Wednesday, June 30, 2010

அய்யனார் - இசை விமர்சனம்


குத்து பாட்டில் கூட வெஸ்டர்ன் டைப் இசையே மட்டுமே  கொடுத்து வந்த தமனுக்கு முதல் பரீட்சை. அய்யனார்  வில்லேஜ் சப்ஜெக்ட் என்பதால் இளையராஜாவின் உதவியோடு கொஞ்சம் சமாளித்திருக்கிறார்.

முதல் பாடலான, "குத்து குத்து"  முன் வரிசை ரசிகர்களை ஆட வைக்கும் குத்து எனினும், சரணம், கரகாட்டகாரன் "ஊரு விட்டு ஊரு வந்து" மெட்டில்  அட்சரம் பிசகாமல்  TRAVEL செய்வதை தமன் கவனித்திருக்கலாம். 

 ஈரத்தில் ஐஸ் கிரீம் குரலில் செவிகளை நனைத்த ரஞ்சித் இதில்  பிரியதர்ஷினியுடன்  இணைந்து பாடும் "பனியே" ஒரு அழகான ஜில் ஜில் டூயட்.    பாடல் முழுதும் வரும் வயலின்கள் பீட்டும்,  ரகசியமான அந்த  ரொமான்ஸும் ரொம்ப அழகு. இதிலும் ராஜா சாரின் சாயல் வருவது ஏனோ..? 

"ஆத்தாடி " தமனின் அடுத்த பட்டாசு.  கொஞ்சம் வெஸ்டர்ன் ஸ்டைல் மெட்டும்,  கிராமிய காதல் வரிகளும்  கொண்ட ஒரு பக்கவான காக்டெயில்.   நவீனின் குரலில் இனி அடிக்கடி F .M களில் கேட்கலாம்.  


ராகுல் நம்பியார் குரலில் வரும் " பச்சை கிளி" குடும்ப உறவுகளின் உன்னதத்தை சொல்லி செல்கிறது. கொஞ்சம் சுமாரான மெட்டுதான். 


புது புது கதை களங்களை தேர்ந்தெடுத்து இசையமைக்கும் போதுதான் இசையின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு நகர முடியும். இது தமனின் முதற் படி. "பனியே" "ஆத்தாடி" பாடல்கள் மூலம் பாஸ் மார்க் வாங்கினாலும் இன்னும் போக வேண்டியது நிறைய இருக்கிறது. 

SONGS CAN LISTEN :

 "பனியே" - ரஞ்சித,பிரியதர்ஷினி
 "ஆத்தாடி " - நவீன்


VERDICT  : 2 .7  / 5 .00    


Saturday, June 26, 2010

நண்பனை இழந்து விட்டேன்.


 நான்கு வருட சிநேகிதம் எங்களுடையது....பால்ய கால நண்பர்களை விடவும் மிக குறுகிய காலத்தில் என்னுடன் நெருக்கமானவன்,  எப்போதும் என்னுடன்  ஒட்டிக்கொண்டு திரிவான்.  பெற்றோர் வைத்த பெயர் வேறெனினும் நான் எப்போதும்  உரிமையாய் அழைக்கும் பெயர் "டேய் மாப்பு ".  நிறைய வித்தைகள் செய்வான்.. என் காதலுக்கு தூது போவான்,  என் தனிமை பொழுதுகளை இசையால் நிறைப்பான், சிறு சிறு  விளையாட்டுக்களால் என்னை உற்சாகப்படுத்துவான். எனக்கான பல விஷயங்களை தன் ஞாபக செல்களில் வைத்துகொண்டு தேவையான பொழுதுகளில் நினைவூட்டுபவன்  இப்பவும் நம்ப முடியவில்லை அவனை இழந்து விட்டேன் என்பதை.. என் எல்லா சுக துக்கங்களிலும் என்னோடு பயணிக்கும் அவனை போன்ற ஒரு நண்பன் உங்கள் எல்லோருக்கும் இருக்க கூடும். சொல்ல மறந்து விட்டேன்.. அவன் பெற்றோர் அவனுக்கு வைத்த பெயர் NOKIA 6233. ரொம்பவுமே நெருங்கி பழகிய ஒன்றை ஒரு விநாடி நேரத்தில் இழப்பதன் வலி சற்று கொடுமையான விஷயமே. எப்படி அவனை தவற விட்டேன் என்பது இது கணமும் விளங்கவில்லை, ஒரு இரண்டு நிமிடங்கள் கூட இருக்காது.. அவன் என்னுடன் இல்லை என்பதை நான் உணர.. உடனே தொடர்பு கொள்ள முயற்சித்தேன்.. இருக்கிறேன் என ஓசை கொடுத்தவன்.. சிற் சில வினாடிகளில் மௌனமாகி  விட்டான். அவனை கண்டெடுத்த  புண்ணியவான்,  எனக்கும், அவனுக்குமான தொடர்பை உடனே கத்தரித்து அவன் செயல்படாவண்ணம் முடக்கிவிட்டான். இங்குதான் நம் சக மனிதர்களை பற்றிய பொறுப்புணர்ச்சியும், மனசாட்சி பற்றிய கேள்விகளும், ஆசையின் அளவீடுகளும் செவிட்டில் அறைந்தது போல உறைக்கிறது.

எப்படி மனம் வருகிறது.. அடுத்தவர் உடைமையே தன்னுடையது போல அபகரிக்க.. கீழே தானே கிடைத்தது என சாக்குபோக்கு சொல்ல வேண்டாம். என்னை பொறுத்த வரையிலும்,உரியவரிடம் சேர்ப்பிக்கும் வாய்ப்பு இருந்தும் அதை மறைத்து சொந்தம் கொண்டாடுவதும் ஒரு வகை திருட்டே.  இழப்பதன் வலி இழந்து பார்த்தால் மட்டுமே உணர முடியும்.  என் நிலை பரவாயில்லை, என் தம்பி ஒரு முறை செல் பேசியே தவற விட்டு விட்டு, பின் அதை தொடர்பு கொண்ட போது ஒரு மகா உத்தமன் பேசினான், உங்கள் போன் என்னிடம் இருக்கிறது. வந்து பெற்றுக்கொள்ளுங்கள் என..  உடனே 25 KM பயணம் செய்து அவன் சொன்ன இடத்தில் வந்து தேடினால் அந்த உத்தமனும் இல்லை, செல்பேசியும் இல்லை. இணைப்பு துண்டிக்க பட்டிருந்தது. ஒரு மணி நேர அவகாசத்தில் மனித மனம் எவ்வளவு மாறி விடுகிறது. நிறைய பார்த்திருக்கிறேன். என் தங்கை தன் செல் பேசியே தொலைத்து விட்டு ஒரு வாரம் அழுத அழுகையில் பணம் என்கின்ற விஷயத்தை தாண்டியும் ஒரு மெல்லிசான உறவு,  ஒரு அன்யோனியத்தை அவள் தொலைத்தது நன்கு புரிந்தது. கங்காரு தன் குட்டியே பாதுகாப்பது போல தன் செல்பேசிகளை பாதுகாக்கும் மனிதர்கள் இங்கிருக்கிறார்கள்.  இருப்பினும் ஒரு அசந்தர்ப்பமான சூழ்நிலையில், ஒரு விபத்து போல தொலைத்து விட்டு அவர்கள் படும் பாடு மிக வலி மிகுந்தது.

பெருமைக்கு சொல்லவில்லை, இதுவரை இரண்டு முறை யதொச்சையாக கண்டெடுத்த செல்பேசிகளை அதன் உரியவர்களிடம் சேர்ப்பித்திருக்கிறேன். அதை பெற்றுக்கொள்ளும் போது அவர்கள் கண்களில் தெரியும் மகிழ்ச்சியும் நமக்கு அதனால் உண்டாகும் ஆத்ம திருப்தியும்  விலை மதிப்பற்றது.. முயற்சி செய்து பாருங்கள் ப்ளீஸ்..... 

Tuesday, June 22, 2010

தமிழ் செம்மொழி மாநாடுமொத்த தமிழ்நாட்டின் பார்வையும் இப்போது கோயம்புத்தூர் நோக்கி... உலக தமிழ் செம்மொழி மாநாடு நாளை (23.06.10) ஆரவாரத்துடன் கோவையில் துவங்குகிறது. நாளை துவங்கும் மாநாடு ஞாயிறு (27.06.10) வரையிலும் களை கட்ட இருக்கிறது..

பல்வேறு கருத்தாய்வுகள், பட்டி மன்றங்கள்..கலை நிகழ்சிகள்.. என தமிழ் கடலில் தொபுக்கடிர் என குதித்து நீச்சலடிக்க அன்புடன் அழைக்கிறோம்..

வாருங்கள் நண்பர்களே....

கொண்டாடுவோம் தமிழை...

காதல் சொல்ல வந்தேன் - இசை விமர்சனம்


 காதல் சொல்ல வந்தேன்  - இசை விமர்சனம்

காதலை கொண்டாட யுவன் இசையில் வித விதமாய் 5 காதல் பாடல்கள். யுவனின் வசீகர மெட்டும், நா. முத்து குமாரின் மயக்கும் வரிகளும் கலந்த அழகான காதல் பொக்கே இந்த ஆல்பம். 

ஆரம்பமே அமர்க்களம்....  ஓ ஷலா.. என யுவனின்  குரலில் காதலின் உற்சாகம் பொங்கி வழிகிறது...  மிக எளிதாக ஹிட் லிஸ்டில் இடம் பிடிக்கும் தகுதி உண்டு. 

அன்புள்ள சந்தியா... கார்த்திக் குரலில்.. ஒரு காதல் கடிதம் படித்த உணர்வு.. சரணத்தில் முத்து குமாரின் வரிகள் அவ்வளவு அழகு. காதல் என்றாலே மனுஷன் பின்னி எடுக்கிறார். 

ஒரு வானவில்லின் பக்கத்திலே - உதித் நாராயண் குரலில் குறும்பும், இளமை துள்ளலும் நிறைந்திருந்தாலும் தமிழை அவர் உச்சரிக்கும் விதம்தான் வயிற்றை ஏதோ செய்கிறது. 

என்ன என்ன ஆகிறேன்.. விஜய யேசுதாஸ் குரலில் மென்மையான காதல் பயணம்.

சாமி வருகுது  - அட ராமா... என்ன கொடுமை இது. "எங்கே மணக்குது சந்தனம் எங்கே மணக்குது" என்கின்ற ஐயப்ப சாமியின் பிரபலமான பாடல் மெட்டில் காதல் பாடல்... ஐயப்பன் மன்னிப்பாராக...  

ரொம்ப நாளைக்கு பிறகு, ஒரு ஆல்பம் முழுதும் காதலால்  நிரம்பி கிடக்கிறது. THANKS TO YUVAN AND NA.MUTHU KUMAR. 

SONGS CAN LISTEN :
ஓ ஷலா..
அன்புள்ள சந்தியா..

VERDICT : 3.0 / 5.0 

Saturday, June 19, 2010

ராவணன் - விமர்சனம்

 மணி சாரின் படங்கள் எப்போதுமே ரசனையாகவும் ரகளையாகவும் இருக்கும். சொல்ல வந்த விஷயத்தை வசனங்களின் உதவி இன்றி காட்சிகளின் தாக்கத்திலேயே உணர்த்தி விடும் திறமைசாலி. இந்தியாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவர். கூழாங்கற்களை கூட வைரமாக மாற்றிக்காட்டும் கலைஞர்.   இவரின் புதிய படைப்பான ராவணன் பார்வையாளனுக்கு எத்தகைய அனுபவத்தை  தருகிறது என்பதை பார்ப்போம். 

"கதைக்காக நாம் வெளியில் எங்கும் தேட வேண்டியதில்லை. ராமாயணம், மகாபாரதத்தில், இன்னமும் சொல்ல படாத கதைகள் ஆயிரம் உள்ளன.. அவற்றை சொன்னாலே போதும்" என்று கமல் தனது பேட்டியில் ஒரு முறை சொல்லியிருக்கிறார். புராண இதிகாசங்கள், நிகழ்கால சம்பவங்கள் இரண்டையும் இணைத்து கதை செய்வதில் மணிரத்னம் அவர்களின் கெட்டிக்காரத்தனம் வேறு யாருக்கும் வாய்க்காது. ராமாயணத்தின் அப்பட்டமான தழுவல் என்றாலும் காட்சிபடுத்துதல்களில் இருக்கும் வித்தியாசம் ரசிகனை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது. 

மேக்கிங்கை பொறுத்த வரை,  தான் ஒரு கிங் என்பதை மீண்டும் ஒருமுறை அழுத்தம் திருத்தமாக நீருபித்திருக்கிறார் மனிதர். ஆங்கில படங்களை மிஞ்சும் காட்சியமைப்புகள் கண்களை இமைக்க மறந்து பார்க்க வைக்கின்றன. இதற்க்கு பக்கா பலமாய் இருப்பது சந்தோஷ் சிவன், மணிகண்டனின் ஒளிப்பதிவு. பச்சை பசேல் மலைகள்,  ஆரவாரம் செய்யும் அருவிகள், பல நூறு ரகசியங்களை கொண்ட அடர்ந்த காடுகள்,  சலசலக்கும் ஆறுகள்  என  கேமரா எல்லாவற்றிலும் ஊருடுவி பயணம் செய்ய,  பார்க்கும் நமக்கு குளிர் எடுக்கிறது.   ஒளிப்பதிவை பொறுத்தவரை இந்த படம்  அட்டகாசமான ஒரு விஷுவல் ட்ரீட்.
 
 முழுக்க முழுக்க வெளிநாடுகளில்  படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு மத்தியில்  இந்தியாவிலேயே இவ்வளவு அற்புதமான  இடங்கள்  இருக்கின்றன  என  படத்துக்கு படம் வெளிச்சமிட்டு காட்டுவதற்காக மணி சாருக்கு  ஒரு பெரிய சபாஷ்.  எப்படித்தான் இப்படிப்பட்ட லொக்கேஷன்களை பிடிக்கிறாரோ.. ஆச்சர்யம்.  

அதே போல படத்தோடு பயணம் செய்யும் A .R  ரஹ்மானின் இசை இன்னொரு பலம்.  தேவைப்பட்ட இடங்களில் அடக்கி வாசித்தும், தேவையான சமயங்களில் விஸ்வ ரூபம் எடுத்தும் இருக்கிறது.

விக்ரம் என்னும் மஹா கலைஞனுக்கு செம தீனி. தமிழில் ராவணனாகவும், இந்தியில் ராமனாகவும் அடுத்தடுத்து நடிக்க வேண்டும். ஒரே நேரத்தில் இரு வேறு வேடங்களை உள்வாங்கி நடிப்பது எவ்வளவு பெரிய சவால். அலட்சியமாக ஜெய்க்கிறார். 

உலக அழகி என்ற பந்தா இல்லாமல் தனது முதல் படம் போல மழையிலும், காட்டிலும் கஷ்டப்பட்டிருக்கிறார்  ஐஸ்வர்யா ராய். படத்தில் இவரின் அர்ப்பணிப்பு  பாராட்டுக்குரியது.  இவரது விழிகளே முக்கால் வீச்சம் நடித்து விடுவதால் உடல் மொழியில் பெரிதாய் வேலை இல்லை. 

கார்த்திக், பிரபு எல்லோருமே கொடுத்த கதா பாத்திரத்துக்கு தகுந்த உழைப்பை கொடுத்திருக்கிறார்கள். சில பிரேம்களில் பிரபுவின் உடல் உருவம் மிகுந்த அச்சமூட்டுவதாக இருக்கிறது.

எப்போதுமே சிக்கலான, சர்ச்சைக்குரிய கதை களனை தேர்ந்தெடுத்து அதில் சவாரி செய்வது மணி சாருக்கு மிக பிடித்தமான விஷயம் போல..  காட்சிகளில்  கொஞ்சம் பிசகினாலும் வேல் கம்புகள் வீடு தேடி வரும் என்பதை உணர்ந்து மிக எச்சரிக்கையாக செயல் பட்டிருக்கிறார். அதுவே படத்திற்கு ஒரு LET-DOWN ஆக  மாறியிருக்கிறது. சீதையே கவர்ந்து வந்த பின் ராவணனுக்கு அவள் பால் ஏற்படும் காதலில் எந்த வித அழுத்தமும் இல்லை அல்லது அதை காட்சி படுத்தவில்லை. சீதைக்கு ராவணன் மீது   கிளைமாக்சில் மெல்லிசாய் ஒரு ஈர்ப்பு இருப்பது  போல கோடிட்டு காட்டுவது  ஒரு நெருடல்.    நிறைய காட்சிகளில் ரசிகனே யூகித்து கொள்ளட்டும் என முடிவை நம் கையில் கொடுத்துவிட்டு தப்பித்து கொள்கிறார் இயக்குனர். கொஞ்சம் CONTRAVERSY யான கதை என்பதால்  கதை மீது படம்  பட்டும் படாமல் நகர்கிறது.

ராமன் சீதாவை சந்தேகப்படவில்லை. ராவணனை பிடித்து கொல்வதர்க்காகவே  அவ்வாறு கூறுகிறான் என்பது விக்ரமின் ஒரு சிறிய வசன உச்சரிப்பில் கடந்து செல்கிறது. இது  தியேட்டரில் எத்தனை பேருக்கு புரிந்திருக்கும் என்பது ரொம்ப சந்தேகமே. 

அப்புறம் வசனங்கள், சுஹாசினி அவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம் அல்லது வசனங்களை எளிமையாக்கியிருக்கலாம். சுஜாதா அவர்களின் இழப்பு இத்தருணங்களில் நன்றாக புலப்படுகிறது.

டெக்னிகல் விஷயங்களை பொறுத்தவரை  ராவணன் பத்து தலை அல்ல நூறு தலை பலசாலி. திரைகதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தை கூட்டியிருந்தால் படம்  இன்னமும்  பட்டாசு கிளப்பியிருக்கும். இரண்டாவது, படம் நன்றாகவே இருந்தாலும், இப்படத்திற்கு இருந்த மிதமிஞ்சிய எதிர்பார்ப்பு, ரசிகனை படத்தில் இன்னும் நிறைய வேண்டும் என கேட்க வைத்து விட்டது. மூன்றாவது, இரண்டு மொழிகளில் தயாரானதால் ஒரு நேரடி தமிழ் படத்துக்குரிய தகுதிகள் கொஞ்சம் குறைச்சல்.

(+) பிளஸ் 
ஒளிப்பதிவு
இசை
அணைத்து டெக்னிகல் விஷயங்கள்
லொக்கேஷன்கள்
மணிரத்தினம் சார் ,விக்ரம், ஐஸ்.

(-) மைனஸ் 
அழுத்தம் அற்ற சில காட்சிகள்
 மற்ற மணி சார் பட வசனங்களில் இருக்கும் ஒரு மேஜிக்  இல்லாதது. 
 

VERDICT  : இது மணி சாரின் மாஸ்டர் பீஸ் அல்ல. இருந்தாலும் தவற விட கூடாத படைப்பு.
                 
RATING      : 5 .8  / 10 .0

EXTRA  பிட்டுகள் : 

படம் முடிந்ததும், ஆடியோ CD யில் இல்லாத ஒரு பாடல் ரஹ்மான் குரலில் வருகிறது. அது அட்டகாசம்.


இந்த படத்தை கோவை கனகதாரவில் பார்த்தேன்.  அரங்கினுள் நுழைந்தவுடனே ஏ சி யில் கலந்திருக்கும் ஒரு  PERFUME வாசமும், உள் கட்டமைப்பும் சூப்பர்.


Tuesday, June 15, 2010

அரிது அரிது - இசை விமர்சனம்

 வளர்ந்து வரும் இசையமைப்பாளர்களில் தமன் ஒரு  முக்கியமான நபர். வித்தியாசமான மெட்டுக்களும், மெனக்கெடல்களும் தவறாது  இவரது இசையில்  இருக்கும். இவரின் புதிய ஆல்பம் இது.

ஆறு பாடல்கள். எந்த ஒரு டூயட்டும்  இல்லாமல் ஆண் குரலில் 3 சோலோ. பெண் குரல்களில் 3 சோலோ.  பெண்கள் குரலில் வரும்  மூன்று  பாடல்களிலும் வெஸ்டர்ன் இசை கொடி கட்டி பறக்கிறது. இளசுகளை குறி வைத்து அடித்து துவைத்திருக்கிறார் தமன். ஷங்கரிடம் உதவி இயக்குனாராக இருந்த மதிவாணன்  இப்படத்தின் இயக்குனர். எல்லா பாடல்களையும் இவரே எழுதியிருக்கிறார். ஆங்கில பாடல் வரிகளுக்கு மத்தியில் போனால் போகிறதென கொஞ்சம் தமிழ் வார்த்தைகளும் வருகிறது. முக்கியமாய் உஜ்ஜைனி குரலில் வரும்  "SATURDAY " பாடல் பார்ட்டி உற்சவம் என்றால், "மிஸ்ஸிங் யு" ரீட்டா குரலில் மென்மையான பீட்டோடு கண்கள் மூடி லயிக்க செய்யும் அசத்தல்      டியுன்.  இரண்டு பாடல்களுமே எதோ ஒரு பாப் ஆல்பம் கேட்கும் உணர்வை கொடுக்கின்றன. தமனின் ஆஸ்தான பாடகி சுசியின் குரலில் வரும்  "ஊ லலாளி"  வழக்கமான தமன் சமையல். 

ஆண் குரல்களில் வரும் மூன்று பாடல்களும் அப்படியே உல்டா. பாடல்கள்  எல்லாம் தீவிரவாததிற்க்கும், போருக்கும்,எதிரான வரிகளோடு வருகிறது. கார்த்திக் குரலில் வரும் "உன் உயிரில்" பாடலும் இயக்குனர் மதிவாணன் குரலில் வரும் "அழகாய் சிரித்தாயாடா" பாடலும் மரணம் பற்றியும், அதற்க்கு பிறகு இருக்கும் அமானுஷிய வாழ்கை பற்றியும் சீரியசாக அலசுவது இந்த படத்தை எந்த லிஸ்டில் சேர்ப்பது என்கின்ற குழப்பத்தை கொடுக்கிறது.

SONGS CAN LISTEN : 


1. "SATURDAY " - உஜ்ஜைனி
2."மிஸ்ஸிங் யு"  - ரீட்டா

VERDICT :  2.6 STARS / 5.0 

Saturday, June 5, 2010

லூஸ்....


லூஸ்... இப்படி  சொல்லித்தான் இதுவரையும் அழைத்திருக்கிறேன்.  எனக்கும் சரி அவளுக்கும் சரி நிஜ பெயர் சொல்லி அழைப்பது இருவருக்குமே பிடிக்காது. பட்ட படிப்பு முடித்திருந்தாலும் ஒரு குழந்தை போலதான் இருக்கும் அவளுடைய நடவடிக்கைகள்....

என் உடன் பிறக்கவில்லையே தவிர.. என் உயிரிலும் மேலான என் தங்கை... என் மீது அவள் செலுத்திய அன்பும், அக்கறையும், ஒரு தாயின் அன்பு போல.. விலை மதிப்பற்றது.. எந்நாளும்...

பைக்கில் வேகமாக சென்றால் மிகவும் பயப்படுபவள்.. கண்களை மூடிக்கொண்டு  என் தோள்களை இறுக்கி பிடித்து, கடவுளை துணைக்கு அழைப்பாள். அந்த கவிதை சந்தோஷத்துக்காகவே  ஓவொரு முறையும் த்ராட்டிலை முறுக்குவேன்...

காப்பிக்கோப்பையில் ஆரம்பித்து DAIRY  MILK  சாக்லேட் பட்டைகள் வரை பகிர்ந்து உண்ணும் எங்களது அன்பின் வெளிப்பாடுகள் எங்களை வளர்ந்த குழந்தைகளாய் மற்றவர்களுக்கு அடையாளம் காட்டினாலும் உண்மையில் எனக்கு அவளும், அவளுக்கு நானும் குழந்தையே....!

என் மீதான அவளின் உரிமை.. என்னை யாரிடத்தும் விட்டு தராத அவளின் அன்புதான் நான் ஈட்டியதிலேய விலை மதிப்பற்ற சொத்து.. இப்போதும்.. எப்போதும்.. 


அம்மை என்றொரு பக்திக்கும், மருத்துவத்துக்கும் இடைப்பட்ட விஷயம் என்னை ஆக்ரமித்த போது, அந்த நாட்களில் எல்லாமும், என் மீதான அவளின்  அக்கறைகள், கவனங்கள், பிரார்த்தனைகளின் ஆழங்கள் நன்றாக புலப்பட்டன. தூக்கம் தொலைத்த இரவுகளின் வலிகளை சில புன்னகைகளும், கண்ணீர் துளிகளும்  மறக்க செய்தன.

சின்ன சின்ன விஷயங்களுக்காக நாள் முழுதும் நாங்கள் சண்டையிட்டு கொண்டாலும, என் பொய் கோபங்களும், பிடிவாதங்களும் அவளது ஒற்றை புன்னகையிலும், சிறு தலை கோதலிலும், கன்னக் கிள்ளளிலும்   தோற்றுவிடும்.

என் லூசிற்கு நாளை மறுநாள் (07.06.10) திருமணம்.இனிமேல் என்னை காலையில் GOOD MORNING  சொல்லி எழுப்பி விடவும், காபியே பகிர்ந்து குடிக்கவும், பொய் சண்டைகள் போடவும் என்னோடு அவள் இருக்கபோவது இல்லை. அவளின் பிரிவு  ஒரு மாதிரி கண்களில் நீர் கோர்த்தாலும்,  அவளின் புது வாழ்வு ஆரம்பிக்க போகும் சந்தோஷமான தருணம் இது.. அதில் பங்கேற்றுவிட்டு உங்களிடம் வருகிறேன்.. அது வரை..பதிவுலகத்திற்கு ஒரு சின்ன இடைவேளை.

Thursday, June 3, 2010

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க ! - ஒரு பார்வை


தன்னம்பிக்கை பற்றியும் பர்சனாலிட்டி டெவலப்மென்ட்  பற்றியும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் வந்திருந்தாலும் கோபிநாத் அவர்களின் இந்த புத்தகம் கொஞ்சம் வித்தியாசம்.  ஒரு நல்ல நண்பனிடம் யதார்த்தமாய் உரையாடுவதை போன்ற அவரது எழுத்து நடை மனசுக்கு நெருக்கமாக வந்தமர்ந்து கொள்கிறது.

நம் கனவுகள், குறிகோள்கள், உழைப்பு, மகிழ்ச்சி, வருத்தம், நம்பிக்கை   எல்லாவற்றிற்கும் பின்னணியில் நம் மனம்தான் அத்தனையையும்   தீர்மானிக்கும் சக்தி என்பதை ரொம்பவும் உளவியல் ரீதியில் அலசாமல் அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் சம்பவங்களில் இருந்தே எடுத்துகாட்டியிருப்பது சிறப்பு. 

இது அட்வைஸ் செய்கிற புத்தகம் அல்ல. சந்தோஷமான நம் வாழ்கையே ரொம்ப சந்தோஷமாக மாற்றுவதற்கு கோபி கொடுக்கும் சுவாரசியமான சில டிப்ஸ் அவ்வளவே. 

நமக்கு நாமே கேள்வி கேட்டு பதில் சொல்லும்படியான சூழ்நிலைகளை புத்தகம் முழுதிலும் விரவ விட்டுள்ளார். நம்மை நாமே சுய பரிசோதனை செய்து கொள்ள அருமையான வாய்ப்பு இந்த புத்தகம். 

"சந்தோஷம் எதில் இருக்கிறது? 
ரொம்ப சுலபம். 
சந்தோஷமாக இருக்க வேண்டும் என்ற உங்கள் எண்ணத்தில்தான் அது இருக்கிறது"

"உங்களை அடுத்தவர் ரசிக்க வேண்டும்,கவனிக்க வேண்டும், உங்கள் சிறப்பியல்புகளை, உங்கள் தனித்துவங்களை அடையாளங்கண்டு பாராட்ட வேண்டும் என்று நீங்கள் ஆசைபடுவது உண்மை என்றால், அதை உங்களில் இருந்து நீங்கள்தான் தொடங்க வேண்டும் "

இது போன்ற பாசிடிவ் எனர்ஜி  எல்லா பக்கங்களிலும் பரவி கிடப்பதால் இந்த புத்தகத்தை படிப்பதே ஒரு பாட்டில் குளுகோஸ் குடிப்பது போல.. படித்து பாருங்கள்.. உங்களுக்குள்ளும் ஒரு உற்சாகம் தொற்றிகொள்வதை உணர்வீர்கள். 

ஆசிரியர் பற்றி.. 

கோபிநாத், நீயா நானா நிகழ்ச்சியின் மூலம் எல்லோருடைய கவனம் ஈர்த்தவர். கணீர் பேச்சும், தோழமையான அணுகுமுறையும் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர் வட்டத்தை உண்டாக்கி வைத்திருக்கின்றன. 
2004 ம் ஆண்டு - இந்தியாவின் மிக சிறந்த இளம் செய்தியாளர் மற்றும் நிகழ்ச்சி நடத்துனராக அமெரிக்க அரசால் தேர்வு செய்யப்பட்டவர். 
2007  ம் ஆண்டில்  சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளராகவும், 2008 ம் ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த பத்து நபர்களுள் ஒருவராகவும் ஆனந்த விகடனால் தேர்ந்தெடுக்கப்பட்டார். 
2008 - சிறந்த இளம் இந்தியர் - ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல்

பதிப்பகம் பற்றி.

சிக்ஸ்த் சென்ஸ் பப்ளிகேஷன்ஸ் 
சென்னை. 

விலை : RS 60 /- 

Tuesday, June 1, 2010

கற்றது களவு - விமர்சனம்


 சில படங்களை  எந்த விதமான எதிர்பார்ப்பும் இன்றி பார்க்கும் போது நிறைய  ஆச்சரியங்களை கொடுப்பதுண்டு. நல்ல ஸ்க்ரிப்டை சரியான முறையில் ப்ரெசென்டேஷன்  செய்யும் போது மிக எளிதாக நம்மை கவர்ந்து விடும். அப்படி  கவர்ந்திருக்கவேண்டிய இந்த  படம் சின்ன சின்ன லாஜிக் மீறல்களிலும், ரசிகர்களின் ரசனை பற்றிய புரிதலில் உள்ள குறைபாட்டிலும் கவர்ந்திழுக்க முடியாமல் போய் விட்டது.

கதா நாயகன் கிருஷ்ணா, தன் ப்ராஜெக்ட் மூலம் தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தையும், புகழையும்  வேறொருவன் தட்டிக்கொண்டு செல்ல, அவனை பழி வாங்க துடிப்பவன். கதாநாயகி வேணி, ஏர்  ஹோஸ்டல் பணியில் சேர விரும்பி வீட்டை விட்டு வெளியில் வந்தவள். யதோட்சையான சந்திப்பில் இனையும் இருவரும் பணம் ஈட்டுவதற்காக தேர்ந்தெடுக்கும் வழி களவு. சின்ன சின்ன திருட்டுக்களில் ஈடுபடும் இருவரும் ஒரு கட்டத்தில் அரசியல்வாதி ஒருவரின் ரகசியங்களை திருடி பணம் பறிக்க,  ரகசியம் வெளி வராமல் இருக்கவும், பழி வாங்கவும்  அரசியல்வாதி தன் அதிகார பலத்தால்  என்கவுன்ட்டர் மூலம் இருவரையும் கொல்ல முயற்சித்து துரத்த,  அவரிடம்  இருந்து திருடிய ரகசியத்தை தெரிந்து கொள்ள ஒரு லோக்கல் போலீஸ்  இவ்வுருவரையும் காப்பாற்றி விசாரிக்க, முடிவு என்னவென்பது கிளைமாக்ஸ்.

படத்தின் முதல் ஆச்சரியம் நீரவ்ஷா.   மிக தெளிவான, அட்டகாசமான ஒளிப்பதிவு படம் முழுதும். ஆங்கில படங்களை மிஞ்சும் கேமரா கோணங்களும், லைட்டிங்கும் சபாஷ் போட வைக்கின்றன. ராமேஸ்வரம் சேஸிங் காட்சிகளும், ஒரு சில க்ளோஸ் அப்  காட்சிகளும் உலகத்தரம். படத்தின் முதுகெலும்பாய் விளங்குகிறது இவரது ஒளிப்பதிவு.

இரண்டாவது ஆச்சரியம், கொஞ்சம் வித்தியாசமான கதையும்  அதை  படமாக்கிய விதமும்.  ஆரம்ப கட்ட காட்சிகளில் ஒரு வித சஸ்பென்சொடு பயணம் செய்யும் கதை படத்தை ஒரு ஈர்ப்போடு பார்க்க வைக்கிறது. ஆனால் மோசடி செய்யும் இருவரை பற்றி விசாரிக்கும் இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளை கஞ்சா கருப்பை வைத்து காமெடி செய்ததில் அதுவரை  ஏறிக்கொண்டிருந்த  மொத்த டெம்போவும் தேங்காய் உடைத்தது  போல சிதறி போய் விடுகிறது. அதற்க்கு பிறகு படம் கிளைமாக்ஸ் வரையும் எழுந்திரிக்க  முடியாமல் தடுமாறுகிறது.  இன்வெஸ்ட்டிகேஷன் காட்சிகளை சீரியசாக காட்டியிருந்தால் இந்த படத்திற்கு நிச்சயம் வேறொரு நிறம் கிடைத்திருக்கும்.

மூன்றாவது ஆச்சரியம் சம்பத். லோக்கல் போலீஸ் ஆபீசராக வரும் இவரது உடல் மொழியும், வசன உச்சரிப்பும் அருமை. படத்துக்கு படம் இவரது கிராப் ஏறிக்கொண்டே போகிறது.


அலி பாபாவில் பிரெஞ்ச் பியர்டில் பார்த்த கிருஷ்ணா இதில் மழுங்க மழுங்க ஷேவ் செய்து சற்றே சின்ன பையன் போல இருக்கிறார். சேஸிங் காட்சிகளில் உயிரை கொடுத்து ஓடியிருக்கிறார். மற்றபடி பெரிதாய் வேலை இல்லை. பக்கத்துக்கு  வீட்டு பெண் போல இருந்த விஜய லக்ஷ்மி இதில் படம் முழுதும் மாடர்ன் உடைகளில் வலம் வருகிறார். கீச்சு குரலில் இவர் பேசுவது ரசிக்கும் படி இருக்கிறது.

பாடல்கள் முழுக்க வெஸ்டர்ன் இசையில் ராப் குத்துகளோடு இருப்பதால் எதுவும் மனசில் ஒட்டமறுக்கிறது. பின்னணி இசை பரவாயில்லை.

"கற்றது களவு" பாடலில் வரும் கோரியோகிராப்பி  புருவம் உயர்த்துகிறது, வித்தியாசமான மூவ்மென்ட்டுகள்.நல்ல முயற்சி.

படத்தின் ஆரம்ப காட்சிகளிலும், பாடல்களை படமாக்கிய விதத்திலும் கவனிக்க வைத்த இயக்குனர், சீரியஸ் கதையில் தேவையில்லாமல் மொக்கை  காமெடியே புகுத்தி முதல் படத்தில் பாஸ் ஆகும் வாய்ப்பை அநியாயமாக தவற விட்டுள்ளார். இயக்குனரின் அனுபவமின்மை படத்தில் ஏகப்பட்ட கேள்விகளை கேட்க வைக்கிறது. கிளைமாக்ஸ் காட்சியில் தீடிரென தோன்றும்  ஒரு தேவையற்ற பிளாஷ்பேக்கும், ஐட்டம் பாடலும் எரிச்சல் ரகம். இரண்டாவது, கிருஷ்ணா தவறான வழியில் செல்ல சொல்லும் காரணமும் அழுத்தம் இல்லாத ஒன்று.

(+) பிளஸ்

நீரவ் ஷா ஒளிப்பதிவு
ஆரம்பகட்ட சேஸிங் காட்சிகள்
சம்பத் நடிப்பு

(-) மைனஸ்

அநியாய லாஜிக் மீறல்கள்
இயக்கம்
அழுத்தம் அற்ற காட்சிகள்
பாடல்கள் 

VERDICT  : கற்றது களவு, பாதி சமையல். 

RATING     : 3 .9 / 10

EXTRA  பிட்டுகள் :

இந்த படம் ரிலீஸ் ஆனது திருப்பூர் ராம் லட்சுமன் தியேட்டரில். கடைசியாய் இங்கு 100 நாட்கள் ஓடிய படம் "சின்ன தம்பி" அதற்க்கு பிறகு இந்த தியேட்டரில் வந்த எந்த படமும் உருப்படவில்லை. நேற்று இரவு நைட் ஷோவில் ஒரு கூத்து நடந்தது. ஒரு மணி நேரம் படம் ஓடியிருக்கும். தீடிரென கரண்ட் கட்டாகிவிட்டது. ஜெனரேட்டரில் எண்ணெய் இல்லையோ என்னவோ 10 நிமிடம் தியேட்டர்  இருளில் மூழ்க ஒரே களேபரம். ஒரு வழியாய் மின்சாரம் வந்து படத்தை போட்டால்.. அது முதலில் இருந்து ஓடுகிறது. படம் டிஜிட்டல் முறையில் திரையிடப்பட்டதால் அதில் ஏதோ குளறுபடி. பின் மீண்டும் படத்தை நிறுத்தி FORWARD  செய்து ஓட விட்டால் அது இன்டர்வெல் அருகே வந்து நிற்கிறது. நம் ரசிக பெருமக்கள் PROJECTION  ரூமை முற்றுகையிட்டு கொடுத்த காசை திருப்பி தருமாறு சவுண்ட் விட ஒரே கலாட்டா. பாவம் அந்த ஆபரேட்டர். நேற்று ஒரு வழி ஆகி விட்டார்.

you might like this also...

Related Posts with Thumbnails