Saturday, December 25, 2010

மன்மதன் அம்பு - விமர்சனம்


காதல் எங்கும் நிறைந்திருப்பது. தன்னுள் நுழைந்த காதலை, சந்தேகத்தின் பேரில் தொலைக்க நினைக்கும் ஒருவனும் , தான் தொலைத்த காதலை தன் நட்பிடமும், தன்னை சுற்றியிருப்பவரிடமும் தேடும் ஒருவனும் முட்டிக்கொள்ள நேரிடும் போது ஏற்படும் குழப்பங்களும், கவிதைகளுமே மன்மதன் அம்பு. 

அம்பு சாக்ஷி பல பேரின் தூக்கம் கெடுக்கும் பிரபல நடிகை. கிசுகிசுக்களால் நிரம்பி வழியும் அவள் திரையுலகை வாழ்கையே வெறுக்கும் அவளின் மல்டி மில்லியனர் பணக்காரன் மதனகோபால். காதல் என்னும் தேவதையையும் மீறி, சந்தேகம் என்னும் குட்டிச்சாத்தான் மனசுக்குள் முளைக்க, அவளை வேவு பார்க்க ஒரு டிடெக்டிவை நியமிக்கிறான்.  தன் நண்பனின் கேன்சர் ட்ரீட்மென்ட் செலவுக்காக இந்த உளவு பார்க்கும் வேலையே மேற்கொள்ளும் மேஜர் R மன்னார், மதனகோபால், அம்பு ஆகிய மூவரின் உளவியல் மாற்றங்களை படு சுவாரசியமாக காமெடி கடலில் நீந்த விட்டிருக்கிறார்கள்.


உள்ளுரிலேயே எடுத்துவிடக்கூடிய கதை.... ஆனால்  தயாரிப்பாளர் பசையுள்ள பார்ட்டி என்பதால் உலகின் தலை சிறந்த சுற்றுலா தலங்கள், ஸ்டார் குருஸ் என புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.  


கமலஹாசன் என்னும் மஹா கலைஞனுக்கு இந்த வேடமெல்லாம் நூறோடு நூற்றியொன்று என்றாலும் அதிலும் அதகளபடுத்தியிருக்கிறார்.  மாதவனிடம் போனில்   பொய் சொல்லி டபாயித்து விட்டு பாரிஸ் நகர வீதியில் ஒரு தகிடு தத்தம் போடுவார் பாருங்கள்... அட்டகாசம்.. ஐம்பதை கடந்தும்  அவரது உடல் மொழியில் தெறிக்கும் உற்சாகமும், வேகமும்... சான்சே இல்லை. அதேபோல ஊர்வசியுடன் போனில் பேசி கண் கலங்குமிடத்தில் நம் கண்களும் கலங்குவதை தவிர்க்க முடியாது.

நடிகர் கமலஹாசனை விட இந்த படத்தில் அதிகம் ஸ்கோர் செய்பவர் வசனகர்த்தா கமலஹாசன். ஒவ்வொரு வசனமும் கடலினை  போல ஆழமானதும் அர்த்தம்  நிரம்பியதும்.   ரயில் கடந்த பின்னும் தண்டவாளத்தில் மிச்சமிருக்கும் அதிர்வை போல வசனங்கள் நம்மை கடந்த பின்னும் அதன் அதிர்வலைகள் மனசுக்குள் அப்படியே அமர்ந்து கொள்கிறது.

படம் முழுதும் ஐரோப்பிய லொக்கேஷன்கள், ஸ்டார் குருஸ் என படத்தின் பெரும்பகுதி பட்ஜெட் இதற்கே சரியாய் போனதால், திரிஷாவின் உடைகள் மூலமாக கொஞ்சம்  மிச்சம் பிடித்திருக்கிறார்கள்.  சண்டே மார்க்கெட்டில் நூறு ரூபாய்க்கு மூன்று என விற்கும் அரை ட்ரௌசர்கள் மட்டுமே அணிந்து கொண்டு படத்தின் பட்ஜெட் குறைய தன்னால் இயன்ற அளவிற்கு உதவியிருக்கிறார். வளர்க அவர் கலை சேவை.


அதே போல இந்த படத்தில் டப்பிங் இல்லாமல் அவர் பேசியிருப்பதும் செவிப்படத்தக்கது. தசாவதாரம் படத்திற்கு கூட கமல் இந்த அளவு மெனக்கெட்டு பாடுபட்டு உழைத்திருக்க மாட்டார். அதை விட அதிக அளவு பிரயத்தனப்பட்டு த்ரிஷாவிற்கு கற்று கொடுத்த தமிழ் வீணாகவில்லை. ரசிக்கும்படியே இருக்கிறது. 

கதை மிக சாதாரணமானது என்றாலும் டெக்னிக்கல் சமாச்சாரங்கள் மன்மதன் அம்பை  படு ஹை டெக்கான படமாக மாற்றியிருப்பதை மறுக்க முடியாது. முக்கியமாக 'நீல வானம்' பாடல். முதன் முதலில் இந்த பாடலை ஆடியோவில் மட்டும்  கேட்கும் போது, நிச்சயம் இந்த பாடலின் போது, தம் அடிக்க மொத்த ஜனமும் கிளம்பி விடும் என்று நினைத்திருந்தேன். ஆனால்  இந்த படத்தின் மாஸ்டர் பீஸ் அந்த பாடல்தான்.   "லெட்ரோகிராபி" முறையில் பாடல் முழுதும் பிளாஷ்பேக்கில் செல்ல அதை செதுக்கியிருக்கும் விதம் படு பிரமிப்பு.

அதே போல, முதல் படத்திலேயே முத்திரை பதித்திருக்கும் மனுஷ் நந்தனின்  ஒளிப்பதிவு. மிஸ்டீரீயா மேக்ஸ் என்னும் புதிய வகை கேமராவில் படமாக்கபட்டிருக்கும் இதன் காட்சிகள் படம் பார்த்து வெளி வந்த பின்னும் கண்ணை விட்டு அகலாமல் இருக்கிறது.

தேவிஸ்ரீ, பாடல்களிலும், ஆரம்பித்தில் வரும் ஆங்கில பாடல் தீம் இசையிலும் மனம் கவர்கிறார்.  சரியான பங்களிப்பு.

முற்பாதி முழுதும் இத்தனை பலத்தோடு ஹை டெக்காய் பிரயாணம் செய்யும் படம், கிளைமாக்சில் டைட்டானிக் கணக்காய் திடுமென கவிழ்ந்து விடுவது எதிர்பார்க்காத பரிதாபம். கிளைமாக்ஸ் மட்டும் சிங்கிதம் சீனிவாசராவ், கிரேசி மோகன் இணைந்து இயக்கியதை போல.. அத்தனை ஆள்மாறாட்ட குழப்பங்கள் + தடுமாற்றங்கள்.   வெறும் வசனங்களை வைத்துக்கொண்டே ஒப்பேற்ற முயன்று தோற்றிருக்கிறார்கள்.

ரெண்டாவது, கமலுக்கும் த்ரிஷாவிற்கும் எந்த வித ரொமான்சும் இல்லாமல் ஜஸ்ட் லைக் தட் காதல் வருவது. (முத்தம் இல்லாத கமல் படம், சர்க்கரை போடாத பால் போல )

ANY WAY, கமலின் சகலகலா ஆளுமைக்காக இந்த படத்தை பார்க்கலாம். தவறில்லை.


(+) பிளஸ்

வசனங்கள்
நீல வானம் பாடல்.
ஒளிப்பதிவு,
இசை

(-) மைனஸ்

கிளைமாக்ஸ்
ரொமாண்டிக் இல்லாதது

VERDICT :  இனிப்பு குறைந்த மன்மத பானம். 
RATING   : 5.0 / 10.0


EXTRA பிட்டுகள் :

இம்முறையும், அதே காசி தியேட்டர் S வரிசை. இம்முறையும் ஏரோப்ளானை அண்ணாந்து பார்க்கும் குழந்தைகள் ஆனோம். நீண்ட நேரம் படம் ஓடிய பின்புதான் பக்கத்தில் அமர்ந்திருந்த மனிதரை கண்டேன். விழி இழந்த மாற்று திறனாளி அவர். வெறும் வசனங்களை கொண்டே படத்தை அவர் ரசித்த விதம்...... கமல் இஸ் கிரேட். வேறு என்ன சொல்ல..

..

Sunday, December 19, 2010

கவிதாயினி....

 

ஒரு கவிதை வாசிக்க

உன் உடலில்

வரிகள் தேடுகிறேன்..

எத்தனை வாசித்தும் 

பூர்த்தியாகவில்லை

இந்த கவிதை.

மிச்ச வரிகளை

எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய். ?


...

Monday, December 6, 2010

ரத்த சரித்திரம் -2 - விமர்சனம்படம் முழுக்க யாராவது யாரையாவது வெட்டிக்கொண்டோ  அல்லது சுட்டுக்கொண்டோ இருக்கிறார்கள். திரை முழுதும் ரத்தம் தெறித்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் இரண்டு மணி நேரம் அமர்ந்து படத்தை பார்க்க முடிவதற்கு காரணம் வர்மாவின் கதை சொல்லும் ஸ்டைலும் அதற்க்கு உறுதுணையாய் இருக்கும் வசனங்களும். 

இரண்டரை மணி நேர முதல் பாகத்தை,  முதல் 20 நிமிடத்தில் சுருக்கியதால் படம் ஆரம்பத்தில் தோட்டா வேகத்தில் பறக்கிறது. சூர்யாவின் வருகையும் அதற்க்கு பிறகான காட்சிகளும் இன்னமும் சூடு கிளப்ப இடைவேளை வரை ஒரே ரணகளம்தான்.

பிரதாப் ரவி என்னும் தனி மனித சாம்ராஜ்யத்தை வேரறுக்க நினைக்கும் சூர்யாவின் பழி வாங்கும் நடவடிக்கைகளும் அதற்க்கான விடையும் தான் இரண்டாவது பாகம். உண்மை சம்பவங்களை சுவாரசியமாக சொல்வதென்பது ஒரு சவாலான விஷயம். ஆனால் தனக்கு தோதான கிரௌண்ட் என்பதால் வர்மா இதில் பேயாட்டம் போட்டிருக்கிறார். முக்கியமாக சூர்யா  கோர்ட்டில் தன்னை கொல்ல முயற்சிக்கும் எதிரிகளை கண்டுணர்வது முதல் அவர்களை வீழ்த்துவது வரை மிக டீடெய்லாக காட்சிபடுத்தியிருப்பதில் வர்மாவின் திறமை மின்னுகிறது.   மற்ற படங்களில் எல்லாம் சட சடவென ஆக்க்ஷன் காட்சிகளை முடிக்கும் வர்மா இதில் நிறுத்தி நிதானமாய் செய்திருப்பதும் ரசிக்கும் படியே இருக்கிறது. 

பரபரப்பான காட்சிகளும், எதிர்பாரா திருப்பங்களும் திரைகதையில் ஆளுமை செய்தால்... படத்தின் தீமுக்கேற்ற டார்க் கலர் டோனும், 180 டிகிரி கேமரா கோணங்களும், நுண்ணிய  உணர்சிகளை காட்டும் மிக தெளிவான க்ளோஸ் அப் ஷாட்டுகளும் டெக்னிக்கல் சைடில்  அதிகாரம் செய்கின்றன.   

வசனங்கள் அத்தனையும் திருப்பாச்சி அரிவாள் கூர்மை. சிறையில் இருக்கும் சூர்யாவிடம் விவேக் பேசுமிடம் நல்ல உதாரணம். ஒரு டப்பிங் படத்திற்கு இவ்வளவு அருமையான வசனங்கள் எதிர்பாரா ஆச்சரியம்.  

சூர்யா.... வாய்ப்பே இல்லை. ருத்ர தாண்டவம். கண்களில் பொங்கி வழியும் கொலை வெறியும், உடல் மொழியும் அத்தனை கச்சிதம். பழி வாங்கி முடித்த பின் காரை ஒட்டிக்கொண்டு  வரும்போது ஸ்டீயரிங்கில் கைகளை அழுத்தி அழுத்தி அவர் காட்டும் முகபாவம் அத்தனை அற்புதம். மொத்த படத்தையும் தன் அசாத்திய நடிப்பால் மதுரை நாயக்கர் மஹால் தூண் போல தாங்குகிறார். 

கொஞ்ச நேரமே வந்தாலும் போலீஸ் அதிகாரியாக வரும் கன்னட நடிகர் சுதீப்பும் கை தட்டி விசில் அடிக்க வைக்கிறார். 

முதல் பாகத்தில் அழிச்சாட்டியம் செய்த விவேக் ஓபராய் இதில் அடக்கி வாசித்தாலும் தேர்ந்த நடிப்பால் மிளிர்கிறார்.  

 அரசியல் கொலைகளும், சூழ்ச்சிகளும் அரங்கேறும்  திரைகதையில் சரியான கதாபாத்திர தேர்வும், வசனங்களும் அமைந்த விதத்தில் படம் பாஸ் மார்க் வாங்கினாலும் சிற் சிறு குறைபாடுகளால் முழுதும் வசீகரிக்க முடியாமல் போகிறது. 

மிக முக்கியமாக நேட்டிவிட்டி. என்னதான் சூர்யா, பிரியா மணி இருந்தாலும் ஒரு டப்பிங் படம் பார்க்கும் உணர்வு மேலோங்குவதை தவிர்க்க முடியவில்லை. அதேபோல கிளைமாக்ஸ்...  விவேக் ஒபாராய் தீடிரென சூர்யாவை பார்க்கும் போது அடையும்  அதிர்ச்சி படம் பார்க்கும் நமக்கும் ஏற்படுகிறது.. ஏனென்றால் அதுவரை உண்மை பேசி வந்த இந்த படம் ஹீரோயிசத்திற்காக தடம் மாறுவது..(உண்மை கதையில்   சூரியின் நண்பன்தான் பரிட்டல ரவியே கொல்வான்.ஆனால் அந்த நண்பனை கூட   காட்டிக்கொடுத்து விடுவான் என பயந்து சூரி கொலை செய்ததாக உலவும் யூகங்கள்  இங்கு உண்டு ) 

அப்புறம் படம் முழுக்க வன்முறை, கத்தி குத்துக்கள் இருந்தாலும் அந்த வன்முறையில்  தெரிய வேண்டிய  ஒரு அழகியல் இதில் கொஞ்சம் மிஸ்ஸிங். அதென்ன வன்முறையில் அழகியல் என்று கேட்பவர்கள் புதுப்பேட்டை படம் பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதற்காக எனக்கு வன்முறை, ரத்த சகதிகள் பிடிக்கும் என்று  அர்த்தமில்லை. 

எனினும், இந்தப்படம் சூர்யாவுக்க்காகவும், வர்மாவின் மேக்கிங்குக்காகவும் நிச்சயம் பார்க்கலாம். 

(+) பிளஸ் 

சூர்யா 
வசனங்கள் 
மேக்கிங்.   

(-) மைனஸ் 

குழந்தைகள், பெண்கள் பார்க்கமுடியாதது.
நேட்டிவிட்டி இல்லாதது 
VERDICT : உண்மைக்கு மிக அருகிலான ரத்த சரித்திரம்.. 
RATING   : 4.7 / 10.௦

EXTRA பிட்டுகள் 

ஆர்வ கோளாறு காரணமாக முதல் நாளே பார்க்க வேண்டும் என்று காசி தியேட்டரில் பால்கனி கிடைக்காமல் முதல் வகுப்பில்  ரிசர்வ் செய்ததில் கிடைத்த டிக்கெட் நம்பர்       S-21,22,23.  என் வாழ்கையில் நிறைய நாள் கழித்து ABCD சொல்லி பார்த்ததில்.. 19 வது எழுத்து.  அதுதான் காசி தியேட்டரில் முதல் வரிசை.  இடது ஈசானி மூலை. படம் பூராவும் பிதமாகன் விக்ரம் போல ஒரு மாதீரி தலை திருப்பி பார்த்ததில் உண்டான கழுத்து சுளுக்கு இன்னனும் நிவர்த்தியாகவில்லை.

you might like this also...

Related Posts with Thumbnails