டெல்லி ராஜ குமாரிகளும்... கோயம்புத்தூர் பையனும்... (18+) / 3

பரமு ரொம்பவும் வெகுளி. ஆனால் கிடைக்கிற கேப்பில் டைமிங்காக போட்டு தாக்குவான். நான் இறங்கும் போது ஜல்லி காட்டு  காளை போல  நிற்காமல் போன ரயில்.. அவன் இறங்கும்போது  மட்டும்  பசுமாடு போல சாந்தமாக ஒரு நூறு அடி தள்ளி போய் நின்றது. 

வாய் நிறைய பல்லுடன், யுத்தத்திற்கு சென்று வெற்றியுடன் திரும்பியவன் போல கம்பீரமாய் ரயிலில்  இருந்து இறங்கி வந்தவன்,   "என்ன மனோ, பயந்துடீங்களா.. அனுமார் கிட்ட வேண்டினேன்..  அதுதான் ரயில் நின்னுடுச்சு" என்றான். ரயில்  சிக்னலுக்காக நின்றதோ.. அல்லது அனுமார் நிறுத்தினாரோ.. அவன் பத்திரமாக இறங்கியதும்தான் மனம் நிம்மதி அடைந்தது.

நான்கு ஆட்டோ டிரைவர்கள், எங்களை அணுகி,  தாஜ் மஹாலை சுற்றி காட்டுவதாய் சொல்ல., அதில் சாமுத்திரிகா லட்சணம் பார்த்து ஒருவரை தேர்ந்தேடுத்தோம்.     பரமு அவரையும், அவரது ஆட்டோவையும் கண்ட மேனிக்கு போட்டோ எடுத்து தள்ளியதுடன் இல்லாமல் அவரது லைசென்சையும் வாங்கி போட்டோ பிடித்து கொண்டான். எதற்கு என்றதற்கு "PREVENTION IS BETTER THAN CURE" என்று தலையே ஆட்டி ஆட்டி சொன்னான்.


ஆட்டோ டிரைவரின் லைசென்ஸ்

எங்களது சொத்துக்களான டிகிரி சர்டிபிகேட் அடங்கிய பேக்கை ஆட்டோ டிரைவர் வசம் ஒப்படைத்துவிட்டு தாஜ்மஹால் பார்க்க கிளம்பினோம். போகும் தருவாயில்.. திடீர் ஞானத் தோன்றலில்  பரமு, தன் சூட்கேசை திறந்து,  அவன் அம்மா பயன நேரத்தில் தின்பதற்காக கட்டி கொடுத்திருந்த சோன் பப்டியே எடுத்து, ஆட்டோ டிரைவர் வேண்டாம்.. வேண்டாம்.. என்று மறுத்த போதும்,  வலுக்கட்டாயமாக  அவர் வாயில் திணித்தான்.  "நம்ம சாப்பாட்ட வாங்கி  தின்னுட்டார்" " இனி இவர் உண்ட வீட்டுக்கு ரெண்டகம் பண்ண மாட்டார்" நம்ம லக்கஜே பத்திரமா பார்த்துக்குவார் ,தைரியமா வாங்க என்றான்.

தாஜ் செல்லும் வழி 

 

தாஜ் என்னும் உலக அதிசயத்தை காண நாம்  சில பல குறுகலான சந்துகளில் நடை பயணம் செய்ய வேண்டும். அங்கு எருமைகள் சுதந்திரமாக மேய்கின்றன.... இறைச்சி கடைகளும், பிளாட்பார கடைகளும்,  குப்பை மேடுகளும் வழி நெடுக  காட்சியளிக்க.. இந்தியாவின் கலாச்சாரத்தை வெளிநாட்டவர் எளிதில் அறிந்துகொள்ள அவை  ஏதுவாய் இருக்கின்றன. 


தாஜ் உள்ளே நுழைய, இந்தியர்களுக்கு 20 ரூபாயும்,  வெளி நாட்டவர்களுக்கு  250 ரூபாயும் வசூலிக்கிறார்கள். நுழைவாயிலில் காவல் மிக பலமாக இருக்கிறது. குட்கா, சிகரட், சிப்ஸ் பாக்கெட், முறுக்கு பொட்டலம்  என தண்ணிரை தவிர வேறு  எதையும்  உள்எடுத்து செல்ல அனுமதி இல்லை. பரிசோதனை என்ற பெயரில் காவலர் ஒருவர் உடல் முழுதும் கிச்சு கிச்சு மூட்ட.. அவரை கடந்து வந்ததும் பிரம்மாண்டமான செங்கல் நிற கோட்டை முதலில் நம்மை வரவேற்கிறது. அங்கிருந்து பார்க்கும் போதே.. அந்த அதிசயம்.... கண்களுக்கு தென்பட ஆரம்பிக்க.. உடல் முழுதும் ஒரு பரபரப்பு தொற்றி கொள்கிறது. 




தாஜ் மஹாலை, நான் சினிமாவில் பார்த்திருக்கிறேன், புத்தகத்தில் புரட்டியிருக்கிறேன். ஆனால் நேரில் பார்க்கும் போது கிடைக்கும் ஒரு உணர்வு.. எப்படி சொல்வது அதை.. பிரம்மாண்டமான அந்த சலவை கல் அற்புதத்திற்கு முன் மனிதர்களாகிய நாம் ரொம்பவுமே சின்னவர்களாகி விடுகிறோம். வான் உயர்ந்து நிற்கும் காதல் சின்னத்தை, இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றை.. உலக மக்கள் அனைவரும் வியந்து நோக்கும் ஒரு கலை படைப்பை நேரில் தரிசிப்பது நிச்சயம் ஒரு அழகான அனுபவம். பகல் தவிர்த்து, ஒரு நல்ல மாலை நேரத்தில்.. மழை தூறும் பொழுதில்.. அங்கு இருந்து பாருங்கள்... உங்கள் மனம் என்னும் குழந்தை அடையும் உற்சாகத்திற்கு அளவிருக்காது. 

வெறும் கட்டிடம் மட்டும் அல்ல தாஜ் மஹால்.  சின்ன சின்ன நுணுக்கமான வேலைப்பாடுகள்.. கற்களில் செதுக்கிய பூக்கள்.. ரசனையான  வடிவமைப்புகள்  இப்போதும் மிளிரும் வர்ணங்கள் ... என  கலைகளின் புதையல் அது. ஒவ்வொரு கால நேரத்தின் போதும், தாஜ் வித விதமான தோற்றங்களை வெளிப்படுத்துமாம்.  




ஏராளமான வெளிநாட்டவர், கைடுகளின் துணையோடு தாஜ் பற்றி ஆர்வமாக தெரிந்து கொள்கின்றனர். தாஜ் முன் புகைப்படம் எடுத்துக்கொள்வதை ஒரு பெருமையான, சந்தோஷமான நிகழ்வாக கருதுகின்றனர். 

தாஜ் முழுதும் பல தேசத்து  பெண்கள், கொளுத்தும் வெயிலால்  குட்டி குட்டி உடைகளுடன் உலாவ.. துள்ளும் இளமையில்.. திமிரும் வளமையில்.. நானும், பரமுவும் ஏகத்துக்கும் டென்ஷன் ஆனோம். ஒரு கட்டத்தில்.. அந்த பெண்களை கண்டு  வெறுப்பில் " EVERY BODY" என்று நான் ஆரம்பிக்க.. " நோ  ஃபாடி" என்று பரமு முடித்தான்.


 தாஜ் உள்ளே, அமைதியாக உறங்கிகொண்டிருக்கும் மும்தாஜ், ஷாஜஹானை மக்கள் கூட்டம்,  சலனப்படுதிக்கொண்டே இருக்கிறார்கள்.  பின்புறம் ஓடும் யமுனை தாஜ் மஹாலுக்கு வேறொரு விதமான அழகியலை கொடுக்கிறது. 


தாஜ் கொடுத்த உற்சாகத்தில்.. பரமு சத்தம் போட்டு பாடிக் கொண்டிருந்தான். அடுத்த ஒரு மணி நேரத்தில் டெல்லி வாலாக்கள் அவன் சட்டை காலரை பிடித்து மிரட்டபோவதை அறியாமல்....

                                                                                                            - தொடரும்

Comments

  1. அருமை! தொடரட்டும் பயணம்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. ஒரே கவிமையமாக இருக்கு மனோ.. ஏக்கம் வேற.. தொடருங்கள்..

    ReplyDelete
  3. arumaiyana vivaranai, vazhthukal.
    saravanan.

    ReplyDelete
  4. அருமை................ தொடரட்டும்........

    ReplyDelete
  5. நல்லாத்தானே போய்க்கிட்டிருந்தது.........??

    ReplyDelete
  6. முகப்பில் மாறிக் கொண்டிருக்கும் குழந்தைகள் படம் போலவே, உங்கள் எழுத்திலும் முதிர்ச்சி!

    ReplyDelete
  7. தங்கமணிSeptember 6, 2010 at 6:40 PM

    வாழ்த்துக்கள் மனொகர் அவர்களே !!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பிளாஷ் பேக் - என் முதல் பிட்டு பட அனுபவம் (18+)

சிந்து சமவெளி - விமர்சனம் (18+)

பழனி செல்பவர்கள் ஜாக்கிரதை.....