ஜாக்கியும்.... நானும்.....நாய்களுடனான என் உறவு ஹிட்லருக்கும் யூதனுக்கும் உள்ள உறவை போன்றது.   எந்த காலத்திலும் ஒத்து போனதே இல்லை. நாய்கள் மீதிருந்த  அச்சமும் வெறுப்பும் சிறு வயதில், ஒரு முட்டு சந்தில் என்னை துவட்டி எடுத்த அந்த குறிப்பிட்ட கருப்பு நாயிடம் இருந்து பிறந்திருக்கலாம்.

சிவனே என்றுதான் படுத்துக்கொண்டிருந்தது. பதின்ம வயதின் குறும்புகள் என்  மூளையில் பிறந்து கால் வழியாய் வெளியேறி அதன் வாலை மிதிக்க, கும்பகர்ணனின்   தூக்கத்தை  கலைத்தால் கோபத்தில் எப்படி வெறித்தனமாய்   
பாய்வானோ அதே வேகத்தில் என் தொடையே குறி வைத்து பாய்ந்து கடித்து குதறி தன் ஆத்திரத்தை தீர்த்துக்கொண்டது. 

இப்போது இருப்பது போல ஒற்றை ஊசி வைத்தியம் எல்லாம் அப்போது இல்லை.  குன்னூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மருந்துகள் வாங்கி வந்து தினம் ஒரு ஊசி என என் குடும்ப மருத்துவர் பதினெட்டு நாட்கள் என் தொப்புளை துளைத்தார். ஒவ்வொரு முறை ஊசி ஏற்றும் போதும் நாய்கள் மீதான என் வன்மம் என் மனசுக்குள் ஏற ஆரம்பிக்க அதிலிருந்து நாய்கள் என்றாலே லத்திகா பட போஸ்டரை கண்டது போல தெறித்து விலக ஆரம்பித்தேன்.


நாம் நாய் வழியில் குறுக்கிடா விட்டாலும் அது நம் வழியில் அடிக்கடி குறுக்கிடும், இரவு காட்சி சினிமா முடிந்து வீடு திரும்பும் பொழுதுகளில் விஸ்வரூபம் கொண்டு அது துரத்தும் போதெல்லாம் அதன் மீதான ஆத்திரம் ராஜபக்ஷே மீதுள்ள ஆத்திரத்தை விட சில பல மடங்குகள் அதிகரிக்கும்.


இப்படி நாய்கள் மீது வெறித்தனமான வன்மம் கொண்டிருந்த என் வாழ்க்கையில்தான் ஜாக்கி உத்தரவின்றி உள்ளே நுழைந்தது. வீடு ஒன்றை  வாடைகைக்கு தேடிக்கொண்டு அந்த புது வீட்டிற்க்குள் நான் நுழைய அது எங்கேருந்தோ வந்து என் மீது தாவி ஏற,  கற்பழிக்க வந்த வில்லனை கண்ட கதாநாயகி போல "வீல்" என உச்சஸ்தாயியில் கதறினேன்.   அந்த வீட்டு உரிமையாளர் பெண் வயது ஐந்து ஆறுதான் இருக்கும். அது எதோ கன்றுகுட்டியே அரவணைப்பது போல அப்படியே அந்த ஜாக்கியே அரவணைத்து இழுத்து கொண்டு போக என் உடலெல்லாம் நடுக்கத்தில் டான்ஸ் ஆட ஆரம்பித்துவிட்டது.


அந்த வீடு, வீட்டு உரிமையாளர், உரிமையாளரின் இரண்டு சுட்டி குழந்தைகள் என எல்லாம் பிடித்து போனாலும், ஜாக்கி மட்டும் பயமுறுத்தியது. இருந்தும் அந்த வீட்டிற்க்குள் நண்பர்களுடன் குடி புகுந்து அந்த ஜாக்கியிடம் இருந்து மட்டும் விலகியிருக்க ஆரம்பித்தேன்.


லேபர்டர் வகையே சேர்ந்த ஜாக்கி நான் வீட்டிற்குள் நுழையும் போதெல்லாம்  குரைப்பதற்கு பதிலாக என்னை கண்டவுடன் நக்கலாக சிரிப்பது போல் இருக்கும். போதாகுறைக்கு அந்த குட்டி பெண் கொஞ்சம் கூட பயம் இல்லாமல் அதனோடு விளையாடுவதும், அதனை எட்டி உதைத்து அடிப்பதை கண்டவுடன் என் தன்மானம் உசுப்பேற ஜாக்கியே கண்டு பயப்படாமல் இருப்பது போல நடிக்க ஆரம்பித்தேன். எதிரியே வெற்றி கொள்வதற்கு ஒரே வழி அவனை நண்பனாக்கி கொள்வதுதான் என்ற முடிவோடு மூன்று ரூபாய் டைகர் பிஸ்கட்டோடு ஜாக்கியே நெருங்க... முதன் முதலாக அதன் முகத்தில் என்னை அல்லது என்னிடம் இருந்த பிஸ்கட் பாக்கெட்டை கண்டவுடன் ஒரு அன்பு, ஒரு விருப்பம், ஒரு காதல் தெரிந்தது.. 


எப்படி அந்த ரசாயன மாற்றம் என்னுள் நிகழ்ந்தது என்று தெரியவில்லை. ஜாக்கி என்னிடம் வெகு சீக்கிரத்தில் ஒரு குழந்தை  போல நெருங்கி பழக ஆரம்பித்துவிட்டது. இதற்காக தினமும் ஒரு பாக்கெட் பிஸ்கட் செலவானது என்பதையும் இங்கே சொல்லியாக வேண்டும். ஒரு நாள் பிஸ்கட் போட மறந்தாலும் அல்லது மறுத்தாலும் விடாமல் குரைத்து குரைத்து அன்றைய தின இரவை தூங்க விடாமல் செய்து விடும். இடைவெளி இன்றி அது குரைப்பதை பார்த்து என் அறை நண்பன் சுமி என்னை குரைக்க ஆரம்பித்தான். முதலில் உன்னையும் இந்த நாயையும் ஒழிச்சாத்தான் நான் நிம்மதியாக  தூங்க முடியும் என்பான். 


இரண்டு மாதங்களுக்கு உள்ளாகவே ஜாக்கி என் சொல்படி கேட்க ஆரம்பித்தது. என்னை கண்டவுடனேயே அதன் கண்களில் தெரியும் ஒரு ஆர்வமும் துருதுருப்பும் என்னவோ பயங்கர சந்தோஷத்தை எனக்குள் ஏற்படுத்தியது.    ஒரு அலட்சிய பாவத்தில் தொடங்கிய எங்கள் நட்பு அடி ஆழமாய் வேரூன்ற  எது காரணமாக இருந்திருக்கும். நாய்கள் மீதான என் பயத்தை அது போக்கியதாலா... அல்லது உருவத்தில் மிக பெரிதாக இருந்தாலும் குழந்தைதனமான முகத்தினாலா.... ஒரு ஐந்தறிவு ஜீவன் என் மீது கொண்ட அன்பினாலா... சரியாக தெரியவில்லை.  எங்களுக்கு எதாவது உணவு வாங்கும் போதே ஜாக்கிக்கும் எதாவது வாங்க வேண்டும் என்கின்ற எண்ணம் அப்போதிருந்தே தோன்ற ஆரம்பித்துவிட்டது.


வளர்ப்பு மிருகங்கள் வைத்திருப்பவர்கள் அவற்றையும் தங்கள் குழந்தைகள் போலத்தான் நினைத்து வளர்ப்பார்கள் என்பதில் நம்பிக்கை தவறியிருந்த நான் ஜாக்கியின் நட்பில் அது உண்மையென உணர்ந்தேன். நிச்சயம் மனிதர்கள் போல அதற்க்கு துரோகம் நினைக்க தெரியாது... அன்பை... அன்பை மட்டுமே கொடுக்கும் உன்னதமான ஆத்மாக்கள் அவை.


ஒரு உற்ற தோழன் போல விளங்கிய ஜாக்கிக்கு வயது வெறும் ஆறே மாதங்கள். கம்பீரமாக வீட்டை சுற்றிக் கொண்டிருந்தவன், சென்ற ஞாயிறு மொட்டை மாடியில் அனாதையாய் செத்து கிடந்தான். அவன் தங்கியிருக்கும் சிறு அறையே சுத்தம் செய்யும் பொருட்டு, அவனை மொட்டை மாடி பில்லர்    சுவற்றில்  கட்டி வைத்திருக்க.... சுடு வெயிலின் தாக்கம் தாங்காமல்.. எம்பி குதித்தவன் கழுத்து  சங்கிலி எதிர்பாரா விதமாக கழுத்தை இறுக்கி கொள்ள... கத்த கூட திரணியற்று துடிதுடித்து இறந்திருக்கிறான்.


 விஷயம் அறிந்து... பதறிக்கொண்டு போய் பார்த்த போது கால்கள் விடைத்து பற்கள் இறுக கிடந்தவன் கண்களில் மட்டும் யாராவது வந்து காப்பாற்ற மாட்டார்களா என்கின்ற ஏக்கமும் ஏமாற்றமும்  தேங்கி கிடந்தது.


ஊருக்கு சென்றிருந்த வீட்டு உரிமையாளரின் ஆறு வயது மகள் திரும்பி வந்து ஜாக்கியே கேட்டால் என்ன சொல்வது என்கின்ற பதில் யாருக்கும் தெரியவில்லை. இனிமேல் நாய்களை கண்டால் பயப்படுவேனா.. நெருங்கி பழகுவேனா  என்பதற்கும் எனக்குள் விடை இல்லை.  தினசரி அதன் சத்தம் தாங்காமல் அதை ஒழிக்க வேண்டும் என அனுதினமும் புலம்பும் என் அறை நண்பன் சுமி.." நல்ல நாயடா அது " என கதறி கண்ணீர் விட்டதை பார்க்கும் போது எந்த கேள்வியுமே எனக்கு புரியவில்லை.

---------------------------------------------

டிஸ்கி - தமிழ் 10 , யுடான்ஸ், இன்ட்லியில் ஓட்டு போட உங்களுக்கு 18  வயது பூர்த்தியாகியிருக்க வேண்டும் என்கின்ற கட்டாயம் இல்லை. இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தாலே போதுமானது. SO... VOTE PLEASE... IF YOU LIKE THIS..... Comments

 1. ஆஹா அழகா சொல்லிட்டிங்க.. வாழ்த்துக்கள், இதைப்படிக்கும் போது அதிஷாவின் தெருநாய்கள் சிறுகதை ஞாபகத்துக்கு வருகிறது,,

  ReplyDelete
 2. thanks for your comments raazi

  ReplyDelete
 3. /அதிலிருந்து நாய்கள் என்றாலே லத்திகா பட போஸ்டரை கண்டது போல தெறித்து விலக ஆரம்பித்தேன்./
  சுவராஸ்யம் மிகுந்த அனுபவம்....குட்.

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

வாகமன் - TOUR SPOT

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 4