நந்தலாலா.. - விமர்சனம்

 சொல்லப்படாத கதை என்று உலகில் எதுவுமே இல்லை. மிஷ்கின் இதில் சொல்லியிருக்கும் கதை ஏற்கனவே ஏதோ ஒரு மொழியில் சொல்லப்பட்டதாய் இருந்தாலும்.. நம் மொழிக்கும், நம் உணர்வுகளுக்கும் இம்மாதிரி மயிலறகு தடவல்கள்  ஒரு வரம்.   விரும்பி வரவேற்ப்போம் அதை....

நந்தலாலா.... தத்தமது அம்மாக்களை தேடி புறப்படும் இரண்டு குழந்தைகளின் கதை. ஒன்று வயதால் குழந்தை.. இன்னொன்று மனதால். ஒருவருக்கொருவர் எந்த வித ஈர்ப்பும் இன்றி, ஒரு அன்னியதன்மையோடு  பயணப்பட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாய்  அன்பின் வாசல்களுக்குள் நுழைந்து  அதில் கட்டுண்டு உறவாடும் வரை நீளும் அழகிய பயணம். இடையில் அவர்கள்  சந்திக்கும் மனிதர்களுக்குள்ளும் அந்த அன்பை விதைத்துக்கொண்டே செல்ல.... மூகமுடி அணியாத முழு மனிதர்களையும் அவர்களின் ஆழ்மன வெளிப்பாடுகளையும் ஒரு வித பிரம்மிப்போடு காண்கிறோம். 

மேய்ப்பனை பின் தொடர்ந்து செல்லும் ஆடுகள் போல....  கதையின் பின்னாலேயே நாமும் பயணப்பட தொடங்குவதில் ஆரம்பிக்கும்  வெற்றி.. இறுதியில் கண்கலங்கி.. கைதட்டி எழும் வரை தொடர்கிறது.   ஓவ்வொரு காட்சியும் ஒரு கவிதையாய்... ஒரு ஓவியமாய்...நம்மை கடந்து செல்ல... அதனுள் குறியீடாய்  ஒளிந்திருக்கும்  ஜென் தத்துவமும், பரிசுத்தமான அன்பும்...  எழுத்தில் விவரிப்பது கஷ்டம். படம் பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள்.

 நீண்ட நாட்களுக்கு பிறகு வசனங்கள்  அதிகம் இன்றி வெறும் காட்சிகளாலும் , உயிரை உருக்கும் இசையாலும் கதை சொல்லியிருக்கும் ஆச்சரிய தமிழ் சினிமா இது.

ராஜா சாரின் இசை   படம் முழுதும் சல சல வென ஓடும் நதியாகவும், சில இடங்களில் ஆக்ரோஷ அருவியாகவும்,  சில இடங்களில் அழ் கடல் அமைதியாகவும் இருந்து  ஒரு ஆக்சிஜன் போல படத்தை உயிர்ப்பிக்க வைக்கிறது. எத்தனை நாட்கள் ஆயிற்று... கடைசியாய்  சேதுவில் உணர்ந்தது. அதற்க்கு பிறகு இப்படத்தில் தான். ராஜாவின் கருணை குரலில் ஆரம்பிக்கும் தாலாட்டும்,  யேசுதாசின் "ஒன்னுக்கொன்னு" பாடலில்  வரும் அன்பின் தேடலும் நிச்சயம் கண்ணீர் விட வைக்கும் பொக்கிஷங்கள். 

மிஷ்கின்..... இந்த படத்தில்  ஒரு இயக்குனராக.. ஒரு நடிகராக.. நல்ல படைப்பாளியாக மிளிர்கிறார்.  முக்கால் வீசம் படத்திற்கும் பேண்டை கையில் பிடித்துக்கொண்டே நடப்பதும், ஓடுவதும், சண்டையிடுவதும், கண்விழி பிதுங்கி கீழே விழுந்துவிடுமோ என நாம் பயப்படும்படி விழிகளால்  வித்தை செய்திருப்பதும் எந்த வித ஸ்டார்களும் தளபதிகளும் செய்ய தெரியாத, செய்ய முடியாத அளவிற்கு அற்புதம். அதே போல அவரது குரலும் அட்டகாசம். சிறு வயது ராஜ சாரின் குரல் போலவே இருக்கிறது.

சிறுவன் அஸ்வத், ஸ்னிக்தா.. பன்னிரண்டு நொடிகள் வரும் நாசர், அந்த லாரி டிரைவர், இன்ஸ்பெக்டர், சைக்கிள் சிறுமி,  கலவரத்தின் போது வழிகாட்டும் மாற்று திறனாளி, பைக்கில் வரும் இரண்டு குண்டு மனிதர்கள் என அத்தனை கதாபாத்திரங்களும்  ஒரு தேர்ந்த சிற்பியின் கையால் செதுக்கப்பட்ட சிலை போல அத்தனை அழகு  + கச்சிதம்.


படத்தின் நீளமான ஷாட்களுக்கு தகுந்தபடி வைடு ஆங்கிள் காட்சிகளில் கவனம் ஈர்க்கும் மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவும், ட்ராஸ்கி மருது கலை வண்ணத்தில்   படம் நெடுக படர்ந்திருக்கும் அழகியலும் உலக சினிமாக்களின் உயரம் தொடுகிறது. 

மிஷ்கின் தனது ராஜபாட்டையே இந்த படம் மூலம் விஸ்தாரமாக்கியிருக்கிறார்.  கொஞ்சமே என்றாலும் கூர்மையான வசனங்கள்... அதில் மெல்லிசாய் கலந்திருக்கும் நகைச்சுவை, நேர்கோட்டில் செல்லும் தெளிவான  திரைக்கதை என  வலிமையான இயக்குனராக தன்னை நிலை நிறுத்தியிருக்கிறார்.
 
முற்பாதியில் இலவம் பஞ்சாய் நம் மனசை மாற்றி பறக்க வைத்து  விட்டு, படத்தின் இறுதியில் தீடிரென பெரும் பாரத்தை ஏற்றி விட்டு விடுவதை சமாளிப்பது சற்றே சிரமமாக இருந்தாலும் சுகமான சுமையே.

வழக்கமான தமிழ் சினிமா வழக்கப்படி சோகமாக முடிக்காமல் சந்தோஷமாக முடித்ததற்காக மிஷ்கினுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ். 

நந்தலாலா.. கண்களுக்கும், காதுகளுக்கும் மட்டுமல்ல... மனசுக்கும். 

(+) பிளஸ் 

மொத்த படமும்.

(இசை
திரைக்கதை, 
வசனங்கள்,
கதை மாந்தர்கள்
ஒளிப்பதிவு
கலை 
எடிட்டிங் )

(-) மைனஸ் 

குறை ஒன்றும் இல்லை..


VERDICT : தாலாட்டு
RATING    :7.0 / 10.0

EXTRA பிட்டுகள் :

நான் சென்னை வந்து பார்த்த முதல் படம் இது. எங்கள் ஏரியாவில் (ஈக்காட்டுதாங்கல்) உள்ள காசி தியேட்டரில் அறை நண்பர்கள் நால்வருடன் ஒரு மழை தூறிய இரவில் பெற்ற நல்ல அனுபவம். சென்னையில் தியேட்டர்கள் நன்றாகவே இருக்கிறது...  ஏசியில் கலந்த ஊதுபத்தி மனமும்... கை கோர்த்து படம் பார்த்த தம்பதிகளும்,  படம் முடிந்ததும்  எழுந்து நின்று கை தட்டி ரசித்த நல்ல சினிமா ஆர்வலர்களும் மிக்க சந்தோஷத்தை கொடுத்தார்கள். ஐஸ் கிரீம் தான் காலை வாரி விட்டது.
-

Comments

 1. பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 2. பகிர்வுக்கு நன்றி...

  ReplyDelete
 3. நல்ல விமர்சனம்!

  ReplyDelete
 4. மனோ..நானும் காசியில தான் முதல் நாள் இரவு காட்சி மீண்டும் ரெண்டாவது முறை பார்த்தேன்.

  ReplyDelete
 5. @ MANI SIR,
  @ KALA NESAN SIR,
  @ KANA SIR,
  @ VINO
  @ MSERK
  @ S.K

  THANKS FOR YOUR SWEET COMMENTS.

  MANO

  ReplyDelete
 6. DEAR CABLE SIR

  THANKS FOR YOUR COMMENTS. WILL MEET YOU SOON.

  ReplyDelete
 7. குறை ஒன்ருமில்லேனா மார்க் கொஞ்சம் கூட்டவேண்டியதுதானே ஜி.

  ReplyDelete
 8. இன்னும் படம் பார்க்கவில்லை. உங்கள் விமர்சனம் நன்றாக இருக்கிறது!

  ReplyDelete
 9. உள்ளது உள்ளபடியே இருக்கிறது விமர்சனத்தில்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருடன் போலீஸ் - விமர்சனம்

கத்தி - விமர்சனம்

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4