பாணா - விமர்சனம்
தமிழில் தற்போது நல்ல கதை களங்களும், காட்சி படுத்துதலில் வித்தியாசத்தையும் கொண்ட படங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் 10 வருடங்களுக்கு முன்பான ஸ்டீரியோ டைப் திரைக்கதையுடன் வந்துள்ள படம் பாணா.
வட சென்னையில் உள்ள ஒரு ஏழை பையன், பணக்கார ஹை கிளாஸ் பெண்ணை காதலிப்பதும், இடையே ஹீரோவுக்கும் ஒரு நல்ல ரௌடிக்கும் (ரௌடியில் நல்ல ரௌடி, கெட்ட ரவுடி என்ற பாகுபாடு சினிமாவில் மட்டுமே சாத்தியம்) உள்ள உறவையும், ஒரு கட்டத்தில் அந்த நல்ல ரௌடியே சூழ்நிலை காரணமாக ஹீரோவை கொலை செய்ய முயலுவதும் கதை. கதையே இல்லாத விஷயத்தை கூட மேக்கிங்கில் மிரட்டி வெற்றியடையும் இந்த கால கட்டத்தில், குழப்பமான அரை குறை காட்சியமைப்புகளும், திரைக்கதையும் படத்தை பார்வையாளன் மனசில் பதிய தவறிவிட்டது.
ஒரு சினிமாவிற்கு பாத்திர படைப்பு எந்த அளவு முக்கியம் என்பதை இயக்குனர் சுத்தமாக மறந்திருக்கிறார். எந்த கதாபாத்திரத்தின் முழு இயல்பையும் இயக்குனர் காட்சிபடுத்தவில்லை. ஹீரோ, பட்டம் விடுவதில் கில்லாடி என்கிறார்கள். இடைவேளை வரை ஹீரோ பட்டத்தின் பின்னால் ஓடுகிறாரே தவிர, ஒரு முறை கூட பட்டம் விட்ட பாடில்லை. இரண்டாவது ஹீரோவும், ஹீரோயினும் நண்பர்களாக பழகி கொண்டிருக்க, தீடிரென ஹீரோ காரணமே இன்றி காதல் வயப்படுகிறார். இருவருக்கும் இடையே உள்ளது நட்பு அல்ல காதல் என்று நம்ம காலேஜ் சீனியர் ஸ்டுடென்ட் முரளி ஒரு காட்சியில் வந்து பிட்டை போட்டு விட்டு போக (அந்த காட்சியில் முரளியை சரியான காமெடி பீஸ் ஆக்கியிருக்கிறார்கள்) , ஹீரோ உடனே இது காதல்தான் இன்று காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். இதை விட மச காமெடி, ஹீரோ தன்னை விரும்புகிறான் என தெரிந்ததும் அதுவரை நட்பு வளர்த்த ஹீரோயினும் உடனடியாக காதலிக்க ஆரம்பித்து விடுகிறார். இதில் கொடுமை என்னவென்றால் ஹீரோ பள்ளிகூடத்தில் படிக்கிறார், ஹீரோயின் கல்லூரியில் படிக்கிறார். இருவருக்கும் உண்டான வயது வித்தியாசத்தை கிளைமாக்ஸ் நெருங்கும் வரை சொல்ல மறுக்கிறார்கள். ஸ்ஸ்ஸ் ... இப்பவே கண்ணை கட்டுதா.. பொறுங்க..
இது ஒரு யதார்த்த படமா..லவ் ஸ்டோரியா, இல்லை மசாலா கலவையா என யூகிக்க முடியாத காட்சியமைப்புகளால் படம் நூல் அறுந்த பட்டம் போல கண்ணா பின்னா என்று அலை பாய்கிறது. கிளைமாக்சில் படத்தை எப்படி முடிப்பது என இயக்குனர் பேய் முழி முழித்திருப்பது தெளிவாக விளங்குகிறது. யூகிக்க முடியாத கிளைமாக்ஸ் வைக்கிறேன் என படத்திற்கு கொஞ்சமும் தேவையில்லாத அரை குறை கிளைமாக்ஸ். மிக பெரிய அதிர்வை கொடுத்திருக்க வேண்டியது ஜஸ்ட் லைக் தட் என கடந்து போகிறது.
படத்தில் பிளஸ் என சொல்ல வேண்டியது, வசனங்களும் ஒன்றிரண்டு காட்சிகளும். வசனங்கள் மிக யதார்த்தமாக இருப்பது கொஞ்சம் ஆறுதல். ஆதர்வாவுக்கு காதல் வந்ததும், அவன் அம்மா அவனை திட்டுவது கூட, அவனுக்கு சங்கீதமாக ஒலிப்பது போல கிராபிக்ஸ் செய்திருப்பது அழகு. அதே போல, தன் காதலை ஹீரோயின் ஒரு குறும்படம் போல ஹீரோவுக்கு ஆளில்லாத தியேட்டரில் திரையிட்டு காட்டுவது சிறப்பு.
ஸ்கூல் பையன் போல தெரிந்தாலும், அதர்வா நடிப்பை பொறுத்தவரை பாஸ் மார்க் வாங்குகிறார். விண்ணை தாண்டி வருவாயாவில் ஒரு சிறிய கேப்பில் ஸ்கோர் செய்த சமந்தா இதில் படம் முழுதும் பிரம்மாண்டமான அழகுடன் வளைய வந்து பரவசப்படுத்துகிறார். படத்தின் ஹீரோ கருனாசா என்ன சந்தேகப்படும் படி படத்தின் ஆரம்ப கட்ட காட்சிகள் கருணாஸை சுற்றியே நகர்கிறது. காமெடியில் மனிதர் பிரித்து மேய்ந்திருக்கிறார். பிரசன்னா நல்ல ரௌடியாக ஆர்பாட்டமில்லாமல் இயக்குனர் சொன்னதை செய்திருக்கிறார். ஒரு காட்சியில், பட்டம் யாருக்கு சொந்தம் என ஒரு படு பயங்கரமான பஞ்சாயத்துக்கு இவர் தீர்ப்பு சொல்ல நேர.. அப்போது ஒரு முக பாவம் காட்டுவார் பாருங்கள்.. செம கிளாஸ்.
டெக்னிகல் விஷயங்களை பொறுத்தவரை யுவனின் இசை, ரிச்சர்ட் நாதன் ஒளிப்பதிவு எல்லாமே ஓகே ரகம். படத்தின் முதல் சண்டை காட்சியில் இருக்கும் ரியலிசிம் ரசிக்க வைக்கிறது.
பாத்திரபடைப்பில் கவனம் செலுத்தி, திரைகதையில் அழுத்தம் கொடுத்திருந்தால் பாணா காத்தாடி நன்றாக பறந்திருந்திருக்கலாம்.
பிளஸ் (+)
வசனங்கள்
கருணாஸ்
யுவனின்.. தாக்குதே பாடல்.
மைனஸ் (-)
லாஜிக் என்கின்ற வஸ்து
பழசான கதை, அதை விட அரதபழசான திரைக்கதை.
அழுத்தம் அற்ற கதா பாத்திரங்கள்
VERDICT : AVERAGE
RATING : 3.4 / 10
EXTRA பிட்டுகள்
தெலுங்கில் சக்கை போடு போட்ட வேதம், தாகம் என்ற பெயரில் ரிலீஸ் ஆகியிருந்தது. முதலில் அந்த படத்திற்கு போகலாம் என்று என் நண்பன் குட்டியானை கூப்பிட, தினசரி கட்டை யோகா செய்யும் அவன், போஸ்டரில் இருந்த A சிம்பலையும், அனுஷ்க்காவின் கவர்ச்சி கோலத்தையும் பார்த்து வர மாட்டேன் என்று மறுத்து விட்டான். எத்தனையோ சமாதானம் செய்தும், அந்த சாமியார் வர மறுத்ததால் வேறு வழி இன்றி பாணா படத்தின் போஸ்டர் டிசைன்கள் படம் பார்க்கும் ஆர்வத்தை தூண்டியதால் அதற்க்கு போனோம். என்ன சொல்ல.. விதி வலியது.
விமர்சனம் நன்றாக இருக்கிறது!
ReplyDelete//விதி வலியது. //
ReplyDeleteஎன்னமோ போங்க மனோ நீங்க அப்பப்ப சிக்கிக்கிறீங்க..
ReplyDeleteசீக்கிரம் குட்டி யானைய கரெக்ட் பண்ணி அந்த அனுஷ்கா படத்திற்கு சீக்கிரம் போங்க :)
ReplyDeleteசீக்கிரம் விமர்சனம் போடுங்க :)
Kutti Yaanai!!!!
ReplyDeleteபடம் போர் அடிக்காமல் செல்வதால் எனக்கு புடிச்சுருக்கு :)
ReplyDelete//EXTRA பிட்டுகள் //
ReplyDeleteBetter luck next time:)
Good writing
படம் நல்லாயிருக்கோ இல்லையோ, உங்கள் திரைவிமர்சனம் நன்றாகயுள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDelete