நீதானே என் பொன் வசந்தம்.....(சவால் சிறுகதை - 2011)ஞாயிறு உற்சாகங்கள் வடிந்து பணிச்சுமை தொடங்கிய திங்கள் காலை. விடிய மனமின்றி விடிந்த சூரியன்.  நகரம்,  பிடித்தும் பிடிக்காமல் அன்றைய வாரத்தின் முதல் தினத்தை ஒரு வித ஆயாசத்தில் தொடங்க... நான் முழு உற்சாகமாய் என் அலுவலக  கணிப்பொறியே உயிர்ப்பித்தேன். "WELCOME MAHESH" என்று என் பெயர் சொன்னது.   மனசு, நேற்றைய இரவின் சந்தோஷங்களை நினைத்து நினைத்து குதுகலித்துக்கொண்டிருக்க, பிடித்த பாடலை முனுமுனுத்துக்கொண்டே என் ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுகளை முகப்பில் கொண்டு வந்து சேர்த்தேன். இடைப்பணியாக face book  அப் டேட்டுகளை மேய்ந்து கொண்டு  என் பர்சனல்  e-mail  id யே ஓப்பினேன். ஒரே ஒரு மெயில் பல்லை இளித்தது. அறிமுகமில்லாத முகவரி....  அலட்சியத்தோடு திறந்தவனுக்கு.... தந்தி போல மூன்றே வார்த்தைகள்... YOUR WIFE KIDNAPPED!

********

ஆரம்பத்தில், யாரோ அரை கிறுக்கன் வேலையின்றி விளையாடுகிறான்  என்றுதான் நினைத்தேன். ஒதுக்கிவிட்டு வேலையில் ஈடுபட நினைத்தாலும்,   உடனே அனுவுக்கு போன் செய்து பேச வேண்டும் போலிருந்தது.... மொபைலில் எண்களை ஒத்த, இளையராஜா " நீதானே என் பொன் வசந்தம்" என உருகினார்...போன் அடித்ததும் மெல்ல ஆசுவாசம் அடைந்தேன்... ஆனால் அவர்  உருகிக்கொண்டே இருந்தார்... முதன் முறையாக அந்த பாடலின் மீது அளவில்லாத வெறுப்புணர்ச்சி தோன்றியது... அனு, PICK THE CALL PLEASE.... மனசுக்குள் வேண்டினேன்... கெஞ்சினேன்... கட் செய்து விட்டு, லேன்ட் லைனை முயற்சி செய்ய அதுவும் என் பொறுமையின் எல்லை தொட்டு என்னை கெட்ட வார்த்தை பேச வைத்தது...  மீண்டும் அனுவின் செல்பேசியே தொடர்பு கொள்ள... இம்முறை அது SWITCH  OFF என்றது. முதுகுத் தண்டுவடம் சிலிர்த்துக்கொள்ள.... மீண்டும் அந்த மெயிலை பார்க்க... ஒரு சாத்தானை போல அது சிரித்தது.

*********

அரை நாள் லீவ் சொல்லிவிட்டு, அவசர அவசரமாக கிளம்பியவனை அலுவலகமே ஆச்சரியமாக பார்த்தது.. பைக்கை கிளப்பிய போது உடல் நடுக்கத்தை உணர்ந்தேன்... இல்லை.. அனுவுக்கு உடல் நலம் சரியில்லை. SLEEPING வில்லைகளை போட்டுக்கொண்டு நன்றாக தூங்கியிருப்பாள்.. அதுதான் கால் அட்டென்ட் செய்யவில்லை...  நிச்சயம் வீட்டிற்கு சென்று பார்க்கும் போது ஒரு குழந்தை போல தூங்கிக்கொண்டிருப்பாள். அப்படியே  வாரி  அனைத்து முத்தமிட போகிறேன்.  மனம் சமாதானம் செய்தாலும் மூளை இன்னொரு பக்க அபாயங்களையும் தேவைன்றி நினைவூட்டி என் பதட்டத்தை அதிகரிக்க செய்தது.                   
எதிரிகள் என்று யாருமே இந்த மென்பொருள் துறை  உத்தியோகத்தில் எனக்கு இல்லை. அனுவிற்கு...?  குழந்தைகளுக்கும், தேவதைகளுக்கும் யார் எதிரிகள் இருக்க கூடும்..? ஆனால் என் இரண்டாவது உத்தியோகத்தில்..... இல்லை இல்லை...என் இரண்டாவது உத்தியோகத்தை பற்றி உங்களிடம்  நான் சொல்ல கூடாது... அனுவுக்கே தெரியாது. வெளியே தெரியாத  வரைதான் அந்த உத்தியோகம் பாதுகாப்பானது.

ஸ்பீடா மீட்டர் நூறில் அலற, வண்டியே விரட்டினேன்... அனுவிற்கு இந்த வேகம் ரொம்ப பிடிக்கும். என்னை இறுக்கி அணைத்துக்கொண்டு உற்சாகத்தில் என் தோளை கடிப்பாள். என் ஐந்தரை அடி உலகம்.. என் உயிர்... மொத்த உலகத்துக்கும் தேவையான காதலை என் அனு என் ஒருவனுக்கு மட்டும் கொடுப்பதை உணர்ந்திருக்கிறேன்.  அந்த வகையில் கடவுளை விட அதிர்ஷ்டசாலி நான்... இப்போது அத்துனை கடவுள்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டு வீட்டை நெருங்க... வீட்டு கதவு மிக அட்சர சுத்தமாக பூட்டியிருந்தது.

***********

முகம் முழுக்க வேர்த்துவிட்டிருந்தாலும் , காலையில் அவள் கொடுத்த முத்தத்தின் ஈரம் கன்னங்களில் இன்னமும் மிச்சமிருந்தது. அருகாமை வீடுகள் அனைத்தும் தங்கள் வாழ்கையே அவர்களது நான்கு சுவர்களுக்குள் வாழ்ந்து கொண்டிருந்தன.  காதல் மனைவியே தொலைத்து விட்டு வாசலில் வெறித்து நிற்பவனை பார்த்து என்ன ஏதுவென்று கேட்க யாருக்கும் அக்கறை இல்லை, நேரமும் இல்லை.

மீண்டும் அனுவின் மொபைலை தொடர்பு கொண்டேன். SWITCH OFF. அடுத்து என்ன செய்வது? உறவுகள் என்று யாருமே இல்லாத தனி பறவைகள் நாங்கள்.அவள் அலுவலகத்திற்கு முட்டாள்தனமாய் போன் செய்தேன். காலையில் அவளுக்கு உடல்நலம் சரியில்லை வரமாட்டாள் என லீவ் சொன்னதே நான்தான். நினைத்தது போலவே... ரிஷப்ஷனில், "she is on leave today" என்றார்கள். அவள் நட்பு வட்டங்களிடம் இருந்தும் எந்த தகவலும் இல்லை.       

 மீண்டும் ஐ போனில் அந்த மெயிலை படித்தேன்... யார் இவர்கள்... தெரியாது.. எங்கிருந்து வந்தார்கள்... தெரியாது?  ஆனால் என் மனைவி கடத்தப்பட்டிருக்கிறாள் அது மட்டும்  நிஜம். அப்படியே உடைந்து அழுது விடுவேன் போலிருந்தது. எந்த திசையில் தேடுவது...? இருக்கும் ஒரே ஒரு உபயம்... S.P. கோகுல் மட்டுமே... நான்காவது ரிங்கில் போனை எடுத்தவர்...

"சொல்லு விஷ்ணு என்றார்?"

" உடைந்த வார்த்தைகளில்  விஷயத்தை சொன்னவுடன்...  

"MY GOD " என அவரிடம் இருந்து வெளிப்பட்ட அதிர்ச்சியினை போனிலேயே உணர முடிந்தது.


"அனுவோட ஆபீஸ், அவ FRIENDS வீடு எல்லா இடத்திலையும் செக் செஞ்சியா.."


"பேசிட்டேன் சார்... எங்கேயும் இல்ல..."

ஓகே, அந்த E -மெயிலை செக் பண்ணி அதிலிருந்து எதாவது TRACE பண்ண முடியுமான்னு பார்க்கலாம். உனக்கு சைபர் க்ரைம் ஆபீஸ் தெரியுமா..?


தெரியும் சார்,

அங்க செந்தில்னு ஒருத்தர் இருப்பார்... நான் போனில் அவர்கிட்ட பேசிடறேன். அவரை உடனே போய் பார். நான் இப்ப மினிஸ்டரோட பாதுகாப்பு பணியில் இருக்கிறேன். ஒரு ரெண்டு மணி நேரத்தில் நான் உன்னை மறுபடியும் கூப்பிடறேன்...

"சார், பயமா இருக்கு, SHE IS PREGNANT"  என குரல் உடைந்து தழுதழுத்தேன்.

தைரியமா இரு.. அனுவுக்கு ஒன்னும் ஆகாது.

***********
வண்டியே சைபர் க்ரைம் அலுவலகத்திற்கு விரட்டினேன்.... ஒரு சாமானிய மென்பொருள் பொறியாளனுக்கு ஒரு மாவட்டத்தின் சூப்பிரடன்ட்டிடம் என்ன உறவு என்று நீங்கள் குழம்பலாம். அது போலவே,      கோகுல் எதற்கு மகேஷ் என்று என்னை அழைக்காமல்  விஷ்ணு என விளித்தார் என்றும் நீங்கள் விழிக்கலாம்.

உங்களை குழப்ப விரும்பவில்லை. என் இரண்டாவது உத்தியோகத்தில் என் பெயர் விஷ்ணு.  ஒரு இன்பார்மர். இன்பார்மர் என்றவுடன் கையில் துப்பாக்கியும், வாயில் சிகரெட்டும், சுற்றி நாலு இளம்பெண்களும் இருக்கும் சினிமா துப்பறிவாளன் என்று நீங்கள் நினைத்துவிடாதீர்கள். உண்மை எப்போதுமே அதற்கு நேர் எதிர். ஒரு இன்பார்மரின் கஷ்டம், தெரு நாய் படும் கஷ்டத்தை விட மேலானது...  நீங்கள் ஒரு இன்பார்மர் என்று வெளியே தெரிந்தாலே உங்கள் உயிருக்கு உத்தரவாதமில்லை. யார் வேண்டுமானாலும் உங்களுக்கு எமனாக மாறக்கூடும். ஒரு அங்கீகாரமற்ற, பதவியில்லாத, அதிகாரம் இல்லாத, மாத சம்பளம் இல்லாத உத்தியோகம். கோகுல் மட்டுமே என் முதலாளி. அவரை தவிர மற்ற போலீசுக்கும், மொத்த உலகத்துக்கும் நான் ஒரு சாமானியன் அவ்வளவே...  இப்போது கூட பாருங்கள்... கோகுல் போன் செய்து சைபர் க்ரைம் அலுவலகத்தில் சொல்லாத வரை அந்த ஆபீஸ் உள்ளே கூட என்னை அனுமதிக்க மாட்டார்கள்.

 நிறைய விஷயங்கள் தினசரிகளில் படிப்பீர்கள். பல கோடிகளில் கருப்பு பணம், மூட்டை மூட்டையாய் கஞ்சா பொட்டலங்கள்... பலநாள் முடிவு தெரியாமல் குழப்பிய கொலை, கொள்ளை  வழக்குகளில், தீடிர் என குற்றவாளி கைது செய்யப்பட்டு அவனை பிடித்த போலீசுக்கு உயர் அதிகாரிகள் பாராட்டும் புகைப்படங்கள் என தினசரிகளில் நிரம்பி வழியும் ஒவ்வொரு குற்ற முடிச்சின் அவிழ்ப்புகளில் எங்களை போன்ற ஒற்றர்களின் பங்களிப்பு நிச்சயம் இருக்கும். ஆனால் எந்த இடங்களிலும் எங்கள் முகங்கள் புகழ் வெளிச்சத்தில் நனைந்தது இல்லை. அதற்க்காய் நாங்கள் ஏங்கியதும் இல்லை.    ஒற்றை ஆளாய் இருந்தவரை இந்த வேளையில் இருந்த த்ரில் அனு என் வாழ்வில் வந்தவுடன் பயமாய் மாறி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாய் இந்த உத்தியோகத்திலிருந்து விலக எத்தனிக்கும் போதுதான்  அனுவை பறிகொடுத்துவிட்டு அலைகிறேன்.... என் சக இன்பார்மர் முருகேஷ் ஆட்டோ டிரைவர்,  ஒற்றன் என்று தெரிந்தவுடன் துண்டு துண்டுகளாக அடையாளம்  தெரியாத நபர்களால் வெட்டப்பட்டு கூவம் நதியில் கிடந்தது என் மனசில் வந்து போனது... கடவுளே... என் உயிரை எடுத்துக்கொண்டு அனுவை யும் அவள் வயிற்றில் இருக்கும் குழந்தையையும் விட்டு விடு.. என வாய் விட்டு கதறினேன்.


**************


செந்தில், எனக்கு வந்திருந்த இ-மெயிலின் பூர்விகத்தை கண்டறிய உள்ளே போராடிக்கொண்டிருக்க, நான் வெளியே நகம் கடித்தபடி காத்துக்கொண்டிருந்தேன். அனுவுக்கு நாட்கள் தள்ளி போய், சென்ற வாரம் டாக்டர் அறைக்கு வெளியே காத்துக்கொண்டிருந்தபோது உண்டான பதட்டத்தை விட இது அதிகமாக இருந்தது. என் அனுவே ஒரு குழந்தை.. அவளுக்கு ஒரு குழந்தையா... என சந்தோஷ திக்கில் குதித்த தருணங்கள் நினைவுக்கு வர பொங்கி வந்த கண்ணீரை துடைத்துக்கொண்டேன்.


வெளியே வந்த செந்தில்.... IT IS STRANGE... அந்த மெயில் சவுத் கொரியாவில் இருந்து அனுப்பபட்டிருக்கு என்றான்.

****************


நம்பிக்கைகள் அனைத்தும் உடைந்து போய், தளர்ந்து போய் நான் விழ..
தீடிரென என் மொபைல் அடித்தது. கடத்தியவனிடம் இருந்து அழைப்பா என படு அவசரமாக என் மொபைலை பார்த்தேன். UN KNOWN நம்பர். என்  இதயத்துடிப்பு எகிற.. நடுக்கத்துடன் ஹலோ சொல்ல... எதிர்முனையில் " SIR, WE ARE CALLING FROM HDHD BANK, WE ARE OFFERING LIFE INSURANCE FOR YOU AND YOUR FAMILY " என்றது. உச்ச ஸ்தாயில் நான் சொன்ன கெட்ட வார்த்தைகளை கேட்டு அப்பொழுதே அந்த பெண் ராஜினாமா செய்திருக்கலாம்.

குழம்பி நின்றவனுக்கு எதிர்பாரா விதமாக அந்த யோசனை தோன்றியது. வீடு பூட்டபட்டிருக்கிறது. SO , அனு வெளியே வைத்து கடத்தபட்டிருக்கிறாள்.  உடல் நலம் சரியில்லாமல் வீட்டில் இருந்தவள் வெளியே கிளம்பியிருக்கிறாள் என்றால் யாரவது போனில் அவளை அழைத்திருக்கலாம் என முடிவு செய்து AIR  வாய்சில் இருக்கும் நண்பனை அழைத்தேன். என் அனுவின் நம்பரை சொல்லி இன்றைய கால் SUMMARYயே   கேட்டேன்.


முப்பது  நிமிடம் காத்திருக்க சொன்னான்.  நொடிகள் ஒவ்வொன்றும் நரகமாக நகர... மனம் தைரியம்  இழந்து  உள்ளுக்குள்  வேகமாய் நான் செத்துக்கொண்டிருப்பது நன்கு புலப்பட்டது.


"மகேஷ்,  இன்னைக்கு காலையில் இருந்து ஒரே ஒரு OUT GOING கால் உன் WIFE  செஞ்சிருக்காங்க... நம்பர் வந்து 9842 ******.   அட்ரஸ்ஸை செக் பண்ணினதுல, அந்த நம்பர் கோகுல் கின்ற பேரில் வாங்கபட்டிருக்கு.

************

அதிர்ச்சி விலகாமல் S.P. கோகுலை மொபைலில் பிடித்தேன்...

"சொல்லு விஷ்ணு" என்றார்

 "சார், ஏன் சார் இப்படி பண்ணுனீங்க" .


கண்டுபிடிச்சிட்டியா,   கிண்டியில் இருக்கிற என் வீடு உனக்கு தெரியும்தானே... அங்க வந்திடு மிச்சத்தை அங்க பேசிக்கலாம்.


வேக வேகமாய் மாடி படிகள் ஏறி, வெறித்தனமாய் கதவை திறந்தவுடன் எதிரில் சோபாவில்... அன்றலர்ந்த மலர் போல என் அனு அமர்ந்து கொண்டிருந்தாள்.
 
அருகே தன் இருக்கையில்  கோகுல் அமர்ந்துகொண்டிருக்க, அவரது மேசையின் மீது இரு துண்டு சீட்டுகள் காற்றில் அசைந்து கொண்டிருந்தது..

உனக்காகத்தான்  நாங்க ரெண்டு பேருமே காத்துட்டு இருக்கோம் விஷ்ணு...

நான் குழப்பத்துடன் அனுவை நோக்க...

 "மன்னித்துவிடுங்கள்" என்பது போல பரிதாபமாய் என்னை பார்த்தாள்.

ஆச்சரியப்படாதே நீ எனக்கு எப்படியோ... அதுபோலத்தான் எனக்கு அனுவும். YES.. SHE IS ALSO MY INFORMER. நீ வழி மாறி போனபோதே உன்னை பற்றி சொல்லி நீ அனுப்பின மெயில் காப்பிகளையும் என்கிட்டே கொண்டு வந்து கொடுத்துட்டா...  அப்பவே உன்னை அரெஸ்ட் செஞ்சு 3rd டிகிரி மெத்தேடில்  உன்கிட்ட இருந்து எல்லா உண்மைகளையும் என்னால் வாங்கியிருக்க முடியும். BUT... SHE LOVES YOU MORE THAN YOU  DO....   நீயாகவே உண்மைகளை என்கிட்டே வந்து சொல்லிடுவேன்னு நினச்சேன். அப்படி இல்லன்ன... அந்த முகம் தெரியாத கும்பலை CONTACT  பண்ணுவேன்னு நினைச்சேன். அந்த கும்பலோட  மெயில் i.d. யே ஒரு கட்டத்துக்கு மேல எங்களால் சேஸ் பண்ண முடியல. they destroyed that i.d. அதுதான் இந்த கடத்தல் நாடகம். ஆனா அதுக்கு முன்னாடியே அனு இருக்கிற இடத்தை நீ கண்டுபிடிச்சிட்ட... ஓகே...இப்பவும்  ஒன்னும் பிரச்சனையில்லை. சரியான குறியீடு என்ன.. தப்பான குறியீடு கொடுக்க சொல்லி உன்னை தூண்டியது யார்னு சொல்லிடு விஷ்ணு.... இப்பவும் நீ என நம்பிக்கைக்குரியவன்தான்.

நான் அப்படியே ஓரமாக சுவற்றில் சாய்ந்தமர்ந்து பெருங்குரலெடுத்து அழ தொடங்கினேன்.


-------------------------------------------------------------------------- 

டிஸ்கி - சவால் சிறுகதை போட்டிக்கான எனது மூன்றாவது  சிறுகதை. இந்த கதை உங்களை கவர்ந்திருந்தால் உங்கள் ஓட்டுக்களை யுடான்சில்   பதிவு செய்யவும்.

என் முதல் இரண்டு கதைகள்... .

ஒரு கிராம் சொர்க்கம் (சவால் சிறுகதை 2011)


ஒன்றுக்குள் இரண்டு (சவால் சிறுகதை 2011)Comments

 1. சூப்பர். வோடே போட்டுட்டேன்....

  ReplyDelete
 2. ஓட்டு போட்டுட்டேன்.. எழுத்து பிழைக்கு மன்னிக்கவும்....

  ReplyDelete
 3. நல்லாயிருக்கு. உடான்ஸ் 3 வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 4. கதையில் ஆங்காங்கே சில கவிதைகள் சிதறிக்கிடக்கின்றன, கடைசிவரை ஆர்வமாக பயணிக்கவைக்கிறது! சஸ்பென்சாக முடித்துவிட்டீர்கள். வெற்றிக்கு வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 5. கதை சூப்பராவும் சவாரசியமாவும் இருந்தது....
  பாராட்டுக்கள்....

  ReplyDelete
 6. @ MR.SHANMUGAM,
  @ MR.VICHU,
  @ MR.NAMBIKKAI PANDIYAN,
  @ MS.NIHAZA,

  THANKS FOR VISITING MY PAGE AND YOUR SWEET COMMENTS.

  ReplyDelete
 7. Really nice Da.


  How to Vote

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4