Sunday, July 17, 2011

தெய்வத் திருமகள் - விமர்சனம்மனசெல்லாம் ஆனந்தம் பரவி... கண்களில் நம்மையும் அறியாமல் கண்ணீர் சிந்தி.. படம் முடிந்த பிறகும் எழுந்து வர மனமில்லாமல் இன்னும் கொஞ்ச நேரம் அந்த அனுபவத்திற்க்காக ஏங்கி... உள்ளம் உருக... முழு ஆத்ம திருப்தியோடு கடைசியாய் தமிழில் பார்த்த படம் எது என்று நினைவில்லை. தெய்வ திருமகள் இந்த எல்லா பரவசங்களையும் தருகிறது. ஒற்றை வார்த்தையில் சொல்வதென்றால்... FANTASTIC. 

வெறும் சினிமாவாக இல்லாமல்.... நம் இதயத்திற்குள் புதைந்து கிடக்கும் மென்மையான உணர்வுகளை மயிலிறகு கொண்டு தட்டி எழுப்பிவிட்டிருக்கிறது இந்த படம்.  ஒரு குழந்தை மனம் கொண்ட தந்தைக்கும், ஐந்து வயது மகளுக்கும் இடையே உள்ள அன்பை அப்படியே நமக்குள் 
பரிமாற்றம் செய்து நம்மையும் குழந்தையாக உணர செய்திருக்கிறது.  HATS OF THE WHOLE TEAM. 

உலகில் அதிகம் விரும்பபடுவது எது.. ?  பணம்.... ?   புகழ்... ?  செக்ஸ்... ?  அந்தந்த சூழ்நிலைகளில் வெவ்வேறாக இருந்தாலும் உணமையான பதில் இதுதான்.  "நேசித்தல்.. நேசிக்கப்படுதல்...."    இந்த இரண்டும்தான் மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் தன் பிறப்பு முதல்... இறப்பு வரை விரும்புவது. மனைவி தன் கணவனிடம்... காதலன் தன் காதலியிடம்... பெற்றோர் தங்கள் குழந்தைகளிடம்...நண்பன் தன் நட்பிடம்..   உறவுகள் மாறினாலும்... விருப்பம் ஒன்றுதான். அன்பு.. அவ்வன்புதான் இந்த படம் முழுதும் கொட்டிக்கிடக்கிறது        

இயக்குனர் விஜய்க்கு, அவரது மதராசபட்டினம்தான் மாஸ்டர் பீஸ் என்று நினைத்துக்கொண்டிருந்தேன். அதை விட அற்புதமான இந்த படைப்பை கொடுத்து தன் சாதனையே அவரே உடைத்திருக்கிறார். படத்திற்கு படம் இவரது திறமை மெருகேறுகிறது... அவருக்கு மட்டுமல்ல இந்த படத்தில் நடித்த அனைவருக்கும்.. பணியாற்றிய டெக்னிஷியன் எல்லோருக்கும் சந்தேகமே இல்லாமல் இந்த படம்தான் மாஸ்டர் பீஸ். 

விக்ரமை பொறுத்த வரை.. இந்த படம் தான்,  தான் ஒரு நடிப்பு ராட்சசன் என்பதற்குரிய உண்மையான அடையாளம்.  குழந்தை மனம் கொண்ட கிருஷ்ணாவாக அப்படியே வாழ்ந்திருக்கிறார். உடல் மொழி, வசன உச்சரிப்பு என படம் முழுக்க வெளுத்து கட்டியிருக்கிறார். 


யார் அந்த குழந்தை சாரா. ஒரு லாரி நிறைய பூசணிக்காய் கொண்டுவந்து சுற்றிப்  போடுங்கள்.. கடவுளின் சிறந்த ஓவியம் குழந்தைகள் என்பதற்கு இந்த  குட்டிப்பெண்தான் சாட்சி. அவ்வளவு அழகு.  தன் அப்பாவிடம் சைகையால் காட்டி பேசும் போதும் சரி.. , அப்பாவின் பிரிவை உணரும் போதும் சரி... சந்தோஷமும்... துக்கமும் அந்த கண்களில் இருந்து அவ்வளவு அழகாக வெளிப்படுகிறது. 

அனுஷ்கா, அமலாபால், சந்தானம் எல்லோரும் இந்த படத்தில் நடித்ததற்க்காய் நிச்சயம் பெருமைபட்டுக்கொள்ளலாம். அனுஷ்காவின் இடை மீது தீரா காதல் கொண்ட பரமு கூட... இதில் அனுஷ்காவின் இடை காட்டபடாமல் போனதற்க்காய் வருத்தப்படவில்லை. படத்தில் அப்படி ஆழ்ந்து போயிருந்தான். 

ஜி வி பிரகாஷ் குமார் பின்னணி இசையும், நீரவ் ஷா ஒளிப்பதிவும் படத்தில் நம்மை அப்படியே நுழைத்து கலக்க செய்துவிடுகின்றன. மிக திறமையான.... அற்புதமான பங்களிப்பு இவ்விருவருடையது.  " வெண்ணிலவே" பாடல் இன்னமும் காதுகளுக்குள் ரிங்காரமிட்டுக்கொண்டிருக்கிறது 

கதையிலும், வசனத்திலும் தன் ஆளுமையே காட்டியிருக்கிறார் இயக்குனர் விஜய். உணர்ச்சிபூர்வமான கதையில்... மெல்லிய... குறும்பான நகைச்சுவை தொடர்வது ஆரம்பம்  முதல்  இறுதி வரை  ரசிக்க  வைக்கிறது. அப்பா மகள் இருவருக்கும் இடையேயான உரையாடல்கள்...  மன வளர்ச்சி குன்றியிருந்தாலும்... அன்பை வெளிப்படுத்துவதில்  வானளவு உயர்ந்த கிருஷ்ணாவின் நண்பர்கள்.. இறுதி கட்ட கோர்ட் சீன்கள் என விஜய் காட்டியிருப்பது எல்லாம் காட்சிகள் அல்ல... கவிதைகள். 

தெளிந்த நீரோடையாய் செல்லும் கதையில்  குபீரென ஒரு கல்லை போட்டது போல வரும் அனுஷ்காவின் கனவு பாடல் நிச்சயம் ஒரு ஸ்பீட் பிரேக். நீரவ்ஷாவின் டிஜிட்டல்  ஒளிப்பதிவு, சைந்தைவியின் தேன் குரல், அனுஷ்காவின் அழகு என எவ்வளவோ விஷயங்கள் அந்த பாடலில் ஈர்த்தாலும் படத்தின் கதையோட்டத்திற்கு தடை போடுவதை உணர்ந்து வெட்டியிருக்கலாம். 

மற்றபடி திரைக்கதை வேகமாக இல்லை என்கின்ற சப்பை கட்டுக்களை எல்லாம் விலக்கிவிடலாம். மெதுவாக.. மென்மையாக வாசித்தால்தான் அது கவிதை. இந்த படமும்  ஒரு கவிதை போலத்தான்.  
    
(+) பிளஸ் 

கதை
திரைக்கதை
இயக்கம்
விக்ரம்
சாரா 
இசை 
ஒளிப்பதிவு 

(-) மைனஸ்

ஒன்றுமில்லை. 

VERDICT : அற்புதம் 
RATING    : 7.2/10.0EXTRA பிட்டுகள் : 

ஏழைக்கேற்ற எள்ளுரண்டையாய் விளங்குகிறது பரங்கி மலை ஜோதி. மற்ற எந்த தியேட்டரில் டிக்கெட் கிடைக்காத போதும் ஜோதியில் மிக எளிதாக கிடைக்கிறது. 

நேற்று படம் தொடங்குவதற்கு முன்பாக, தியேட்டருக்குள் சரியான விசில் போட்டி. இரண்டு குழுக்கள் ஒன்றோடு ஒன்று போட்டி போட்டுக்கொண்டு விசில் அடித்துக்கொண்டிருந்தது. எல்லாம் கொஞ்ச நேரம்தான். படம் ஆரம்பித்தவுடன் அதில் மூழ்க ஆரம்பித்தவர்கள் முடியும் வரையில் வாய் திறக்கவில்லை. you might like this also...

Related Posts with Thumbnails