பரமுவுக்கு கல்யாணம்



 பரமு என் உயிர் நண்பன். சில நேரங்களில், என்  உயிர் எடுக்கும் நண்பனும் கூட... 

    உலகில் எல்லோருக்கும் பொதுவானது நட்பு.  அதன் அளவீடுகள் எந்த எல்லைகளுக்கும் உட்படாதவை. எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்த மனிதர்களுக்குள்  உருவாகும், ஈர்ப்பு, அக்கறை, ஒத்த அலைவரிசை, ரசனை, அன்பு, பாசம், நேசம்  இன்னும் என்னனென்னவோ..இவை அத்தனைக்கும் பிள்ளையார் சுழி போடுவது நட்புதான். காதல் கூட அதன் தொடர்ச்சியாய் பின்னால் வருவதுதான்.ஒரு நல்ல நட்புதான் காதலாய் மாறும் என்பது என் நம்பிக்கை.

 நல்ல நட்பு நம்மை பக்குவபடுத்துகிறது... வண்டியில் போய்க்கொண்டிருக்கிறோம்.... எதிர்பாரா விதமாக எதிரில் வரும் வண்டியோடு சிறு உரசல். கோபம் என்னும் சாத்தான் உடனே எழுந்தாலும், கொஞ்சம் அதை அடக்கி நட்போடு கொஞ்சம் புன்முறுவல் செய்து பாருங்கள்... அதற்க்கு கிடைக்கும் பலனே வேறு. யாரும் யாரோடும் சண்டை போட விரும்புவதில்லை. சிநேகமான புன்னகையும், நட்பு பாராட்டுதலும் மிருகமாக இருப்பவனை மனிதனாக்குகிறது... தனக்கென மட்டும் இல்லாமல் தன்னை சுற்றி இருப்பவரை பற்றியும் அக்கறை கொள்ளும் போது அந்த மனிதன் கடவுளாகிவிடுகிறான்.


 எத்தனையோ நண்பர்கள் நமக்கு வாய்த்தாலும், ஒன்று அல்லது இருவர் மட்டும் மனசுக்கு மிக நெருக்கமாகி விடுவார்கள். ஒரு நல்ல புரிதல்... அன்னியோன்யம் அந்த குறிப்பிட்ட நட்பிடம் மட்டும் ஆழ பதிந்து விடும். பரமுவும் நானும் பால்ய கால நண்பர்கள் இல்லை. வாழ்வின் வரமான கல்லூரி நட்பு கூட எங்களுக்கிடையில்  கிடையாது.  என் தம்பியின் நண்பனாக எனக்கு அறிமுகம் ஆனவன்.... இன்றோ ... எனக்கு எல்லாமுமாக இருக்கிறான். ஒரு நேர்முகதேர்விற்கு டெல்லி செல்லும் போது துளிர்த்த எங்கள் நட்பு.. அதில் தேர்வாகி ஒன்றாய் சென்னையில் பணிபுரியும் இந்நாள் வரை வளர்ந்து விருட்சமாகி இருக்கிறது.

 இந்த இடைப்பட்ட நாட்களில் எனக்கும் அவனுக்குமான சிநேகம், ஆர்யாவுக்கும் சந்தானத்துக்கும் இடையே உள்ள உறவை  போன்றது.  பரமுவிடம் பேசினால் நிச்சயம் நீங்களும் அவன் நண்பனாகிவிடுவீர்கள்...  மிக எளிதாக யாருடனும் ஒட்டிக்கொள்ளும் சுபாவம் அவன் பிளஸ் என்றாலும் அடுத்தவர்களின் உணர்வுகளுக்கு மரியாதை தருவதும், அவர்கள் பால் அக்கறை  கொள்வதும்தான் அவனிடம் நாம் எளிதாக சரண்டர் ஆவதன் காரணம் என்று நான் நினைக்கிறேன்.


 ரொம்பவும் வெகுளி, நல்லவன் போன்ற விஷயங்களை காட்டிலும் அவனின் நல்ல நகைச்சுவை உணர்வு நம்மை அவனோடு நெருக்கப்படுத்தி விடும். நிறைய விஷயங்கள் அவனிடம் கற்றிருக்கிறேன்... பணத்தை விட மனிதர்கள் முக்கியம் என்று நினைப்பவன். " மனோ, பணம் ஒரு பேப்பர் மாதிரிடா... சரியான சமயத்தில அது உதவினாதான் அதுக்கு மதிப்பு" என, யார் கஷ்டம் என கேட்டாலும் வாரி வழங்கி விடும் வள்ளல். பற்றாக்குறைக்கு என் பாக்கெட்டில்  இருந்தும் இஷ்டம் போல   எடுத்து மற்றவருக்கு கொடுப்பான்.

    என் மீதான அவனின் உரிமை மீறல்கள் அளவில் அடங்காதது... திடுமென இரவு ஏழு மணிக்கு வருவான்.. நண்பன் ஒருவன் வந்திருக்கிறான்... வா பார்த்துட்டு வந்திடலாம் என்பான்... சரி.... எங்கே... என்றால் பாண்டிச்சேரியில்... என்பான். என் அடுத்த பதிலை எல்லாம் எதிர்பாராமல் பைக்கை ஸ்டார்ட் செய்து உடனே ஏறு என்பான். இரவு பதினோரு மணிக்கு " ரொம்ப புழுக்கமா இருக்கு மாமா" ...  வா திருவான்மியூர் பீச் போலாம் என்று என்னை கிளப்புவான். என் ஞாயிறு நிகழ்சிகளை மருந்துக்கு கூட என்னிடம் கேட்காமல் அவனே தீர்மானிப்பான். இத்தனை இம்சைகளை அவன் கொடுத்தாலும் அதனை எதுவும் மறுக்க தோணாது.... இரவு 10  மணிக்கு ரயில் என்றால் 9:58  வரை ஸ்டேஷனுக்கு வராமல் பதைபதைக்க வைப்பான். கோபத்தில் சபித்து கொட்டினாலும் "ஹீ ஹீ" என சிரிப்பான். வந்த கோபம் அதோடு காணாமல் போகும்.

   ஒரு நண்பன் எப்போது ஆத்ம நண்பன் ஆகிறான் என்றால், நம் துக்கங்களை, கவலைகளை தன்னுடையதாய் எண்ணி பகிர்ந்து கொள்ளும் போதுதான். என் சொந்தங்களால் நான் கைவிடப்பட்டு, என் காதலை தொலைத்து விட்டு தடுமாறிய பொழுதுகளில் அவன் அரவணைப்பும் ஆறுதலும் இல்லாதிருந்திருந்தால் செத்திருப்பேனோ என்னவோ... தெரியவில்லை. ஒரு இரவு நேர ரயில் பயணத்தில், குழந்தை போல அவன் மடியில் சாய்ந்து கொண்டு கண்ணீர் சிந்திய நொடிகளில், ஒரு தாயே போல அவன் காட்டிய அக்கறையும், தன்னம்பிக்கை வார்த்தைகளும் ஓவ்வொரு மனிதனும், தன் கஷ்டமான சூழ்நிலைகளில் தன்னுடைய உண்மையான நட்பிடம் இருந்து பெற்றிருக்க கூடும். நல்ல நண்பன் கிடைப்பது கூட ஒரு வரம்தான்.


திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்க படுகிறதோ இல்லையோ... வாழ்கையே சொர்க்கமானதாக மாற்றுவது....காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்தோடு செய்யும் திருமணம்தான். என் பரமுவிற்கு அந்த சொர்க்கம் வாய்த்திருக்கிறது. நாளை (11.09.11) அவனின் திருமணம்.  என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள்...   பயல் நூறாண்டு வாழட்டும் இன்னமும் சந்தோஷமாய்.... .
   

Comments

  1. பரமு விற்கு என் வாழ்த்துகள் சொல்லிவிடுங்கள் மனோ...
    உங்களுக்கு என் குட்டுக்கள் தொடர்ந்து எழுதாமல் இருப்பதற்காக ..

    ReplyDelete
  2. திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்க படுகிறதோ இல்லையோ... வாழ்கையே சொர்க்கமானதாக மாற்றுவது....காதலித்த பெண்ணை பெற்றோர் சம்மதத்தோடு செய்யும் திருமணம்தான். என் பரமுவிற்கு அந்த சொர்க்கம் வாய்த்திருக்கிறது. நாளை (11.09.11) அவனின் திருமணம். என்னோடு சேர்ந்து நீங்களும் வாழ்த்துங்கள்... பயல் நூறாண்டு வாழட்டும் இன்னமும் சந்தோஷமாய்.... .

    வணக்கம் சகோ நிட்சயம் எனது வாழ்த்துக்களும் உங்கள் நண்பருக்கு உரித்தாகட்டும் .உங்கள் நட்பைக் கண்டு மகிழ்கின்றேன் மிக்க நன்றி பகிர்வுக்கு ............

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....