உலகின் சின்னஞ்சிறு காதல் கதை...


ஹாவென கொட்டாவி விட்டபடி தலையே திருப்பிய போதுதான் அவள் பேருந்துக்குள் ஏறி நான் அமர்ந்த திசை நோக்கி வர ஆரம்பித்தாள். என் கண்கள்  ட்யுப் லைட் போட்டது போல பிரகாசமாக... நடந்து வந்தவள் எனது பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்து கொண்டாள். 

அந்த பெண் மிக அழகாக இருந்தாள். மிக அழகாக இருந்தாள் என ஒற்றை வரியில் கூறி விடுவது அவள் அழகையும் எனது பழகு தமிழையும் அவமதிப்பது  போலாகிவிடும். எனவே அவளை பற்றி குறைந்தது நான்கு வரிகளாவது வர்ணிப்பது இங்கே அவசியமாகிவிடுகிறது.. மெல்லிய தேகம், சரித்திர நாவல்களில் வரும் பெண்களுக்கு இருப்பது போல நீண்ட நெடிய கருங்கூந்தல். அப்பழுக்கற்ற கண்கள்.. குப்தா ஸ்வீட்ஸ் குலோப் ஜாமுன்களை நினைவுபடுத்தும் சிவந்த கன்னம்..காதுகளில் சின்னஞ்சிறு ஜிமிக்கி. நெற்றியில் குங்கும தீற்று. கண்களை உறுத்தாத சுடிதார்..பஞ்சு கால்களுக்கு சுமை ஏற்படுத்தாத மெல்லிய கொலுசு.. நேர் வகிடு எடுத்து சீவிய தலையில் மல்லிகை பூ,  அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு போன்ற பேரிளம் பெண்களுக்குரிய குணங்கள் அனைத்தையும் மிக்ஸியில் ஒன்றாய் போட்டு அடித்தது போல சாந்தமான முகம். லிப்ஸ்டிக் போடாமலேயே சிவந்திருந்த உதடு, அதன் கீழே மெலிதான மச்சம் என மொத்தத்தில்  சரவணா ஸ்டோர் குத்து விளக்கு போல பளிச் என இருந்தாள்..

  என் உடல் முழுதும் மெலிதாய் காய்ச்சல் அடிக்க தொடங்க.. நான் முடிவு செய்து விட்டேன்,   இவள்தான் என்  காதலி என..    என்ன  கண்டவுடன் காதலா... என்கிறீர்களா..? உங்களுக்கு விதி மீது நம்பிக்கை இருக்கிறதா..? சிட்டியில் இந்த ரூட்டில் மட்டும் 23 பஸ்கள் ஓட எப்படி இவள் இந்த பஸ்ஸில் மட்டும் ஏற வேண்டும். சரி, அப்படியே ஏறினாலும் எதற்காய் என் பக்கத்துக்கு இருக்கையில் அமர வேண்டும். எல்லாம் விதி. ஏற்கனவே இறைவனால் முடிவு செய்து வைத்தது. so, இவளை கண்டது,  இப்போது காதலிப்பது எல்லாமே அவனது திருவிளையாடல்களில் ஒன்று. என் தேவதை அமர்ந்த இடம் முழுதும் ஏதோ சுகந்த வாசனை பரவ... அந்த பேருந்தே ஒரு பூங்காவனம் போல மாறியிருந்தது.. தேவதை வெளியே பராக்கு பார்த்துகொண்டிருக்க, நான் தேவதையேயை பார்த்து கொண்டிருந்தேன்.. என் இதயம் முழுவதையும் ஏதோ ஒரு புறம்போக்கு நிலம் போல அவள் வளைத்து போட்டிருக்க, அவள் கண்ணசைத்தால் ஓடுகின்ற பேருந்தில் இருந்து தலை குப்புற விழுவதற்கு கூட சித்தமாய் இருந்தேன்.. பஸ் ஹாரன் எனக்குள் சங்கீதமாய் ஒலிக்க, கொஞ்ச நேரம்  வயிற்றுக்குள் யாரோ வயலின் வாசித்தார்கள்.


தேவதை இப்போது மெலிதாக வாய் பிளந்து தூங்கிக்கொண்டிருந்தது..ஆஹா..எத்தனை அழகாக தூங்குகிறாள்..நல்ல வேளை இந்த பேருந்தில் வாலியோ, வைரமுத்துவோ பயணம் செய்யவில்லை. செய்திருந்தால் இவள் தூங்கும் அழகை கண்டு ஒரு கவிதை  தொகுப்பையே  வெளியிட்டிருப்பார்கள்..யதொச்சையாக என் அருகில் அமர்ந்திருத்த கிழத்தை கவனிக்க, அந்த கிழமும் என் தேவதை தூங்குவதையே ஜொள் வடிய பார்த்துக்கொண்டிருந்தது.. எனக்குள் ரத்த அழுத்தம் எகிற அந்த கிழத்தை தொட்டு சுட்டெரிக்கும்  விழிகளால் பார்த்தேன். கிழம் என் உக்கிர பார்வையை சமாளிக்க முடியாமல் தலையைய் கீழ் சாய்த்துக் கொண்டது. என்ன தைரியம் இதற்கு, காதலன் நான் ஒருவன் இருக்கும்போதே என் காதலியேய் ரசிப்பதற்கு... ச்சே... நாட்டில் அழகிய பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை. இந்த ஜனநாயகத்தையே மாற்றியமைக்க வேண்டும்,ஆளும் அரசை கலைக்க வேண்டும், நாட்டில் புரட்சி தோன்ற வேண்டும் என்று என் சிந்தனைகள் ஆத்திரத்தில் எக்குதப்பாய் எகிற ஆரம்பித்துவிட்டது..

ஒரு கள்வனிடமிருந்து என் காதலியே  காப்பாற்றிவிட்ட திருப்தியோடு ஆதுரமாய் அவளை நோக்க... என் காதலை இவளிடம் சொல்லி, இவள் சம்மதத்துடன் திருமணம் செய்து,  இரட்டை பெண்  குழந்தைகள்  பெற்று என என் கற்பனை, சிறகு விரித்து பிரேக் இல்லாத ஏரோ பிளேன் போல பறக்க ஆரம்பித்தது... இதற்குள் எங்கள் காதல் வாகனம் ஒரு நிறுத்தத்தில் நிற்க.. அழுக்கு ஜீன்ஸ் அணிந்து, ஒரு மாத காலமாய் சவரம் செய்ய மறந்த ஒரு இளைஞன் ஏறினான். ஏறினவன் நேராய் என் தேவதை அமர்ந்த சீட்டில் அமர்ந்து அவள் தோள் தொட்டு "ஹாய் அனி" என்றான். உடனே, அவளும் 32 + 1 தெற்றுபல் தெரிய விளித்து " ஹாய் செல்வா " என்றாள். எனக்கு தட்டாமாலை வந்து தலை சுற்றுவது போல இருந்தது..அருகிலிருந்த கிழம் என்னை பார்த்து ஏளனமாய் சிரிக்க.. நான் அவனை பார்த்தேன். தினமும் ஜிம்மிற்கு போவன் போலும்... வெட வெட வென உயரமாய் ஒரு மல் யுத்த வீரன் போல் இருந்தான். இவனுடன் மற்போர் செய்து இவனை வீழ்த்தி, என்னவளுடன் இல் வாழ்கை அமைப்பதற்கான சாத்தியங்கள்  பேரரசு படம் ஆஸ்கருக்கு போவதற்குண்டான சாத்தியங்களோடு ஒப்பிட முடிந்தது... உடனே முடிவு செய்தேன்.. இவள் வேண்டாம்.. ஒட்டடை குச்சி போல இருக்கிறாள்.. இன்னமும் கட்டுப்பெட்டி தனமாய் நீளமான கூந்தலும், கையில் மருதாணியும், இவள் எனக்கானவள் அல்ல.. LEAVE THIS HELL...

அப்போதுதான், இவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த அவளை கண்டேன், கிராப் கட்டிங், காதில் I -POD, ஜீன்ஸ் டி-ஷர்ட், வாயில் பேப்பர் மின்ட் என இன்னமும் FAREX சாப்பிடும் குழந்தை போல கொழுக் மொளுக் என இருந்தாள்... என் உடல் முழுதும் மெலிதாய் காய்ச்சல் அடிக்க தொடங்க.. நான் முடிவு செய்து விட்டேன்,   இவள்தான் என்  காதலி என.....

(கதை கடியாக இருந்தாலும், கமெண்ட் இட மறக்க வேண்டாம்..) 

Comments

  1. கதை கடியாகவெல்லாம் இல்லை.நன்றாகவே இருக்கிறது.

    ReplyDelete
  2. //பேரரசு படம் ஆஸ்கருக்கு போவதற்குண்டான சாத்தியங்களோடு ஒப்பிட முடிந்தது...

    ரொம்ப கஷ்டம் தான்

    //அப்போதுதான், இவளுக்கு முன்னால் அமர்ந்திருந்த அவளை கண்டேன்

    உங்க commitment பிடிச்சுருக்கு

    ReplyDelete
  3. கதை அருமை
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. நல்லாருக்குங்க.

    ReplyDelete
  5. அப்பப்பா ! எப்படி
    இப்டி எல்லாம் எழுதுரீங்க!
    செம செம

    ரசித்து படித்தேன்!
    தொடருங்கள்
    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....