழ்ல தெரிய உதவி பண்ணுனார். இப்படி முகம் தெரியா நல்ல நண்பர்களை எனக்கு கொடுத்த பதிவுலகத்தை விட்டுட முடியுங்களா.. அதுக்கு எதாச்சும் பண்ணியே ஆகணுங்களே... அதான்.. பயங்கர பயங்கரமா எழுதி ஒரு வழி பண்ணிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். வந்துடறேன்.. சீக்கிரம்... 

பாசமுடன்,
மனோ

Sunday, October 3, 2010

எந்திரன் - விமர்சனம்ஒரே நேரத்தில் 100 படங்களை கூட தயாரிக்கும் வல்லமை பெற்ற தயாரிப்பாளர், கொசுவை கூட பிரம்மாண்டமாக காட்டும் FANTASY  இயக்குனர், உலக அழகி, ஆஸ்கர் வாங்கிய இசையமைப்பாளர், லேசாக தலை கோதினால் கூட விசில் அடித்து உற்சாக பட வைக்கும் ஆசியாவின் NO.1 சூப்பர் ஸ்டார், இந்தியாவின் MOST WANTED டெக்னிஷியன்ஸ்  இவர்கள் எல்லோரும்  இணைந்து கொடுக்கும் படம் மட்டும்  என்ன சாதாரணமாகவா இருக்கும். "குடுத்த காசுக்கு மேல கூவராண்டா இவன் " என்பார்களே, எந்திரனும் அந்த ஜாதிதான். 

 ஷங்கரின் கனவுப்  படைப்பு.  தமிழில் ஒரு சயின்ஸ் பிக்ஷன் என்பது கத்தி மேல் நடப்பது போல. தமிழ் ரசிகனின் ரசனை விநோதமானது,  வசனங்களே இல்லாமல் காட்சிகளில் கதை சொல்லும்  படங்களையும் ரசிப்பான், பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி காது கிழித்தாலும் விசில் அடிப்பான்.  ஹாலிவுட் போல ஒற்றை சான்ட்விட்சில்   திருப்தி பட்டு கொள்ளும் இனம் அல்ல அவன். தலை வாழை இலை\ போட்டு, விதவிதமாக, ரக ரகமாக பரிமாறினால்தான் பிடிக்கும்.  விஞ்ஞானத்தையும், மசாலாவையும் சரியான    கலவையில் கலக்கி எந்திரனை     விருந்து வைத்த  விதத்தில்
மிக சிறந்த குக்காக ஜொலிக்கிறார் ஷங்கர்.

மனிதன் உருவாக்கிய எந்திரம் ஒன்று தானாக சிந்திக்கும் திறன் பெற்று அந்த மனிதனையே தூக்கி போட்டு மிதித்தால் என்னவாகும் என்கின்ற ஒற்றை வரி கதைதான். திரைக்கதையும்  வசனங்களும் தெளிவாக  பின்னப்பட்டிருப்பதால் காட்சிகளை
 கிராபிக்ஸ் உதவியுடன் கலர் புல்லாக்கியிருக்கிறார்கள் .


எத்தனை பெரிய ஜாம்பவான்கள் இந்த படத்தில் இருந்தாலும், ரஜினி என்கின்ற ஒற்றை காந்தம்தான்  படம் பார்க்கும் எல்லோரயும் கவர்ந்து வாரி சுருட்டி உள் இழுத்துக்கொள்கிறது.  ரஜினிக்கு பதிலாக வேறு எந்த திறமைவாய்ந்த நடிகர்களும் இதில்
செட்டாக  முடியாது.   61 வயது மனிதர்க்கு  சிட்டி என்கின்ற ரோபோ கதாபாத்திரம் நிச்சயம் சவாலான விஷயம். ஐயா யாரு.. சூப்பர் ஸ்டாரு.. என பின்னி பிரித்து பெடல் எடுத்திருக்கிறார்.படம் முழுதும் அவரின் சுறுசுறுப்பு பிரமிக்க வைக்கிறது. அந்த நடையும்,டயலாக் டெலிவரியும் சிங்கம் எப்போதும் சிங்கம்தான்.    ரஜினி சாரின் இமாலய உழைப்புக்கு ஒரு ராயல் சல்யுட்.  

தொடர்ந்து பத்து வருடங்களுக்கும் மேலாக பார்க்கும் போதெல்லாம் ஜொள் விட வைப்பதால் ஐஷை பற்றி மேற்கொண்டு எழுத ஒன்றுமில்லை.


ஹாலிவுட் தரத்தை விட அதிகபடியான டெக்னிக்கல் விஷயங்கள் படம் முழுதும் நிரம்பி வழிகிறது.  முக்கியமாக அந்த எலெக்ட்ரிக் ட்ரெயின்  சண்டைகாட்சி பிரமிக்க வைக்கிறது. பீட்டர் ஹெயினின் அசுரத்தனமான உழைப்பு, அந்த க்ராபிக்க்ஸ் களேபரத்தை ரியலிசமாக காட்டும் ரத்னவேலுவின் ஒளிப்பதிவு என சிகரம் தொட்டிருக்கும் காட்சி அது.

எங்கள் வாத்தியார் சுஜாதா சாரின், சாகா வாரம் பெற்ற எழுத்துக்களை வசனங்களாக கேட்கும் போது உற்சாகமும் அதே சமயம் அவரின் பிரிவும் மனதிற்குள் வந்து  ஒருசேர கண் கலங்க வைத்தது.

AR.ரஹ்மான் பாடல்களில் ஹம்செய்யவைத்தாலும்.பின்னணி இசையில் அரிமா பாடல் தீம் இசை மட்டும் நினைவில் நிற்பது சோகம்.படத்தின் வேகமாக நகரும் காட்சிகள் கூட அதற்க்கு காரணமாக இருக்கலாம்.

சாபுசிரில், ரத்னவேலு மற்றும் பல டெக்னீஷியன்ஸ் பல படங்களுக்கு கொடுக்கும் உழைப்பை இந்த ஒரு படத்தில் மொத்தமாக கொடுத்திருக்கிறார்கள். எல்லாரது உழைப்பும் பிரம்மாண்டம்.


முற்பாதி முழுக்க லாஜிக் மீறல்கள் இல்லாத   நம்பும்படியான காட்சியமைப்புகளிலும், மனதை தொடும் சில செண்டிமென்டலான  சம்பவங்களிலும், காமெடி தூவல் வசனங்களிலும் "ஆ" வென பிரமிக்க வைத்தவர்கள், இரண்டாம் பாதியில் சிலஇடங்கள்மற்றும்  கிளைமாக்ஸ் காட்சியில்  "ஆவ்"வென கொட்டாவி விடவும்  வைக்கிறார்கள். 

என்னதான் ருசி மிகுந்த லட்டு என்றாலும்,தொடர்ந்து உங்கள் வாய்க்குள் வரிசையாக திணித்துக்கொண்டே இருந்தால் என்ன ஆகும்.வாமிட் செய்வீர்கள்தானே.   அதுபோலதான் இந்த பட கிளைமாக்சும்.கிராபிக்ஸ் காட்சிகள்  கொஞ்சம் ஓவர் டோஸ். 

இருப்பினும், இந்த படத்திற்காக ரஜினி, ஷங்கர் மற்றும்  அவரது குழுவும் இணைந்து கொடுத்திருக்கும் உழைப்பு அசாதாரமானது. அதற்க்கான பலன் முதற் பாதியிலேயே கிடைத்து விடுகிறது.

(+) பிளஸ்

ரஜினி
ஷங்கர்
சுஜாதா சார் வசனங்கள்
திரைக்கதை
பீட்டர் ஹெய்ன்
ஐஸ்
ஒளிப்பதிவு
இசை
கலை

(-) மைனஸ்

ஓவர்டோஸ் கிளைமாக்ஸ்
படத்தில் ஒட்டாத சந்தானம், கருணாஸ்.


VERDICT : எந்திரன் - பிரமிக்கலாம்
RATING   : 6.0 / 10.௦

EXTRA பிட்டுகள்  

 திருப்பூர் சிவன் தியேட்டரில் டிக்கெட் புக் செய்வதற்கு கூட்டமே இல்லை. திருப்பூரில் மட்டும் 9 தியேட்டரில் வெளியானதால் இந்த நிலை. முன்பெல்லாம் ஒரே தியேட்டரில் ரிலீஸ் ஆகி அந்த ஏரியாவே ஒரு வாரத்திற்கு நெருங்க முடியா கூட்டம், பயங்கர டிராபிக் ஜாம் என  திருவிழா போல இருக்கும். கொஞ்சம் கூட நெரிசலில் சிக்காமல், வேர்வையில் நனையாமல் டிக்கெட் எடுத்ததில் கொஞ்சம் கூட திருப்தியே இல்லை. அதேபோல    ரஜினி என டைட்டில் போடுவது தொடங்கி தலைவர் வரும் வரை விசில் சத்தமும், கரகோஷமும் தியேட்டர் மொத்தமும் கிழிக்கும். ஆனால் இங்கோ முதல் வரிசயில் மட்டுமே சத்தம். பால்கனியில் மயான அமைதி. எனக்கு விசில் அடிக்க தெரியாததால் காசு கொடுத்து விசில் எல்லாம் வாங்கி வைத்து கொண்டு குட்டியானுடன் தியேட்டர் உள்ளே நுழைந்தேன். நான் மட்டும் பேக்கு போல உய் உய் என விசிலடிக்க ஒரு ரெஸ்பான்ஸ் கூட இல்லை.  பயங்கர வெறுப்பாகி விட்டது. விசிலடிச்சான் குஞ்சுகள் எல்லாம் எங்கு போய் தொலைந்தார்கள்.

you might like this also...

Related Posts with Thumbnails