Saturday, February 27, 2010

விண்ணை தாண்டி வருவாயா... - விமர்சனம்


ரொம்பவும் யதார்த்தமான சினிமா எடுக்கனுமா ? வண்டிய மதுரைக்கு விடு... காதல், பருத்தி வீரன், சுப்ரமணியபுரம் என நாம் பார்த்த யதார்த்த சினிமாக்கள் கிராமத்து பின்னணியில் உருவானவை.... ஆனால் இம்முறை சென்னை நகர பின்னணியில் ஒரு யதார்த்த சினிமா தர முயன்றிருக்கிறார் கெளதம்.. 

படத்தில் ஹீரோ, ஹீரோயின், ஹீரோயிசம் என குறிப்பிட்டு எதுவும் கிடையாது..  நம் தினசரி வாழ்வில் பார்க்கும் சராசரி மனிதர்கள் அவர்களுக்குள் ஏற்படும் இயல்பான காதல், ஊடல், பிரிவு, கோபம், மகிழ்ச்சி, ஸ்பரிசம், போன்றவற்றை சினிமாத்தனம் இன்றி தந்திருப்பதர்க்காகவே பாராட்டலாம்...இம்மாதிரி படங்களில் திடுக்கிடும் திருப்பங்களோ, சீட் நுனியில் அமரவைக்கும் சுவாரசியமான நிகழ்வுகளோ  ஏதுமின்றி வெறும் வசனங்கள், சின்ன சின்ன சம்பவங்கள் மூலமாகவே கதையை நகர்த்தி செல்ல ஒரு தனி திறமை வேண்டும்...  முதற் பாதியில் எளிதாக சிக்ஸர் அடித்த கெளதம் இரண்டாம் பாதியில் சற்றே திணறியிருக்கிறார்...

கார்த்திக், ஜெஸ்ஸி - இருவருக்குமுண்டன காதல்..  என இந்த இரு கதாபத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு படம் நகர்கிறது.. கிட்டத்தட்ட எல்லா சீன்களிலும் கார்த்திக்கோ, ஜெஸ்ஸியோ இருக்கிறார்கள்.. வேறு எந்த முக்கிய கதா பாத்திரமும் இல்லை. கார்த்திக்கின் நண்பராக வரும் அந்த கேமரா மேன் கணேஷ் மட்டும் கிடைக்கும் கேப்பில் ஸ்கோர் செய்கிறார். 

கார்த்திக்காக சிம்பு, ஆச்சரியம்... விரல் வித்தைகள் ஏதும் இன்றி படம் முழுதும் ரொம்ப இயல்பாய் வருகிறார்... நிச்சயம் சிம்புவுக்கு இந்த படம்  வேறு ஒரு அடையாளம்.  ஆனால் 22 வயது இளைஞனுக்ககுரிய ஒரு துறு துறுப்பு + உற்சாகம்  முகத்தில் மிஸ்ஸிங். வாய்ஸ் மாடுலேஷனிலும் இன்னும் கொஞ்சம் உற்சாகத்தை தெளிதிருக்கலம்..

ஜெஸ்ஸி யாக த்ரிஷா... கார்த்திக்கை பிடிக்கவில்லை எனவும், பிடித்திருக்கிறது எனவும், காதல் வேண்டாம் என்றும், சிலசமயம் வேண்டும் என்றும்,  பிரச்சனை ஆகி விடும் என விலகி செல்வதும், பின் விரும்பி வருவதும், மனதில் காதலை வைத்துக்கொண்டு  அதை மறுப்பதும்,  விரும்பவும் முடியாமல் விடவும் மனசில்லாமல்  தவிப்பதும் என  இக்கால பெண்களின் குழப்பம் + தடுமாற்றங்களை அழகாக பதிவு செய்திருக்கிறார்.

கெளதம் படங்களில் டெக்னிகல் விஷயங்கள் எப்போதுமே சிறப்பாக இருக்கும், இந்த படமும் அதற்க்கு விதி விலக்கு அல்ல..மனோஜ் பரமஹம்ச  ஒளிப்பதிவும், ஆண்டனி யின் எடிட்டிங்கும் சிறப்பு..

இசை.. A.R.R., நீண்ட நாட்களுக்கு பிறகு, தமிழில் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்களும், பின்னணி இசையும் இந்த படத்திற்கு ஒரு மிகபெரிய பலம்.

படத்திற்கு நல்ல  ஒபெனிங் இருந்தாலும், எல்லா தரப்பு மக்களையும் இது மகிழ்விக்குமா என்பது சற்று சந்தேகமே... கெளதம் படங்களில் இருக்கும் ஒரு மேஜிக் இதில் இல்லாதது ஒரு குறைதான்.. இருந்தாலும் இது ஒரு நல்ல லவ் ஸ்டோரி.

 WATCH IT FOR LOVE

(+) பிளஸ்.  


வசனங்கள்
இசை,
ஒளிப்பதிவு,
ஹீரோயிசம் இல்லாத காட்சியமைப்புகள்.

(-) மைனஸ் 

மெல்ல நகரும் திரை கதை.

பழைய படங்களை ஞாபகபடுத்தும் காட்சிகள்..

பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட விதம் நன்றாக இருந்தாலும், ஓமனே பெண்ணே, கண்ணை கட்டி, பாடல்களை இன்னும் சிறப்பாக எடுத்திருக்கலாம்..

OUR RATING : 5.0 / 10

Friday, February 26, 2010

சச்சின் ரமேஷ் டெண்டுல்கர் - 200*

 


சச்சின் ரமேஷ் டெண்டுல்கர்....


மெல்லிசான தேகம்..5.5 அடி உயரம்..பள்ளிக்கு போகும் சிறுவன் வழி தவறி மைதானத்துக்குள்  நுழைந்து விட்டானோ என்று என்னும் தோற்றம்..16 வயதில் மட்டையுடன்  கராச்சி கிரௌண்டில் இறங்கிய சச்சினை பார்த்து பாக் பௌலர்கள் உதிர்த்த வார்த்தை " பொடியன்". அப்போது யாரும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.. இந்த பொடியன்தான் நம்மை தூங்க விடாமல் கனவில் கூட துரத்தி துரத்தி அடிக்க போகிறான் என.....

16 வயதில் இந்தியாவுக்காக ஓட ஆரம்பித்த ரன் மெஷின்... 37  வயதில்.. இன்னமும் ஸ்ருதி குறையாமல் அடித்து நொறுக்கி கொண்டு இருக்கிறது...

மொத்தமாய் 31,045 ரன்கள்... 93 சதம், 147 அரை சதம்.. 240 சிக்சர்கள்..STILL GOING AND GOING... 

எல்லோரும் தான் கிரிக்கெட் ஆடுகிறார்கள்.. ரன் குவிக்கிறார்கள்... ஆனால் சச்சின் ஆடும் பொழுது உள்ள ஒரு ஒழுங்கு.. நளினம்,  PERFECTION,  ஸ்டைல், மிக  நேர்த்தியாக.. ஒரு பூ மலர்வது போல... அவ்வளவு அழகாக இருக்கும்.. கிரிக்கெட்டை ஆத்மார்த்தமாக  நேசிக்கும் ஒருவரால்  மட்டுமே இப்படி ஆட முடியும்...

 இந்தியாவில் மட்டுமல்ல... எல்லா நாடுகளிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களால் விரும்பப்படும் சச்சின் கடந்து வந்த சாதனைகளும் அதற்க்கு  ஈடாக சந்தித்த விமர்சனங்களும், காயங்களும், ஆபரேஷன்களும் கணக்கிலடங்கதவை.

வயதாகிவிட்டது,  பழைய அதிரடி இல்லை, உடல் முழுக்க காயங்கள் என தன் மீது வைக்கும் விமர்சனங்களுக்கு அவர் வாய் திறப்பதே இல்லை. அதற்க்கு பதிலாக அவரது மட்டைதான் ஒன்றிற்கு இரண்டாக பிளந்து கட்டி விமர்சிப்பவரின் வாய்களை அடைக்கிறது.

தனி மனிதனாக அவர் ஷார்ஜாவில் ஆடிய ருத்ர தாண்டவம் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அடித்த அடியில்,  அந்த பாலைவன சூட்டிலும் அன்றிரவு காஸ்பரோவிச்சிற்கு குளிர் ஜுரம் கண்டிருக்கும்.


 எவ்வளவோ சாதனைகள் செய்திருந்தாலும், இந்த 200 ரன்கள் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு ஆத்ம திருப்தியை கொடுத்திருக்கும். காரணம், 1994 ல்  சயத் அன்வர் நம்  பௌலர்களை பின்னி பெடலடுத்து குவித்த 194 ரன்கள் ஒரு வித ரணத்தை ஏற்படுத்தி விட்டது... அப்போதிருந்தே நாம் இதை முறியடிக்க வேண்டும் என்கின்ற ஒரு ஏக்கம் இத்தனை வருடங்களாக  தொடர்ந்து இதோ 2010 ல் நடந்திருக்கிறது. இடையில் ஒரு ஜிம்பாப்வே வீரர் அதை சமன் செய்தாலும்.... ஒரு இந்தியன் அதை முறியடிக்க வேண்டும் என்கின்ற பிரார்த்தனை நிகழ்ந்தது... அதுவும் சச்சின் மூலமாய் நிகழ்ந்தது ஒரு அற்புதமான விஷயம்..

 
சாதனையின் சிகரம் தொட்ட தலைவருக்கு அடிப்போம் ஒரு ராயல் சல்யுட்.

Monday, February 22, 2010

TOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)

 TOUR SPOT - கோவளம் (இது ஒரு குட்டி கோவா)கடல் என்றுமே ஆச்சரியமான விஷயம். ஒரு அழகான பெண் போல... பார்க்க பார்க்க சலிக்கவே சலிக்காத ஒன்று... நண்பர்களுடன் குதித்து கும்மாளமிடவும், காதலியுடன் கை கோர்த்து நடக்கவும், தனிமையில் இனிமை காணவும் எல்லோருடைய ALL TIME FAVOURITE கடற்கரை மட்டுமே...


திருவனந்தபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கோவளம். கடற்கரை சுற்றிலும் நிறைய தென்னை மரங்கள்... மிதமான  வெயில், பச்சை பசேல் புல் வெளிகள் என இது ஒரு குட்டி கோவா. ஒரே இடத்தில் 3 வகையான கடற்கரைகளை கொண்டிருக்கிறது.

1.லைட் ஹவுஸ் பீச்
2.ஹவா பீச்
3.சமுத்ரா பீச்

லைட் ஹவுஸ் பீச் 
முழுவதும் வெளிநாட்டவர்கள் நிரம்பி வழிகிறார்கள். இதன் சிறப்பம்சம் இங்கு ஆழம் மிக குறைவு.. ஆனால் அலைகளோ.. இரு ஆள் உயரத்திற்கு எழும்பும். அலை  விளையாட்டுக்கள் விளையாட ஏற்ற இடம். இங்குள்ள லைட் ஹவுஸ் வழியாக கண்ணுக்கெட்டும் தூரம் வரை விரிந்திருக்கும் கடல் ரசிப்பது தனி அனுபவம். கடற்கரையில் பாதுகாவலர்கள் இருப்பதால் தைரியமாய் இங்கு அலையில் விளையாடலாம்.

ஹவா பீச் தென்னை மரங்கள் சூழ்ந்த,  சற்று அலைகள் குறைவான ஆனால் நீளமான கடற்கரை. பெண்கள், குழந்தைகள், விளையாட ஏற்ற இடம்.சமுத்ரா பீச். 


தனிமை விரும்பிகளுக்கு பிடித்த இடம். மிக ஆழமான மீன் பிடி பகுதியாதலால் கடலில் இறங்கி விளையாட முடியாது. ஆனால் இங்கு ஒரு சாகச பயணம் மேற்கொள்ளலாம்.. தலைக்கு 50 ரூபாய் கொடுத்தால் அங்குள்ள மீனவர்கள் தங்கள் கட்டு மரங்களில் கடலுக்குள் 2-3 கிலோ மீட்டர்கள் உங்களை அழைத்து செல்வர்கள்... நீங்கள் படகிலோ, கப்பலிலோ செல்லும்  போது உணர முடியாத கடலின் ஆழத்தை கட்டுமரத்தில் உணரலாம். முதுகு தண்டை சில்லிட வைக்கும் ஒரு த்ரில் அனுபவம் அது.. சிறிது தொலைவு சென்றதும்.. உங்களுக்கு விருப்பமிருந்தால்  LIFE-JACKET கொடுத்து கடலினுள் இறக்கி விடுவார்கள்... அதை எழுத்தில் விவரிக்க முடியாது சார்... அனுபவித்து பாருங்கள்..

  • கேரளா வகை உணவுகள் மட்டுமே அதிக அளவில் கிடைக்கும்..
  • தங்குவதற்கு 300 முதல் 3000 வரை வசதியான அறைகள் உண்டு. 
  • கடல் சார்ந்த கலை பொருட்களை பிரம்மாண்டமான விலைக்கு விற்கிறார்கள்... நமக்கு கட்டுபடி ஆகாது.. 

  • மசாஜ் சென்டர்கள் உண்டு.. நன்கு விசாரித்து செல்லவும்... இல்லையேல் பர்ஸ் காலி. 

  • சரக்கு வஞ்சகமில்லாமல் கிடைக்கிறது... 

வழிகாட்டி...

திருவனந்தபுரத்தில் இருந்து 18 கிலோ மீட்டர்
 ஆட்டோ ,பஸ் ,ஜீப் வசதி உண்டு..

Friday, February 19, 2010

கல் நெஞ்சுக்காரர்களையும் கலங்கடிக்கும் படு பயங்கர செய்தி..


மேற்படி எல்லோரும் 3 IDIOTS பார்த்திருப்பீர்கள்.. இந்த வருடத்தின் ஒரு அட்டகாசமான FEEL GOOD MOVIE. பல இடங்களில்  நம்மையும் அறியாமல் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்த வைக்கும் படம். இயல்பான நடிப்பு, மெல்லிசான நகைசுவை என படம் அள்ளிக்கொண்டு போகும். BUT  இது 3 IDIOTS பற்றிய விமர்சனம் அல்ல...

இணையத்தில் ஒரு செய்தி ..  3 IDIOTS படத்தை நம்ம விஜய் ரீ-மேக் செய்கிறாராம்.. .  அதை படித்ததில் இருந்தே வலது பக்க தலை ஒரு மாதிரி  வலித்துக் கொண்டே இருக்கிறது.... ஏதோ நடக்க கூடாதது நடக்க போவது போல ஒரு FEELING. இதற்க்கு பதிலாக 2012 ல்  உலகம் அழிந்து விடலாம். புண்ணியமாய் போகும்.

பின் குறிப்பு : சாமி சத்தியமாய் நான் அஜித் ரசிகன் அல்ல.. ஒரு நல்ல திரை படம் பாழாய் போகிறதே என்கிற வருத்தம் மட்டுமே...

Tuesday, February 16, 2010

உ.பா. பிரியர்களின் கவனத்திற்கு..

முக்கிய செய்தி...

இந்த வருடத்தில் டாஸ்மாக் விடுமுறை  தினங்கள்...

JANUARY 26, 30
MARCH 22
MAY 1
JULY 14
AUGUST 15
SEPTEMBER 3,14
OCTOBER 2,8
NOVEMBER 9

SO, பிளான் பண்ணி குடிங்கோ பாஸ்.......


குடிமகன்களின் நலனுக்காக...

மனோ 

Monday, February 15, 2010

தேவதை பெண்ணும்... தேவாங்கு பையனும்...பேசாமல்
நாய் குட்டியாய்
பிறப்பெடுத்திருக்கலாம்..

உன்
முகத்தோடு
முகம் சேர்த்து..

மூக்குரசும்
பாக்கியமாவது
கிடைத்திருக்கும்..

ஒருவேளை...
சிட்டு குருவியாய்
அவதரிதிருந்தாலாவது

உன்
பஞ்சுக்
கைகளில்
அடைபட்டு
சுகப்பட்டு
கிடந்திருக்கலாம்...

அட..
ஆட்டுக்குட்டியின்
 ஆயுளாவது
பெற்றிருக்க 
கூடாதா.....

தேவதை 
உன் தோள்களில் 
உற்சாக சவாரியாவது..
செய்திருக்கலாம்...

பூனையாகவாவது 
ஜீவிதம் 
வாய்த்திருக்க கூடதோ...

உன் மடியினில் 
தவழ்ந்து.. 
மார்பினில் 
புதைந்து..

என் 
உயிரை 
முழுசாய்
கரைத்திருக்கலாம்...

கன்றாய்
பிறந்திருந்தலாவது 
புண்ணியம்...
உன் தழுவல்களிலும் 
தொடர் முத்தங்களிலும் 
என் பாவங்கள் 
நீங்கப்  பெற்றிருக்கலாம்..

உலகின் 
எல்லா 
ஜீவ ராசிகளையும்
நேசிக்கிறாய்... 

என்னை 
தவிர...

எவன் 
சொன்னது... 
மனித பிறவி 
மகத்துவ பிறவி 
என்று.....

Friday, February 12, 2010

TOUR SPOT - அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....

 கண்டிப்பாய் காண வேண்டிய சில அழகான சுற்றுலா தலங்கள்...

அதிரம்பள்ளி நீர் வீழ்ச்சி.....
 

உலகின் 10 சொர்கங்களில்ஒன்றான கேரளாவில் அமைந்துள்ள ஒரு அற்புதமான இடம். இயற்கை எப்போதுமே ஆச்சரியமான விஷயங்களை தன்னுள் ஒளித்து வைத்து கொண்டிருக்கும்.  அதன் ரகசியங்களை கண்டறிந்து  அதனோடு நம்மை பிணைக்கும் ஒரு அழகான மீடியேட்டர் இந்த அருவி.

வார்த்தைகளில் விவரிக்க முடியாத சில உணர்வுகளை, சில உற்சாகங்களை எளிதாக இந்த இடம் உங்களுக்கு கொடுத்துவிடும். பச்சை பசேல் காடுகளுக்கு மத்தியில்,யூக்கலிப்டஸ் சுவாசத்தில்,  மெல்லிசாய் தூறும் மழையில் நனைந்த  படி, பிரவாகமாய் வந்து விழும் அருவியேய் பொறுமையாக அமர்ந்து  ரசிப்பது வரம் .

இரண்டு விதமான கோணங்களில் நாம் அருவியே காண  முடியும்.  மேலிருந்து கீழாய்  விழும் நீரை அருகிருந்து பார்ப்பது ஒரு பயம் கலந்த த்ரில் அனுபவம் . பின்,  தனியாய் பிரிந்திறங்கும் ஒரு ஒற்றையடி பதை நம்மை அருவி விழும் இடத்திற்கு அழைத்துசெல்லும்.  82 அடி உயரத்திலிருந்து  பிரம்மாண்டமாக வந்து விழும் அருவியின் சாரல் உங்களை முழுவதும் நனைத்து குதுகலப்படுத்தும்.

உங்கள் வயது மறந்து குழந்தையாக.. ஒரு முறை சென்று வாருங்கள். உணர்வீர்கள் ஒரு உன்னத அனுபவத்தை....

வழி காட்டி...


கோவை - திருச்சூர் - சாலக்குடி - அதிரம்பள்ளி.
     0 km     -   114km    -  58km         -   30 km
    TOTAL : 202km

அல்லது...

கொச்சின் - சாலக்குடி - அதிரம்பள்ளி.
    0km        -     65km       -      30kmசால குடியில்  தங்குவதற்கு ஏற்ற இடங்கள் இருக்கிறது. பேருந்து, மற்றும் ஜீப், கார் வசதிகள் உண்டு.  

உணவு வசதி -பறப்பன, ஊர்வன, நீந்துவன, என எல்லாம் கிடைக்கும்.                                

வரலாற்று சிறப்புகள்....

 புன்னகை மன்னன் கமல் ரேகாவிற்கு கொடுத்த உலக புகழ் பெற்ற முத்தம் இங்குதான் படமாக்கப்பட்டது என்பது உலகறிந்த விஷயம்.           

மணிரத்தினம் படங்களின் கதாநாயகிகள் தவறாமல் ஜல கிரீடை  செய்யுமிடம்.

வேட்டைக்காரன் படத்தில், விஜய் கூட  ஒரு அருமையான காமெடி சீன் இந்த அருவியில் செய்திருப்பார்.

                                                                                                  

Wednesday, February 10, 2010

வரம்

உனக்காய்
நானும்..
எனக்காய்
நீயும்....
பிரார்த்தித்துக்-
கொள்வதுதான்
கடவுளுக்கும்
பிடித்தமானதாய்
இருக்கிறது.....

Monday, February 8, 2010

காதல் எனப்படுவது யாதெனில்..

பாதியாய் பகிர்ந்து
பருகும்
காப்பிக் கோப்பையில்


அபரிமிதமாய்
வழிந்தோடுகிறது
அன்பு.


பேசிய
வார்த்தைகளில்
வெளிப்பட்டதை விட....


பேசாத மௌனங்களில்
புலப்பட்டது 
அதிகம்...
நேசத்திற்கான 
அர்த்தம். 

சிறு தலை கோதல்களிலும்
கன்னக் கிள்ளல்களிலுமே 
வயிறு நிரம்பி விடுகிறது 
எனக்கு.


ஒவ்வொரு விடியலிலும் 
உன்னால் தட்டிஎழுப்பப்படுகிறது 
அந்நாளுக்குரிய  சந்தோஷங்கள்....

சாலை கடக்கையில் 
இயல்பாய் கோர்க்கும் 
விரல்களை போல....


அழகாய் சேர்ந்திருக்கிறது 
நம் மனசின் 
குழந்தைகள்.. 


மழை போன்று 
எல்லையற்று பொழியும் 
உன் அன்பிற்குள்....


நனைந்து கொண்டே 
இருப்பதை தவிர 
வேறெதுவும் 
செய்வதிற்கில்லை 
என்னால்........Saturday, February 6, 2010

சுஜாதா - A WRITER, A FRIEND, A MAGIC MAN

இவரின் எழுத்துக்களை யார் எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள் என்பது நினைவில்லை. இருப்பினும் அந்த மனிதரின் வீட்டு குழாயில் 24 மணி நேரம் இடை விடாத  தண்ணீர் சப்ளையும், என்றுமே  மின்சாரம் தடை படாத வாழ்கையும் ,நொடிக்கொரு முறை  SMS அனுப்ப விரும்பாத குழந்தைகளும் கிட்டட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.

எல்லோருடய சிறுவயதிலும்  புத்தகம் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியது சிறுவர் மலர், ராணி காமிக்ஸ், லயன் காமிக்ஸ், கோகுலம் , அம்புலிமாமா, வாண்டு  மாமா வகையறாக்கள்  என்பதை மறுக்க முடியாது. அதன் உலகமே வேறு. அதற்கு  பிறகு  ஒரு ரெண்டுங்கெட்டான் வயதில் தோன்றும் எண்ணங்களும் வாசிப்பு பற்றிய ரசனைகளும் தலைக்கு தலை மாறுபடும். தொடர்ச்சியாக வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும் எழுத்தாளர்களை அடையாளம் காண்பதில் ஒரு சின்ன தடுமாற்றம் எல்லோருக்குமே இருக்கும். அந்த மாதிரி காலகட்டங்களில் சுஜாதா  அவர்களின் எழுத்துக்கள் ஒரு புதிய தொடக்கத்திற்கு ஆரம்பமாய் அமைந்தது என்றால் அது மிகையல்ல.

சுஜாதா சார் அவர்களை பற்றி பேசுவது சூரியனுக்கே டார்ச் அடிப்பது போல எனினும், அவரை பற்றி என் எண்ணங்களை பகிர்ந்து கொள்வது மிக முக்கியமானதாக எனக்கு படுகிறது.  

ஓவ்வொரு எழுத்தாளர்களுக்கும்  இவர் நகைச்சுவை, இவர் க்ரைம், இவர் பேய் கதை, இவர் குடும்ப கதை என ஒரு தனி அடையாளம் இருக்கும். ஆனால் சுஜாதா சார் எல்லா துறைகளிலும் பவுண்டரிகளும் சிக்சர்களுமாய் வெளுத்து வாங்கினார்.  கம்ப்யூட்டர்  முதல் கர்நாடிக் வரை எல்லா மைதானங்களிலும் ஆல் ரவுண்டராக வலம் வந்த  அவர் எல்லோரயும் எளிதாக வசீகரிக்க காரணமே அவரின் இயல்பான நகைச்சுவை கலந்த எழுத்துக்கள்தான். படிக்கும் போதே ஒரு தோழமை உணர்வு நம்முள்  ஸ்டுல் போட்டு  அமர்ந்து விடும்.

வாசிக்கும் ஆர்வத்தை மட்டுமல்லாது எழுதும் ஆர்வத்தையும் அவர் தூண்டிய விதம் அலாதியானது. கார்டூனிஸ்ட் மதன் ஒரு எழுத்தாளர் மதன் ஆகியது சுஜாதா சார் அவர்களின் மூலம்தான் என்பதை அவரே பெருமையாக சொல்லிக்கொள்ளும் விஷயம். 
 விகடன், குமுதம்  மூலம் பல ஆயிரம்  வாசகர்களை கவிதை கிறுக்க வைத்ததும், ஹைகூ புனைய வைத்ததும், ஒரு பக்க கதை சொல்ல வைத்ததும் அவரின் தனி பெரும் சாதனை.

புத்தகங்கள் மூலம் மட்டுமல்லாது சினிமா  வழியாகவும் அவரின் எழுத்துக்கள் பல முறை நம்மை வசீகரிக்கவும், புன்னகைக்கவும்  செய்திருக்கின்றன. கமல், ஷங்கர், A .R  ரஹ்மான் என பல ஜாம்பவான்கள் இருந்தாலும்  இந்தியன், முதல்வன்  படங்களின் மாபெரும்  வெற்றிக்கு அவரின் சமூக அக்கறை மிகுந்த வசனங்களும் ஒரு காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.

சில சமயம் இந்த ஆள் ஒரு தீர்க்க தரிசியோ அல்லது மந்திரவாதியோ என வியந்ததுண்டு.   ஆண் விபச்சாரம் பற்றி 15  - 20 வருடங்களுக்கு முன்பே இவரால் யோசிக்க முடிந்ததும், இப்போது உள்ள அரசியல் குடிமி பிடி சண்டைகளை அப்போதே "பதவிக்காக" நாவல் மூலமாய் புட்டு புட்டு வைத்ததும் நம்ப முடியா ஆச்சரியம்.

அவரின் கணேஷ் வசந்த் கதா பாத்திரங்கள் இன்னமும் நம்முள் மீள முடியாத ஒரு தாக்கத்தை உருவாக்கி வைத்திருக்கின்றன. எழுதும் ஆர்வமுடைய எல்லோருக்கும் ஒரு நல்ல குருவாக, நல்ல நண்பனாக, வழிகாட்டிய அவரின் எழுத்துக்களும், அவரின் நினைவுகளும்  எல்லா  தலைமுறைக்கும் உண்டான  ஒரு பொக்கிஷம்.

அவரது மறைவு குறித்த செய்தி தீடிரென T .V யில்   முக்கிய செய்தியாக வந்த போது ஒரு நிமிடம் ஏதும் செய்ய இயலாமல்,  ஒரு நல்ல ஆசிரியர்,வழிகாட்டி,  ஒரு ஆத்ம சிநேகிதன் பிரிந்ததை நம்ப முடியாமல்   கண்ணீர் விட்டு அழுதது என்றும்  மறக்க முடியாதது.  எனக்கு  மட்டுமல்ல,  உலகம் முழுவதும் பல கோடி பேர் அந்த நொடியில் அடைந்த அதிர்ச்சி, இழப்பு, கண்ணீர் என்றும் ஈடு செய்ய இயலாத ஒன்று.

மரணம் பற்றி அவர் சொன்ன ஒரு வார்த்தைதான் இங்கு நினைவுக்கு வருகிறது. "ஒரு கிரிக்கெட் மேட்சில்  பேட்ஸ்மென்கள்  அவுட் என்கின்ற விதிமுறை இன்றி  நுறு, இருநுறு, முண்ணுறு, என அடித்துக்கொண்டே இருந்தால் ஒரு கட்டத்தில்  போர் அடித்துவிடும் . விக்கெட் என்கின்ற ஒரு வஸ்து தான் ஆட்டத்தை சுவாரசியப்படுத்துகிறது.அது போல தான் வாழ்கையும்"  - எவ்வளவு உண்மையான வார்த்தைகள்......!

அவரின் எழுத்துக்கள் இன்னமும் புதிது புதிதாய் பிறந்து கொண்டேதான்  இருக்கிறது, சக எழுத்தாளர்கள் மற்றும் எண்ணற்ற பதிவர்கள் மூலமாக..... யார் மறுக்க முடியும் இதை...
 இப்போதும்  என் தலையணை அடியில் அவரின் ஸ்ரீரங்கத்து தேவதைகள் இருக்கிறது. ஒவொரு முறை திரும்ப வாசிக்கும் போதும் அது ஏற்படுத்தும்   அதிர்வலைகள்  புதிதானவை.

சில விஷயங்களுக்கு மரணம் என்பதே இல்லை.

Thursday, February 4, 2010

விண்ணை தாண்டி வருவாயா... - ஒரு இசை அனுபவம்


ஒரு புதிய இசை அனுபவத்திற்கு நம்மை கை பிடித்து அழைத்து செல்கிறார்  A.R.R.

'இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே' என்கின்ற பாரதியாரின்  வரிகள் அழகாய் நினைவுக்கு வந்து  போகின்றன...

"ஓமனப் பெண்ணே..."  என பென்னி தயால் ஆரம்பிக்கும் போதே மழையில் நனைந்த சந்தோஷம்.

"அன்பில் அவன்" பாடலில் ஆரம்பிக்கும் உற்சாகம் "கண்ணுக்குள் கண்ணை" பாடலில் டாப் கியர் எடுத்து வேகம் பிடிக்கிறது.
"மன்னிப்பாயா" பாடலில் திருக்குறளை இணைத்திருக்கும் அழகு அற்புதம்.

''செல்லமே" (AAOROMALE) எனும்  பாடல் நீங்கள் இதற்க்கு முன் எங்கும் கேட்டிருக்க முடியாத அசத்தல் டியுன் . அப்படியே மனசை உருக்குகிறது.

இந்த ஆல்பத்தின்  டாப் RATING  "ஹோசனா" இந்த வருடத்தின் முக்கிய கலர் புல்  காலர்டியுன் .

குத்து பாடல், துதி பாடல்  கலாச்சாரத்தில் சிக்கி நொந்து நைந்து போன நமக்கு ஒரு இதமான  தலை வருடலை இந்த பாடல்கள் தருகிறது.

தமிழுக்கு மட்டுமல்ல உலகம் முழுதிற்கும் பொதுவான ஒரு இசை ஆல்பம் இது.

MY RATING : 7.2/10

Wednesday, February 3, 2010

வயலினும்... வயலின் சார்ந்த விஷயங்களும்....


அருகாமை
அயலான்
நோட்டீஸ் அனுப்பியும்
கேட்காத மனசு...
வீட்டு நாய்
இறந்ததும்
விட்டது
வயலினை..

Tuesday, February 2, 2010

வணக்கம் நண்பர்களே...பதிவுலகில் வெகு காலமாய் உங்கள் எழுத்துக்களை நேசித்து வரும் இந்த குழந்தை தானும்.. தன்னுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ள உங்களுடன் இணைந்து கொள்கிறது.

you might like this also...

Related Posts with Thumbnails