வம்சம் - விமர்சனம்


ஒரு  இயக்குனருக்கு முதல் படமே மிக பெரிய  வெற்றிப்படமாக அமைந்து விட்டால்,  இரண்டாவது படம் கத்தி  மேல் நடப்பது போல. ஆனால்  பாண்டிராஜ் கத்தி மேல் அனாயசியமாக   ஒரு திருவிழாவே  நடத்தி ஆட்டம்  போட்டிருக்கிறார்.  

ஒரு குறிப்பிட்ட  சமூகத்தை கதை களனாக கொண்டு, அந்த சமூகத்தின் உட் பிரிவுகளில் இருப்பவரிடைய உள்ள பகை, வஞ்சம், திருவிழா கலாச்சாரங்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் நம்பிக்கைகளை  நிறைய ஹோம் வொர்க் செய்து திரைக்கதையில்  கொடுத்திருக்கிறார் இயக்குனர். ஊரில் எல்லா விஷயத்திலும் தான் முதலாவதாக இருக்க வேண்டும் என்பதற்காக நஞ்சுன்டான் மாஓசி வம்சத்தை    சேர்ந்த சீனிகண்ணு, தனக்கு போட்டியாய் இருக்கும் எப்பாடு பட்டாவது பிற்பாடு கெடாதவர் வம்சத்தை  சேர்ந்த கிஷோரை வஞ்சகமாக விஷம் வைத்து கொல்ல, இறந்து போன  கணவன் போல தன் மகனும் ரௌடியாக மாறி இறக்க கூடாதென  அஹிம்சையே போதித்து வளர்க்கிறார் அவன் அம்மா.  தன்னை யாரவது வெட்ட வந்தால் கூட ஓடி போய் தன் மாமாவின் பின்னால் ஒளிந்து கொள்ளும் ஹீரோ, ஒரு கட்டத்தில்  தன் காதலிக்கு அதே சீனி கண்ணு ரூபத்தில்  பிரச்சனை வரும் போது திரும்பி நின்று எதிராளியின் மூக்கை பெயர்ப்பதும் அதன் பின் நடக்கும் பர பர சம்பவங்களுமே கதை.

இந்த கதை பேரரசு, ஹரி வகையறாக்களிடம் கிடைத்திருந்தால் ஸ்க்ரீன் முழுக்க ரத்த சிதறல்களாக இருந்திருக்கும் ஆனால் பாண்டிராஜ் இந்த கதைக்கு கொடுத்திருக்கும் வித்தியாசமான  ட்ரீட்மென்ட் நம்மை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. முக்கியமாக  செல்போனை மையமாக வைத்து வரும்  காதல் காட்சிகள் எல்லாம் தித்திக்கிற அச்சு வெல்லம். யதார்த்த கிராமத்து எள்ளல்களும், சீண்டல்களும், படம் முழுதும் இழையோடும் நகைச்சுவையும்   முற்பாதியே  டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்ய வைக்கிறது. இரண்டாம் பாதி, கொஞ்சம் நீளமான பிளாஷ் பேக்கும், துரதல்களுமாய் சென்றாலும் ஓகே ரகம்.


ஆறடி உயர  அருள்நிதி ஆரம்பத்தில் தடுமாறினாலும்  கொஞ்ச நேரத்திலேயே சமாளித்து  தன் கேரக்டரோடு கலந்து விடுகிறார். டயலாக் டெலிவரியில் மட்டும் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் கூடிய விரைவில் உடன்பிறப்புக்களின் சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவார். கிராமத்து மலராக சுனைனா, குளு குளு குச்சி ஐஸ்.  தன் குறும்புத்தனமான நடிப்பால் அழிச்சாட்டியம் பண்ணுகிறார். போன் இல்லமாலேயே, தூரத்தில் இருக்கும் தனது தோழியே  ஒரு   மாதிரி குரல் கொடுத்து கூப்பிடும் காட்சியில், தியேட்டரே   கைதட்டலால் கிழிகிறது. காதல் காட்சிகளில் சிக்ஸர் அடிக்கும் அவரது முக பாவங்கள் அட்டகாசம்.
வில்லன் என்றால் தொண்டை கிழிய கத்த வேண்டும் என்கின்ற மரபை அடித்து துவைத்துவிட்டு, கண்களாலும், உடல் மொழியிலாலுமே மிரட்டுகிறார் ஜெய ப்ரகாஷ். மனசில் வன்மத்தை வைத்து கொண்டு, வெளியே புன்னகைக்கும் அவரது நடிப்பு வில்லன்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பால பாடம்.

படத்தில் எல்லா கதாபத்திரங்களும் முழுமையாக வடிவமைக்கபட்டுள்ளது. அருள் நிதியின் அம்மா, சுனைனாவின் தோழி, குடும்ப கட்டுப்பாடு ஏஜண்டாக வரும் கஞ்சா கருப்பு, ரௌடி ரத்தினமாக  வரும் கிஷோர் என எல்லோரும் எளிதில் கவர்கிறார்கள்.


மகேஷ் முத்து சாமியின் ஒளிப்பதிவில் அம்புட்டு யதார்த்தம். நாமும் அந்த கிராமத்தில் நடந்து, திரிந்து, ஓடுவது போலான உணர்வு. அறிமுக இசையமைப்பாளர் தாஜ்நூர் "மருதாணி பூவ போல" பாடலில் கவனிக்க வைத்தாலும், பின்னணி இசையில் அனுபவமின்மை காரணமாக கோட்டை விட்டிருக்கிறார்.    இசை இன்னும் கொஞ்சம் பக்க பலமாய் இருந்திருந்தால் இந்த படம் மேலும்  உயரம் சென்றிருக்கும்.

ஆர்ப்பாட்டமாய் காட்சி படுத்த வேண்டிய காட்சிகளில் கூட அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயம். லோ-பட்ஜெட்.  முற்பாதியில் படம் ரொம்பவுமே அவசர அவசரமாக ஓடுவது  போலான  உணர்வு. எடிட்டிங்கில் கவனித்திருக்கலாம்.

 பசங்க படத்தில் வரும் அத்தனை சிறுவர்களையும், கதாபாத்திரத்தின் பெயர்களை கூட இடைசொருகல் இல்லாமல்  சென்டிமென்டலாக இயக்குனர்  உபயோகபடுத்தியிருக்கிறார்.   துரத்தும் எதிராளிகளிடம் இருந்து தப்பிக்க, அவர்களை திசை திருப்பி வாய்காலில் இறங்க வைத்து, பின், வேலி முள் சுருளை தண்ணீரில்  போட்டு இன்னொரு பக்கத்தை மின்சார கம்பியின் மேல்  போட்டு விடுவதாக  ஹீரோ மிரட்டி தப்பிக்கும் இடத்தில் பாண்டிராஜின் புத்திசாலித்தனம் மிளிர்கிறது.


மொத்தத்தில், கிளைமாக்ஸ் தவிர்த்து யதார்த்தமான கிராமத்து படம் தந்த விதத்தில் பாண்டிராஜ் எளிதாக ஜெயிக்கிறார்.

பிளஸ் (+)

திரைக்கதை
இயக்கம்
சுனைனா
ஜெயப்ரகாஷ்
படம் முழுதும் வரும் நகைச்சுவை

மைனஸ் (-)


வழக்கமான தமிழ் மசாலா பட கிளைமாக்ஸ்
இசை

VERDICT  : வம்சம் - அம்சம்
 RATING    : 5.0 / 10.0

EXTRA பிட்டுகள் 

கோபு அண்ணன் பற்றி இங்கு ஒன்றை சொல்ல வேண்டும். ஊரில் எங்கு என்ன பிரச்சனை நடந்தாலும் அவர்தான் பஞ்சாயத்து தலைவர். எத்தனை பேர் குறுக்கே பேசினாலும், சண்டையிட்டாலும் சாமர்த்தியமாய் சமாளித்து, பேசியே  பிரச்சனைக்கு ஒரு பைசல் பண்ணிவிடுவார்.  நேற்றைய படத்தில் ஒரு காட்சி.. ரௌடியாக வரும் கிஷோரை தாக்குவதற்காக ஒரு கூட்டம் கையில் கம்போடு சுற்றி வளைக்கும். அப்போது கிஷோர் கம்பை கையில் வைத்து கொண்டு, 18 வகை சிலம்பாட்டம் உள்ளதென்றும், அது இன்னதென்றும்  வரிசையாக கூறுவார். அதைகேட்டு கூட்டம் சண்டையிடாமல் தெறித்து ஓடும். அதை பார்த்த எங்கள் குரூப்பில் உள்ள நண்பன் S.R. "டேய், இவன் நம்ம கோபு அண்ணன்டா, பேசியே எல்லாரையும்  துரத்தி விட்டுடாண்டா" என டைமிங்காக போட்டு தாக்க, அதை கேட்டு எங்கள் குரூப் மொத்தமும் கைதட்டி ஆர்ப்பரிக்க, கோபு அண்ணன் முகத்தில் கிலோ கணக்கில் வெட்கம் வந்து முகம் சிவந்து போனது.

Comments

 1. நல்ல விமர்சனம் மனோ... படம் பார்க்க முயற்ச்சிக்கிறேன்..

  ReplyDelete
 2. எங்க இருந்து புடிக்கேரங்க்பா இந்த ஹெரோஇன் எல்லாரையும்

  ReplyDelete
 3. சீக்கிரம் படத்த பாத்தாகனும் :)

  அருமையான எதார்த்தமான விமர்சனம்

  ReplyDelete
 4. summa natchunu irukku unga review.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4