மைனா - விமர்சனம்


சினிமா ஒரு ஊடகம். நம் மனதை ஒரு விதமான கனவுலகத்திற்குள் இரண்டரை மணி நேரம் கடத்தி சென்று சிலிர்க்க, சிரிக்க, அழ வைக்கும் சக்தி வாய்ந்த ஊடகம். அதில், பருத்தி வீரன், காதல் போன்ற  ஒரு சில படங்கள் நம் வாழ்வியலோடு பின்னி பிணைந்து ஒரு உயிர்ப்போடு இருக்கும்.  மைனாவும்  அந்த வரிசையில் சேர்த்து வைத்து ரசிக்க கூடிய ஒரு அழகான படைப்பு. 

வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுப்பதில் பிரபு சாலமன் ஒரு கைதேர்ந்த  வித்தைக்காரர்.   ஆனால்,  சர்க்கஸ் கயிற்றில் பாதி தூரம் வெற்றிகரமாக நடந்து வந்து  கடைசி தாண்டலில் தலை குப்புற விழுவதை போன்று   அவரது முந்தைய படங்களின் ஆரம்பம்  மிக சிறப்பாக தொடங்கி இரண்டாம் பாதியில் அல்லது  கிளைமாக்சில் சொதப்பியிருப்பார்.  திரைக்கதை என்னும் ஒரு சீசா குச்சியின்  சப்போர்ட் இல்லாமல் கயிற்றின் மேல் நடப்பதால் கிடைக்கும் ரிசல்ட் அது.  மைனாவில் திரைக்கதையின் ஒத்துழைப்பு  நூறு சதவீதம் இருப்பதால்  மனிதரை பதினோரு வருட முயற்சிகளுக்கு பிறகு வெற்றிகரமாக கரையேற்றி இருக்கிறது.       

நீண்டுயர்ந்த மலைகளும், பச்சை பசேல் காடுகளும் எப்பொழுதுமே நம் மனதை கொள்ளை கொள்பவை.  ஒரு வித ரகசியத்தை, ஒரு தேடலை தன்னுள் ஒளித்து வைத்திருப்பவை. அதன் பின்னணியில் அழகான ஒரு காதல் கதை என்பதால் முதல் ரீலில் இருந்தே நம்மை படத்தோடு ஒன்ற வைத்து விடுகிறது.


சுருளி, படிப்பு வாசனை பிடிக்காமல் சிறு வயது முதலே வேலைக்கு செல்பவன், வறுமையின் காரணமாக  தெருவில் நிர்கதியாய் நின்று  மேற்கொண்டு படிக்க முடியாமல் அழுது கொண்டிருக்கும் மைனாவையும் அவளது அம்மாவையும் அரவணைத்து  காப்பாற்றுகிறான். பால்ய வயது பாசமும் நட்பும், பருவம் வந்ததும் காதலாய் மாற, மைனாவின் அம்மாவோ, தன் மகளுக்கு வசதி கொண்ட வேறொரு சம்பந்தம் தேடுகிறாள். விவரம் அறிந்த சுருளி  கல் எடுத்து மைனாவின் அம்மா தலை மேல் போட முயல, பதினைந்து நாள் காவல்.  இதற்குள், மைனாவிற்கு   திருமண ஏற்பாடுகள் நடக்க ஆரம்பிக்க சிறையில் இருந்து தப்புகிறான். தப்பியவன் மைனா வீட்டு வாசலில் வந்து நிற்க, மைனா அவனுடன் இணைந்து கொள்கிறாள். இதனிடையே  தலை தீபாவளி கொண்டாடுவதை  தவிர்த்து இவனை தேடி கிளம்பும்  இன்ஸ்பெக்டர் பாஸ்கர் மற்றும் சிறை காவலர் ராமையா,  இந்த நான்கு கதபாத்திரங்களும்  அவர்களுடைய உணர்வுகளும், ஈரம் படர்ந்த அந்த மலை காட்டிற்குள் மிக நுட்பமாகவும் யதார்தமாகவும்  சொல்லப் பட்டிருக்கிறது. 

சுருளியாக விதார்த், மைனாவாக (சிந்து சமவெளி) அமலா, இருவருக்கும் இடையேயான  அந்த காதல், அந்த மேற்கு தொடர்ச்சி மலைகளை போல பசுமையிலும் பசுமை. மைனா படிப்பதற்காக சுருளி மின்மினி பூச்சிகளை கொண்டு வெளிச்சத்தை உருவாக்க, அந்த வெளிச்சத்தில் இருவரையும் இணைத்து வைக்கும் அந்த முத்தம் தித்திக்கும் பரவசம். 

இன்ஸ்பெக்டர்  பாஸ்கராக புதுமுகம் சேதுவும்,  சிறை காவலர் ராமையாவாக தம்பி  ராமையாவும் போலீஸ்காரர்களின் யதார்த்த குணங்களான, கோபம், வன்மம்,  கடமைக்காக போடும் பொய் வேஷம் போன்றவற்றை    வெகு இயல்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அவை எல்லாவற்றையும் மீறி மனசாட்சியும், மனித நேயமும் அவர்களிடம் இருந்து  வெளிப்பட வைக்கும் அந்த பஸ் விபத்து காட்சி படத்தின் மிக சிறந்த விஷயங்களில் ஒன்று.

கேமரா கண்கள் மூலமாக நம் கண்களுக்கு குளிர்ச்சியும், குளிரையும் ஊட்டும் சுகுமாரின் ஒளிப்பதிவும், குத்து, ரீ மிக்ஸ்  குப்பையில் இருந்து மீண்டு, ரம்மியமான மழையே போன்று படத்தோடு பயணிக்கும் இமானின் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு அனுமார் பலம். 

சின்ன சின்ன கேரக்டர்களுக்கு கூட முக்கியத்துவம்  கொடுத்து கதையே நகர்த்த பயன்படுத்தியிருப்பது, கொஞ்சம் கூட ஆயாசம் கொடுக்காத திரைக்கதை, புற்களில் அமர்ந்திருக்கும்  பனி போல இயல்பாய் படம் நெடுக படர்ந்திருக்கும் நகைச்சுவை, நாடகத்தனம் இல்லாத வசனங்கள் என பிரபு சாலமன் ஒரு முழுமையான இயக்குனராக ஜெயித்திருக்கும் படம் இது. 

குறைந்த பட்ஜெட்டில் அழகாக  நெய்யப்பட்ட சேலை மைனா. குறைகளாக பார்த்தால், தமிழ் சினிமா வழக்கப்படி சோகமாக முடித்தால் படம் ஹிட்டாகும் என்கின்ற பார்முலாவை இதிலும் பயன்படுத்தியிருப்பது, பார்த்து சலித்த ஹீரோ கதாபாத்திரம், சிற்சில இடங்களில் மிகையாய் தெரியும் சில காட்சிகள் என குறைகள் இருந்தாலும் அதை எல்லாம் மறக்க வைக்கும் காதல் என்னும் அனுபவத்தை முழுமையாய் உணர வைக்கும் படைப்பு இது.


(+) பிளஸ் 

கதை களன்
யதார்த்தமான கதாபாத்திர தேர்வு
திரைக்கதை
ஒளிப்பதிவு
இசை


(-) மைனஸ்

தேடினால் கிடைக்கலாம். தேட மனம் வரவில்லை.
 

VERDICT : WORTH TO WATCH

RATING    : 5.3 / 10


EXTRA பிட்டுகள்

இந்த படத்தில், கிளைமாக்சிற்கு சிறிது முன் " கையே புடி" என்கின்ற ஒரு அற்புதமான பாடல் வரும். அந்த பாடல் வந்ததும், தியேட்டரில் பாதி கூட்டம் தம் அடிக்க வெளியில் சென்று விட, அப்படி என்னதான் அந்த கருமாந்திர புகையில் இருக்கிறது என வெகு எரிச்சல் வந்தது. ரொம்பவுமே ரம்மியமான பாடல் அது.

ஒரு  வரிசை முழுக்க, தாத்தா முதல் பேத்தி வரை ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் இந்த படத்திற்கு வந்து  சிரிப்பும், உற்சாகமுமாய்  படம் பார்த்ததை  ரசிக்க முடிந்தது.  பண்டிகை நாட்களில் மட்டுமே உறவுகளுடனான இத்தகைய கவிதை சந்தோஷங்கள் வாய்க்கும். 


Comments

 1. நண்பா உங்கள் சொல்லாளுமை அழகு. இப்பதிவில் உங்களது ரசனையான, கவித்துவமான விவரணையைத்தான் நான் அதிகம் ரசித்தேன். நானும் கவிதைகள் கிறுக்குகிறேன். நேரமிருந்தால் எனது வலைப்பூவிற்கு வாருங்கள்...

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம்!

  ReplyDelete
 3. //தேடினால் கிடைக்கலாம். தேட மனம் வரவில்லை.
  //

  எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு....

  ReplyDelete
 4. உங்கள் விமர்சனம் என்னைப் படம் பார்க்கத் தூண்டுகிறது.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

திருடன் போலீஸ் - விமர்சனம்

கத்தி - விமர்சனம்

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4