நான் ஏன் தொடர் கொலைகாரன் ஆனேன்.... ?



கவனிக்க : உயிர் வதை காப்பாளர்கள்  இந்த கட்டுரையே தவிர்ப்பது நலம். 

இரவு.... ரம்மியமானது.... பகலின் உஷ்ணத்தையும்... வியர்வை வீச்சுக்களையும் கடந்து வரும் இரவானது எல்லாருக்கும் பிடித்தமானது... எனக்கும்! ரகசியம் சொல்லும் காதலி போல் நிலா அருகில் இருக்க... இளையராஜாவோ, ரஹ்மானோ... இசையாய் செவி நுழைந்து மனம் தொட....அதை  தொடர்ந்து வரும் தூக்கமும் வண்ணங்களை பகுத்தறியமுடியாத கனவுகளும் ஒவ்வொருவருக்கும் வரம். கிட்டத்தட்ட  பூலோக சொர்க்கம்.எங்கேயோ கேட்கும் ரயில் ஓசை,  குளிர் நெருங்கும் போதெல்லாம் போர்வையில் ஒளிந்து கொண்டு கதகதப்பாகும் உடல், கண்களை உறுத்தாத இருள் என இரவு எப்போதுமே ஒரு கவிதை. தினம் தினம் புதிதாய் வாசிக்க தூண்டும் கவிதை. 

அனால் இப்போதெல்லாம்... இரவு நெருங்க நெருங்க மனசில் சொல்ல முடியாத அச்சம், படபடப்பு, கிட்டத்தட்ட மரண பயத்திற்கு ஒப்பான பீதி... நான் உறக்கம் தொலைத்து இன்றோடு பத்து நாட்கள் ஆகின்றது... இந்த இடைப்பட்ட இரவுகளில் எத்தனை ரத்தம்.... எத்தனை வலிகள்... எத்தனை உடல்கள்..

சென்னை தனக்குள் இப்படி ஒரு கோர முகத்தை வைத்திருக்கும் என்று நான்  கனவிலும் நினைக்கவில்லை.இவன் ரொம்ப நல்லவன் என்று எல்லோராலும்  சான்றுரைக்கப்பட்ட  என்னை... ஒரு கோபக்காரனாக கொலைகாரனாக  சாடிசம் பிடித்தவனாக... அரை கிறுக்கனாக... கிட்டத்தட்ட சட்டையே கிழித்துக்கொண்டு நடுஇரவில் ஓடலாம் என என்ன வைத்த இந்த சென்னை இரவுகளை என்னால் மறக்க முடியாது .

எப்போதும் போலான இரவுதான் அன்று... அனால் நிகழ்ந்த அந்த பயங்கரம் இதன் முன் நான் கண்டிராதது. சாரு கூட தனது தேகம் நாவலில் வதை பற்றி அவ்வளவு உள்ளுணர்வோடு குறிப்பிட்டிருக்க மாட்டார். வதை பட்டேன்... பின் வதம் செய்தேன்...


தூங்க ஆரம்பித்தவுடன்... அரை குறை  ஆடையுடன் அனுஷ்கா என் அருகில் வந்து  என் தலை கலைத்த நேரம்...சுருக்கென்றது...  அனுஷ்காவின் அழகுக்கு முன் அந்த வலி அப்படி ஒன்றும் பெரிதாய் என்னை இம்சிக்கவில்லை. மெல்ல அனுஷ்கா என் இதழ் நெருங்கி தன் இதழை கி ட் ட த் தி ல் கொண்டு வர... மீண்டும் சுருக். இம்முறை சற்று வலிமையாய்... கவனம் தொலைத்ததில் அனுஷ்கா கோபித்துகொண்டு புகையாய் மறைந்துவிட...  திடுக்கிட்டு விழித்ததில் என் கட்டிலை சுற்றி நான்கைந்து கொசுக்கள். சீ .. இவ்வளவுதானா என இப்போது நீங்கள் நினைத்தது போலவே நானும் நினைத்து போர்வையே நன்கு சுற்றி கொண்டு மீண்டும் அனுஷ்காவை துளாவ ஆரம்பித்தேன்... போர்வை என்னை முழுக்க மூடியிருந்தாலும் கால்களுக்குள் குறுகுறுப்பு..... தொடர்ச்சியாய் ஏகப்பட்ட சுருக் சுருக் சுருக்.... கடுப்படைந்து எழுந்தவன்.... கொலை வெறியோடு அவைகளை அடிக்க தொடங்க... விட்டலாச்சார்யா  படத்தில் வருவது போல கய முய கய முய என்று ஏகப்பட்ட கொசுக்கள்... அடிப்பேன் பின் தூங்குவேன்.... அவை கடிக்கும்.. மீண்டும் அடிப்பேன்.. பின் தூங்குவேன்... அவை கடிக்கும்... இப்படியே விடிய விடிய நடந்த தட்டல் சண்டையில் என் சார்பில் உறக்கத்தையும்.... அவர்களின் சார்பில் சில நூறு கொசுக்களும் பலியிடப்பட்டது.

அடுத்த நாள்  முன்னெச்சரிக்கை போர் நடவடிக்கையாக ALLOUT LIQUID       பொறுத்த...  பின்தான் தெரிந்தது.. ALL OUT  கொசுக்களை கொல்வதற்காக  அல்ல... கொசு கடித்தால் அதன் வலி நமக்கு தெரியாமல் இருப்பதற்காக என்று... கொஞ்சம் கூட கொசுக்களின் அராஜகத்தை குறைக்க முடியவில்லை. மாறாக பூஸ்ட் குடித்த உத்வேகத்துடன் மேற்கொண்டு அவை கொடுத்த தாக்குதலை சமாளிக்க முடியாமல் அன்றைய தின தூக்கமும்  போச்.

அடுத்த நாள்... ஒரு டஜன்  கொசுவர்த்தி  சுருள் என் அறை முழுதும் ஏற்றிவைக்கபட்டது. புகைந்த புகையில்... மூச்சு அடைத்து உடனடி மாரடைப்பு ஏற்படும் நிலைக்கு நான் ஆளானாலும்... ஒரு கொசு கூட சாகவில்லை. மாறாக... ரத்தம் ருசித்த களைப்பில் அந்த கொசுவர்த்தி சுருள் மீது அமர்ந்தே  அவை ஓய்வெடுத்ததை  பார்த்தவுடன் இன்னமும் என் பீதி அதிகமானது.

ரணகளமான இந்த இரவுகள் என் உடலில் தடிப்பையும், மனசில் கொலை வெறியையும் ஏற்ற... இவைகளை உயிரோடு விடக்கூடாது என செத்துப்போன என் பாட்டி மீது சபதம் எடுத்து அடுத்த ஆயுதத்தை தேடிய போதுதான்... கிடைத்தது  மஸ்கிட்டோ  பேட். ராமன் கையில் கிடைத்த வில்லை போல..பீமன் கையில் கிடைத்த கதத்தை போல... சச்சின் கையில் கிடைத்த  MRF BAT   போல... அந்த மஸ்கிட்டோ  பேட் என் கண்களுக்கு தரிசனம் தர,   உற்சாகத்துடன் " இறுக்கி பிடி, முறுக்கி அடி " என விதவிதமாய் ரக ரகமாய் அடித்து துவைக்க... பத்து நிமிடங்களில் அத்தனை எதிரிகளும் காலி. 


வெற்றியின் கொண்டாட்டங்கள் ஒரு மணி நேரம்தான்.... மீண்டும் அந்த ராட்சச ஜந்துக்கள் வெறித்தனமாய் என் மீது பாய... பட பட பட்டார்... என தாக்குதல் ஆரம்பமானது. இரவு பத்து... பின்  பன்னிரண்டு...  நடு நீசி ஒன்று, அப்புறம்  மூன்று என இடைவெளியற்ற துவண்ட யுத்தம். உறக்கம் தொலைத்த கண்கள் எரிய... மனம் இன்னும் விகாரமானது. கட்டிலில்  இருந்து இறங்கி சுவர் ஓரமாக நின்று கொண்டேன்.  கொசுக்களை பிடித்து... இறக்கை வேறு.. கால்கள் வேறு என பிய்த்து எறிந்து. அந்த எலக்ட்ரிக் பேட்டின் மீது போட்டு அவை வறுபடுவதை குரூரமாய் ரசிக்கும் என்னை பார்த்து எனக்கே சற்று பயமாகத்தான் இருந்தது. விடிய விடிய  பட்டாசு சத்தம் கேட்டு எழுந்த அறைநண்பன் சாமி, மாப்ள...  கொசு அடிச்சது போதும்,  மணி அஞ்சு ஆச்சு...   வா, டீ சாப்பிட்டுட்டு வரலாம் என்றான்... அடங்க்கொக்கமக்க...   முழு இரவும் தூங்காமல் கொசு அடித்திருக்கிறேன்.

ஒரே ஒரு நாள் மட்டும் உயிரோடு  இருக்கும் கொசு... இந்த பாடு படுத்துகிறதே என கண்ணில் கண்ணீரே வந்து விட்டது. இறுதியாக... இப்போது கொசு வலைக்குள் பதுங்க ஆரம்பித்திருக்கிறேன்.... வலையே சுற்றி கும்பல் கும்பலாக வந்து நோட்டமிடும் அந்த சாத்தான்களை கண்டால் இப்பவும் சற்று பயமாகத்தான் இருக்கிறது.

Comments

  1. ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமனோ வாழ்க...

    ReplyDelete
  2. சிங்கத்தைக் கூண்டில் அடைத்த மனிதன்
    கொசு வலையில் தூங்குகிறான்.

    ReplyDelete
  3. HAI VEDANTHANGAL KARUN,
    HAI MANI SIR,
    HAI RAJA RAJESHWARI,

    THANKS FOR YOUR COMMENTS.

    MANO

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....