நான் நேசிக்கும் பத்து புத்தகங்கள் - 1


புத்தகங்களுக்கும் எனக்கும் உள்ள  தொடர்பு, ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் ஒரு அன்யோனியத்தை போன்றது . பொம்மையை இறுக்கி அணைத்து   தூங்கும்  குழந்தை போல புத்தகங்களோடு நான் நெருங்கி இருக்கின்றேன். புத்தகங்கள் எனக்கொரு உருவை, ஒரு தைரியத்தை, ஒரு தெளிவை தருகின்றன என்பதை நம்புபவன் நான். பின் வருபவை நான் மிக மிக நேசிக்கும் புத்தகங்களின் வரிசை. இதை விட மிக சிறந்த புத்தகங்கள் தமிழில் உள்ளன என்றாலும் என்னை மிகவும் பாதித்த புத்தகங்களை மட்டும் இங்கே வரிசைபடுத்துகிறேன். 

10 . தண்ணீர் தேசம்  - வைரமுத்து. 

கடல் பற்றிய ஆச்சரியங்களை அழகான காதல் கலந்து சொன்ன படைப்பு. கவிதை நடையில் ஒரு நாவல். திகட்ட திகட்ட தமிழ் கடலில் மூழ்கி எழுந்த அனுபவம் இந்த புத்தக வாசிப்பில் கிடைக்கும். கவிதை மூலமாகவே  ஒரு பரபரக்க வைக்கும் கதை சொல்ல முடியும் என்பதை வைரமுத்து அவர்கள் அழுத்தமாய் நிரூபித்த படைப்பு இது. 

09 . பிருந்தாவனமும் நொந்த குமாரனும் - பி.கே.பி.

நம்புங்கள், இந்த புத்தகத்தை 12 - 15  வருடங்களுக்கு முன்,  பழைய புத்தககடையில் இரண்டு ரூபாய்க்கு வாங்கி  படித்தேன்.  PKP அவர்கள் எத்தனையோ காதல் கதைகள், துப்பறியும் கதைகள் எழுதியிருந்தாலும், நகைச்சுவையில் அவருடைய மாஸ்டர் பீஸ் இது. ஆரம்ப வரிகளில் தொடங்கும் காமெடி கலாட்டா முற்றும் போடும் வரையிலும் பின்னி பெடலெடுக்கும். சேட்டை கோபி, நந்து என்கின்ற நந்த குமார் அவர்களுடைய பஞ்ச கல்யாணி எனப்படும் மோட்டார் சைக்கிள் (இந்த வண்டிக்கு திரவ வடிவத்தில் இருக்கும் எதை ஊற்றினாலும் ஓடும்), குழாங்கல்லில் இருந்து எய்ட்சுக்கு மருந்து கண்டுபிடிக்கும் வில்லன் என ஒரு அட்டகாசமான காமெடி படம் பார்த்த திருப்தி இந்த புத்தகத்தை வாசித்தால் கிடைக்கும். சமீபத்திய புத்தக கண்காட்சியில் இந்த புத்தகத்தை 150 ரூபாய் விலையில் பார்த்ததாக ஞாபகம். 
08 . நிலா நிழல்.  - சுஜாதா 

சுஜாதா சாருடைய எழுத்துக்கள் எப்போதுமே ஒரு நண்பனை போல தோளில் கை போட்டு கதை சொல்லும். அந்த நடையில் கண்முன்னே ஒரு கிரிக்கெட் போட்டியே ஓட விட்டு அதில் காதலும் காமெடியும் கலந்த  ஒரு யதார்த்தமான நாவல் இது. படித்து முடித்த பின்னும் உங்கள் மனதில் முகுந்தனின் முதல் முத்தமும், முதல் விக்கட்டும் ரீ - ப்ளே ஆகும்.  தவறவிட  கூடாத படைப்பு.
                                                                             
                                                                            -தொடரும்.

Comments

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4