டாக்டர்.குண்டு ராவ், M.B.B.S

  "ஐயோ" என  இரவின் நிசப்தத்தை கிழித்துக்கொண்டு வெளியேறிய என் கூக்குரல் என் வீட்டை கடந்து இரண்டாவது தெரு திருப்பத்தில் நுழைந்து  கரைந்தது. மாவு அரைக்கும் மெஷினை ஒத்த குறட்டை ஒலியுடன் தூங்கிகொண்டிருந்த   என் மனைவி கட்டில் அதிர எழுந்தமர்ந்து  நீண்ட பெரு மூச்சுடன் என்னை முறைத்தாள்.

"ஏன்னா  இப்படி தினம்  அலும்பு பண்றேள், ராத்திரியில் கூட இந்த பொம்பளை அவ புருஷனை போட்டு அடிச்சு கொடுமை பண்றாள்னு பக்கத்தாத்துல இருக்கறவா எல்லாம் என்னை சந்தேகமா பாக்கறா... "

"முடியலேடி ரமா... வலி பிராணனை போறது..." இந்த பைல்ஸ்  இப்படி படுத்தும்னு நினைக்கல..."

"நல்ல டாக்டர் கிட்ட காட்டுங்கோன்னு சொன்னா  கேட்க மாட்டேன்கறேள். ரோட்ல போறவன்கிட்ட காசு குறைச்சல்னு  களிம்பு வாங்கி தடவினேள்...இப்போ பாருங்கோ அப்பளம் போல பொரிஞ்சு கிடக்கு"

மருத்துவமனை செல்வது என்பது ஆதி காலத்தில் இருந்தே எனக்கு பிடிக்காத விஷயமாக இருந்தது... அதன் டெட்டால் வாசமும், வலி நிரம்பிய முகங்களும் என்னை மருத்தவமனையே விட்டு நூறு அடி தள்ளியே வைத்திருந்தது. ஆனால், இனிமேலும் முடியாது. பின் புறத்தில் சிவப்பு விளக்கு எரிகிறது.  விடிந்ததும், டாக்டரிடம் காட்டியே தீருவது என முடிவெடுத்தேன்.

ஆபிஸ் செல்லும் வழியில், டாக்டர்.குண்டு ராவ், M.B.B.S  எனும் பெயர் பலகை, என்னை உள்ளே வா...  வா.. என்றழைக்க ...வண்டியே  நிறுத்திவிட்டு உள்ளே போனேன்.

கிளினிக் கூட்டம் எதுவுமின்றி அமைதியாய் இருந்தது. , நான் கதவை திறந்து கொண்டு உள் நுழைந்தேன். அந்த அறை மிக மிக எளிமையாக காட்சியளிக்க .  டாக்டர் குண்டு ராவ் ஒல்லியாக இருந்தார். வழுக்கை தலை, வெண்மையான சட்டை, மூக்கு கண்ணாடி உதவியுடன் எதோ ஒரு ஆங்கில புத்தகத்தை படு கவனமாக படித்துக்கொண்டிருந்தவர் என் சத்தம் கேட்டு நிமிர்ந்தார். சில நொடிகள் என்னை உற்று பார்த்தவர் " PLEASE COME IN" "PLEASE BE SIT" என்றார்.  நான் அழுத்தம் கொடுக்காமல் நாற்காலி முனையில் அமர்ந்ததும்  " சொல்லுங்க.. WHATS YOUR PROBLEM" 

நான், என்னுடைய பைல்ஸ் பிறந்து வளர்ந்து  வேரூன்றிய கதையே ஆழ்ந்த சோகத்துடன் சொல்லி முடிக்க , அன்பு நிறைந்த கண்களோடு என்னை பார்த்தவர், மிருதுவாக " கவலை படாதீங்க '' நான் பார்த்துக்கிறேன்" உலகத்தில் குணப்படுத்த முடியாத நோயென்று எதுவுமே இல்லை. உங்கள் பிரச்சனை சீக்கிரம் தீரும், நான் இருக்கிறேன், அதற்கு மேல் அந்த கடவுள் இருக்கிறார் " என்றார். அந்த நொடியில் வானத்தில் இருந்து தொபுகடீர் என குதித்த தேவ தூதன் போல எனக்கு அவர் காட்சியளித்தார். இவரை நம்பி என் பின் புறம் மட்டுமல்ல, மொத்த சரீரத்தையும் ஒப்படைக்கலாம் போல இருந்தது.


என் பெயரை கேட்டு விட்டு,  வேக வேகமாக , ப்ரிஸ்கிரிப்ஷனில் கிறுக்கியவர்... "இந்த மருந்தெல்லாம் சாப்பிடுங்க.. ரெண்டு நாளில் குணமாயிடும்" .

பிரச்சனைக்குரிய பிரதேசத்தை  பார்க்காமலே மருந்தெழுதி கொடுத்த அவரது அறிவினை வியந்தவாறே  கிளம்ப எத்தனித்தேன்.

"கன்சல்டேஷன் பீஸ் 200  " என்றார் குண்டு ராவ்.

ப்ரிஸ்க்ரிப்ஷனில் குறிப்பிட்டிருந்த மெடிக்கல் பூட்டப்பட்டிருக்க,  வேறு மெடிகல்களில் கேட்டதில்   உதடு பிதுக்கி, தலை ஆட்டி,  குறிப்பிட மருந்து இல்லை என்றனர். எனக்கேன்னோவோ மொத்த ஊரும், என் பைல்ஸ் பிரச்சனை சரியாக கூடாது என கங்கணம் கட்டிக்கொண்டு திரிவது போல தோன்றியது. ஒரு மிக பெரிய யுத்தம் நடந்த பகுதி   போல என் பின் புறம் மாறி விட்டிருக்க , நேரமானதால் மாலை பார்த்து கொள்ளலாம் என பல்லை கடித்துக்கொண்டு  ஆபீஸ்க்கு விரைந்தேன். மாலையில், கடை வீதி முழுதும் அலைந்து  திரிந்தும் எந்த மருந்து கடையிலும் டாக்டர் சொன்ன மருந்துகள் கிடைக்க வில்லை.

மருந்து கிடைக்காத கவலையில் , அடுத்த நாள் டாக்டரை பார்க்க அவர் கிளினிக்கிற்கு சென்றேன். குண்டுராவ் இப்போதும் அதே கவனத்துடன் அதே ஆங்கில புத்தகத்தை படித்துக்கொண்டிருந்தார். என்னை பார்த்தவர், உள்ளே வாங்க, நான் சொன்ன மெடிசின்ஸ் எல்லாம் சாப்டீங்களா என்றார்.

எங்க டாக்டர், எந்த கடையிலும் நீங்க எழுதி கொடுத்தது கிடைக்கலை. - டாக்டர் வலி உயிர் போறது.. கொஞ்சம் பாருங்க ப்ளீஸ்"


"அப்படியா.. I AM EXTREMLY SORRY "அந்த டேபிள் மேல ஏறி படுங்க..."

டேபிள் மேல ஏறி படுத்தவாறே " பேன்ட்டை கழட்டிடட்டுமா டாக்டர் "

" நோ, நோ, அதெல்லாம் கழட்ட கூடாது" 

உட்கார்ந்த இடத்தில் இருந்து என்னை பார்த்தவாறே " கொஞ்சம் வலது பக்கம் திரும்புங்க  ஓகே. " இப்போ இடது பக்கம் " .

"OK , இறங்கிகோங்க... "

ஒன்றும் புரியாமல் இறங்கி அவர் எதிரில் அமர்ந்தேன்.

ஒன்னும் கவலைபடாதீங்க...என்று என் கைகளை பற்றிகொண்டவர் கீதையில் இருந்தும், குண்டலகேசியில் இருந்தும் சில உதாரணங்கள் சொல்ல ஆரம்பித்தார்.  நான் அமர்ந்து கொண்டிருப்பது கிளினிக்கிலா அல்லது பெருமாள் கோவில் கதா காலட்சேப கூட்டத்திலா என்று மெலிதாய் சந்தேகம் தோன்ற..

டாக்டர், இதெல்லாம் சரிதான், ஆனால் என் வலிக்கு என்ன தீர்வு. உடனடியா இதுக்கு வைத்தியம் பாருங்கோ என்றேன்.

விநாடி நேரம் யோசித்தவர்... அப்ப  ஆபரேஷன் பண்ணிரலாம்... ஒன்னும் பயப்படதீங்க...

டாக்டர், நீங்க ஆபரேஷன் பண்ணாலும் சரி, சிசேரியன் பண்ணினாலும் சரி,,, வலி நிக்கணும் அவ்வளவே..

"ஓகே, நான் சில புக்ஸ் எல்லாம் சொல்றேன். நைட்டே  உட்காந்து படிச்சுட்டு வந்துடுங்க... ஒரு வீடியோ சொல்றேன்.. அதையும் நல்லா பாத்துடுங்க.."

எதுக்கு டாக்டர்... ?

பைல்ஸ் உங்களுக்குதானே?

ஆமாம்?

அப்போ நீங்கதான் படிக்கணும்,,  இதெல்லாம்  பைல்ஸ் ஆபரேஷன் எப்படி செய்றதுங்கற புக்ஸ். நல்ல கவனமா படிங்க.. நாளைக்கு வந்து நீங்களே பண்ணிக்கலாம்.. ரொம்ப ஈஸி. ஒன்னும் பயப்படதீங்க..

எனக்கு தலை கழண்டு கீழே விழுவது போல இருந்தது, பின் புறத்தில் சிவப்பு விளக்கு எரிய ஆரம்பிக்க, இனிமேலும் இங்கிருப்பது உசிதம் இல்லையென சரி டாக்டர் நான் கிளம்பறேன் என்றவரே எழுந்தேன்...

"கன்சல்டேஷன் பீஸ் 200  " என்றார் குண்டு ராவ்.

 எனக்கு ஆத்திரம் உச்சியில் ஏற.. "எனக்கு நானே ஆபரேஷன் செய்ய  உமக்கு ஏன்யா 200  அழுவனும், நீர் என்ன வைத்தியம் பார்த்தீர்" என்றேன். 

இதை கேட்டு ,  கோபத்தில் டேபிளை தள்ளிக்கொண்டு வெளியே  எழுந்து வந்தவரை கண்டு ஒரு கனம் விதிர்த்து நின்றேன்.     பேன்ட்  ஏதும் போடாமல் வெறும் அரை டிராயருடன், காட்சியளித்த குண்டு.. வெறி கொண்ட வேங்கை போல என் மீது பாய்ந்து " மாட்டிகீனியா, ஆபரேஷன் பண்ணினாத்தான் பீஸ் குடுப்பியா, வா, வந்து குப்பற படு, ஆபரேஷன் பண்றேன்.பம் பம் பஜக் பம்" என்றது.  

நிலைமையின் விபரீதம் முழுதாய் எனக்கு உரைக்க, ஐயோ, ஒரு பைத்தியத்திடம் இரண்டு நாள் வைத்தியம் பார்த்திருக்கிறேன் என அதிர்ந்து விலக  நினைத்து, குண்டுவுடன் இரண்டு மூன்று குட்டி கரணங்கள் அடித்து, ஒரு சிக்கலான பிணைப்பில் குண்டு என முகம் நோக்கி நெருங்கி, படு ஆர்வமாய் என் மூக்கை கடிக்க... ஐயோ.......

அரசு மருத்துவமனையில் இருந்த என்னை பார்த்து கண்ணில் நீர் வர சிரித்த என் அலுவலக சகாக்கள், டேய், அந்த குண்டு ராவ்  1 மாசத்துக்கு முன்னாடியே அந்த இடத்தை விட்டு காலி பண்ணிட்டு போயிட்டாராம்.. அங்க உக்காந்துட்டு இருந்தது மேல் மாடியில் குடியிருந்த அரை லூசு. அது கிட்ட போய் ட்ரீட்மென்ட் எடுக்க உனக்கு என்ன தைரியம். அந்தாளை நம்பி குப்பற படுத்திருந்தா உன் கதி என்ன ஆயிருக்கும்.... சிரிப்பொலியில்  ஆஸ்பத்திரி சின்னாபின்னமாக.. நான் உங்களை பார்த்து பரிதாபமாக கேட்கிறேன்.. என் பைல்ஸ்க்கும், மூக்கு கடிக்கும் ஒருசேர வைத்தியம் செய்யும் நல்ல டாக்டர் யாராவது இருந்தால் சொல்லுங்களேன் ப்ளீஸ்.......

---------------------------------

கதை கடியாக இருந்தாலும் கமெண்ட் இடவும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....