Tuesday, November 29, 2011

மயக்கம் என்ன... - விமர்சனம்
செல்வாவின்  படங்கள்   எப்பொழுதுமே  ஒரு   தனித்த    அனுபவமாய்...   படம் பார்த்து முடித்த பின்னும்,  ஞாபக செல்களில்  மறவாது       நீந்திக்கொண்டிருக்கும்.      மயக்கம் என்ன... சில பல ஆச்சரியங்களை, மன அதிர்வுகளை, ரியலிசத்தின் உச்சம் தொட்டு கொடுத்திருக்கிறது என்பதை மறுப்பதற்க்கில்லை.


ஆரம்ப காட்சிகள், ஆஹா.. தவறிப்போய் சேற்றுக்குட்டையில் காலை வைத்துவிட்டோமே  என நினைக்க வைத்தாலும்,  மெல்ல மெல்ல தெளிந்து,  சலசலக்கும் நீரோடையாய் பயணம் செய்து... பின் வேகமெடுத்து பொங்கும் ஆழிச்சுழலில் நம்மையும்  சிக்க வைத்து சிலிர்ப்பூட்டுகிறது. படம் நெடுக செல்வா கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியங்கள் தமிழ் சினிமாவிற்கு கொஞ்சம் புதுசுதான் என்றாலும் வெகு ஜன ரசிகன் பொறுமையிழந்து கெட்ட வார்த்தையில் திட்டுவதையும் கேட்க முடிகிறது. எதையும் காம்ப்ரமைஸ் செய்யாமல் தன் மனம் சொன்னபடி கதை சொல்லவும் ஒரு துணிவு வேண்டும். செல்வாவிற்கு அந்த துணிவு நிறையவே இருக்கிறது. 

அவரின் மற்ற படங்களை காட்டிலும், இந்த படத்தில் திரைக்கதையின் வேகம் குறைவுதான். கமர்ஷியல் ஈர்ப்புகளும் அப்படியே. ஆனாலும் முந்தைய படங்களை விட மயக்கம் என்ன மிக எளிதாய் மனசுக்கு நெருக்கமாகி விட்டிருப்பதில் எதோ ஒரு மேஜிக் ஒளிந்திருக்கிறது. மனசின் நீள அகலங்களை யாராலும் அளந்து விடமுடியாது. ரகசியமான சில விருப்பங்கள், எண்ணங்கள், ஆர்வங்கள் என மனசு சொல்லும் எத்தனை விஷயங்களை மூளை அப்படியே செயல் படுத்துகிறது.  உள்ளே துடித்து வெளியே நடிக்கும் வாழ்க்கைக்கு நடுவில் செல்வா கொடுத்திருக்கும் இந்த பிம்பங்கள் ஒன்று உங்களை சிலிர்க்க வைக்கலாம் அல்லது கெட்ட வார்த்தை பேச வைக்கலாம். எல்லாமே அவரவர் மனசு சம்மந்தப்பட்ட விஷயங்கள்.


முன்னணி ஹீரோக்கள் நடிக்க மறுத்து பின்னங்கால் பிடறியிலடிக்க ஓடும் அபாயமான  கேரக்டர். தனுஷ் அந்த கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். ஏகப்பட்ட க்ளோஸ் அப் ஷாட்டுகள்..... காதல், ஏக்கம், ஏமாற்றம், சோகம், சந்தோஷம், கோபம் என வகை வகையாய் அவரது முகம் 
காட்டும் உணர்சிகள் அத்தனையும் நிஜம். தனுஷின் அட்டகாசமான    நடிப்பிற்கு  மிக சிறந்த  ஆவணம் இந்த படம்.   OUT STANDING PERFORMANCE.


முற்பாதி முழுக்க மாதவி போல வலம் வரும் ரிச்சா கதாபாத்திரம் பிற்பாதியில் கண்ணகி ரேஞ்சுக்கு நிறம் மாறுவது பெண்கள் மீதான
செல்வாவின் புது கண்ணோட்டத்தை காட்டுகிறது. காதல் மனைவிக்கு வாழ்த்துக்கள்.


படத்தின் மிக முக்கிய தூண், சுவர், பில்லர் என எல்லாமே ராம்ஜிதான். ஒளிப்பதிவு  கவிதை என்றால் அந்த போட்டோ ஷாட்டுகள் அத்தனையும் அற்புதமான ஹைகூக்கள்.   ஒளிப்பதிவு ஒரு  ஹீரோ  போல  கொண்டாடப்பட்டிருக்கும் படம் இது.   


 படத்தில் வரும் ஒரு நான்கைந்து காட்சிகள் நிச்சயம் அசத்தல் ரகம். முக்கியமாய் இடைவேளைக்கு முன்பு வரும் அந்த முத்தம்.  மிக இயல்பான  வசனங்களும்,  கொஞ்சம் கொஞ்சமாய் நெருக்கத்தை உண்டாக்கும் தருணமும், பின்னணியில் வரும் அந்த இசையும்   தனுஷ், ரிச்சாவின் உதடுகளோடு சேர்ந்து நம் உதடுகளும் துடிப்பதை நன்கு உணரலாம்.

அதே போல, தனுஷின் நண்பனோடு ரிச்சா காரில் பேசும் அந்த காட்சி. செல்வாவுக்கு மட்டுமே சாத்தியம்.


வசனங்கள் குறைந்த இரண்டாம் பாதியில் நீக்கமற நிறைந்திருக்கிறது ஜி.வீ. பிரகாஷின் பின்னணி இசை. "பிறை தேடும் இரவினில் " பாடலில் சைந்தவியின் குரல் தேன்.


இரண்டாம் பாதியில் தனுஷோடு மாடியில் இருந்து விழும் கதை சிற்சில நிமிடங்களுக்கு எழ முடியாமல் தடுமாறுகிறது. அதே போல டெக்னாலஜி நன்கு வளர்ந்து விட்ட இந்த காலங்களில், ஒரிஜினல் 
தன்னிடம் இருக்க, தன்னை ஏமாற்றிய அந்த புகழ் பெற்ற போட்டோ க்ராப்பரை  ஏதும் செய்யாமல் தேமேயன தனுஷ் பின்வாங்குவதை 
ஏன், எதற்கு, எப்படி என சாக்ரடீஸ் பாணியில் கேள்வி கேட்க வைக்கிறது.


குறைகளே இல்லாத படமில்லை இது.  ஆனாலும், . மூளை சொல்வதை கேட்காமல் மனசு சொல்வதை கேட்டு இந்த படம் பார்த்தால் நிச்சயம் பிடிக்கும்.


(+) பிளஸ்

தனுஷ்
ராம்ஜி - ஒளிப்பதிவு
இயக்கம்
வசனங்கள்
இசை.
ரிச்சா


(-) மைனஸ்

மிக மெதுவாய் நகரும் திரைக்கதை
 பின் புலன் இல்லாத தனுஷின் நண்பர்கள் வட்டம்.


VERDICT : MUST WATCH FOR DHANUSH AND CINEPHOTOGRAPHY
RATING   : 5.1 / 10.0EXTRA பிட்டுகள்.

உதயத்தில் முதல் நாளே படம் பார்த்ததில், கலவையான ரெஸ்பான்ஸ் 
இந்த படத்திற்கு. சென்னை போன்ற நகர் புறங்களிலேயே இந்த நிலைமை
என்றால் ரூரல் ஏரியாக்களில் இந்த படம் முற்றிலும் வெறுக்கப்படும் அபாயம் 
இருக்கிறது.  
2 comments:

  1. நடுநிலை விமர்சனம் .வெகுஜன மக்களுக்கு பிடிக்கலை என்பதே உண்மை

    ReplyDelete
  2. நல்ல விமர்சனம்... நன்றி பகிர்விற்கு... நானும் கதை, கவிதை எழுதுகிறேன்...

    என்னுடைய வலைப்பூ வந்து பாருங்களென்.

    ReplyDelete

you might like this also...

Related Posts with Thumbnails